Sunday, November 7, 2010

140: தலையங்க விமர்சனங்கள்!,141: அமைதிப்படை வெளியேறத் தொடங்கியது!

140: தலையங்க விமர்சனங்கள்!இன்று இலங்கையில் இந்திய அமைதிப் படைக்கு நண்பர்கள் எவருமே இல்லை. வடக்கில்
      தமிழீழ விடுதலைப் புலிகளும், தெற்கில் ஜனதா விமுக்தி பெருமுனாவும்ம், நடுவில்
      இலங்கை அரசும் ஏதாவது ஒரு விஷயத்தில் ஒற்றுமையைக் காண்பிக்கிறார்கள் என்றால்
      அது இந்தியப் படை கூடிய விரைவில் இலங்கையை விட்டு வெளியேற வேண்டும்
      என்பதில்தான். இக்கோரிக்கையை இவர்கள் அனைவரும் மறைக்காமல் கூறிவருவது
      இந்தியாவுக்குப் பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் இந்த நிலைக்கு
      இலங்கையிலுள்ளவர்களைக் குறை கூறுவதைவிட, நாம் அங்கு எதற்காகச் சென்றோம்,
      இப்போது அங்கே என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்று நம்மையே கேட்டுக் கொண்டால்
      தெளிவு பிறக்கும். போதாக்குறைக்கு இந்தியப்படையின் பாதுகாப்பில் உயிர்
      வாழ்ந்துவரும் வடகிழக்கு மாகாண அரசு கூட இந்தியப் படையினருக்கு எதிராக ஈழ
      மாணவர்களும், ஆசிரியர்களும் நடத்திவரும் கிளர்ச்சியை ஆதரித்து ஒரு தீர்மானம்
      நிறைவேற்றிவிட்டது. காற்று எந்தப்பக்கம் அடிக்கிறது என்று இந்தியத்
      தூதுவருக்கு இப்பொழுதாவது தெரிந்திருக்கும் என்று நம்பலாமா? இலங்கையின்
      ஒற்றுமைப் பிரச்னையை அந்த நாட்டின் அரசியல் தலைவர்களிடம் ஒப்படைத்துவிட்டு,
      அந்த நாட்டின் இறையாண்மையை மதிக்கும் வகையில் இந்தியா தன் துருப்புகளை
      அங்கிருந்து கூடிய விரைவில் விலக்கிக் கொள்வது அனைவருக்கும்
      திருப்தியளிப்பதாகவும் இருக்கும்; தெற்காசியாவில் சமாதானத்தை நிலைநிறுத்தவும்
      வழிவகுக்கும். -- தினமணி -தலையங்கம் 20-6-89 சந்திரன் ஒரு முறை தேய்ந்து
      வளர்வதற்குள் சரித்திரம் படைத்துவிட்டுச் சடுதியில் தாயகம் திரும்பிவிடும்
      என்ற நம்பிக்கையோடு சென்ற இந்திய ராணுவம் இன்றுவரை முழுதாகத் திரும்பவில்லை.
      தமிழ் ஈழம் என்ற தாரக மந்திரத்தையும், இயந்திரத் துப்பாக்கிகளையும்
      ஆயுதங்களாக்கிக் கொண்ட பிரபாகரனின் புலிகள் விடுதலை அல்லது வீரமரணம்
      என்றிருந்த போது, மற்ற தமிழ்ப் போராளிகளின் துணையோடு, தேர்தலை நடத்தி, அமைதி
      அங்கே திரும்பி விட்டதாக வெற்றி பெற்ற வரதராஜப் பெருமாளே சொன்னபோதும், அதில்
      அத்தனை பேருக்கும் நம்பிக்கை ஏற்படவில்லை. இன்னும் விடுதலைப் புலிகள்
      காட்டிலேயே பதுங்கி இருப்பதாலும், ஆட்சிக்கு வந்த தமிழர் அரசாங்கத்துக்கு
      இந்தியப் படையைத் திரும்ப அனுப்பும் தைரியம் வராததாலும், வடக்கு கிழக்கு
      மாநிலங்களில் வாழும் தமிழர்களுக்குச் சிங்கள ராணுவத்தின் மீது முழுமையான
      நம்பிக்கை ஏற்படாததாலும், அமைதி ஒரு கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது.
