முதல்வர் எம்.ஜி.ஆர் சார்பில் பண்ருட்டி ராமச்சந்திரன் சட்டப் பேரவையில்
நிகழ்த்திய உரையின் தொடர்ச்சி... ""இலங்கையில் நடப்பது சட்டத்தின் ஆட்சியல்ல,
காட்டு தர்பார் (In Sri Lanka, there is no rule of law but only the law of
jungle). ஆகவே, இலங்கை அரசினுடைய போக்கு, அது கையாளுகின்ற தன்மை, அதனுடைய
பண்பு, அதனுடைய இயல்பு இவற்றை எல்லாம் பார்க்கிறபோது அவர்களுடைய
பேச்சுவார்த்தையைப் பற்றியோ அல்லது அவர்கள் கையாளுகின்ற முறையைப் பற்றியோ
கட்டாயம் தீர்க்கமாக சிந்தித்துத் தமிழ் மக்களுக்குச் சொல்ல நாம்
கடமைப்பட்டிருக்கிறோம். இன்னும் ஒரு வேடிக்கை என்னவென்றால், அந்த நாட்டின்
பிரதமர் கூறுகின்றார். அவர்களுடைய நாட்டிலே உள்ள ஜனநாயகத்தை அழிப்பதற்கு
முயலுகின்ற சில பிரிவினரை அழித்து, ஒழிப்பதற்கு உலகிலுள்ள அவர்களின் நண்பர்
உதவி செய்ய வேண்டும் என்கிறார். இலங்கையில் ஜனநாயகம் என்று ஒன்று உண்டா?
பாராளுமன்றத்திலே இருப்பவர்கள் மக்களைச் சந்தித்து தேர்ந்தெடுக்கப்படாமலேயே
தங்களுடைய பாராளுமன்ற காலத்தை நீட்டிக் கொண்டார்களே. இதுதான் ஜனநாயகமா?
அவ்வளவு சொல்வானேன்? ஜனநாயகம் என்பதே தமிழர்கள் வாழுகிற இலங்கையின் கிழக்குப்
பகுதியிலும், வடக்குப் பகுதியிலும் எங்கே இருக்கிறது. இலங்கை சுதந்திரம்
பெற்றதிலிருந்து ஒன்று காவல் துறை ராஜ்யம், இல்லை என்றால் ராணுவ ராஜ்யம்.
அவர்கள் ராணுவத்தால் ஆட்சி செய்யப்படுகிறார்களே தவிர, எப்போதாவது சுதந்திரக்
காற்றை சுவாசித்திருக்கிறார்களா? சுவாசிக்க அனுமதிக்கத்தான் செய்தார்களா?
ஒருவேளை சிங்களவர்களுக்கு வேண்டுமானால் ஜனநாயகம் இருக்கலாம். தமிழர்களைக்
கொல்லுகிற ஜனநாயகமாக அது இருக்கலாம் போராட்டத்தில் முன்னிலையில்
இருக்கக்கூடிய அந்த மக்களுக்கு வேண்டிய உதவிகளை, அந்த மக்களுக்கு வேண்டிய
உற்சாகத்தையும் தருவதிலேதான். அந்த மக்கள் இத்தகைய போக்கை முறியடிப்பதற்கும்,
இலங்கை அரசின் முகமூடிகளை கிழித்து எறிவதற்கும் வாய்ப்பு இருக்குமே தவிர,
நாம் இங்கே இருந்து கொண்டு அரசியல் தீர்வா, ராணுவத் தீர்வா என்று பேசுவது
பயன் தராது. அரசியல் தீர்வுதான் காணவேண்டுமே தவிர ராணுவத் தீர்வு நிரந்தரமான
தீர்வு ஆகாது.
விடுதலை இயக்கங்களின் வரலாற்றை படித்தவர்களுக்குத் தெரியும். விடுதலை உணர்வு
கொண்டவர்கள் சிறுபான்மை மக்களானாலும் சரி, பெரும்பான்மை மக்களானாலும் சரி,
எந்த பெரிய ஏகாதிபத்திய வல்லரசுகளானாலும் அவர்களை வீழ்த்த முடியாது என்பது
உலக நாடுகளின் வரலாறு. வேண்டுமானால் சில வெற்றிகள் அங்கும் இங்கும்
கிடைக்கலாம். சில சண்டைகளில் வேண்டுமானால் வெற்றி பெறலாம். ஆனால் இறுதிப்
போரில் வெற்றியடையப்போவது என்னவோ விடுதலைப் போராளிகள்தான்(ரஹழ் ஜ்ண்ப்ப்
க்ஷங் ஜ்ர்ய் க்ஷஹ் ப்ண்க்ஷங்ழ்ஹற்ண்ர்ய் ச்ர்ழ்ஸ்ரீங்ள்). ஆகவே ஒரு
இயக்கத்தின் மீது இரண்டு மூன்று குண்டுகள் போடுவதானாலும் 100, 200 பேர்களின்
மீது தாக்குதல் நடத்தி கொன்றுவிட்டதனால் வெற்றி பெறலாம் என்று நினைத்தால் அது
பகல் கனவாக முடியுமே தவிர வேறு அல்ல. ராணுவத் தீர்வை மேற்கொண்ட நாடுகள்
உலகத்தில் எப்படியெல்லாம் பிரிந்தன, என்ன வகையிலே சீர்குலைந்தன என்பதைத்தான்
பார்க்க முடியுமே தவிர, நிச்சயமாக அவர்களுக்கு அதனால் பலன் விளைந்ததாக வரலாறு
கிடையாது. அப்படிப் பார்க்கிறபோது இன்றைக்கு இலங்கையிலே இருக்கிற தமிழ்
மக்களுக்குப் பாதுகாப்பாக விடுதலைப் புலிகள் இயக்கம்-எல்.டி.டி.இ. அமைப்பினர்
இருக்கிறார்கள். அவர்களுக்குத் துணையாக ஈரோஸ் இருக்கிறார்கள். மற்ற
இயக்கங்கள் இல்லை என்று சொல்லவில்லை. இருக்கிறார்கள். அங்கே இருந்து
அவர்களால் பணியாற்ற முடியவில்லை.
