130: இடைக்கால அரசு! ஈழத்தில் புலிகளுக்கும் இந்திய அமைதிப் படையினருக்கும் உக்கிரமாகப் போர்
நடந்து கொண்டிருந்த சூழ்நிலையில், சென்னையில் இருந்த கிட்டுவிடம் இந்தியாவின்
ராஜதந்திரிகள் சமாதானப் பேச்சு நடத்திக் கொண்டிருந்தனர் என்பதும் உண்மையே.
இவ்வகையான ஒரு பேச்சும், திட்டமும் கிட்டுவிடம் சொல்லப்பட்டு, அந்தத் தகவலை
எடுத்துச் சொல்ல, கிட்டுவிடம் இருந்த போராளி ஜானி அனுமதிக்கப்பட்டார்
பிரபாகரன் இருக்குமிடத்தை அறியும் ஒரு முயற்சியாக இந்த ஏற்பாடு அமைந்து
விடுமோ என்ற சந்தேகத்தில், பலாலியில் இறங்கி, யாழ்ப்பாணம் சென்று, தாமதித்து,
பின்னர் அமைதிப்படை மற்றும் உளவு சொல்லும் இதர அமைப்புகளின் ஆட்களுக்குத்
தெரியாமல், வன்னிப்பகுதிக் காட்டில் இருந்த பிரபாகரனைச் சந்திக்க, ஜானி
சைக்கிளில் செல்லும்போது சுட்டுக் கொல்லப்பட்டார். ஆனால் கிட்டுவின் சார்பில்
என்ன தகவல் ஜானியால் எடுத்துச் செல்லப்பட்டது என்பது தெரியாமலே போயிற்று
ஆனால் நிலைமைகளில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக சென்னையில் இயங்கி வந்த
கிட்டுவுக்கு மேலும் நெருக்கடிகள் கொடுக்கப்பட்டு, இறுதியில் புலிகளது அலுவலக
இயக்கம் முடக்கப்பட்டது. இவ்வாறு அவர்களின் பத்துக்கு மேற்பட்ட அலுவலகங்கள்
மூடி சீல் வைக்கப்பட்டன. கிட்டுவைச் சுற்றியிருந்த நூற்றுக்கணக்கான
காயம்பட்ட, காயம்படாத புலிகளையும், கிட்டுவையும் போலீஸார் வளைத்துக் கைது
செய்தனர்
இந்நிலையில், புலிகளது ஆதரவு இயக்கங்கள் ஆளுநர் ஆட்சியின் ஆலோசகர்களுக்கும்,
ராஜீவ் காந்திக்கும் எதிராகக் கண்டனக் குரல் எழுப்பினர். கிட்டு
தன்னுடையதும், தமது இயக்கத்தைச் சார்ந்த வர்களதுமான போராளிகளுக்கு
அளிக்கப்பட்ட நெருக்குதல்களைக் கண்டித்து, அவர்களை விடுவிக்கும் வரை உண்ணா
விரதம் மேற்கொள்ளப் போவதாக (10 அக்டோபர் 1988) அறிவித்தார்
உண்ணாவிரதம் இருந்ததன் பேரில் திலீபன் மரணம் பற்றிய மிகப் பெரிய விமர்சனத்தை
அமைதிப் படை ஏற்க வேண்டியிருந்தது. எனவே, சென்னயில் கிட்டுவின் உண்ணாவிரதம்,
எந்த வகையான விளைவுகளை ஏற்படுத் துமோ என்ற எண்ணத்தில் அவர்கள்
விடுவிக்கப்பட்டனர். ஆனால் அவர் சென்னையில் இருந்து இயங்கத் தடை
விதிக்கப்பட்டது. எனவே, அவர்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
பின்னாளில் கிட்டு பிரபாகரனுடன் சேர்ந்து கொண்டார்
தேர்தலைத் தொடர்ந்து, ஈ.பி.ஆர் எல்.எஃப்.பின் மத்தியக் குழு உறுப்பினர்
வரதராஜ பெருமாள் முதலமைச்சராகத் தேர்வு செய்யப்பட்டார். இவரின் தந்தை
தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜபாளையத்தைச் சேர்ந்தவர். தொழிலுக்காக
யாழ்ப்பாணத்தில் குடியேறியவர்
