இலங்கைத்தீவு, இந்தியாவுக்குத் தென்கிழக்கில் பூமத்திய ரேகைக்கு ஐந்தாவது,
ஒன்பதாவது அட்சக்கோடுகள் வரையிலும், சுமார் 79 டிகிரி கிழக்கு தீர்க்க
ரேகையிலிருந்து 82 டிகிரி கிழக்குத் தீர்க்க ரேகை வரையிலும் பரவியுள்ளது.
இத்தீவின் தென், வட பகுதி தாழ்ந்தும், மத்தியப்பகுதி எட்டாயிரம் அடி வரையில்
உயர்ந்த மலைகளைக் கொண்டும் அமைந்திருக்கிறது. இலங்கைக்கும்
இந்தியாவுக்குமுள்ள தூரம், உறுதிமிக்க மன இயல்பு கொண்டவர்களால் நீந்தியும்,
நடந்தும் கடக்கக் கூடியதாக இருக்கிறது. இத்தீவில் தற்போது சிங்களமொழி பேசும் புத்தர்கள், கிறிஸ்தவர்கள்,
பெரும்பான்மையாகவும், தமிழ்மொழி பேசும் சைவ இந்துக்கள், முஸ்ஸிம்கள்,
கிறிஸ்தவர்கள் முதலியோர் சிறுபான்மையாகவும் வசிக்கிறார்கள். மொத்தத்தில்
இருவேறு கலாசார மரபுகொண்ட இனங்களாகச் சிங்கள இனமும், தமிழ் இனமும்
இருக்கிறது. பெரும்பான்மை இனம் என்கிற காரணத்தினால் நாட்டை ஆளும் பொறுப்பை
சிங்களவர் எடுத்துக் கொண்டனர். பெரும்பான்மை இனமாகக் கருதப்படுகிற
சிங்களவரின் வரலாறு என்பது மகாவம்சம் என்னும் புத்த காப்பியத்தை அடிப்படையாக
வைத்துப் பேசப்பட்டும், எழுதப்பட்டும் இன்றுவரை இருந்து வருகிறது. இந்த
மகாவம்சம், செவிவழிவந்த நாட்டுப்புறப் பாடல்கள், கர்ண பரம்பரைக் கதைகள்
முதலியவற்றால் ஒழுங்குபடுத்தப்பட்டது. சிங்களவர்களின் பெருமையை மிகவும்
உயர்த்திக்காட்டவென்றே எழுதப்பட்ட நூல் இது. இந்த மகாவம்சத்தை எழுதியவர்
மகாநாமதேரர் என்னும் புத்தபிக்கு ஆவார். ஐந்தாம் நூற்றாண்டில் சிங்கள அரசனாக
வாழ்ந்த தாதுசேனின் (கி.பி.463-479) மாமன் இவர். பாலி மொழியில், தமிழின் சில
சொற்களைத் துணைக்கொண்டு கவிதை வடிவில் எழுதியுள்ளார்.
மகாநாமதேரரின் காலத்தில் வாழ்ந்த, அநுராதபுரத்திலிருந்த புத்தமடத்தின்
உயர்குருவான உத்தரபிரவீணா இக்காப்பியம் சிறப்புற அமைய உரிய ஆலோசனைகள்
வழங்கியிருக்கிறார். மகாநாமா தொடங்கி வைத்த இந்த மகாவம்சத்தில் சிங்கள
அரசர்களின் பெருமைகளை 13, 14, 18-ஆம் நூற்றாண்டுகளில் அவ்வப்போது வாழ்ந்த
கவிஞர்களைக் கொண்டு சேர்த்திருக்கிறார்கள். பல்வேறு கால கட்டங்களில் வாழ்ந்த
சிங்கள மன்னர்களின் வரலாறு இணைக்கப்பட்ட போதிலும் மூலநூலுக்கு ஏற்ற மொழி
லாகவத்துடன் பிசிறு இல்லாது ஒரே நபரால் எழுதப் பட்டதற்கான தோற்றத்தை இந்நூல்
பெறுகிறது.