      அமைதி காக்கும் படை இந்தியா திரும்பிவிட்டால், அமைதி மேலும் காத்திருக்காமல்
      இலங்கைக்குத் திரும்பிவிடும். -- சாவி -26-4-89
      அந்நிய மண்ணில், அந்த நாட்டு அரசின் அனுமதியின்றி நமது படைகள் இருந்தால்
      ஆக்கிரமிப்பாளராகத்தான் நம்மை உலகம் கருதும்! விடுதலைப் புலிகளுடன் நமது
      படைகளை மோதச் செய்ததும், வடகிழக்கு மாகாணக் கவுன்சிலுக்கு ஒரு பொம்மை அரசு
      அமைத்ததும் எதிர் விளைவுகளை எண்ணிப் பார்க்காமல் இந்திய அரசு அடுத்தடுத்துச்
      செய்த தவறான காரியங்கள்! வெறும் வீம்புக்காகத் தொடர்ந்து தவறுகளைச் செய்யப்
      போகிறோமா அல்லது விவேகத்துடன் உண்மை நிலையைப் புரிந்து கொண்டு செயல்படப்
      போகிறோமா? இதுதான் இன்றைய மிகப் பெரிய கேள்வி. -- ஆனந்தவிகடன் -தலையங்கம்,
      25-6-89
      "இந்திய அமைதிப் படை, நாடு திரும்ப இதுதான் நல்ல நேரம்' என்று ஓர் இந்தியப்
      படை உயர் அதிகாரி கூறினார். ராணுவ ரீதியாக எல்.டி.டி.ஈ.
      தோற்கடிக்கப்பட்டுவிட்டாலும் அந்த இயக்கம் தலைமறைவாக இயங்கிக் கொண்டுதான்
      இருக்கிறது. இந்திய அமைதிப் படை திரும்பினால், திரும்பவும் விடுதலைப் புலிகள்
      தங்களை உறுதியாக்கிக் கொண்டு ஸ்ரீலங்காப் படைகளை மோதத் தொடங்கி விடுவார்கள்
      என்றே பாதுகாப்பு ஆய்வாளர்கள் கணிக்கிறார்கள். அதுமட்டுமல்ல - குறுகிய
      காலத்துக்குள் அதன் பின்பு அவர்கள் தனிநாடு அமைத்தும் விடுவார்களாம்'. --
      ஜி.கே. சிங் -த வீக், 4-2-1989 இனி, ஸ்ரீலங்காவில் செய்ய வேண்டியவை அரசியல்
      தொடர்பானவையே. இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் இன்றைய நிலையை
      விரைவாகவும்-சரியாகவும் அளவிட வேண்டும். ஸ்ரீலங்கா அரசோடும் அங்குள்ள தமிழ்
      அரசியல்வாதிகளோடும் தொடர்பு கொண்டும்-இந்தியப் பொதுமக்களின் கருத்தினைக்
      கலந்தும் இந்தியப் படையை நம் நாட்டுக்குத் திருப்பி அழைப்பது பற்றி அவர்கள்
      ஆலோசனை செய்ய வேண்டும். -- த ஹிந்து -தலையங்கம், 18-2-1989
      நண்பர்கள் யார் எதிரிகள் யார் என்பது தெரியாமல் காட்டுப் பகுதியில் ஒரு
      போராட்டக் குழுவைத் துரத்திக் கொண்டு திரிய வேண்டிய தேவை இல்லை என்றே அமைதிப்
      படை கருதுகிறது. இப்படையினர் குழம்பிப் போய் இருக்கிறார்கள். "இனியும் அங்கே
      செய்ய என்ன இருக்கிறது?' என்றுதான் களைத்துப் போன இந்திய ஜவான்கள்
      கேட்கிறார்கள். தங்கள் கடமை முடிந்துவிட்டது என்றும் - நாட்டை அந்த மக்களிடம்
      ஒப்படைத்துவிட்டு வெளியேற வேண்டியதுதான் என்றும் இந்தியப் படையினர்
      கருதுகிறார்கள். தன் நட்பு நாடுகளுக்கும்-அண்டை நாடுகளுக்கும் உதவ வேண்டியது
      இந்தியாவின் கடமையே. பிராந்திய அரசியலில் இந்தியா ஓரளவு தியாகம்
      செய்யவேண்டும் என்பதும் உண்மைதான். ஆனால் எதற்கும் ஓர் எல்லைக்கு உட்பட்டே
      எந்தத் தலையீடும் இருக்க முடியும். அதற்கு மேலும் போனால்-பிரச்னையில்
      நுழையும்போது ஏற்பட்ட சிரமத்தைவிட-பிரச்னையிலிருந்து வெளியே வர அதிக சிரமப்பட
      வேண்டியிருக்கும். இந்திய அமைதிப்படை, ஸ்ரீலங்காவில் உள்ளவர்களைப்
      பேச்சுவார்த்தையில் ஈடுபடுத்திவிட்டுதான் வெளியேற வேண்டும். ஸ்ரீலங்காவில்
      தொடர்ந்து இந்திய அமைதிப் படை இருக்கவோ சண்டை போடவோ எந்தக் காரணமும் இல்லை.