ஈ.பி.ஆர்.எல்.எஃப். ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததும் நிர்வாகத் தலைநகரான
யாழ்ப்பாணத்தைத் தவிர்த்து, திருகோணமலையைத் தேர்ந்தெடுத்தது. இதனால்
இருவிதமான வெறுப்புகளை அவர் சந்திக்க நேர்ந்தது. முதலாவது எந்த ஈழத்தை
அவர்கள் முதன்மைப்படுத்தினார்களோ, அந்த ஈழப்பகுதியின் அடர்த்தியான மக்கள்
வசிக்கிற யாழ்ப்பாணத்தை ஒதுக்கியதால், அந்தப் பகுதி மக்களின் வெறுப்புக்கு
ஆளானார்கள்
அதேசமயம் இலங்கை அதிபர் ஜெயவர்த்தனாவும் யாழ்ப்பாணத்தைத் தவிர்த்து
திருகோணமலையை, வடக்கு- கிழக்கு மாகாண அரசின் நிர்வாக நகரமாவதைக் கடுமையாக
எதிர்த்தார். இந்த எதிர்ப்புக்குக் கீழ்க்காணும் அம்சங்களும் காரணமாக அமைந்தன
யாழ்ப்பாணத்தைவிட, திருகோணமலையை சிங்கள அரசுகள் எப்போதும் முக்கியக்
கேந்திரமாக நினைத்தன. உலகின், ஏன் இந்தியாவின் இலக்கு கூடத்
திருகோணமலையாகத்தான் இருந்தது
இயற்கைத் துறைமுக வசதி, எண்ணெய்க் கிடங்குகள் அதிகம் கொண்ட, வெளி நாட்டு
முதலீடுகளையும், ஒப்பந்தங்களையும் அதிகம் ஈர்த்த நகரம். அதுமட்டு மன்றி,
அமெரிக்காவின் ஒலிபரப்புத்தள வசதிகள் கொண்டதும் ஆகும் எனவேதான் தமிழர்
தலைவர்களிடையே போடப்படுகிற ஒப்பந்தங்கள் எதுவாக இருந்தாலும், வடக்கு-கிழக்கு
மாகாணம் என்று குறிப்பிடப்படும் போது, திருகோணமலை நகரின் துறைமுகப் பகுதியும்
அதன் நிர்வாகமும் மத்திய ஆட்சியின் அதாவது சிங்களரின் தனிப் பார்வையில்
அமையும்படி பார்த்துக் கொள்ளப்படும். இந்நிலையில் சிங்களர்களும் இத்தலைநகர்
அறிவிப்புக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்
எனவே, அதிபர் ஜெயவர்த்தனா ஆரம்பத்திலேயே இந்தியாவாலும், புதிய முதலமைச்சரின்
நிர்வாகத் தலைநகர அறிவிப்பாலும் எரிச்சலடைந்தார்கள். அதிகாரங்களைக்
கையளிக்கவும் மறுத்தார். இதன் காரணமாக, வரதராஜ பெருமாள் இவை ஒவ்வொன்றுக்குமாக
திருகோணமலைக்கும் கொழும்புக்குமாக விமானத்தில் பறந்த வண்ணம் இருந்தார் என்ற
விமரிசனமும் அப்போது எழுந்தது
ஜெயவர்த்தனா இருந்தவரை, இடைக் கால நிர்வாகக் கவுன்சில் என்று அழைக்கப்பட்ட,
வடக்கு-கிழக்கு மாகாண அரசுக்கு எவ்வித அதிகாரப் பொறுப்பையும் மனமுவந்து
அளிக்கவில்லை. இதன் காரணமாக வடக்கு-கிழக்கு மாகாணங்களின் தாற்காலிக அரசின்
நிர்வாகங்களுக்குத் தேவைப்படும் நிதியாதாரங்களுக்கு, இந்திய அரசையே அவ்வரசு
நம்பியிருந்தது
யாழ்ப்பாணத்தில் அரசு அலுவலகத்தில் அமர்ந்து பணியாற்ற, இடைக்கால அரசை
நடத்தியவர்களுக்கு ஓர் இடம் கூட வழங்கப்படவில்லை. அவர்கள் யாழ்
மணிக்கூண்டுக்கு அருகே, அசோகா ஓட்டலின் எதிரே இருந்த கட்டடத்தில் இருந்து
தங்களது அரசப் பணிகளை ஆற்றி வந்தனர் இந்திய ராணுவத்தின் புதிய தளபதியாக வந்த
