Sunday, November 7, 2010

134: புலிகளுடன் பேச்சுவார்த்தை, 135: பிரபாகரனுடன் சந்திப்பு!

134: புலிகளுடன் பேச்சுவார்த்தை  மே 5, 11 என்று தொடங்கி மே 30-ஆம் தேதி வரை எல்லாமாகச் சேர்த்து, 9
      கட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. ஒவ்வொரு சந்திப்பின்போதும் கூட்டறிக்கை
      ஒன்றும் தயாராகி வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையைத் தயாரிக்கும்போது மிக
      மென்மையாக இந்தியா விமர்சிக்கப்பட வேண்டும் என்ற அக்கறையுடன் செயல்பட்டார்
      அமைச்சர் எ.சி.எஸ். ஹமீது.
      இவர் உயர்கல்வி, அறிவியல் தொழில்நுட்பத் துறைக்கு அமைச்சர் ஆவார்.
      பேச்சுவார்த்தைக்கு இறுதியில் வெளியிடப்படும் அறிக்கைகள் உலகெங்கும்
      எதிரொலித்த காரணத்தால், அமைதிப்படையின் பங்கு, பணி குறித்த பிம்பம் சிறிது
      சிறிதாகச் சேதமுற்றது.
       
      இலங்கை அரசின் பிரதிநிதிகளுடன் பல்வேறு அமர்வுகளிலும் விடுதலைப் புலிகள்
      தரப்பில், பாலசிங்கம் வழியாக, எடுத்து வைத்த வாதங்களில் குறிப்பிடத்தகுந்தது
      என அடேல் பாலசிங்கம் தனது நூலில் குறிப்பிட்டுள்ளது வருமாறு: 
      ""அமைதி காக்கும் நடவடிக்கை என்றால் என்னவென்று, தெளிவான ஐ.நா.
      கருத்துருவாக்கம் ஒன்று உள்ளது. முரண்பாட்டு மோதல்களைக் கட்டுப்படுத்துவது
      தொடர்பாகவும், அமைதியை முன்னெடுப்பது தொடர்பாகவும், அனைத்துலக மட்டத்தில்
      ஏற்றுக்கொள்ளப்பட்ட நியமங்களும் தரங்களும் உள்ளன. அமைதி காக்கும் ராணுவமானது,
      முரண்பாடு மோதலில் ஈடுபட்டிருக்கும் இரண்டு அல்லது கூடுதலான
      பிரிவுகளுக்கிடையே, பக்கம் சாராது நிற்பது முக்கியமானது. அமைதி காக்கும்
      நடவடிக்கையின் முக்கிய பணி என்னவென்றால், மோதல் இடம்பெறும் பகுதிகளில்
      அமைதியைப் பேண அல்லது மீண்டும் நிறுவ உதவுவது. அமைதி காக்கும் நடவடிக்கை
      என்பது மோதலைக் கட்டுப்படுத்தும் செயற்பாடாகும்.
       
      ஐ.நா. மரபிலே பார்த்தால், அமைதிப்படையானது மோதல் நிலை விரிவடையாது தடுத்து,
      அமைதிக்கான சுமூகச் சூழலை ஏற்படுத்த ஆணைபெற்று இயங்குவது. அமைதி
      நடவடிக்கையிலே ஈடுபடும் ராணுவ உறுப்பினர்களுக்கு வலிந்து திணிக்கும் அதிகாரம்
      எதுவும் வழங்கப்படுவதில்லை. தற்காப்பு தவிர்த்த வேறு எதற்கும் ராணுவ
      உறுப்பினர்கள் ஆயுத பலத்தைப் பயன்படுத்த அதிகாரம் வழங்கப்படுவதில்லை.
      அத்துடன் இலகுவான பாதுகாப்பு ஆயுதங்களை மட்டுமே அவர்கள் தரித்திருப்பார்கள்.
       
      போராட்டத்தில் சம்பந்தப்படுத்தப்பட்ட தரப்பினரின் ராணுவச் சமநிலை,
      பாதிக்கப்படும் வகையில் அமைதிப்படை நடந்து கொள்ளக் கூடாது. இவையே அமைதி
      காப்புச் செயற்பாட்டை வழிநடத்தும் அடிப்படை வழிமுறைகளும் கோட்பாடுகளுமாகும்.
      அனைத்துலக மட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட நியமங்கள் இவை.
       
