Saturday, November 6, 2010

59 : சுதந்திர நாள் விருந்தினராக அமிர்தலிங்கம்

 இலங்கையில் 1983-இல் நடைபெற்ற இனக்கலவரத்தின்போது, உயிருக்குப் பயந்து
      இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக இந்தியா
      வந்தனர். இவர்களுக்காக நாட்டின் பல பகுதிகளில் அகதி முகாம்கள் திறக்கப்பட்டன.
      அகதிகள் என்றால், அவர்களிடம் என்ன உடைமைகள் இருக்கும் என்பது வெளிப்படை.
      இதனால் தமிழக அரசுக்குத் திடீர் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. ஓர்
      இரவுக்குள் தங்குமிட வசதி அமைத்துக் கொடுப்பதுடன் உணவு, குழந்தைகளுக்கு
      ரொட்டி, பால், குடிநீர், மருந்துகள், மின்சார வசதி, கழிப்பிட வசதி மற்றும்
      பிற அத்தியாவசியப் பொருள்களான துணி வகைகளுக்கும் ஏற்பாடு செய்ய வேண்டிய
      கட்டாயம் ஏற்பட்டது. அகதிகளல்லாத இலங்கைத் தமிழ்க்குடிகளும் பிற நாடுகளில்
      குடியேறியதைப் போன்றே தமிழகத்திலும் குடியேறினர். இவர்களால் அரசுக்கு நேரடிச்
      செலவினம் எதுவுமில்லை. ஆனாலும் இலங்கையில் தமிழர்கள் பயமின்றி வாழக்கூடும்
      என்கிற நிலைமை ஏற்பட்டாலொழிய அவர்களால் இங்கிருந்து வெளியேற முடியாது என்கிற
      நிலைமை. இவ்வாறு அகதிகளும், இலங்கைக் குடியுரிமை உள்ளவர்களும், தமிழக அரசியல்
      தலைவர்களும் - கிழக்குப் பாகிஸ்தானிய மக்களுக்காக வங்கதேசம் அமைக்க இந்தியா
      எடுத்த போர் நடவடிக்கை போன்று, இலங்கைத் தமிழர்களுக்கும் ஒரு தாயகத்தை
      ஏற்படுத்தித்தர வேண்டும் என்று இந்தியத் தலைமைக்கு நெருக்குதலை அளித்தனர்.
      யாரும் திட்டமிட்டு ஏற்படுத்தாமலே இந்த எண்ணம் மக்களிடையே தன்னிச்சையாக
      எழுந்தது என்பதுதான் உண்மை. கலவரங்கள் எல்லைமீறிப் போன நிலையில் பிரதமர்
      இந்திரா காந்தி, "அது இலங்கையின் உள்நாட்டு விவகாரம்தான் என்றாலும் இதைப்
      பார்த்துக் கொண்டு இந்தியாவால் சும்மா இருக்க இயலாது' என்றார். அவரின் பதில்
      இருவேறு நிலைகளைக் கொண்டிருந்தது. வேறொரு நாட்டில் ஏற்படும் குழப்பங்களைப்
      பார்த்து கருத்து தெரிவிக்கும் பாணியிலும், அதேசமயம் தனது கண்டனத்தை
      மறைமுகமாகவும் அவர் வெளிப்படுத்தினார்.
      இந்நிலையில் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். தலைமையிலான குழு, பிரதமர்
      இந்திராவைச் சந்தித்து அளித்த மனுவில், "இலங்கையின் கொடிய
      காட்டுமிராண்டித்தனமான கொலைகளை அந்நாட்டின் உள்நாட்டு விவகாரமாகத் தள்ளிவிட
      முடியாது' என்று உறுதியாகக் கூறப்பட்டிருந்தது. அடுத்தடுத்த நாட்களில்
      சிங்களவர்கள் கொழும்பில் அமைந்திருந்த இந்திய நிறுவனங்களை, வங்கிகளை அடித்து
      நொறுக்கித் தீயிட்டுப் பொசுக்கினர். காலிப் பகுதியில் சாலையில் வந்து
      கொண்டிருந்த இந்தியத் தூதரக காரை மறித்தனர். காரில் இருந்தவரை இறங்கச்
      செய்தனர். அவரை ஒரு தமிழர் என்று நினைத்துத் தாக்க முற்பட்டனர். அவர் தான்
      தமிழரல்ல - ஆனால் இந்தியன் - ஒரு அதிகாரி என்று சொல்லிப் பார்த்தார். பயன்
      இல்லை. கொடுமையாகத் தாக்கப்பட்டார். அவரின் கார் உருட்டிவிடப்பட்டு,
      தீவைத்துக் கொளுத்தப்பட்டது. அந்த அதிகாரியின் பெயர் மாத்யூ ஆப்ரகாம். "ரா'
      அமைப்பில் ஓர் அதிகாரி. கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகத்தில் ஓர்
      அதிகாரியாகப் பணியாற்றி வந்தார். தனக்கு நேர்ந்த துன்பத்தை இந்தியத் தலைமை
      அதிகாரி கிரிஷ் சந்திர சக்சேனாவுக்கு அனுப்பி வைத்தார். இந்தியத் தலைமைக்கு
      கோபம் வரவழைக்க இது ஒரு சரியான சான்றாதாரமாக அமைந்தது. பாதிக்கப்பட்ட
      இந்தியர்கள் மற்றும் இலங்கைத் தமிழர்களால் தூதுவர் அலுவலகம் நிறைந்து
      வழிந்தது.