சிங்களவர் வரலாறு என மகாவம்சம் கூறுவது என்ன? இந்தியாவின் வடகிழக்குப்
பகுதியில் வங்க மக்களுக்குச் சொந்தமான நாட்டில் ஓர் அரசன் இருந்தான். இவன்
கலிங்க நாட்டு அரசனின் மகளை மணந்தான். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை
பிறந்தது. இவளுக்கு உரிய வயது வந்ததும் பூப்பெய்தினாள். இளவரசி பருவமுற்றதும்
சோதிடர்கள் கொண்டு அந்நாளைக் கணக்கிட்டு அவளுக்கு எந்த நாட்டு இளவரசன் கணவனாக
அமைவான்; கல்வி, கேள்விகளில், வீரத்தில் அவனது தேர்ச்சி என்னவாக இருக்கும்
என்று கணிக்க முற்பட்டனர். யாருக்கும் ஒழுங்கான விடை கிடைக்கவில்லை.
எல்லாருக்கும் ஆச்சரியம் அளிக்கும் வகையில்- “இளவரசி மிகுந்த காமவெறி
கொண்டவளாயிருப்பாள். மிருகராஜனைக் கூடுவாள்’ என்று தலைமைச் சோதிடர் கூறினார்.
இது ஒழுக்கக் குறைவானதாக, அவமானமடையத்தக்கதாக இருந்தபோதிலும் மன்னனிடம்
உண்மையைச் சொல்வதே முறை என்று அவன்முன் தங்களது கணிப்பை எடுத்து வைத்தார்கள்.
“இளவரசி காம இச்சை மிகுந்து சிங்கத்துடன் உறவு கொள்வாள்’ என்ற செய்தி கேட்ட
வங்க மன்னன் அதிர்ச்சிக்காளானான். இதனால் வெறுப்பும் அவமானமும் அடைந்த மன்னன்
தன் மகள் எப்படியோ போகட்டும் என்று விதிப்படி விட்டுவிட்டு அமைதியானான்.
இளவரசியின் நலனில் ஆர்வமற்றவனாக அவளது திருமண ஏற்பாடுகளில் கவனம்
செலுத்தாதவனாக இருந்தான். அதுமட்டுமன்றி, அவளின் விருப்பத்திற்கு குறுக்கே
நிற்காது அவள் போக்கில் விட்டுவிட்டான். சுதந்திர வாழ்வின் சுகத்தை
விரும்பியவளாக தன்னந்தனியே அரண்மனையை விட்டுப் புறப்பட்டாள் இளவரசி.
மகதநாட்டுக்குச் சென்று கொண்டிருந்த நாடோடிக் கும்பலுடன் அவர்கள் அறியாத
விதத்தில் சேர்ந்து கொண்டாள். அடர்ந்த கானகத்தை நாடோடிக் கும்பல் கடந்து
கொண்டிருந்தது. பயங்கரமான சிங்கம் ஒன்று எதிர்ப்பட்டு நாடோடிக் கும்பலைத்
தாக்கியது. சிங்கத்திற்குப் பயந்து அனைவரும் நாலாபக்கமும் சிதறி ஓடினர்.
இளவரசி மட்டும் சிங்கம் சென்ற பாதையில் சென்றாள்.
தனது எதிர்காலம் பற்றிச் சோதிடர்கள் கூறியது இப்போது அவள் காதில்
ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது. அவர்களின் கூற்றுக்கு ஏற்பவே தான் வந்த
நாடோடிக் கும்பலைச் சிங்கம் தாக்கியதை உணர்ந்தாள். தான் கூட வேண்டிய சிங்கம்
இதுவே என்றும் நினைத்தாள். இந்த உறுதியுடன்தான் சிங்கத்தின் பாதச்சுவட்டைப்
பின்பற்றி அதன் குகையை நோக்கி நடக்கலானாள். வழியில் சிங்கமோ உண்ட மயக்கத்தில்
இளைப்பாறிக் கொண்டிருந்தது. இளவரசி சிங்கத்தின் எதிரே வந்ததும் அது காமம்
மிகக்கொண்டு வாலை ஆட்டியது. இளவரசி சிறிதும் பயப்படாமல் அதன் அருகே சென்று
உடலைத் தட்டிக் கொடுத்தாள். தன்னை உடன் அழைத்துத் செல்லுமாறும் வேண்டினாள்.