ஜெனரல் வி.என். சர்மா, யாழ்ப் பாணத்தில் அமைதிப் படைப் பணிகளை ஆய்வு செய்ய
வந்தார். பலாலி ராணுவ முகாமில் தளபதிகளிடம் அவர் உரையாடுகையில், சட்டம்
ஒழுங்கைப் பராமரிக்க என மக்கள் தொண்டர் படை என்னும் அமைப்பை உருவாக்குவதன்
அவசியத்தை வெளியிட்டார். இந்த அமைப்பு அமைதிப் படைக்கு உதவியாக இருக்கும்
சுமையையும் குறைக்கும் என்றார்
கூடவே தமிழ்ப் பகுதி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பின்மையையும் போக்கும்
வகையிலும் இது அமையும் என்று கருத்துத் தெரிவித்தார். இவரது கருத்து
தில்லியிலும் ஏற்கப்பட்டது இடைக்கால அரசு சந்திக்கும் பல்வேறு
இன்னல்களுக்கிடையில், இந்த அமைப்புக்கு இலங்கை அரசின் உத்தரவாதம் பெறுவது
அவசியம் என்று இந்தியத் தூதுவரிடம் குறிப்பிடப்பட்டதும், இந்த மக்கள் தொண்டர்
படை பற்றிய விவரம், டிசம்பர் 1988-இல் இலங்கை அரசிதழில் வெளியிடப்பட்டது
ஆனால் சட்டவடிவான செயல்பாட்டுக்கு இலங்கையின் காவல் துறை இயக்குநர் அனுமதி
அளிக்கவில்லை. குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால், இந்த அமைப்பு வடக்கு-கிழக்கு
மாகாணக் கவுன்சிலின் பொறுப்பில் இருக்கும், அவ்வளவுதான். ஆனால் முடிவுகள்
பராமரிப்பு ஆகியன அமைதிப்படையைச் சார்ந்ததாக இருக்கும். எனவே, செலவும்
அமைதிப் படையைச் சேர்ந்ததே. இந்த நிதிச்சுமைக்கு பல பேச்சுவார்த்தைகள்
நடத்தப்பட்டன. ஐந்து மாதங்கள் கழித்துத்தான் இதற்காகும் செலவில் ஒரு பகுதியை
இலங்கை அரசு ஏற்றது
எனவே, இந்த அமைப்புக்கு ஆள் சேர்ப்பது என்பது கேள்விக்குறியானது
வடக்கில் எந்த இளைஞரும் இதில் சேர ஆர்வம் காட்டவில்லை. கிழக்கில் ஆள்
சேர்க்கும் வேலைகளை ஆளும் கூட்டணியே செய்தது. கட்டாயமாக மாணவர் களையும்,
இளைஞர்களையும் இதில் சேர்த்ததாக பெரிய அளவில் குற்றச்சாட்டு எழுந்தது
ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கத்தினரின் செயல்கள் வடக்குப் பகுதியில் கடுமையான
விமரிசனத்துக்கு உள்ளாயிற்று
"அவர்களின் அதிகாரம் நிகழ்ந்த காலத் தில் நடந்த வன்முறைகள், அராஜகங்கள்
எல்லாவற்றுக்கும் ஒரு சிலரின் தவறான போக்கே காரணம். பத்மநாபா என்ற ஒரு வர்
மனிதநேயமுள்ளவராக இருந்தால் மட்டும் எல்லாம் நல்லபடியாக நடந்துவி டும் என
எதிர்பார்க்க முடியாது. தவறுக ளுக்கு இயக்கத்தின் தலைமை பகிரங்க மாக வருத்தம்
தெரிவிக்க வேண்டும் என்ற என் போன்றவர்களின் கோரிக்கை உதாசீனம் செய்யப்பட்டது'
என்று தனது நூலில் (ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம் பக். 473)
அந்த இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரான சி.புஷ்பராஜா தெரிவித்துள்ளார்.
