Sunday, November 7, 2010

178:பிரபாகரனின் மாவீரர் தின உரை (2008)!

 178:பிரபாகரனின் மாவீரர் தின உரை (2008)!கடந்த ஆண்டு பிரபாகரன் ஆற்றிய உரை... எனது அன்புக்கும் மதிப்புக்குமுரிய

      தமிழீழ மக்களே, இன்று மாவீரர் நாள். இந்நாளை எமது மாவீரர்களின் பெருநாளாக,
      எமது தியாகிகளின் திருநாளாக, எமது தேசத்தின் தேசிய நாளாக, எமது இனம்
      சுதந்திரம் வேண்டி உறுதிபூணும் புரட்சிநாளாக நாம் கொண்டாடுகிறோம். எமது
      மண்ணுக்காக, எமது மக்களுக்காக, எமது மக்களது உயிர்வாழ்விற்காகத் தமது
      உன்னதமான உயிர்களை உவந்தளித்த உத்தமர்களுக்கு இன்று நாம் சிரந்தாழ்த்தி
      வணக்கம் செலுத்துகிறோம். எமது மாவீரர்கள் மகத்தான லட்சியவாதிகள். தேசிய
      விடுதலை என்கிற உயரிய லட்சியத்திற்காக வாழ்ந்து, அந்த லட்சியத்திற்காகத் தமது
      வாழ்வைத் தியாகம் செய்தவர்கள். எமது வீர விடுதலை வரலாற்றில் ஒரு முக்கிய
      திருப்புமுனையில் நாம் இன்று நிற்கிறோம். மிகவும் நீண்ட, கடினமான,
      நெருக்கடிகள் நிறைந்த ஒரு வரலாற்றுப் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறோம்.
      உலகின் எந்தவொரு விடுதலை இயக்கமுமே சந்தித்திராத சவால்களை, எதிர்பாராத
      திருப்பங்களை எதிர்கொண்டு நிற்கிறோம். நாம் அமைதி காத்த இந்த ஆறு
      ஆண்டுக்காலத்தில் இந்த நீண்ட காலவிரிப்பில் தணியாத நெருப்பாக
      எரிந்துகொண்டிருக்கும் தமிழரின் தேசியப் பிரச்னைக்குத் தீர்வு காணப்பட்டதா?
      சிங்கள ஆட்சியாளர்களின் மனவுலகில் மாற்றம் நிகழ்ந்ததா? எம்மக்களுக்கு நிம்மதி
      கிடைத்ததா? எத்தனையோ கனவுகளோடு எத்தனையோ கற்பனைகளோடு நீதி கிடைக்குமெனக்
      காத்திருந்த தமிழருக்குச் சாவும் அழிவுமே பரிசாகக் கிடைத்திருக்கின்றன.
      நோயும் பிணியும் பசியும் பட்டினியும் வாட்ட, அகதி முகாம்களில்
      அல்லற்படுகிறார்கள்.
      எம்மக்களது உயிர்வாழ்விற்கான உணவையும் மருந்தையும் மறுத்து, பாதையைப் பூட்டி,
      பட்டினி போட்டுப் படுபாதகம் புரியும் சிங்கள அரசு எம்மக்களுக்குக்
      கருணைகாட்டி, காருண்யம் செய்து, அரசியல் உரிமைகளை வழங்கிவிடும் என யாரும்
      எதிர்பார்க்கமுடியாது. பண்டைய இதிகாசங்கள் புனைந்துவிட்ட புரளிகளால் சிங்கள
      இனம் வழிதவறிச்சென்று தொடர்ந்தும் பேரினவாதச் சகதிக்குள் வீழ்ந்து
      கிடக்கிறது. இதனால், சிங்கள, பெüத்தப் பேரினவாதம் இன்றொரு தேசியத்
      சித்தாந்தமாகச் சிங்கள தேசத்தில் மேலாதிக்கம் செலுத்தி வருகிறது. இதனால்,
      சிங்களத் தேசம் போர்வெறி பிடித்துச் சன்னதமாடுகிறது. போர்முரசு கொட்டுகிறது.
