ஆனாலும், திம்பு பேச்சின்போது அளிக்கப்பட்ட நான்கு அடிப்படைக்
கோட்பாடுகளின் பிரகாரம் இல்லை என்று தமிழர்கள் இவ்வரைவை ஏற்கவில்லை.
இந்நிலையில், இந்திய அரசின் முயற்சியை முற்றிலுமாக நிராகரிக்க மனமில்லாத
தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றவர்களுடன் பேசி 1985-ஆம் ஆண்டு செப்டம்பர்
9-ஆம் நாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு ஒரு கடிதத்தை அனுப்பியது.அக்கடிதத்தில்
(அ) தமிழர் பிராந்தியங்களின் ஒருங்கிணைப்பு (ஆ) காணி பங்கீட்டதிகாரம் (இ)
சட்டம் ஒழுங்கு பற்றிய அதிகாரம்-ஆகிய மூன்று அம்சங்களையும் விட்டுக்கொடுக்க
தமிழர் அமைப்புகள் விரும்பவில்லை என்று தெரியப்படுத்தியிருந்தது.
இதனைத் தொடர்ந்து தமிழர் குழுக்களை அழைத்து ராஜீவ் காந்தி பேசிப்பார்த்தார்.
முடிவுகள் எதுவும் ஏற்படவில்லை. சலிப்படைந்த ராஜீவ் "தமிழர்கள் பக்கம் தீர்வு
குறிப்புள்ளது; அவர்கள்தான் முடிவெடுத்து அறிவிக்க வேண்டும்' என்று கருத்துத்
தெரிவித்தார். இந்தத் தேக்க நிலையைப் போக்க தமிழர் விடுதலைக் கூட்டணி,
பிரதமர் இந்திரா காந்தியின் பெருமுயற்சியால் கூட்டப்பட்ட வட்ட மேஜை
மாநாட்டில் பேச உருவாக்கப்பட்ட "இணைப்பு - இ' திட்ட அடிப்படையில்,
இந்தியாவின் முயற்சி வீண் ஆகக்கூடாது - என்கிற எண்ணத்தில் இத்திட்டத்தை
இந்திய அரசுக்கு சமர்ப்பிக்கின்றோம் (தமிழர் விடுதலைக் கூட்டணி வெளியீடு -
1988) என்று கூறி 1 டிசம்பர் 1985 அன்று அளிக்கப்ப்பட்ட திட்டத்தில் திம்பு
பேச்சில் கூறப்பட்ட நான்கு அடிப்படைக் கோட்பாடுகள் பற்றிய குறிப்பு எதுவும்
இல்லை. அத்திட்ட வடிவு வருமாறு:
1. இலங்கையானது மாநிலங்களின் கூட்டரசாக அமையவும்,
2. வடக்கு-கிழக்கு மாநிலங்களில் மொழிவாரி அரசாக அமையவும்,
3. மாநிலங்களின் எல்லை, அம்மாநிலத்தின் ஒப்புதல் இன்றி மாற்றாமல் இருக்கவும்,
4. நாடாளுமன்றத்தில் அங்கத்தவம் மொழி, இன மக்களின் விகிதாச்சார அடிப்படையில்
அமையவும்,
5. முஸ்லிம்கள், இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம்
கிடைக்க வகை செய்யவும்,
6. எந்தவொரு குறிப்பிட்ட இனத்தையும் பாதிக்கும் சட்டம் இயற்றும்போது,
நாடாளுமன்றத்தில் அந்த இன பெருவாரி உறுப்பினர்கள் சம்மதம் பெற வழி செய்யவும்,
7. அரசமைப்புச் சட்டங்களில் - அது குடியுரிமைச் சட்டமாக இருந்தாலும் அதனை
ஒதுக்கி வைத்து 1981-ஆம் ஆண்டு நவம்பர் 1-ஆம் தேதி இலங்கையில் வசித்தவர்
அனைவருக்கும் குடியுரிமை வாய்ப்பு வழங்கவும்,
8. தமிழ் ஆட்சிமொழியாகவும்,
9. ராணுவம், அரசு சேவை மற்றும் வேலைவாய்ப்பில் இனவாரி மக்கள்தொகை