      இந்த வழிமுறைகளுக்கும் நியமங்களுக்கும் அமைவாக இந்திய அமைதிப்படை இல்லை.
      தொடக்கத்தில், இந்திய - இலங்கை ஒப்பந்த நிபந்தனைகளுக்கு அமைவாகவே, இந்திய
      ராணுவப் பிரிவு ஒன்று இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டது. ஸ்ரீலங்கா அரசுப்
      படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையே நடக்கும் போர் முடிவுக்கு கொண்டு
      வரப்படுவதை மேற்பார்வை செய்வதும், அமைதியைப் பேணுவதுமே அதன் பணியாக இருந்தது.
       
      ஆனால், விரைவிலேயே அமைதிப்படை முற்றிலும் வேறுபாடான நிலையில் பங்காற்றத்
      தொடங்கியது; போரில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஒரு பிரிவினருடன், அதாவது
      விடுதலைப் புலிகளுடன் ஆயுதபாணியாக விரைவிலேயே மோதத் தொடங்கியது.   ஆயுத
      மோதல், ஆயுதங்களைக்களையும் முயற்சியாகவே முதலில் கருதப்பட்ட போதிலும்,
      விரைவில் இந்தியப் படைகளுக்கும் புலிகளின் கெரில்லாப் படையினருக்கும் இடையே
      முழுமையானப் போராக வடிவெடுத்தது.
       
      கடந்த 20 மாதங்களாக போர் நடந்து கொண்டிருப்பதோடு, போரில் ஈடுபட்டிருப்பவர்கள்
      இந்தியப் படையினரும் விடுதலைப் புலிகளுமே.   நடுநிலை நின்று அமைதி காக்க,
      மத்தியஸ்தம் செய்ய வேண்டியவர்கள் தாமே நேரடியாக ராணுவ மோதலில்
      ஈடுபட்டிருந்ததால், அமைதி காக்கும் முயற்சியின் தன்மையே கேள்விக்கு
      உரியதாகிவிட்டது.
       
      தமிழ்ப் பகுதிகளில் செயலாற்றிக் கொண்டிருக்கும் அமைதிப்படையை இனிமேலும்
      நடுநிலைப்படை என்று கொள்ள முடியாது. அது போரைக் கட்டுப்படுத்தவும் இல்லை;
      அமைதியைப் பேணவும் இல்லை. போராட்டம் தீவிரமடைவதைத் தடுப்பதற்குப் பதிலாக,
      வன்செயலையும் போரையும் தீவிரப்படுத்தியிருக்கின்றது. அமைதிப்படை ஆட்சி
      அதிகாரங்களைச் சுவீகரித்துக் கொண்டு, இந்த நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில்
      நேரடியாகத் தலையிட்டிருக்கிறது. தமிழ்ப் பகுதிகளில் பிரசன்னமாகி இருக்கும்
      அமைதி காக்கும் படை, ஓர் ஆக்கிரமிப்பு என்பது விடுதலைப் புலிகளின் தீர்க்கமான
      முடிவாகும்'' (சுதந்திர வேட்கை -பக். 291-292).
       
      இது போன்ற கருத்துகள் வெளிவரவும் ராஜீவ் காந்தி - பிரேமதாசா இடையே மோதல்
      போக்கு தலைதூக்கிற்று. தம்மை விமர்சிக்க விடுதலைப் புலிகளுக்கு வாய்ப்பளித்து
      அதைப் பெரிய அளவில் விளம்பரப்படுத்த முனைவதாகவும் ராஜீவ் கண்டார். இந்திய
      வெளியுறவு அமைச்சகம் இச் செயலுக்குத் தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்தது.
      