      எமது விடுதலை இயக்கமும் சரி, எமது மக்களும் சரி என்றுமே போரை
      விரும்பியதில்லை. நாம் சமாதானத்தையே விரும்புகிறோம். இதனால்தான் திம்புவில்
      தொடங்கி, ஜெனீவா வரை பல்வேறு தடவைகள் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு
      நாடுகளில் பேச்சுக்களை நடத்தியிருக்கிறோம்.
      சமாதானத்திற்கான முன்னெடுப்புகளையும் முன்முயற்சிகளையும் நாமே முதலில்
      மேற்கொண்டோம். முதன்முதலாகப் போர்நிறுத்தத்தை ஒருதலைப்பட்சமாகப்
      பிரகடனப்படுத்தி, பேச்சுகளில் நியாயமற்ற நிபந்தனைகளையோ, நிர்பந்தங்களையோ
      போடாது வரம்புகளையோ, வரையறைகளையோ விதிக்காது காலக்கட்டுப்பாடுகளைத்
      திணிக்காது அமைதி முயற்சிகளை முன்னெடுத்தோம். இவற்றை நாம் பலவீனமான நிலையில்
      நின்று மேற்கொள்ளவில்லை. வன்னிப் பெருநிலப்பரப்பையும் இயக்கச்சிலி ஆனையிறவுக்
      கூட்டுத்தளத்தையும் மீட்டெடுத்தோம். சிங்கள ராணுவத்தின் அக்கினிகீல முன்னேற்ற
      நடவடிக்கையை முறியடித்தோம். சமாதான முயற்சி ஆரம்பித்ததிலிருந்து இன்று வரையான
      ஐந்து ஆண்டு காலங்களில் ரணில், சந்திரிகா, மகிந்த என மூன்று அரசுகள்
      ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருக்கின்றன. ஒவ்வொரு தடவையும் ஆட்சிகள் மாற மாற
      சமாதான முயற்சிகளும் ஒரு சிறையிலிருந்து மீட்கப்பட்டு இன்னொரு சிறைக்குள்
      தள்ளப்பட்டன. முதலில், ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்துடன் போர்நிறுத்த
      ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டு ஆறு மாதங்கள் அமைதிப் பேச்சு நடாத்தினோம்.
      கடந்த அரசுகளைப் போலவே ரணில் அரசும், வழங்கிய வாக்குறுதிகளையும்
      நிறைவேற்றாது, ஏற்றுக்கொண்ட ஒப்பந்த விதிகளையும் கடப்பாடுகளையும்
      செயல்படுத்தாது, காலத்தை இழுத்தடித்தது. ஒப்பந்த விதிகளுக்கமைய மக்களது
      வாழிடங்கள், வழிபாட்டிடங்கள், பாடசாலைகள் மற்றும் மருத்துவமனைகளிலிருந்து
      தமது படைகளை விலக்கிக்கொள்ளாது, அவற்றை உயர் பாதுகாப்பு வலயங்களாகப்
      பிரகடனப்படுத்தி, மக்கள் தமது வாழிடங்களுக்குத் திரும்புவதற்கு நிரந்தரமாகத்
      தடைபோட்டது.
      எமது மக்களின் மனிதாபிமானப் பிரச்னைகளைத் தீர்த்துவைக்க மறுத்த ரணில்
      அரசாங்கம் எமது விடுதலை இயக்கத்தை உலக அரங்கிலே ஒதுக்கி, ஓரம்கட்டுகிற
      வேலையையும் ரகசியமாக மேற்கொண்டது. தமிழர் தாயகத்தில் ஒரு முறையான நிர்வாகக்
      கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கு முன்னரே உதவி வழங்கும் நாடுகளின் மாநாடுகளைக்
      கூட்டி, உதவிப் பணத்தைப் பெற்று, தென்னிலங்கையைக் கட்டியெழுப்பவும்
      திட்டம்போட்டது. சில உலக நாடுகளின் உதவியோடு எமக்கு எதிரான பாதுகாப்பு
      வலையைக் கட்டியெழுப்பி, அதற்குள் எமது சுதந்திர இயக்கத்தைச் சிக்கவைத்து,
      அழித்தொழிக்கவும் ரணில் அரசாங்கம் சதித்திட்டம் தீட்டிச் செயல்பட்டது.