      எல்லாவற்றுக்கும் மேலாக இந்தியா இதற்கு மேலும் தன் படைவீரர்களையும்
      பணத்தையும் அங்கே வீணாக அழித்துக் கொண்டிருக்க முடியாது. -- பிரிகேடியர்
      ஏ.சி. கரியப்பா (ஓய்வுபெற்ற படைத் தளபதி 20-2-1989
      வெளிநாட்டுக் கொள்கையில் இந்தியா தனது பாதுகாப்பைப் பற்றிக் கவனிக்க
      வேண்டியதுதான். ஆனால் -இன்று -தன் அரசியல் -பொருளாதார நிலைமையை உணர்ந்து
      ஸ்ரீலங்காவில் உள்ள சம்பந்தப்பட்டவர்களிடமே -அமைதி உடன்படிக்கையை
      நிறைவேற்றும் சுமையை ஒப்படைத்துவிட்டு -குறிப்பிட்ட சில மாதங்களுக்குள் நம்
      படைகளைத் திருப்பி அழைப்பது பற்றி இந்திய கொள்கை வகுப்பாளர்கள் சிந்திக்க
      வேண்டும். --ஃபிரண்டலைன் -தலையங்கம், மார்ச் 4-17, 1989 வடக்கு -கிழக்கில்
      இந்தியாவின் உதவியோடு அதிகாரத்தைக் கைப்பற்றியதோடு -தமிழ்க் குழுக்கள் இந்திய
      அமைதிப் படை இலங்கையை விட்டு வெளியேறக்கூடாது என்கிறார்கள். ஆனால்- இந்தியா
      எத்தனை காலத்துக்கு அவர்களைத் தாங்கமுடியும்? தென் வியட்நாமில் அமெரிக்காவும்
      ஆப்கானிஸ்தானில் சோவியத்தும் படித்த பாடத்தை தங்கள் நாட்டுக்கு வெளியே படைகளை
      வைத்திருக்கும் எந்த அரசும் மறந்துவிடக் கூடாது. காலத்தை இன்னும்
      இழுத்துக்கொண்டிருக்காமல் -கொழும்போடு புதுடில்லி உறுதியாகப் பேச்சுவார்த்தை
      நடத்தி இந்தியப் படைகள் மரியாதையோடு விரைவில் நாடு திரும்ப வழிவகுக்க
      வேண்டும். --டெக்கான் ஹெரால்ட் - தலையங்கம் இந்தியாவிலும் ஸ்ரீலங்காவிலும்
      பெரும்பாலானோர் இந்திய அமைதிப் படை, தன் வேலையை விரைவில் முடித்து நாடு
      திரும்ப வேண்டும் என்றே விரும்புகிறார்கள். திடீரென்று இப்படையைத் திரும்பப்
      பெறுவது வடக்கிலும் தெற்கிலும் பாதுகாப்பைப் பொறுத்தவரை சிக்கலை உருவாக்கும்.