      கொழும்பிலுள்ள இந்தியாவுக்கான தூதுவர் அலுவலகத்திலிருந்து வெளியிடப்பட்ட ஓர்
      அறிக்கையில், ""ஸ்ரீலங்காவில் உள்ள அமைதிப்படையின் பங்கும் பணியும் பற்றி,
      பேச்சுவார்த்தையில் ஈடுபடும் ஓர் அணியின் கருத்தை ஸ்ரீலங்கா அரசின்
      அறிக்கைகள் வெளிப்படுத்தியிருப்பதை இந்தியத் தூதுவரகம் கருத்தில்
      கொண்டுள்ளது. அமைதிப்படை இந்த நாட்டுக்கு வந்த சூழ்நிலை பற்றியோ, இந்தியா
      மற்றும் ஸ்ரீலங்கா அரசுகளினால் அதனிடம் கூட்டாக ஒப்படைக்கப்பட்ட கடமைகள்
      பற்றியோ, அதன் பணியில் உள்ள இடையூறுகள் பற்றியோ, ஸ்ரீலங்காவின் ஐக்கியம்
      மற்றும் அதன் இறையாண்மையைப் பாதுகாக்கும் முயற்சியில் புரிந்த தியாகங்கள்
      பற்றியோ அறிக்கைகள் குறிப்பிடவில்லை. தற்போது நடைபெறும் பேச்சுவார்த்தையின்
      நோக்கம் அவதூறுப் பிரசாரமாக இருக்கக் கூடாது. சம்பந்தப்பட்ட அனைவரும்
      வன்செயலைக் கைவிட்டு, ஜனநாயகப் பாதைக்குத் திரும்புவதாக அதன் இலக்கு இருக்க
      வேண்டும் என்றே இந்தியத் தூதரகம் கருதுகிறது'' என்று
குறிப்பிடப்பட்டிருந்தது.
       
      இந்நிலையில், அமைச்சர்களது அணியுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றபோது, விடுதலைப்
      புலிகள் சார்பில் இந்தியத் தூதுவரக அறிக்கைக்கு பதிலளிக்க விரும்பினர். பலத்த
      வாக்குவாதங்களுக்குப் பின்னர், ஆயுதங்களை ஒப்படைக்க 72 மணி நேர அவகாசம்
      வழங்கப்பட்டது. இன்று 20 மாதங்கள் ஆன நிலையிலும் அதே போராட்டம் நடைபெறுகிறது.
      ஏராளமான தமிழ் மக்கள் உயிர் துறந்ததை ஸ்ரீலங்கா அரசு கவனத்தில் கொள்ளவில்லை.
      தமிழ் தேசிய ராணுவம் என்ற பெயரில் அமையும் ராணுவப்படை எதற்காக என்றும்
      புலிகள் தரப்பில் கேள்விகள் எழுப்பப்பட்டன.
       
      பேச்சுவார்த்தைகளில் அரசின் பிரதிநிதிகளாக அதிபரின் செயலாளர் கே.எச்.ஜே.
      விஜயதாசா, வெளியுறவுச் செயலாளர் பெர்னார்ட் திலகரட்ன, அதிபரின் ஆலோசகர்
      பிரட்மன் வீரக்கூன், பாதுகாப்பு அமைச்சரின் செயலாளர் சிறில் ரணதுங்க,
      பாதுகாப்புச் செயலாளர் டபிள்யூ.டி. ஜெயசிங்கா, தேர்தல் ஆணையாளர் ஃபீலிக்ஸ்
      அபேசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.
       
      அமைச்சர்கள் குழுவில் பிரதான வழிநடத்துனராக எ.சி.எஸ். ஹமீதும், இதில்
      கலந்துகொள்ளும் அமைச்சர்களாக வெளியுறவு அமைச்சர் ரஞ்சன் விஜேரத்னா,
      கைத்தொழில் அமைச்சர் ரனில் விக்ரமசிங்கா, வீட்டுவசதித் துறை அமைச்சர் சிறீசேன
      கூரே, முதலில் சேர்க்கப்பட்டனர்.
       
      பின்னர் மே 18-ஆம் நாள் நடந்த கூட்டத்தில் மேலும் இரு அமைச்சர்களாக யூ.பி.
      விஜேக்கூன் (பொது நிர்வாகம், மாகாண சபை, உள்நாட்டு அலுவல் துறைகள்)
      பி.தயாதரன் (நிலம், நீர்ப்பாசனம், மகாவலி அபிவிருத்தி துறைகள்)
      கலந்துகொண்டனர்.
       