      சந்திரிகா, எமது வரைவின் அடிப்படையில் பேச்சுகளை ஆரம்பிக்க மறுத்ததோடு
      ஒட்டுக்குழுக்களை அரங்கேற்றி புதிய வடிவில் புலிகளுக்கு எதிரான நிழற்போரை
      அவர் தீவிரப்படுத்தினார். இந்த ஆயுதக்குழுக்களின் அராஜகத்தால் தமிழர் தாயகம்
      வன்முறைக் களமாக மாறியது.
      இறுதியாக, சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கென
      கைச்சாத்திடப்பட்ட பொதுக்கட்டமைப்பையும் சந்திரிகா அரசு செயல்படுத்தவில்லை.
      முழுக்க முழுக்க மனிதாபிமான நோக்கங்கொண்ட இந்தப் பொதுக்கட்டமைப்பை
      ஒற்றையாட்சி அரசியலமைப்பின் வரையறைகளைக் காட்டிச் சிங்களப் பேரினவாத
      நீதிமன்றம் நிராகரித்தது. மகிந்த ராஜபட்ச, புலிகளை அழிக்கும் இலக்குடன்
      ஒருபுறம் போரைத் தீவிரமாக முடுக்கிவிட்டு, மறுபுறம் சமாதான வழித் தீர்வு
      பற்றிப் பேசுகிறார். போரும் சமாதானமும் என்ற இந்த இரட்டை அணுகுமுறை,
      அடிப்படையிலேயே தவறானது. எந்தப் போராட்டச் சக்தியுடன் பேசிப் பிரச்னைக்குத்
      தீர்வுகாண வேண்டுமோ அந்தப் போராட்டச் சக்தியை அந்நியப்படுத்தி,
      அழித்துவிட்டு, பிரச்னைக்குத் தீர்வு காணலாம் என்பது என்றுமே
      நடக்கப்போவதில்லை. மகிந்தவின் அரசு படைபலத்தை அடிப்படையாகக் கொண்டே, தமிழரின்
      தலைவிதியை நிர்ணயிக்க விரும்புகிறது. மகிந்தாவின் அரசு தமிழரின் நீதியான
      போராட்டத்தைத் திரிவுபடுத்தி, இழிவுபடுத்தி உலகெங்கும் பொய்யான விஷமச்
      பிரசாரங்களை முடுக்கிவிட்டிருக்கிறது. அதன் பொய்யான பரப்புரைகளுக்கு மசிந்து
      ஐரோப்பிய ஒன்றியமும் கனடாவும் எமது விடுதலை இயக்கத்தைப் பயங்கரவாத அமைப்பாகப்
      பட்டியலிட்டன.
      அமைதி முயற்சிகளுக்கு உதவுவதாகக் கூறிக்கொள்ளும் சில உலகநாடுகள் சிங்களத்தின்
      இனஅழிப்புப் போரைக் கண்டிக்காது, ஆயுத, நிதி உதவிகளை வழங்கி, அதன்
      போர்த்திட்டத்திற்கு முண்டுகொடுத்து நிற்கின்றன. மகிந்த உள்நாட்டில் தமிழின
      அழிப்புப் போரை நடாத்திக்கொண்டு, உலகநாடுகளுக்குச் சமாதானம் விரும்பும் ஓர்
      அமைதிப் புறாவாகத் தன்னை இனம்காட்ட முனைகிறார். எந்தவொரு பிரச்னைக்கும்
      முகங்கொடாது, தட்டிக்கழிக்க விரும்பினால் ஒரு விசாரணைக் கமிஷனையோ, ஒரு
      பாராளுமன்றத் தெரிவுக்குழுவையோ அமைத்து, சர்வகட்சி மாநாட்டையோ ஒரு வட்டமேஜை
      மாநாட்டையோ நடத்தி அதனை முடிவில்லாமல் இழுத்தடிப்பது சிங்கள ஆட்சியாளர்களின்
      அரசியல் பாரம்பரியம். இதனைத்தான் மகிந்தவும் செய்கிறார். அனைத்துக்கட்சி
      மாநாட்டிற்குள் மகிந்த பதுங்கிக்கிடக்கிறார்.