ஏற்கெனவே இளவரசியைப் பார்த்த மாத்திரத்திலேயே காமம் மிகுந்திருந்த சிங்கம்,
அவளைத் தன் முதுகுமீது அமர்த்திக் கொண்டு தனது குகையை நோக்கிச் சென்றது.
குகையை வந்தடைந்ததும் இரவு பகல் பாராது சிங்கமும் இளவரசியும் கூடி
மகிழ்ந்தார்கள். சிங்கத்தினது கூடலின் விளைவாக இளவரசி கருவுற்றாள். ஒரே
பிரசவத்தில் இரண்டு குழந்தைகளைப் பெற்றாள். ஆண் குழந்தைக்கு சிங்கபாகு
என்றும், பெண் குழந்தைக்கு சிங்கவல்லி என்றும் பெயரிட்டாள். மகன்
சிங்கபாகுவின் கைகளும் பாதங்களும் சிங்கத்தினுடையதைப் போல் அமைந்திருந்தன.
சிங்கபாகுவிற்கு பதினாறு வயதானபோது தன் மனதிலெழுந்த சந்தேகம் பற்றித் தாயிடம்
கேட்டான். அவன் கேட்டது இதுதான்: “”அம்மா, நீயும் அப்பாவும் பெருத்த
வித்தியாசத்துடன் இருக்கிறீர்களே. இது எப்படி நிகழ்ந்தது?” இளவரசி
அனைத்தையும் ஒன்று விடாமல் சொன்னாள். சிங்கபாகு, “”நாம் இந்தக் குகையை விட்டு
ஏன் போய்விடக் கூடாது?” என்றான். “”போய்விடலாம். எனக்கும் அந்த எண்ணம் உண்டு.
ஆனால் இந்தக் குகையின் வாயிலை உன் தந்தை பலமான பாறையினால் மூடி இருக்கிறாரே!”
என்றாள். இது கேட்டதும் சிங்கபாகு தன் பலம் முழுவதும் செலுத்தி, குகையின்
வாயிலை அடைத்துக் கொண்டிருக்கும் கல்லை நகர்த்தி, அதைத் தன் முதுகில் ஐம்பது
யோசனை தூரம் சென்று எறிந்துவிட்டு வந்தான். பிறகு தன் தாயை ஒரு தோளிலும்,
தங்கையை மற்றொரு தோளிலுமாகச் சுமந்தவாறு வெளியே வந்தான்.
இளவரசியின் யோசனைப்படி இலைத்தழைகளை ஆடையாகத் தரித்துக்கொண்டு காட்டை விட்டு
வெளியே வந்தனர். ஒரு மரத்தினடியில் படைவீரன் ஒருவன்
இளைப்பாறிக்கொண்டிருந்தான். அவன் இளவரசியின் மாமன் மகனும், வங்க அரசனின்
படையில் ஒரு தலைவனாகவும் விளங்குபவன் என்பதை இளவரசி கண்டுகொண்டாள். சத்தம்
கேட்டு கண்விழித்த படைத்தலைவன் இவர்களைப் பார்த்து யாரென்று விசாரித்தான்.
இளவரசி தனது வரலாற்றை அவனிடம் கூறினாள். படைத்தலைவன் மிகுந்த மகிழ்ச்சியுற்று
இளவரசியையும் அவளது பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு சென்றான். பறையறிவித்து
அவளை தனது மனைவியாக்கிக் கொண்டதாகவும் அறிவித்தான். இளவரசியும் தனது முன்னாள்
கணவனான சிங்கத்தை மறந்து தனது புதிய கணவனுடன் வாழ்ந்து வந்தாள்.
காட்டில் இரை தேடப் போயிருந்த சிங்கம் குகைக்கு வந்ததும் தனது பிள்ளைகளையும்
மனைவியையும் காணாமல் எல்லையோரக் கிராமங்களுக்குச் சென்று கோபத்தில் போவோர்
வருவோர் எல்லாரையும் தாக்கியது. “”சிங்கம் எங்களைத் தாக்குகிறது; எங்களை
அதனிடமிருந்து காக்க வேண்டும்” என்று குடிமக்கள் மன்னனிடம் முறையிட்டனர்.