      விடுதலைப் புலிகள் தீவிரமாக இருக்கும் பகுதிக்கு ஸ்ரீலங்காப் படையை அனுப்ப
      வேண்டிவரும். என்ன இருந்தாலும் இந்திய அமைதிப் படை தொடர்ந்து இங்கே
      (இலங்கையில்) நெடுங்காலம் இருக்க முடியாது. அப்படி 45,000-க்கு அதிகமான
      இந்தியப் படை வீரர்கள் இங்கே தொடர்ந்து இருந்தால் -ஸ்ரீலங்காவில் அவர்கள்
      நிரந்தரமாக இருக்கப் போகிறார்கள் என்ற கருத்து வலுப்பெற்றுவிடும். இந்திய
      -ஸ்ரீலங்கா அரசுகள் விரைவில் இப்படை திரும்புவதற்கு உரிய ஒரு காலத்தை வரையறை
      செய்ய வேண்டும். எமது கருத்து இதுதான்:-
      தன்னுடைய மண்ணில் இந்திய அமைதிப் படை சண்டை போடுவதை ஸ்ரீலங்கா மக்கள்
      நீண்டகாலம் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. --த ஐலண்ட் -தலையங்கம்,
      13-3-1989 (இலங்கை ஆங்கில நாளிதழ்
      141: அமைதிப்படை வெளியேறத் தொடங்கியது!         இந்தியா, அமைதிப்படை வெளியேறுவது குறித்து மெüனம் சாதித்த நிலையில்
      பிரேமதாசா இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அமைதிப்படை திரும்புவதற்கான
      அட்டவணையை இறுதி செய்ய குழுவொன்றை தில்லிக்கு அனுப்பினார். இந்தக் குழு, ஜூலை
      29-ஆம் தேதி தில்லி சென்றடைந்தது. எ.சி.எஸ். ஹமீது தலைமையில் இலங்கையின்
      தூதுவர் கலாநிதி ஸ்டான்லி கல்பகே, பிரட்மன் வீரக்கூன், சுனில் டிசில்வா,
      டபிள்யூ.டி. ஜயசிங்கா, ஃபீலிக்ஸ் டயஸ், அபே சிங்கா ஆகியோர் சென்றிருந்தனர்.
      இந்திய அரசுத் தரப்பில் பி.வி. நரசிம்மராவ், கே.சி. பந்த் ஆகியோர்
      முன்னிலையில் நடத்தப்பட்ட, இந்தப் பேச்சுவார்த்தை ஆகஸ்ட் 4-இல் முடிவுற்றது.
      அமைதிப்படையை திரும்ப அழைக்க அட்டவணை, புலிகளுக்கு எதிரான செயல்களை
      முடிவுக்குக் கொண்டு வருதல், இந்திய-இலங்கை ஒப்பந்தம் நடைமுறைப்படுத்துவது,
      வடக்கு-கிழக்கில் மக்களுக்குப் பாதுகாப்பு அளிப்பது ஆகியவை குறித்துப் பேசி
      இறுதி செய்யப்பட்டது. படைகளைத் திரும்பப் பெறுவது என்பது 1989 டிசம்பர் 31-
      ஆம் தேதிக்குள் முடிவுறும்படி பார்த்துக் கொள்ளப்பட்டதானது பிரேமதாசாவுக்கு
      நிம்மதியளிக்கிற நடவடிக்கையாக அமைந்தது. செப்டம்பர் 20-இல், அமைதிப்படை தனது
      தாக்குதலை நிறுத்த ஒத்துக்கொண்ட அதே வேளை "பாதுகாப்பு ஒருங்கிணைப்புக்
      கமிட்டி' உருவாக்கப்பட்டு, அதில் ஸ்ரீலங்கா பாதுகாப்புச் செயலாளர்,
      அமைதிப்படைத் தளபதி, முதலமைச்சர் வரதராஜ பெருமாள் ஆகியோர் உறுப்பினர்களாக
      இருப்பர் என்றும் முடிவு செய்யப்பட்டது.
      இந்திய அமைதிப்படை வெளியேறிய பிறகு, வடக்கு கிழக்கில் ஏற்படவிருக்கும்
      அரசியல் நெருக்கடியைச் சமாளிக்க, தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின்
      போராளிக் குழுவுடன் அரசு நடவடிக்கைகளை மேம்படுத்துவது ஆய்வுக்குரியதானது.
      எனவே, பிரேமதாசா "புலிகள் அரசியல் இயக்கம் ஒன்றை ஏற்படுத்துவது குறித்து
      யோசிக்கும்படி' பாலசிங்கத்திடம் தெரிவித்தார். புலிகளின் நோக்கம் சுதந்திரத்
      தமிழீழம்; பிரேமதாசாவின் நோக்கமோ ஒற்றையாட்சியின் கீழ், அரசமைப்புச்
      சட்டத்துக்கு ஏற்ப வடக்கு - கிழக்கில் தீர்வு. இவையிரண்டும் சாத்தியமாக
      வேண்டுமானால் இருவரில் யாராவது ஒருவர் விட்டுக்கொடுக்க வேண்டும். ஆனால்
      இருவரும் தங்களின் நிலைப்பாட்டில் உறுதியுடன் இருந்தனர். எனினும், இந்த
      அம்சத்தை யாரும் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை.
