ஈழ தேசிய விடுதலை முன்னணியில் அங்கம் பெற்ற விடுதலைப் புலிகள், டெலோ,
ஈ.பி.ஆர்.எல்.எஃப்., ஈரோஸ் உள்ளிட்ட போராளிக் குழுக்களின் சார்பில் இந்திய
அரசாங்கத்தின் சமரசத் திட்ட அட்டவணை மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து விரிவான
அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. "இலங்கை ராணுவத்தினருக்கும் எமது விடுதலை
இயக்கங்களைச் சேர்ந்த போராளிகளுக்கும் இடையே போர் நிறுத்தத்தை ஏற்படுத்த
இந்திய அரசாங்கம் சமர்ப்பித்த யோசனைகளை கவனமாகப் பரிசீலனை செய்துள்ளோம்.
இந்திய அரசாங்கத்தின் மத்தியஸ்தம் வகிக்கும் நிலையையும், நல்லுறவையும்
ஏற்படுத்தும் பணியையும் மதிப்பதோடு, எமக்களித்த வாக்குகளையும் உறுதிகளையும்
ஏற்பதோடும், தமிழர் தேசிய பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணும்
பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்குரிய திட்டவட்டமான யோசனைகளை இலங்கை அரசாங்கம்
முன்வைப்பதற்கு வேண்டி அதற்கு உகந்த சூழலையும், அமைதியை நிலைநாட்டுவதற்குரிய
நிபந்தனைகளையும் உருவாக்குவதற்கு உதவ, குறித்த காலம் வரை போர் நிறுத்தம்
செய்வதாக இங்கு கைச்சாத்திடும் விடுதலை இயக்கங்களைச் சேர்ந்த நாம் கூட்டாக
தீர்மானித்துக் கொண்டோம். குறித்த காலம் வரை போர் நிறுத்தம் செய்வதாக
சம்மதிக்கும் அதேவேளையில், முன்வைக்கப்பட்டுள்ள போர் நிறுத்தத் திட்ட
அமைப்பினுள் அடங்கும் ஒழுங்குகளும் நிபந்தனைகளும் எம்மை சமநிலை
அற்றவர்களாக்குகின்றது. சிந்திப்பதற்குரியவை எமது மாற்று யோசனைகள் என்று
குறிப்பிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் பல்வேறு யோசனைகள் கூறப்பட்டிருந்தன.
(அ) (1) போர் நிறுத்தத்திற்குச் சம்மதம் அளிக்கிறோம்.
(2) புதிய சிங்கள குடியேற்றங்களைத் தற்காலிகமாக நிறுத்துவதற்கு பதிலாக,
வடக்கு-கிழக்குப் பகுதிகளில் தாக்குதல் நிறுத்துவதற்கு வலியுறுத்துவது
வேடிக்கையானது. இந்தப் பகுதிகளில் ராணுவத்தாலும் சிங்கள ஆயுதந்தாங்கிய
குடியேற்ற வாசிகளாலும் தமிழ் மக்கள் தாக்குதலுக்கு ஆளானால் என்ன செய்வது?
இவ்வகை அரச அடக்குமுறைகளை உடனடியாக நிறுத்த இலங்கை அரசை இந்தியா வற்புறுத்த
வேண்டும்.
(3) முதல் கட்ட அட்டவணை, காலத்தில் அப்பாவித் தமிழ் மக்கள் படுகொலைகள்
தொடருமானால் அவை ஒப்பந்த மீறலாக கருத வேண்டும்.
(ஆ) அரச பயங்கரவாத - அவசர காலச் சட்டங்கள் அமலில் உள்ள நிலையில் மூன்றாவது
சட்டம் 2-வது பிரிவில் உள்ளபடி சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட போலீஸôரிடம்
ஒப்படைப்பது சரியல்ல.
(இ) (1) போர் நிறுத்தம் செய்யப்பட்ட ஓரிரு தினங்களுக்குள் அதாவது இப்
பேச்சுவார்த்தை (ஜூலை 8, 1985-இல்) தொடங்கும் நாளில் இருந்து மூன்று
நாட்களுக்குள் அரசியல் தீர்வுக்கான "செயல் திட்டத்தை முழுமையாக அளிக்க',
இலங்கை அரசு முன்வர வேண்டும்.
(2) இப்பேச்சுவார்த்தைக்கு "செயல்திட்ட வரைவை' ஏற்றுக்கொள்வதையே நாங்கள்
நிபந்தனையாக வைக்க விரும்புகிறோம். தமிழர்களின் இனப் பிரச்னைக்கு உரிய
தீர்வுக்கு இடமளிக்காமல், அவர்களை ஏமாற்றி பேச்சுவார்த்தை நாடகம் என நடத்தி,
இறுதி முடிவு எட்டப்பட்டாலும் அவற்றைக் குப்பையில் போடுகிற சிங்கள அரசுகளின்
செயல்களால் பெற்ற அனுபங்களே இவ்வாறு நிபந்தனை வைக்க வேண்டிய நிலைக்கு
வந்துள்ளோம்.
நான்காவது கட்டத்துக்குண்டான பேச்சுவார்த்தைகள் மேற்கொள்வதில் நல்ல யோசனைகளை
எமது பார்வைக்கு வைக்க வேண்டுகிறோம்.
(அ) போர் நிறுத்த கால எல்லை நீட்டிப்புக்குச் சம்மதிக்க முடியாது.