(இவ்வாறெல்லாம் அவர் விமர்சித்த காரணத்தால், அந்த அமைப்பிலிருந்தே
நீக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.) இதைவிடவும் அதிகமாக "முறிந்த
பனை' நூலிலும், ஈ.பி.ஆர்.எல்.எஃப்.பின் செயல்பாடுகள் குறித்து
விமர்சிக்கப்பட்டுள்ளன.
"இந்தியாவின் கைப்பொம்மையாக இவ்வியக்கம் இயங்குவதைத் தவிர வேறு ஒரு வழியிலும்
முன்னே போக முடியாத நிலைக்கே இவர்களை இட்டுச் சென்றது' என்று
குறிப்பிடப்பட்டுள்ளது இதுதவிர லெப். ஜெனரல் சர்தேஷ் பாண்டேவும் தனது
"அசைன்மெண்ட் ஜாஃப்னா' நூலில் இந்திய அமைதிப் படைக்கு இழுக்கு நேர்ந்ததற்கு
ஈ.பி.ஆர்.எல்.எஃப்.பின் சமூக விரோதச் செயல்பாடே காரணம் என்று கூறியுள்ள அவர்,
தனது பதிவுகளில் கடும் சொற்களைப் பிரயோகித்துள்ளார்ல்லை
131: ஆட்சிகள் மாறின; காட்சிகளும்! தனது ஆட்சிக்காலத்தில் எந்த அளவுக்கு, தமிழர்களின் உரிமைகளை ஒடுக்க
முடியுமோ, ராணுவம் மற்றும் காவல்துறைகளைப் பயன்படுத்தி எவ்வளவு கொடுமைகளை
இழைக்க முடியுமோ, அந்தளவுக்கு செயலாற்றிய இலங்கை அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா,
அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார். (டிசம்பர் 1988) உடனடியாக நடைபெற்ற அதிபர்
தேர்தலில் ரணசிங்க பிரேமதாசா, ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவை சொற்ப வாக்குகள்
வித்தியாசத்தில் வென்று, 1989, ஜனவரி 2-ஆம் தேதி இலங்கையின் அதிபரானார். தனது
பதவி ஏற்பை புராதன நகரமான கண்டியில், புத்தரின் பல் இருப்பதாகக் கருதப்படும்
"புனிதப் பற்கோயில்' அமைந்துள்ள, தலதா மாளிகையில் நடத்தினார். இதன்மூலம்
பெüத்தத்தில் தமக்கிருந்த ஆழ்ந்த பற்றை, சிங்கள தேசியவாதிகளுக்கு
உணர்த்தினார். அதே வேளையில் விடுதலைப் புலிகள் அமைப்பு, ஜனவரி 1-ஆம் தேதி ஓர்
அறிக்கையை வெளியிட்டது. அவ்வறிக்கையில், "இந்தியாவும் ஸ்ரீலங்காவும் ஜனநாயகம்
என்கிற பெயரில், தமது நலன்களைப் பாதுகாக்க என்னென்ன செய்யும் என்பதற்கு
தமிழீழத்தில் நடத்தப்பட்ட மாகாணசபைத் தேர்தலும், அதிபர் தேர்தலும் சிறந்த
எடுத்துக்காட்டாகும்.
இரண்டு தேர்தல்களிலும் தமிழீழ மக்கள் ஆயுதமுனையில் பலவந்தமாக வாக்களிக்க
அழைத்துச் செல்லப்பட்டார்கள். பல இடங்களில் மக்கள் இல்லாமலே வாக்குகள்
போடப்பட்டன. அதேபோன்று, ஜனாதிபதி தேர்தலை நடத்த வந்த சிங்கள அதிகாரிகள்
நீங்கள் போடாவிட்டால் பரவாயில்லை, நாங்கள் போடுவோம் என்று கூறியுள்ளார்கள்.