      தென்னிலங்கையின் அரசியலை ஆட்டிப்படைத்துவரும் இரு பிரதானச் சிங்களக்
      கட்சிகளும் சாராம்சத்தில் இனவாதக் கட்சிகளே. எதிரும் புதிருமாக நின்று,
      இனக்கொலை புரிந்த இரு கட்சிகளும் இன்று ஒன்றாகக்கூடி, ஒன்றுக்கொன்று சேவகம்
      செய்து, அதிகாரக் கூட்டமைத்திருப்பது தமிழரை அழித்தொழிப்பதற்கேயன்றி
      வேறொன்றிற்குமன்று. அரசியல் தீர்வை நோக்கி நகரக்கூடிய இடைவெளியைக்
      காட்டியிருக்கிறோம். நிலவதிர்வுப் பேரலைகள் தாக்கியபோது ஒரு தடவையும் மகிந்த
      ஜனாதிபதியாகப் பதவியேற்றபோது இன்னொரு தடவையுமாக இரண்டு தடவைகள் எமது
      போர்த்திட்டங்களைத் தாற்காலிகமாகத் தள்ளிப்போட்டு, சமாதானத்திற்கு மீண்டும்
      மீண்டும் சந்தர்ப்பம் வழங்கியிருக்கிறோம். இதனை உலகம் நன்கு அறியும். எமது
      மக்களது அரசியல் அபிலாஷைகளைத் திருப்திசெய்யும் ஒரு நீதியான தீர்வை
      வரையறுக்கப்பட்ட ஒரு குறுகிய காலத்திற்குள் முன்வைக்குமாறு இறுதியாகவும்
      உறுதியாகவும் ஜனாதிபதி மகிந்தவை நான் கோரியிருந்தேன். அந்த அவசர வேண்டுகோளை
      நிராகரித்துப் புறமொதுக்கிவிட்டு, கடந்தகாலச் சிங்களத் தலைமைகள் போன்று
      மகிந்தவும் தமிழின அழிப்புப் போரைத் தீவிரப்படுத்தியிருக்கிறார்.
      தமிழர் தேசத்திற்கு எதிராகப் போர்ப்பிரகடனம் செய்திருக்கிறார். சிங்கள
      ஆட்சியாளர்கள் தமிழரின் தேசியப் பிரச்னைக்குச் சமாதான வழியில் ஒரு நியாயமான
      தீர்வை ஒருபோதும் முன்வைக்கப் போவதில்லை என்பது இன்று
      வெட்டவெளிச்சமாகியிருக்கிறது. எத்தனை ஆண்டுகள் கடந்துசென்றாலும் எத்தனை
      யுகங்கள் ஓடி மறைந்தாலும் சிங்களத் தேசத்தில் மனமாற்றம் நிகழப்போவதில்லை
      என்பதும் தமிழருக்கு நீதி கிடைக்கப்போவதில்லை என்பதும் இன்று
      தெட்டத்தெளிவாகியிருக்கிறது. சிங்களப் பேரினவாதத்தின் கடுமையான போக்கு,
      தனியரசு என்ற ஒரேயொரு பாதையைத்தான் இன்று தமிழீழ மக்களுக்குத்
      திறந்துவைத்திருக்கிறது. எனவே, இந்த விடுதலைப் பாதையில் சென்று, சுதந்திரத்
      தமிழீழத் தனியரசை நிறுவுவதென இன்றைய நாளில் நாம் தீர்க்கமாக
      முடிவுசெய்திருக்கிறோம். எமது அரசியல் சுதந்திரத்திற்கான இந்தப் போராட்டத்தை
      விரைவாக ஏற்று அங்கீகரிக்குமாறு நீதியின் வழிநடக்கும் உலகநாடுகளையும் சர்வதேச
      சமூகத்தையும் நாம் அன்போடு வேண்டுகிறோம்.