(ஆ) போராளிக் குழுக்களைத் தீவிரவாதிகள் (Militant) என்றும், தமிழர் விடுதலைக்
கூட்டணியை "தமிழரது அரசியல் தலைமை' என்றும் குறிப்பிடப்படுவதையும் நாங்கள்
மறுக்கிறோம்.
இந்த யோசனைகள் இந்திய அரசாங்கத்தால் ஏற்கப்பட்டு, இவற்றை இலங்கை அரசுக்கு
அறிவித்து அவர்களும் ஏற்றால், அவற்றை எங்களுக்குத் தெரிவிக்க வேண்டும்
என்றும் அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டது.
திம்பு பேச்சுவார்த்தை 1985-ஆம் ஆண்டு ஜூலை 8-ஆம் தேதி தொடங்கி, 13-ஆம் தேதி
வரை நடைபெறவுள்ள கால அட்டவணையைக் கொண்டிருந்தது.
இப் பேச்சுவார்த்தைக்கு முன்பாக பூட்டான் மன்னர் அனைவரையும் வரவேற்று தேநீர்
விருந்து அளித்தார். போராளிக் குழுக்களின் அங்கத்தவர்களும் நீண்ட
நெடுநாளைக்குப் பின்னர் ஒருவரையொருவர் அப்போதுதான் சந்தித்ததால், ஓர் இளகிய
சூழல் நிலவியது.
பின்னர், பேச்சுவார்த்தை நடைபெறும் இடத்துக்கு தமிழர் விடுதலைக் கூட்டணி,
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினர் (PLOT) சேர்ந்து ஒரு குழுவாகவும்
விடுதலைப் புலிகள் இயக்கம் (LTTE) தமிழீழ விடுதலை இயக்கம் (TELO) ஈழ மக்கள்
புரட்சிகர விடுதலை முன்னணி (EPRLF) ஈழப் புரட்சி அமைப்பு ((EROS) அடங்கிய ஈழ
தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (ENLF)-யினர் ஒரு குழுவாகவும் வந்திருந்தனர்.
இதில் ஒவ்வொரு அமைப்பும் தலா இருவர் வீதமும் சிங்கள அரசின் சார்பில்
ஜெயவர்த்தனவின் தம்பி ஹெக்டர் ஜெயவார்த்தன தலைமையில் ஒரு குழுவும்
பங்கேற்றது.
அ.அமிர்தலிங்கம், சிவசிதம்பரம், சம்பந்தம், வரதராஜ பெருமாள், சத்யேந்திரா,
ராபர்ட், ரத்தினசபாபதி, ராஜிவ்சங்கர், சித்தார்த்தன், வாசுதேவா, திலகர்,
உள்ளிட்ட 13 பேர் இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். பேச்சு என்பது
ஆக்கப்பூர்வமாக இல்லை. தமிழர்கள் பயனடையக் கூடாத பேச்சுக்களையே சிங்கள அரசுத்
தரப்பில் பேசினர்.
இந்தப் பேச்சுவார்த்தை குறித்து மறைந்த புஷ்பராஜா எழுதியிருப்பதாவது:
"எப்பவுமே சிங்கள அரசாங்கத்தின் தலைவர்கள் தமிழ் பேசும் மக்களின் அரசியல்
பிரச்னையைத் தீர்க்கும் விஷயத்தில் நேர்மையாக நடந்து கொண்டதில்லை.
பிரச்னையைத் தீர்க்கப்போவது போன்று ஒரு மாயை ஏற்படுத்தி, காலத்தைக் கடத்துவது
அவர்களது அரசியல் சூத்திரமாகும். இந்த நடவடிக்கையில் இலங்கை பிரதமர்
டி.எஸ்.சேனநாயக்கா தொடங்கி இதுவரை அதுதான் நடந்து வருகிறது. இனியும் அதே
சூத்திரமே கையாளப்படும். இதில் இரண்டாம் கருத்துக்கு இடமில்லை'. (ஈழப்
போராட்டத்தில் எனது சாட்சியம் பக்.417).
இந்த இழுத்தடிப்புப் பேச்சு 1984-ஆம் ஆண்டில் இந்திரா காந்தியின் ஒப்புதல்
பெறப்பட்டு பின்னர் திடீரென மாற்றப்பட்ட தமிழர்களின் விருப்பங்களுக்கெதிரான
பழைய 14 அம்சத் திட்டத்தையொட்டியே அமைந்தது. இது போராளிக் குழுக்களுக்கு
வெறுப்பைத் தந்தது. தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் அ.அமிர்தலிங்கமும்
வெறுப்படைந்தார். காரணம் வட்டமேஜை மாநாட்டில் பங்கேற்று அம்மாநாடு "திடீர்'
என ரத்தான சம்பவத்தில் அவரும் ஒரு பங்கேற்பாளர்.
வட்ட மேஜை மாநாட்டிலேயே உரிய அதிகாரம் கொண்ட தமிழ் மாநில அமைப்பு என்கிற
ஏற்பாடு இல்லை. அரைகுறையான அதிகார ஒப்படைப்புத் திட்டத்தையும் ஸ்ரீமாவோ,
புத்த பிக்குகள் சங்கத்தினர், ஜே.வி.பி. போன்ற சிங்களப் பேரினவாதிகள்
எதிர்த்த காரணத்தால் பின்வாங்கியதாக ஜெயவர்த்தன நாடகமாடினார். அதே திட்ட
அடிப்படையில் இப்பொழுதும் பேசுவது சரியல்ல என்று தமிழர் அமைப்புகள்
ஒட்டுமொத்தமாக முடிவுக்கு வந்தனர்.
No comments:
Post a Comment