சிங்கள ராணுவத்திற்கு எதிராக அங்கே விடுதலைப் புலிகள்தான் தன்னந்தனியாக
நின்று போராடி உயிர்த் தியாகம் செய்து வருகிறார்கள். சொல்வார்களே...
கண்ணீரும் செந்நீரும் கொட்டி சுதந்திரப் பயிர்வளர்த்தார்கள் என்று அப்படி
அவர்கள் வளர்க்கிறார்கள். பொதுவாக ஆண்கள் செந்நீரைச் சிந்துவார்கள், பெண்கள்
கண்ணீரைச் சிந்துவார்கள். ஆனால் இலங்கை தமிழ் பகுதியைப் பொறுத்தவரைக்கும்
பெண்களும் ஆண்களோடு சேர்ந்து செந்நீரைச் சிந்துகிறார்கள். ஆண்கள் ஆனாலும் சரி
பெண்கள் ஆனாலும் சரி அத்தனை பேரும் சேர்ந்து இலங்கை அரசின் சர்வாதிகாரப்
போக்கை, அந்த பாசிச போக்கை எதிர்த்து உயிர்த் தியாகம் செய்கிறார்கள். அவர்களை
எல்லாம் நாம் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறோம். அவர்களுக்கு உதவி செய்யக்
கடமைப்பட்டிருக்கிறோம். ஜனவரி மாதத்திலிருந்து ஏற்பட்ட பொருளாதாரத் தடையின்
காரணமாக நலிந்து, மெலிந்து, வாடி, வதங்கி, வாழ வழியற்று, வீட்டிலும் கூட
இருக்க முடியாமல் வீதியிலே கூட நடமாட முடியாமல் காடுகளிலேயும் புதர்களிலேயும்
மறைந்து வாழ்கின்ற லட்சோபலட்சம் ஏழைகளுக்கு அவர்களுக்கு உண்ண உணவு, உடுக்க
உடை, பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுக்க வேண்டிய மருந்துகள் கொடுக்கக்கூட வழி
இல்லாத நிலைமை இருக்கிறது.
நம்முடைய தாய் உள்ளம்கொண்ட முதல்வர் அவர்கள், அந்த மக்களுக்கு
மனிதாபிமானத்தோடு, மனித நேயத்தோடு நம்மால் ஆன உதவிகளை, அவர்களுக்கு வேண்டிய
உணவு வகைகளை அல்லது மருந்துகள் மற்றவைகள் கொடுக்கும் வகையில் அங்கேயிருந்து
ஓடி இங்கே வந்திருக்கக்கூடிய தமிழர்களுக்கும், அங்கேயே இருக்கிற
தமிழர்களுக்கும் ஏதாவது ஒரு வகையில் பயன் தர முடியுமா என்று யோசித்துப்
பார்த்தது. அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதிலே புரட்சித் தலைவர்
அவர்கள் தனது தலையாய விருப்பத்தைத் தெரிவித்திருக்கிறார்கள். இலங்கைத்
தமிழர்களுக்காகப் பாடுபடுகின்ற இயக்கங்களுக்கு நாம் நம்முடைய ஆதரவையும்
உதவியையும் செய்கிற அதே நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுகிற
வகையிலும், இலங்கைத் தமிழர்களுக்கு தமிழ்நாட்டு மக்கள் ஏற்கெனவே சுமார் ஐந்து
கோடி ரூபாய் நிதியுதவியாக தந்திருக்கிறார்கள். புரட்சித் தலைவர் அவர்கள் அந்த
ஐந்து கோடி ரூபாயிலிருந்து உடனடியாக நான்கு கோடி ரூபாயை பாதிக்கப்படுகிற அந்த
மக்களுக்கு உணவு வகையிலும், உடுக்கிற உடை வகையிலும், மருந்து வகையிலும், மற்ற
மற்ற தேவைகளிலும் உதவிட அந்த மக்களைக் காப்பாற்றுவதற்கு அரசு இன்றே உத்தரவு
வழங்கவிருக்கிறது என்ற மகிழ்ச்சியான செய்தியை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த அரசைப் பொறுத்தவரையிலும் புரட்சித் தலைவர் அவர்களைப் பொறுத்தவரையிலும்
இன்றைக்கு அந்தத் தமிழ் மக்களுக்காக, இங்கே மட்டுமல்ல, அங்கேயும் போராடுகிற
மக்களுக்காகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும் என்னென்ன உதவிகளைச்
செய்யவேண்டுமோ அதை இந்த அரசு செய்ய முன்வரும்'' (சட்டமன்றத்தில் 27-4-87).
எம்.ஜி.ஆர். சார்பில் நிகழ்த்தப்பட்ட அந்தச் சட்டப்பேரவை உரை இன்றளவும் ஈழத்
தமிழர்தம் மனதில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட்ட ஒரு சாசனமாகத் திகழ்கிறது.
No comments:
Post a Comment