      இதன் பின்னர் மே 23, 27 தேதிகளில் சிங்களக் குடியேற்றம் குறித்து முடிவுக்கு
      வருவது குறித்துப் பேசப்பட்ட நிலையில், இறுதியில், நிரந்தரப் போர் நிறுத்தம்
      குறித்துப் பேசுவதற்கு முன்பு புலிகளின் பேச்சாளர்கள் தாங்கள் பிரபாகரனைச்
      சந்தித்துப் பேசுவதன் அவசியத்தை வலியுறுத்தினர். இதனையொட்டி விடுதலைப்
      புலிகள் இயக்கத்தினர் மே 30-ஆம் தேதி, ஹெலிகாப்டரில் வன்னிக் காட்டுப்
      பகுதிக்குப் புறப்பட்டனர்.
      
      135: பிரபாகரனுடன் சந்திப்பு!          பிரேமதாசாவின் பேச்சுத் தொடர்பாக வே.பிரபாகரனைச் சந்திப்பது என்பது
      1987-ஆம் ஆண்டு அமைதிப் படையுடனான போர் ஏற்பட்ட பிறகு ஏற்பட்ட நிலைகளை நேரில்
      அறிவதே பாலசிங்கம் தம்பதியின் முக்கிய நோக்கமாக இருந்தது. வன்னிப் பகுதி
      அமைதிப் படையின் முக்கிய இலக்காகும். இந்தக் காட்டுக்குள் இருந்துதான்
      பிரபாகரன் தனது ஆணைகளைப் பிறப்பித்து வருகிறார். எனவே காட்டுக்குள் இருந்து
      பிரபாகரனை வெளியே இழுக்கும் நோக்கத்துடன் வான் வழியாக டன் கணக்கில்
      வெடிமருந்துகள் வீசப்பட்ட பகுதி இது.
       சிறப்பு அதிரடிப் படை, காடுகளில் புகுந்து தாக்கும் இன்னொரு சிறப்பு
      அதிரடிப் படை என காட்டினுள் புகுந்து அமைதிப் படை, தாக்குதலை நடத்தியது.
      அவர்கள் களைத்துப் போகவும், வானிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் தொடர் தாக்குதல்
      -இவ்வாறாக கிழக்குக் கரையான முல்லைத் தீவிலிருந்து ஒட்டுசுட்டான் வரையிலும்,
      வடகிழக்கில் கிளிநொச்சி வரையிலும் ஆயிரமாயிரம் துருப்புகள் குவிக்கப்பட்டு
      சுற்றிவளைப்பு மற்றும் தேடல் முயற்சிகள் அமைதிப் படையால் மேற்கொள்ளப்பட்ட
      பகுதியாகும் இது.
       பிரபாகரனைப் பிடிக்கும் இந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வி கண்டன. அவர்
      எங்கிருக்கிறார் என்று தெரியாமல் அமைதிப் படை தவித்துக் கொண்டிருந்த
      நேரத்தில்தான் பாலசிங்கம் உள்ளிட்ட குழுவினர் ஹெலிகாப்டரில் வன்னிக்
      காட்டுக்குச் சென்று கொண்டிருந்தனர். இந்த முறை ஹெலிகாப்டர் முல்லைத் தீவில்
      உள்ள அலம்பில் காடுகளில் தரையிறங்கியது. இதன் அருகேதான் பிரபாகரன்
      தங்கியிருந்த 1:4 என்கிற குறியிடப்பட்ட தலைமைப் பாசறை இருந்தது. (சுதந்திர
      வேட்கை, பக். 302).
       அமைதிப் படையின் உளவுப் பிரிவு இந்தப் பகுதியை நோட்டமிட்டுக்
      கொண்டிருந்ததால் எந்தவகைத் தாக்குதலுக்கும் எதிர்கொள்கிற நிலையில் புலிகள்
      அங்கு ஏராளமாகக் குவிக்கப்பட்டிருந்தனர். ஹெலிகாப்டரில் இருந்து இறங்கிய
      பேச்சுவார்த்தைக் குழுவினரை மகளிர் பிரிவு தளபதி சோதியா தனது குழுவினருடன்
      நேரில் வந்து வரவேற்று அழைத்துச் சென்றார்.