இந்த வகையில் நடத்தப்பட்ட தேர்தல் முடிவுகள் ஜனநாயகத்துக்குக் கிடைத்த
வெற்றியென்றும் புகழப்படுகிறது. நாம் கூறிய குற்றச்சாட்டுகள் உண்மை என்பதை
எம்மால் சர்வதேச பத்திரிகையாளர்கள் முன்னிலையில் நிரூபிக்க முடியும். இன்று
தமிழ்மொழி அரச கரும மொழியாக்கப்பட்டுள்ளது; மலையக மக்களுக்குக் குடியுரிமை
வழங்கப்பட்டுள்ளது. ராஜீவ்-ஜெயவர்த்தனா ஒப்பந்தமே இதைச் சாதித்தது என்கிறது
இந்திய அரசு. அரசோடு ஒத்துழைத்தோம் குடியுரிமை பெற்றோம் என்கிறது இலங்கைத்
தொழிலாளர் காங்கிரஸ். அப்படியென்றால் 1948-1988 வரை அரசாங்கத்தோடு
ஒத்துழைத்தும் மலையக மக்கள் குடியுரிமை பெற 40 ஆண்டுகள் பிடித்தது ஏன்?
மலையக மக்களை அவர்கள் நம்பிய தலைமை, புரட்சிப்பாதையில் வழி நடத்தியிருந்தால்
குடியுரிமை பறிக்கப்பட்ட ஒருசில ஆண்டுகளுக்குள்ளேயே, அவர்களது குடியுரிமையை
மீளப் பெற்றிருக்க முடியும். அவர்களின் வாழ்க்கைத் தரத்தையும்
உயர்த்தியிருக்க முடியும். இன்று எமது ஆயுதப் போராட்டமும் அதன்மூலம் மலையகத்
தமிழர்களிடையே தோன்றியுள்ள விழிப்புணர்வும், புரட்சித் தன்மையுமே மலையகத்
தமிழ் மக்களுக்குக் குடியுரிமையைப் பெற்றுத் தந்திருக்கிறது. ஒப்பந்தமோ,
பிரார்த்தனைகளோ இவற்றைப் பெற்றுத்தரவில்லை என்பதை தமிழ்மக்கள் நன்கு
அறிவார்கள். இன்று தமிழ் மக்களுக்குத் தரப்பட்டதாகக் கூறப்பட்டவை
நடைமுறைப்படுத்தப்படுமா? நிலைக்குமா? ஸ்ரீலங்கா அரசு நினைத்தால் ஒரே நாளில்
இவற்றை இல்லாமல் செய்துவிட முடியுமோ?.
இந்தியாவுக்கு நாம் எப்போதும் நேச சக்தியாகவே இருந்திருக்கிறோம். ஆனால்
இந்திய அரசு, தாம் சொல்வதை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என ஆயுதமுனையில்
நிர்பந்திக்கும்போது நாம் நமது உரிமைக்காகப் போராடுவதைத் தவிர வேறு
வழியில்லை. தமிழீழ மக்களுக்கு என்ன வேண்டும் என்பதை தமிழீழ மக்கள்தான்
தீர்மானிக்க வேண்டும்' என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அறிக்கையின் இறுதியில், "நாம் அடிமைகளாக வாழக்கூடாது என்றால் (1) ஆயுதங்களைக்
கீழே போடக்கூடாது (2) உண்மையான ஜனநாயகம் மலரவேண்டுமென்றால் ஆயுதங்களைக் கீழே
போடக்கூடாது (3) சுதந்திர சோசலிச தமிழீழத்தில்தான் உண்மையான ஜனநாயகம் மலரும்
(4) இன்று ஜனநாயகத்தின் பெயரால் ஆயுதங்களைக் கையளியுங்கள் என்பவர்கள்
தமிழீழப் போராட்டத்திற்கு எதிரானவர்கள் மட்டுமல்ல; துரோகத்தையும்
இழைக்கிறார்கள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது' என்றும்
குறிப்பிடப்பட்டுள்ளது. பிரேமதாசா தான் அதிபராகப் பொறுப்பு ஏற்றுக்கொண்டதும்,
இந்திய அமைதிப்படையைக் கடுமையாக எதிர்த்த இரு அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை
நடத்தத் தயாராக இருப்பதாக அறிவித்தார். அவர் குறிவைத்த அமைப்புகளில் முதலாவது
விடுதலைப் புலிகள் இயக்கம், இரண்டாவதாக ஜனதா விமுக்தி பெரமுன என்னும்
சிங்களத் தீவிரவாத இயக்கமாகும்.
