சென்னைக் கடற்கரையில் இலங்கைத் தமிழர் பாதுகாப்புப் பெற தி.மு.கழகப்
போராட்ட அறிவிப்பு மாநாடு ஒன்று 24.3.85-இல் நடந்தது.
அந்த மாநாட்டில் மு.கருணாநிதி பேசுகையில், ""பேச்சு வார்த்தைகள் மூலம்
பிரச்னையைத் தீர்ப்பதாக இந்திய அரசு எடுத்துக் கூறி அதற்கென முயற்சிகளை
மேற்கொண்டாலும் கூட; நாம் அப்போதே சுட்டிக்காட்டி எச்சரித்தது போல, பேச்சு
வார்த்தை என்கிற சாக்கில் இலங்கை அதிபர் ஜெயவர்த்தனா அந்தக் கால அவகாசத்தைப்
பயன்படுத்திக் கொண்டு வெளிநாடுகளின் உதவியைப் பெற்று இலங்கைத் தமிழினத்தை
அடியோடு அழிக்கத் தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டுவிட்டார்... இடையில் சில
மாதங்கள் நின்றிருந்த கொடுமைகள் மீண்டும் தலை தூக்கத் தொடங்கிவிட்டன.
இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகளில் சிங்களவர் குடியேற்றம் திட்டமிட்டு
நடத்தப்படுகிறது. அப்பாவித் தமிழ் மக்கள் வாழும் பகுதிகள் எல்லாம்
தீக்கிரையாக்கப்பட்டு, குழந்தைக் குட்டிகள் கொல்லப்பட்டு, இளையோர் முதியோர்
அனைவரும் சுட்டு வீழ்த்தப்பட்டு அந்தக் கோரத் தாக்குதல்களில் எஞ்சி இருப்போர்
உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு தமிழகம் நோக்கி அன்றாடம் அகதிகளாக வந்து
கொண்டிருக்கின்றனர். இந்தியாவில் தி.மு.கழகம் தனது கடமையை ஆற்றிடப்
பொதுக்குழுவில் சில முடிவுகளை எடுத்துள்ளது'' என்றார். வைத்த கோரிக்கை,
இலங்கைத் தமிழர் பிரச்னையில் மத்திய அரசு மெத்தனமாக இல்லாது விரைந்து
நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய ராணுவத்தை அனுப்பி இப்பிரச்னைக்குத்
தீர்வு காண வேண்டும் என்பதும் ஆகும். தமிழ் ஈழத்தைத் தாம் அங்கீகரிப்பதாகத்
தி.மு.கழகத் தலைவர் கருணாநிதி தெரிவித்தார். அத்துடன் மு.கருணாநிதி,
காஞ்சிபுரத்தில் மறியலில் ஈடுபட்டபோது கைதாகிச் சென்னை மத்திய சிறையில்
அடைக்கப்பட்டார். 15 நாள் சிறை தண்டனைக்குப் பிறகு அவர் விடுதலை
செய்யப்பட்டார்.
""நமது கழகம்'' சார்பில் எஸ்.டி.சோமசுந்தரம் மதுரையில் ரயில் நிறுத்தப்
போராட்டத்தில் ஈடுபட்டுக் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார். இலங்கைக்கு
வெடிமருந்துகள் நவீனரக துப்பாக்கிகள் மற்றும் ஏவுகணைகளையும் ஏற்றிக் கொண்டு
வந்த விமானம் ஒன்று பெட்ரோல் நிரப்புவதற்காகத் திருவனந்தபுரம் விமான
நிலையத்தில் வந்து இறங்கியது. இந்தச் செய்தி அறிந்த தமிழ்நாட்டுத்
தலைவர்களும் மக்களும் பதறித் துடித்துப் போயினர்.