      "அமைதிப்படை வெளியேறிய பிறகு வடக்கு-கிழக்கு நிர்வாகம் அமைதியான முறையில்
      புலிகளுக்கு கைமாற்றப்படுமா' என்று ஹமீதிடம் வினவினார், பாலசிங்கம்.
      "ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்து புலிகள் இயங்கினால் அது சாத்தியம்' என்றார்
      ஹமீது: (ஆதாரம்: சுதந்திர வேட்கை, பக். 327). அரசியல் பிரிவு அமைப்பதற்கான
      அனுமதியை பிரபாகரனிடம் பாலசிங்கம் ஏற்கெனவே பெற்றிருந்தார். அதன் கட்டமைப்பு,
      விதிகள் யாவும் பிரபாகரனிடம் விவாதித்தபடி உருவாக்கப்பட்டன. அமைப்புக்கு
      "விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி' என்று பெயரிடப்பட்டது. மகேந்திரா ராசா
      என்கிற மாத்தையா கட்சியின் தலைவராகவும், யோகரத்தினம் யோகி செயலாளராகவும்
      நியமிக்கப்பட்டனர். அரசியல் கட்சிக்கான விதிப்படி பல்வேறு பிரிவு மக்களைப்
      பிரதிநிதிப்படுத்தவும், பங்கெடுக்கவும் விதிகள் வகுக்கப்பட்டு, கட்சியின்
      பெயர் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டது. புலிகளின் சின்னத்தைப் பதிவு
      செய்வதில் முரண்பாடுகள் எழுந்தன. அதில் சிறு மாற்றம் செய்யப்பட்டு அச்
      சின்னமும் பதிவு செய்யப்பட்டது. இவ்வகையான நிகழ்வுகளால், பிரேமதாசா
      மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்றார். புலிகளை அரசியல் நீரோட்டத்தில்
      இணைத்துவிட்டதாக அவர் நினைத்தார். தனது தந்திரம் வென்றதாகவும் கருதினார்.
      ஆகஸ்ட் 12-இல் கூட்டப்பட்ட அனைத்துக் கட்சி கூட்டத்திலும் "விடுதலைப் புலிகள்
      மக்கள் முன்னணி' என்கிற அரசியல் கட்சியை இடம்பெறச் செய்தார். ஆனால் இந்தக்
      கூட்டத்தில் பிரச்னைகளைத் தீர்க்க எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
      இச்சமயத்தில், குறிப்பிடத்தக்க இரு உயிரிழப்புகள் தமிழீழப் பகுதியில்
      ஏற்பட்டன. காந்தியக் கொள்கையில் ஈடுபாடு கொண்ட, தமிழர் புனர்வாழ்வுக் கழக
      நிறுவனர்களில் ஒருவரான கே.கந்தசாமி கடத்தப்பட்டார். அதுகுறித்த சர்ச்சை
      எழுந்து விவாதிக்கப்பட்ட நிலையில், அவர் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகி
      அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. அதேபோன்று "முறிந்தபனை' நூலாசிரியர் மூவருள்
      ஒருவரான ராஜனி திராணகமவின் கொலையும் நேர்ந்தது. ராஜனியின் கொலைச் சம்பவம்
      படித்தவர்களிடையே பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. இவ்விரு கொலைகளுக்கும் எந்த
      இயக்கமும் பொறுப்பு ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ராஜீவ்-பிரேமதாசா
      உடன்பாட்டின்படி 1989 அக்டோபர் இரண்டாம் வாரத்தில், அமைதிப் படைகள் திரும்ப
      அனுப்பும் பணி தொடங்கப்பட்டது. ஒவ்வொரு படைப் பிரிவும், அதன் ஆயுதத்
      தளவாடங்களுடன் படிப்படியாக கிளம்பத் தொடங்கின. இந்த நேரத்தில், தமிழ் தேசிய
      ராணுவத்தைச் சேர்ந்தவர்கள் கிழக்கு மாவட்டத்தில் மட்டக்களப்பு, அம்பாறை
      மாவட்டத்தில் அந்தந்த முகாம்களில் குடியேறியதும் நடந்தது
      வெள்ளிக்கிழமை, 08 ஜனவரி 2010 21:13 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

No comments:

Post a Comment