தன்னிடமுள்ளவர்களில் சிங்கத்தின் கொட்டத்தை அடக்கும் நபர் யார் என்று
கண்டுபிடிக்க முடியாத நிலை. பரிசுத் தொகையை யானை முதுகில் வைத்து,
“”சிங்கத்தைப் பிடித்து, சிங்கத்தைக் கொல்பவர்கள் இந்தத் தொகையை அடையலாம்”
என்று முரசு கொட்ட வைத்தான் அரசன். படை வீரர்களிலும் பொதுமக்களிலும் யாரும்
முன் வராத நிலையில், பரிசுத் தொகையைப் பன்மடங்கு கூட்டினான். இந்த நிலையில்
சிங்கபாகு தானே சிங்கத்தின் கொட்டத்தை அடக்குவதாக அறிவித்தான். அத்துடன் தாய்
தடுத்தும் கேளாது யானை முதுகின் மேலுள்ள பரிசுத்தொகையை எடுத்துக் கொண்டான்.
பொதுமக்கள் சிங்கபாகுவை அரசன் முன்னிலையில் கொண்டு போய் நிறுத்தினர்.
அரசனோ,“”சிங்கத்தைக் கொன்றால் என் ராஜ்ஜியத்தையே தரச் சித்தமாயிருக்கிறேன்”
என்றான். சிங்கபாகு சிங்கத்தைத் தன் தந்தையென்றும் பாராமல் அதனை வீழ்த்தக்
காட்டுப் பகுதிக்குச் சென்றான். தூரத்தில் சிங்கபாகுவைக் கண்டதுமே தனது
மைந்தன் வந்துவிட்டான் என்ற மகிழ்ச்சியில் நெருங்கி வந்தது. சிங்கபாகுவோ தான்
எடுத்துக்கொண்ட காரியத்தை நிறைவேற்றும் எண்ணத்தில் அம்பு எய்து சிங்கத்தைக்
கொல்ல முயன்றான். இரண்டு முறை முயன்றும் அம்பு சரியாகச் சிங்கம் மீது
தைக்கவில்லை. மூன்றாவது முறையாக சிங்கபாகு எய்த அம்பு சிங்கத்தை வீழ்த்தியது.
கொய்த தலையுடன் சிங்கபாகு அரண்மனையை நோக்கி வந்தான். பொதுமக்கள் அவனது
தீரத்தைப் பாராட்டிப் புகழ்ந்தார்கள். ராஜ்ஜியத்தைத் தருவேன் என்று கூறிய
மன்னன் உயிருடன் இல்லை. இருப்பினும் இளவரசி மூலம் சிங்கபாகு மன்னனின்
பேரன்தான் என்பதைப் பொதுமக்களும், மந்திரிமார்களும் அறிந்த காரணத்தால்
சிங்கபாகுவை அரசனாக்க முயன்றார்கள். எல்லாருடைய விருப்பத்திற்கிணங்க அரசனாகப்
பதவி ஏற்றுக்கொண்டு, பின் தனது தாயாரையும் அவளது புதிய கணவனையும் அழைத்து
ராஜ்யத்தை அவர்கள் வசம் ஒப்படைத்தான்.
தனது தங்கையை அழைத்துக்கொண்டு தான் வாழ்ந்த காட்டுப் பகுதிக்குச் சென்றான்.
அங்கே தனக்கென ஒரு நகரை நிர்மாணித்துக் கொண்டான். தங்கையை (சிங்கவல்லியை)
தனது மனைவி ஆக்கிக் கொண்டான். இவர்களுக்குப் பதினாறு முறை இரட்டைக்
குழந்தைகள் பிறந்தன.