      இச்சம்பவங்களை அடுத்து, பிரதமர் இந்திரா காந்தி, "இலங்கையில் ஏற்பட்டுள்ள
      இனமோதல் இந்தியாவையும் கடுமையாகப் பாதித்துள்ளது. இந்தப் பிரச்னையில் இந்தியா
      பிற நாடுகளைப் போன்று நடந்து கொள்ள முடியாது என்று இலங்கை அதிபர்
      ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவுக்கு (13 ஆக, 1983) கண்டனம் தெரிவித்தார். அவர் இவ்வாறு
      கருத்து தெரிவித்தது, 1968-இல் தான் உருவாக்கிய "ரா' (தங்ள்ங்ஹழ்ஸ்ரீட் ஹய்க்
      அய்ஹப்ஹ்ள்ண்ள் ரண்ய்ஞ்) என்கிற அமைப்பு திரட்டித்தந்த தகவல்களின்
      அடிப்படையில்தான். இந்த அமைப்பு பிரதமரின் நேரடித் தலைமையில் இயங்குவதாகும்.
      பிரதமரின் பார்வைக்கு வைக்கப்படுகிற தகவல்களின் பேரில் எடுக்க வேண்டிய முடிவை
      அவரே அறிவிப்பார். பிரதமர் இந்திரா காந்தி தனது ஆட்சிக் காலத்தில், அண்டை
      நாடுகளிடையே இருந்த நெருக்கத்தின் காரணமாக எழுதப்படாத சில விதிகளை
      நடைமுறைப்படுத்தி வந்தார். அதில் ஒன்று - தெற்காசிய நாடுகளில் சிக்கல்கள்
      எழும்போது, அதனைத் தீர்க்கும் விதத்தில், உதவி கோரப் பட்டால், அந்தக்
      கோரிக்கை முதலில் இந்தியாவிடம்தான் வைக்கப்பட வேண்டும் என்பதாகும்.
      அதன்பின்னரே அதன் அண்டை நாடுகளுடன், தொடர்பு கொள்ளலாம். அப்படி உதவி கோரும்
      நாடு இந்தியாவுக்குப் பகை நாடாக இருக்கக் கூடாது - என்பது மிக முக்கியம்.
      இலங்கையில் 1971-இல் ஜனதா விமுக்தி பெரமுனா நடத்திய கலவரத்தை இவ்வகையில்தான்
      இந்தியா தனது படைகளை அனுப்பி அடக்கியது. ஆனால் 1983 இனக் கலவரத்தில்
      இந்தியாவைத் தவிர்த்து, பாகிஸ்தான், வங்கதேசம் மட்டுமன்றி
      இப்பிராந்தியத்திற்கு அப்பாலுள்ள இங்கிலாந்து, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட
      நாடுகளிலும் ஆயுதம் மற்றும் ராணுவ உதவியை இலங்கை கோரியுள்ளது என்றும் -
      எந்தெந்த விதமான உதவிகள் கோரப்பட்டுள்ளனவென்றும் ‘தஅர’ அமைப்பு தகவல்களைத்
      திரட்டித் தந்திருந்தது. இவை மட்டுமன்றி, கலவரத்தால் தமிழர்கள் மற்றும்
      இந்திய நிறுவனங்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் குறித்தும், பெரும் எண்ணிக்கையில்
      அங்கிருந்து மக்கள் வெளியேறுவது குறித்தும் கிடைக்கப்பெற்ற பிற தகவல்களின்
      அடிப்படையிலும்தான், இந்திரா காந்தி ஜெயவர்த்தனாவை எச்சரித்தார்.