      இந்தச் சந்தர்ப்பத்திலே எமது புலம்பெயர்ந்த உறவுகள் காலங்காலமாக விடுதலைப்
      போராட்டத்திற்குச் செய்துவரும் பெரும் பங்களிப்பிற்கும் உதவிகளுக்கும் எனது
      அன்பையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்வதோடு தொடர்ந்தும், உங்கள் தார்மிகக்
      கடமையை ஆற்றுமாறு வேண்டுகிறேன். இதேபோன்று எமக்காக உணர்வுபூர்வமாக
      உரிமைக்குரல் கொடுத்துவரும் தமிழக உறவுகளுக்கும் தமிழகத் தலைவர்களுக்கும்
      எனது அன்பையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்வதோடு எமது தமிழீழத் தனியரசு
      நோக்கிய போராட்டத்திற்குத் தொடர்ந்தும் நல்லாதரவும் உதவியும் வழங்கி,
      எமக்குப் பக்கபலமாகச் செயல்படுமாறு அன்போடும் உரிமையோடும் வேண்டுகிறேன். எமது
      தேசத்தின் விடுதலைக்காகச் சாவை அரவணைத்து சரித்திரமாகிவிட்ட எமது மாவீரர்களை
      நினைவுகூரும் இன்றைய நன்நாளில் எந்த லட்சியத்திற்காக ஆயிரமாயிரம்
      விடுதலைவீரர்கள் களப்பலியானார்களோ அந்த லட்சியத்தை அடைந்தே தீருவோமென
      உறுதியெடுத்துக் கொள்வோமாக
      சமகாலப் போர் குறித்த செய்திகள் யாவும் வாசகர்கள் அறிந்ததுதான். என்ன
      நடந்தது, என்ன நடக்கிறது, என்ன நடக்கப் போகிறது என்பதை, காலம்
      தெளிவுபடுத்தும்.
        இத்தொடர் குறித்த வாசகர் கருத்துகளை pavaichandran@gmail.com இம்மின்னஞ்சல்
      முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப்
      பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் என்ற இணையதள முகவரிக்கு
      எழுதலாம்.
      - பாவை சந்திரன்
      தமிழீழத்தை அடைவதையே லட்சியமாகக் கொண்டிருந்த ஒரே காரணம்தான் அந்த மக்களை
      ஒருங்கிணைத்து எத்தனை எத்தனையோ தடைகளையும், அடக்குமுறைகளையும்,
      எதிர்ப்புகளையும் மீறிப் போராட வைத்தது. வெற்றிகளும் தோல்விகளும் மாறிமாறி
      ஏற்பட்ட சந்தர்ப்பங்கள் அவர்களது போராட்ட உணர்வை சற்றும் குறைக்கவோ அகற்றவோ
      இல்லை. தோல்விகள் தாற்காலிகமானவை; வெற்றி மட்டுமே நிரந்தரம் என்பதும்,
      தமிழீழம் மட்டுமே தங்களது இறுதி லட்சியம் என்பதும் விடுதலைப் புலிகளுக்கு
      மட்டுமல்ல ஒவ்வொரு ஈழத் தமிழர்களின் உதிரத்திலும் இரண்டறக் கலந்துவிட்ட
      உணர்வாக இன்றுவரை தொடர்கிறது என்பதுதான் சத்தியம்!
      போராட்டம் தொடர்கிறது..... தொடர் நிறைவு பெற்றது!
       - ஆசிரியர்

No comments:

Post a Comment