பிரேமதாசா தான் பிரதமராக இருந்தபோது, இந்தியாவுடன் ஏற்படுத்திக்கொண்ட
ஒப்பந்தத்தைக் கடுமையாக எதிர்த்தவர். அந்த ஒப்பந்தம் கையொப்பமாகும்போது
நாட்டிலேயே இருக்கமாட்டேன் என்று கூறி வெளிநாடு சென்றவர். ஜே.வி.பி. இயக்கம்
அமைதிப் படையைக் கடுமையாக எதிர்த்தது. அதேபோன்றுதான் விடுதலைப் புலிகளும்.
எனவேதான் பிரேமதாசா, பேச்சுவார்த்தை என்கிற சொற்பிரயோகத்தை வெளிப்படுத்தி,
இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தினார். தொடர்ந்து பிரேமதாசா நாடாளுமன்றத்
தேர்தலில் தீவிரம் காட்டினார். தனது கட்சி வெற்றிபெற வேண்டும் என்பது
அவருக்கு அவசியமாயிற்று. எனவே கடுமையான முயற்சிகளை மேற்கொண்டார். விடுதலைப்
புலிகளுக்கும் அமைதிப் படைக்கும் இடையே மோதல் நீடித்த நிலையில், இலங்கையில்
கடந்த ஆண்டு ஜூன் முதல், தேர்தல்கள் அடுத்தடுத்து நடந்தபடியே இருந்தன. இது
விசித்திரம் மட்டுமல்ல; ஆச்சரியமும்கூட. முதலில் வடக்கு-கிழக்கு தவிர்த்து
இதரப் பகுதிகளில் மாகாணசபைத் தேர்தல், அடுத்து வடக்கு-கிழக்கு மாகாணசபைக்கான
தேர்தல், அதனையடுத்து மூன்றாவதாக அதிபர் தேர்தல் என்று நடந்த முடிந்த
நிலையில் தற்போது பிப்ரவரியில் நாடாளுமன்றத் தேர்தல், அதுவும் நீண்ட பல
ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற இருக்கிற தேர்தல் என்பதால் பல்வேறு கட்சிகளும்
முனைப்பு காட்டின. தமிழர் பகுதிகளிலும் ஈபிஆர்எல்எஃப் ஆட்சிக் கட்டிலில்
அமர்ந்ததும் மேலும் சில கட்சிகளுக்கும் இந்தத் தேர்தலில் ஈடுபட ஆர்வம்
ஏற்பட்டது.
விடுதலைப் புலிகள் அமைப்போ இத் தேர்தலை முற்றிலுமாகப் புறக்கணித்தது.
இதுகுறித்து அவ்வியக்கம் 10.1.1988 அன்று வெளியிட்ட அறிக்கையில், "எதிர்வரும்
மாசி 15-இல் (பிப்ரவரி 15) நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில்
போட்டியிடுபவர்களும் அவர்களுக்குத் துணை நிற்பவர்களும் தமிழீழ தேசிய
விடுதலைப் போராட்டத்துக்குத் துரோகம் செய்கிறார்கள். இனப் படுகொலைகளுக்கு
மறைமுகமாகவும், நேரிடையாகவும் ஆதரவு தந்தவர்கள் இன்று எமது பிரதிநிதிகளாக
எமக்காகக் குரலெழுப்புவதற்கான அங்கீகாரம் கேட்கிறார்கள். நாடாளுமன்றத்தையும்
மாகாணசபையையும் எமது போராட்டத்தை முன்னெடுக்க ஓர் இடைக்காலத் தீர்வாக
ஏற்கிறோம் என தமிழ், முஸ்லிம் மக்களை ஏமாற்றுவதற்காக இவர்கள்
கூறிவருகிறார்கள். இவர்கள் இடைக்காலத் தீர்வுகளை ஏற்பது போராட்டத்தை
முன்னெடுக்க அல்ல.