      எச்சரிக்கையின் கடுமை காரணமாக, ஜெயவர்த்தனா தனது ஆட்சியை அப்புறப்படுத்த
      இலங்கைத் தமிழர்கள் மட்டுமன்றி, சிங்களத் தீவிரவாதிகளும், ராணுவத்தின்
      கட்டுப்பாட்டில் இல்லாத ஒரு குழுவும் முயல்கின்றன என்ற தகவலை ஆதாரமாக
      வைத்துத்தான் பிற நாடுகளின் உதவிகள் கோரப்பட்டதாக பதில் அளித்தார். இந்தப்
      பிரச்னையில் "தமிழர்கள்' என்ற வகையில் தமிழ்நாடு முழு அளவில்
      சம்பந்தப்பட்டிருப்பதால், இந்தியாவிடம் உதவி கோரப்படவில்லை என்றும்
      விளக்கினார். தற்சமயம் தனது ஆட்சிக்கு எந்த வகையிலும் ஆபத்தில்லை என்று
      அறிந்து கொண்டதும் உதவி கோரும் குழுக்களின் பிற நாட்டுப் பயணம் நடைபெறவில்லை
      என்றும் தெரிவித்தார்.
      இந்தத் தகவல் சரியானதுதானா என்று தில்லியில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களில்
      விசாரித்தபோது, ஜெயவர்த்தனாவின் கூற்றுச் சரியில்லை என்பது தெரியவந்தது.
      இந்திய வெளிவிவகார அமைச்சகம் சார்பில் புதுதில்லியில் உள்ள அனைத்து
      வெளிநாட்டு தூதரகங்களிடமும் தொடர்பு கொண்டு, "இலங்கை இனப் பிரச்னையில்
      ஒதுங்கியிருக்கும்படி, கேட்டுக் கொண்டதுடன், "இதைமீறி ராணுவ உதவி செய்தால்,
      அது இந்தியாவுக்கு எதிரான செயலாகக் கருதப்படும்' என்றும் தெரிவிக்கப்பட்டது.
      ஆகஸ்டு 15, இந்திய சுதந்திர நாளன்று 1983-ஆம் ஆண்டின் சுதந்திர நாள்
      விருந்தினராக இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவரும், தமிழர் விடுதலைக்
      கூட்டணியின் தலைவருமான அ.அமிர்தலிங்கம் தேர்வு செய்யப்பட்டார். இது
      இலங்கைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
      அன்றைய தினம் செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து பிரதமர்
      உரையாற்றும்போது, "இலங்கையில் இனப்படுகொலை திட்டமிட்டு நடைபெறுகிறது. அதைப்
      பார்த்துக் கொண்டு இந்தியா சும்மா இராது' - என்று குறிப்பிட்டார். இதற்கு
      முந்தின நாள் அமிர்தலிங்கம், சிவசிதம்பரம், சம்பந்தன் குழுவினரை இந்திரா
      காந்தி சந்தித்தபோது, ஆதியோடந்தமாக செல்வா காலம் தொடங்கி, தற்போதைய நிலவரம்
      வரை கேட்டறிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை அதிபர்
      ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவை ஆகஸ்ட் 17-இல் மீண்டும் தொடர்பு கொண்டு, "இலங்கையின்
      உள்விவகாரங்களில் இந்தியா தலையிடாது - ஆனால் இலங்கை வன்முறைகள் தமிழ்நாட்டில்
      உள்ள தமிழர்களின் உணர்வுகளுடன் விளையாடுகிற செயலாக அமைந்துவிட்டது - இந்தியத்
      தூதரகம் தாக்கப்பட்டதும் கவலை அளிக்கிறது' என்றும் இந்திரா காந்தி
      தெரிவித்தார்.
      பிரதமர் இந்திரா காந்தி இலங்கையில் நடக்கும் இனப்படுகொலைகளையும், அங்கே
      தமிழர்கள் திட்டமிட்டுக் கொல்லப்படுவதையும் ஆதாரப்பூர்வமாகக் கேட்டறிந்தபோது,
      உண்மையிலேயே பதறிப்போனார். இந்தியப் பிரதமர், அமிர்தலிங்கம் மற்றும் ஏனைய
      ஈழத் தமிழர்களிடம் அவர்களது போராட்டத்திற்குத் தனது முழு ஆதரவும் உண்டு என்று
      தெரிவித்ததுடன், தமிழர்களைப் பாதுகாக்கும் முயற்சியில் உடனடியாக இறங்கத்
      தலைப்பட்டார். பிரதமர் இந்திரா காந்தி, இலங்கை அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவை
      The old fox என்று விமர்சித்ததன் மூலம் தெரியவருவது என்னவென்றால், அவர்
      நம்புதற்கு உரியவர் அல்ல என்பதுதான். 

No comments:

Post a Comment