அந்த விமானத்தை இலங்கைக்கு அனுப்பக்கூடாது என்று மத்திய அரசிற்கு கோரிக்கை
விடுத்தனர். ஆனால் தமிழ் மக்களின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு அந்த
விமானம் பெட்ரோல் நிரப்பப்பட்டு இலங்கைக்கு அனுப்பப்பட்டது. இதுகுறித்து
நாடாளுமன்ற மேலவையில் கேள்வி எழுப்பினர். அப்போது தி.மு.கழக உறுப்பினராக
இருந்த வை.கோபால்சாமி (வைகோ), இலங்கையில் தமிழர்கள் கோழிக் குஞ்சுகளைப் போலக்
கொன்று குவிக்கப்படுகிறார்கள் என்று தமிழர்களின் வேதனையை எடுத்துக் கூறி
மத்திய அரசு போதிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மத்திய அரசை
வலியுறுத்தினார். அப்போது மத்திய வெளியுறவு அமைச்சர் குர்ஷித் ஆலம்கான்,
"கோழிக்குஞ்சு சைவமா? அசைவமா?' என்று பிரச்னையின் ஆழத்தையும் அதன்
கடுமையையும் புரிந்து கொள்ளாமல் நகைச்சுவை எனக் கருதி கிண்டல் செய்தார்.
இப்படி அமைச்சர் குர்ஷித் ஆலம் கான் கேட்டதும், ""இதயமற்றவரே, தமிழினம்
அழிக்கப்படுகிறது என்ற செய்தி கிண்டலாகவும், கேலியாகவும் போய்விட்டதா?
ஏற்கனவே நொந்து போயிருக்கும் தமிழர்களை மேலும் புண்படுத்திவிடாதீர்கள்''
என்றார் வை.கோபால்சாமி எம்.பி.
இந்திய அரசின் வெளிவிவகாரச் செயலர் ரோமேவு பண்டாரி பேச்சுவார்த்தை நடத்தியது
குறித்து மாநிலங்கள் அவையில் வெளிவிவகாரத் துறை இணையமைச்சர் குர்ஷித்
ஆலம்கான் ஓர் அறிக்கையைச் சமர்ப்பித்தார். அந்த அறிக்கையைப் பற்றி
விளக்கங்கள் கேட்டு, 30.3.85 அன்று நாடாளுமன்ற தி.மு.கழகக் குழுத் தலைவர்
முரசொலி மாறன் எம்.பி., மேலவையில் கேள்வி எழுப்பிப் பேசினார்.
""இலங்கையிலிருந்து வெளிவரும் பத்திரிகைகள் பண்டாரியின் விஜயத்தைப் புகழ்ந்து
எழுதியிருக்கின்றன. அதே சமயம், ஜி.பார்த்தசாரதியின் பழைய முயற்சிகளைக்
கண்டித்திருக்கின்றன.
இலங்கையிலே இனப்படுகொலை நடந்து கொண்டிருந்தபோது அங்கு சென்ற நமது வெளி
விவகாரத் துறைச் செயலர் பண்டாரி, குசலம் விசாரித்துவிட்டு வந்திருக்கிறாரே
தவிர, இனப்படுகொலையைக் கண்டித்ததாகத் தெரியவில்லை. எத்தனையோ முக்கியமான
பிரச்னைகள் இருக்கின்றன. உதாரணமாக, யாழ்ப்பாணம் ராணுவத்தினரால்
முற்றுகையிடப்பட்டிருக்கிறது. அது ஒரு பெரிய சிறைச்சாலையாக
மாற்றப்பட்டிருக்கிறது. பாதுகாப்பான இடம் என்ற போர்வையில் ராணுவத்தினர்
அங்கிருந்து கொண்டு எதையும் பொருட்படுத்தாமல் தமிழர்களை தினமும் சுட்டுக்
கொல்கிறார்கள். நமது செயலர் பண்டாரி இது குறித்துப் பேசினாரா? இந்தப்
படுகொலைகளை எப்போது நிறுத்துவீர்கள் என்று கேட்டாரா?