அடிப்படையில் அதன் விகிதாச்சாரத்தை ஒட்டி அரசமைப்பில் ஏற்பாடு செய்யவும்,
10. இந்தியாவில் ஒரு மாநிலத்துக்குண்டான அரசமைப்புப்படி ஆளுநர், முதல்வர்,
அமைச்சர்கள், நிதி அதிகாரம், ஆணைக்குழு அமைத்தல், நீதிமன்றப் பணிகள், சேவை
அமைப்புகளுக்கு உட்பிரிவுடன் சட்டவடிவம் அமைக்கவும்,
11. மொழிவாரி மாநிலத்தில் முஸ்லிம்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் கிடைக்க
தொகுதிகள் பங்கீடு செய்யவும்,
12. மலையகத் தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பு, அவர்கள் வாழும் பகுதிகளை இணைத்து
கிராமச் சேவைப் பிரிவு, அரசு அதிகாரிகள் மற்றும் மாவட்டங்கள் அமைக்கவும்,
13. மொழிவாரி மாநிலங்கள் அமையும் போது, அம்மாநிலத்துக்கு வெளியே வசிக்கும்
தமிழ்த் தொழிலாளர்கள் தாம் வாழும் பகுதிகளைத் தவிர்த்து, வேறு மாநிலங்களில்
வேலை நிமித்தம் வசித்தால் அவர்களுக்குரிய பாதுகாப்பு மற்றும் சகல உரிமைகளும்
கிடைக்க வகை செய்யவும்,
14. மேற்கண்ட அனைத்துக்கும் உரிய சட்டங்களை இயற்றி அங்கீகரித்தலும் - தேவையான
அளவில் அரசமைப்புச் சட்டத்திலும் மாற்றம்-திருத்தம் உள்ளிட்டவற்றை
மேற்கொள்ளவும் வேண்டும். இதுதவிர,
15. தமிழ் மாநிலம் அமைவதற்குண்டான பல்வேறு காரணங்களை விளக்கியும், சிங்களவக்
குடியேற்றங்களினால் ஏற்படும் மனித இழப்புகளைப் போக்கவும், மாநிலத்துக்குத்
தேவையான அதிகாரங்கள் பற்றியும் உரிய தனித்தனி அட்டவணைகள் உடன்
இணைக்கப்பட்டுள்ளன என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தத் திட்டவரைவுக்கு இலங்கை அரசு மிக நீண்ட பதிலொன்றை ஏராளமான கேள்விகளுடன்
எழுப்பி இந்திய அரசுக்கு அனுப்பியது. அதில் குறிப்பிடத்தக்க ஆட்சேபணைகள்
என்ன?
(1) இறையாண்மைக்கு பங்கம் ஏற்படுத்தும் "சமஷ்டி அரசு' - என்பது நடைமுறையில்
இருக்கும் "ஒற்றையாட்சி' அரசுமுறைக்கு நேர் எதிரானது.
(2) மொழிவாரி மாநிலம் அமைப்பதானால் இதில் இரண்டு பகுதிகள் போக, மற்ற ஏழு
மாகாணங்களை என்ன செய்வது? அவைகளும் நாளடைவில் பிரிக்கப்பட வேண்டுமா?
(3) இந்தத் திட்டத்தை இலங்கை அரசு ஏற்றால் "ஈழம்' என்கிற சொல்லைத் தவிர்த்து
மற்ற அனைத்தையும் அளித்ததாக ஆகிவிடும்.
(4) இத்திட்ட வரைவு இலங்கை பல துண்டுகளாகப் பிரிபடும் என்பதை உணர்த்துகிறது.
ஆகவே, தமிழர் விடுதலைக் கூட்டணி அளித்த திட்ட ஆலோசனைகள் ஏற்கத்தக்கதல்ல என்று
இலங்கை ஒதுக்கித் தள்ளியது. திம்பு பேச்சுவார்த்தைத் தோல்வியில் முடிந்தது
என்பதை இந்த அறிக்கைகள் வெளிச்சம் போட்டுக் காட்டின!
No comments:
Post a Comment