இந்த முப்பத்திரண்டு குழந்தைகளில் மூத்தவனுக்கு விஜயன் என்றும்,
இரண்டாமவனுக்கு சுமிதன் என்றும் பெயர்களிட்டார்கள். உரிய வயது வந்ததும்
விஜயனுக்கு இளவரசுப் பட்டமும் சூட்டினார்கள். விஜயனின் நடவடிக்கைகள்
பொதுமக்களுக்கு வெறுப்பைத் தந்தன. பொறுத்துப் பார்த்த மக்கள் நேரிடையாக
மன்னனிடம் சென்று, “”உங்கள் மகனைக் கொன்று விடுங்கள்; இல்லையெனில் அவனையும்
அவனது தோழர்களையும் நாடு கடத்துங்கள்” என்று முறையிட்டனர். சிங்கபாகு தனது
மந்திரிகளைக் கூப்பிட்டு ஆலோசனை கலந்தான். அவர்களும் பொதுமக்களின்
விருப்பத்திற்கு ஏற்பவே முடிவு சொன்னார்கள். வேறுவழியின்றி மன்னன் சிங்கபாகு,
விஜயன் உட்பட அவனது எழுநூறு தோழர்களையும் பிடித்து வந்து தலையில் பாதி முடியை
சிரைத்து, சுக்கான் இல்லாத கப்பலில் ஏற்றி அனுப்பி வைத்தான். விஜயனும் அவனது
நண்பர்களும் இலங்கையில் தாமிரபரணி என்னும் பகுதியில் கரையேறினார்கள்.
அனைவரும் கரையேறியதும் விஜயனின் ஆட்களில் ஒருவன் தூரத்தில் பெண்ணொருத்தியைக்
காண்கிறான். அவள் அத்தீவில் வசிக்கும் இயக்க குல ராணியான குவேனி என்பவள்.
குவேனி அவர்களது பசியைப் போக்க விருந்து படைத்தாள். தன்னைப் பதினாறு வயதுப்
பருவப் பெண்ணாக மாற்றிக் கொண்டாள். நானாவித ஆடையாபரணங்களைத் தன்மேல்
அலங்கரிக்குமாறு மந்திர சக்தியால் செய்து கொண்டாள்.
ஒரு மரத்தடியில் அழகிய வெண்கொற்றக் குறையுடன் கூடிய சிறந்த மஞ்சத்தைச்
சிருஷ்டித்துக் கொண்டாள். சுற்றிலும் பாதுகாப்புக்கெனக் கூடாரம் ஒன்றையும்
எழுப்பிக் கொண்டாள். விஜயனும் குவேனியின் அழகில் மயங்கி அவளை ஏற்றுக்
கொண்டான். இன்பமாகப் பொழுதைக் கழித்தான். குவேனியின் புத்திமதிப்படியே விஜயன்
இயக்கராஜனுடைய உடைகளை அணிந்து கொண்டான். தாமிரபரணி என்னும் நகரத்தை
ஏற்படுத்திக் கொண்டான்.
குவேனியையும் முறைப்படி மனைவியாக்கிக் கொண்டான். ஆனாலும் அவன் தன்னை அரசனாக
முடிசூட்டிக் கொள்ளவில்லை. உயர்குலப் பெண்ணொருத்தியை மணந்து அவளைப்
பட்டமகிஷியாக்கிக் கொண்ட பிறகே தான் அரசனாக முடியும் என்று கருத்துக்
கொண்டிருந்தான். அதனால் விஜயனின் மந்திரிமார்களில் சிலர் பாண்டிய நாடு சென்று
அந்த மன்னனிடம் பெண் கேட்டார்கள்.
பாண்டிய மன்னனும் தனது மகளை விஜயனுக்குத் தரச் சம்மதித்து, விஜயனின்
நண்பர்களை மணந்து கொள்ளவும், தனது மகளுக்குத் துணையாக இருக்கவும் என்று நூறு
பாண்டிய நாட்டுப் பெண்களையும் அனுப்பி வைத்தான். ஒரு குறிப்பிட்ட தினத்தில்
பாண்டிய நாட்டு இளவரசியை மணந்து கொண்டான் விஜயன். பின் குவேனியை தனது நாட்டை
விட்டே துரத்துகிறான். குவேனியின் மூலம் பிறந்த ஒரு மகன், ஒரு மகளையும்
கானகத்துக்குத் துரத்தியடிக்கிறான் விஜயன். இந்த விஜயனே முதல் சிங்கள மன்னன்
என்று மகாவம்சம் நூல் கூறுகிறது. இவனது வாரிசுகளே இன்றைய சிங்களவர்கள்!
நன்றி- தினமணி
சனிக்கிழமை, 05 செப்டம்பர் 2009 13:14 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
No comments:
Post a Comment