இலங்கை அரசு மிகத் தந்திரமாக ஒரு குடியேற்றக் கொள்கையைக் கடைப்பிடித்து
வருகிறது. சிங்களவர்களுக்கு ஆயுதப்பயிற்சி அளிப்பதோடல்லாமல் ஆயுதங்களையும்
அளித்து அவர்களைத் தமிழர்கள் அதிகமாக வாழுமிடங்களில் குடியேற்றுகிறது. இதன்
மூலம் தமிழர்களின் மக்கள்தொகை அளவையே குறைத்துவிட முயற்சிக்கிறார்கள்.
அதற்காக, கூட்டம் கூட்டமாய் தமிழர்களை அங்கிருந்து விரட்டியடிக்கிறார்கள்.
நமது வெளி விவகாரத் துறைச் செயலர் இந்த பாதகமான குடியேற்றக் கொள்கை பற்றி
விவாதித்தாரா? தமிழர்கள் தாங்கள் வாழுமிடங்களிலிருந்து
துரத்தியடிக்கப்படுவதைக் கண்டித்தாரா?
அண்மையில்தான், ஐ.நா. சபையின் மனித உரிமைக் கழகம், தீவிரவாதிகளைத் தாக்குவது
என்ற பெயரால் ஏதுமறியாத தமிழர்களை வித்தியாசம் பாராமல் இலங்கை அரசு கொன்று
குவிப்பதாகக் கண்டனம் தெரிவித்திருக்கிறது. 1983-ஆம் ஆண்டிலிருந்து இதுவரை
5000-க்கும் மேற்பட்ட தமிழர்கள் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இதே அவையில்
இந்திரா காந்தி அம்மையார் பேசும்போதுகூட இலங்கையில் நடப்பது ஓர் இனப்படுகொலை
என்று குறிப்பிட்டார். இப்போது இலங்கை சென்று திரும்பியிருக்கிற நமது
வெளியுறவுச் செயலர் பண்டாரி அந்த இனப்படுகொலையைக் கண்டித்தாரா? "எப்போது
நீங்கள் இனப்படுகொலைகளை நிறுத்தப் போகிறீர்கள்?' என்று கேட்டாரா? இன்னமும்
இனப்படுகொலையைத் தொடர்ந்து நடத்தினால், இந்தியா பார்த்துக் கொண்டிருக்காது
என்று எச்சரிக்கத் தலைப்பட்டாரா? அப்படியெல்லாம் செய்ததாகத் தெரியவில்லை.
அவர் இலங்கையிலே வாழும் தமிழர்களது உரிமைகளைச் சரணடையச் செய்திருக்கிறார் -
இலங்கைத் தமிழர்களைக் காட்டிக் கொடுத்துவிட்டு வந்திருக்கிறார் - என்று நான்
குற்றம் சாட்டுகிறேன்'' என்று தன் உரையில் குறிப்பிட்டார்.
இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து 1985-ஆம் ஆண்டு
செப்டம்பர் 24-ஆம் நாள் செங்கல்பட்டில் நடைபெற்ற கடையடைப்பு-உண்ணாவிரதப்
போராட்டத்தில் ஜெ.ஜெயலலிதா எம்.பி., மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஆனால்,
இலங்கையில் அசம்பாவிதங்கள் தீவிரமானால் அனைத்து மக்களும் பதறிப் போகிற
நிகழ்ச்சி அவ்வப்போது நடந்து கொண்டிருப்பது போல், தமிழ் ஈழத்தை எதிர்க்கும்
தமிழகக் கட்சிகளிடமும் இந்தப் பதற்றம் தென்பட்டது. திமுக, அதிமுக
மட்டுமல்லாமல், காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கட்சிகளும் இலங்கையில்
நடத்தப்படும் இனப்படுகொலையை வன்மையாகக் கண்டித்து அறிக்கைகள் விட்டன
திங்கட்கிழமை, 26 அக்டோபர் 2009 19:49 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
No comments:
Post a Comment