தமிழீழப் போராட்டத்தை விலைபேசி விற்கும் இத் துரோகிகள் கூட்டம், இடைக்காலத்
தீர்வு என்ற பெயரிலும் ஜனநாயகம் என்ற பெயரிலும் தேர்தலில் பங்குபற்றுவது தமது
கோழைத்தனத்தையும் இயலாமையையும் மறைத்து அற்ப பதவிகளையும் அற்ப சுகங்களையும்
அனுபவிப்பதற்கே என்பதை நாம் அறிவோம்... "தமிழீழத்தில் சுமுகநிலை இன்னும்
வரவில்லை. குடிபெயர்ந்தவர்கள் இன்னும் அவர்களது இடத்தில்
குடியமர்த்தப்படவில்லை. இந் நிலையில் தேர்தலா?' என்று கேள்வி
எழுப்பியவர்கள்கூட, இப்போது தேர்தலில் போட்டியிட முன்வந்து விட்டார்கள்.
இதில் இன்னொரு முரண், வடக்கும் கிழக்கும் இணைந்திருக்க வேண்டுமா என்று மக்கள்
கருத்தை அறிய ஜூலை 25-ம் தேதி சர்வஜன வாக்கெடுப்பு நடக்கும் என
அறிவிக்கப்பட்டிருப்பதையும்கூட ஏற்கிறார்கள். நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலே
ஒரு மோசடி. அதேபோன்று எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் பெரும் அளவில்
மோசடிகளை நடத்த இருக்கிறார்கள். இவர்கள் நாடாளுமன்றம் சென்று சாதிக்கப்
போவதென்ன?
30 ஆண்டுகால நாடாளுமன்ற அரசியல் போராட்டகாலத்தில்தான் மலையக மக்களின்
குடியுரிமை மறுக்கப்பட்டது. தமிழ்ப் பிரதேசம் சிங்களக் குடியேற்றத்தால்
பறிபோயிற்று. தமிழ்மொழி தன் உரிமையை இழந்து, தமிழ், முஸ்லிம் மக்களின்
கலாசாரம் சீரழிக்கப்பட்டது' என்று அடுக்கடுக்காகப் பல்வேறு கேள்விகளை
எழுப்பியது. தேர்தலில், பிரேமதாசாவின் ஐக்கிய தேசியக் கட்சியே (யுஎன்பி)
வென்றது. தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணித் தலைவர்களான அமிர்தலிங்கமும்
யோகேஸ்வரனும் தோற்றனர். இவர்களின் சேவையை அங்கீகரிக்க, ஈபிஆர்எல்எஃப்
அணியினர் இவர்களை நியமன உறுப்பினர்களாக்க முனைந்தனர். இதே நேரத்தில்,
தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. ஓராண்டு ஆளுநர் ஆட்சி முடிவுக்கு
வந்த நிலையில், அதுவரை ஆட்சிபுரிந்து வந்த அனைத்திந்திய அண்ணா திராவிட
முன்னேற்றக் கழகம் ஜானகி அணி என்றும், ஜெயலலிதா அணி என்றும் பிளவுபட்டு
தனித்தனியே நின்றன. காங்கிரஸ் கட்சி, பிளவுபட்ட எம்.ஜி.ஆரின் கட்சியுடன் உறவு
இல்லாமல் தனித்து நின்றது. நான்கு முனைப் போட்டியாக நடைபெற்ற தேர்தலில்
திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியைப் பிடித்தது. அதன் தலைவர் மு.கருணாநிதி
மூன்றாவது முறையாக முதல்வரானார் (1989, ஜனவரி 27). எதிர்க்கட்சித் தலைவர்
என்கிற பதவி ஜெ.ஜெயலலிதாவுக்குக் கிடைத்தது.
ஞாயிற்றுக்கிழமை, 03 ஜனவரி 2010 18:38 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
No comments:
Post a Comment