       இந்தப் பயணம் குறித்து அடேல் பாலசிங்கம் தனது நூலில் குறிப்பிடுகையில்
      இந்தப் பாதை அவ்வளவு சுலபமாக இல்லையென்றும், தடமில்லா காட்டுப் பகுதி
      சிற்றாறுகள், முட்செடிகள் நிறைந்திருந்த பகுதி என்றும் எழுதியுள்ளார்.
      அதுமட்டுமன்றி நீரிழிவு நோய் காரணமாக பாலசிங்கத்தால் அதிக தூரம் நடக்க
      முடியவில்லை என்றும், எனவே இரு கழிகளின் இடையே தொட்டில் போல கட்டி, அதில்
      அவரை அமர வைத்துப் போராளிகள் தோளிலே தூக்கிச் சென்றார்கள் என்றும்
      குறிப்பிட்டுள்ளார்.
       பாலசிங்கம் குழுவினரை அழைத்துச் செல்லும் பொறுப்பு அப்போதைய மூத்த
      தளபதிகளில் ஒருவரான சங்கருக்கு வழங்கப்பட்டிருந்தது. வழியெங்கும் நிலக் கண்ணி
      வெடிகள் புதைக்கப்பட்டிருந்ததால், கவனமாக அவர்கள் நடந்து செல்லவும்
      பணிக்கப்பட்டிருந்தது.
       வழியெங்கும் குண்டுவீச்சுக்கு ஆளான மரங்கள் முறிந்தும், நீர்நிலைகள்
      கலங்கியும் காட்சியளித்த சூழ்நிலையில், திடீரென விடுதலைப் புலிகள் சீருடையில்
      காணப்பட்டனர். அருகில்தான் பாசறை என்பது புலப்பட்டது. ஆனால் பாசறை அடையாளமே
      தெரியவில்லை. ஓரிடத்தில் அவர்கள் நின்றபோது அந்த இடத்தில் எதிரிகள்
      கண்டுபிடிக்க முடியாத வகையில் உருமறைக்கப்பட்ட வடிவில், பிரபாகரனின் பாசறை
      அமைந்திருந்தது. சுற்றிலும் புதிய போராளிகளுக்குப் பயிற்சிகள் நடந்து
      கொண்டிருந்தன. ஒரு பகுதியில் பெண் போராளிகளுக்கு உயர் பயிற்சியும்
      அளிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. ஜெயந்தி அந்தப் பயிற்சியை அளித்தார்.
       பாசறையில் கிட்டுவும் இருந்தார். யாழ்ப்பாணத் தடுப்புக் காவலில் இருந்து
      அவர் விடுவிக்கப்பட்டபின் நேரடியாக இங்கு வந்து சேர்ந்து கொண்டதாக அடேல்
      குறித்துள்ளார். பொட்டு அம்மானும் அப்போது அங்கேதான் இருந்தார். தமது
      காயங்கள் முற்றாக குணம் அடைந்த நிலையில், யாழ்ப்பாணத்தில் அவர் தளபதியாக
      இருந்து கொரில்லாப் போரை அமைதிப்படைக்கு எதிராக நடத்தி வந்தார். இந்நிலையில்,
      இந்தப் பேச்சுவார்த்தை குறித்து விவாதிக்க அவரும் அழைக்கப்பட்டிருந்தார்.
      கபில் அம்மான் என்கிற மூத்த போராளியும் இந்தச் சந்திப்பின்போது உடன்
      இருந்தனர்.
       கொழும்பில் இதுவரை நடந்த சந்திப்புகளின் விளைவாக உருவான கருத்துகள் குறித்து
      பாலசிங்கம், பிரபாகரனுக்கு விளக்கினார். இதன் சாதக, பாதகமான அம்சங்களுடன்
      சேர்த்தே, எதிர்கால நன்மை கருதி பாலசிங்கம் தொடர்ந்து இலங்கை அரசுடன்
      பேச்சுவார்த்தை நடத்த அனுமதிக்கப்பட்டது.
      அமைதிப் படையை வெளியேற்றுவது குறித்து இலங்கை, இந்திய அரசுகளுக்கிடைய மேடைப்
      பேச்சில் வெடித்தது மோதல். பிரேமதாசா, கொழும்பு நகரில் நடைபெற்ற பெüத்த சமய
      நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபோது, அமைதிப் படை ஜூலை இறுதிக்குள் இலங்கையை
      விட்டு வெளியேறுமாறு, இந்தியப் பிரதமரிடம் கேட்க இருப்பதாகவும், நவம்பர்
      மாதத்தில் இலங்கையில் சார்க் மாநாட்டை நடத்த இருப்பதால், அப்படி மாநாடு
      நடைபெறும்போது, இந்த நாட்டில் அந்நிய ராணுவம் இருப்பது எந்த வகையிலும்
      உயர்ந்ததாக இருக்க முடியது என்றும் பேசினார்.
       இந்தப் பேச்சு பத்திரிகைகளில் வெளி வந்ததைப் பார்த்து எரிச்சலடைந்தது
      இந்தியா, இந்தப் பேச்சை வலியுறுத்தி, ஜூன் 2 ஆம் தேதி பிரதமர் ராஜீவ்
      காந்திக்கு, பிரேமதாசா ஒரு கடிதம் எழுதினார். இந்த கடிதம் ராஜீவ் காந்திக்கு
      கோபத்தை வரவழைத்தாலும், அவர் இதற்கு நேரடியாகப் பதிலளிக்கவில்லை. மாறாக,
      வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் "ஆயிரக்கணக்கான வீரர்கள்
      கொண்ட ஒரு படைப் பிரிவு மற்றும் படைக்கலன்களை இரண்டு மாதத்தில் திரும்பெறுவது
      இயலாத ஒன்று' என தெரிவிக்கப்பட்டது.
       ஆனால் அதேநேரம் பிரதமர் ராஜீவ் காந்தி, பெங்களூரில் நடைபெற்ற கூட்டத்தில்
      பேசும்போது, "ஈபிஆர்எல்எஃப் அரசுக்கு உரிய அதிகாரங்களை வழங்கி, வடக்கு
      கிழக்கு மக்களின் பாதுகாப்புக்கு உறுதி செய்யப்படும் வரை அமைதிப் படையின் பணி
      முடிவுற்றதாக ஆகாது' என்றார். மேலும் அவர் இதுகுறித்து கூறுகையில், "படைகள்
      திரும்பப் பெறுவது குறித்து இரு அரசுகளும் கலந்து பேச வேண்டியதும் இருக்கும்'
      எனவும் தெரிவித்தார். (ஜூன் 14, 1989)
       இந்த நிலையில்தான், விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்குமான இரண்டாம்
      கட்ட பேச்சு ஜூன் 16 மற்றும் 19 தேதிகளில் நடைபெற்றது. இப்
      பேச்சுவார்த்தைக்கென பாலசிங்கம் உளளிட்டோர் மீண்டும் கொழும்பு வந்தனர்.
      இம்முறை, இவர்களுடன் மேலும் நான்கு பேர் சேர்க்கப்பட்டனர். அவர்கள் லாரன்ஸ்
      திலகர், எஸ். கரிகாலன், சமன் ஹசன், அபூபக்கர் இப்ரகீம் ஆகியோர்ஆவர்.
      அதேபோன்று அரசுத் தரப்பிலும் மேலும் இரு அமைச்சர்கள் சேர்க்கப்பட்டனர்.
       முதல் கட்ட பேச்சில், பேச்சு நடத்துபவராக இருந்த அமைச்சர் ஏ.சி.எஸ். ஹமீது,
      இலங்கையிலிருந்து அமைதிப் படை வெளியே அனுப்புவதில் அதிபர் உறுதியாக
      இருப்பதாகவும், இந்த ஒப்பந்தம் என்ன நோக்கத்திற்காகப் போடப்பட்டதோ அது
      நிறைவேறவில்லை என்றும், வடக்கிலும் தெற்கிலும் அமைதியற்ற சூழல்
      நிலவுவதாகவும், காலாவதியாகிவிட்ட ஒப்பந்தமாக இருக்கும் நிலையில் அமைதிப்
      படையும் வெளியேறத்தான் வேண்டும் என்று அதிபர் கருதுவதாகவும் அவர் தனது
      முன்னுரையில் வெளிப்படுத்தினார். வடக்கு-கிழக்கு மாகாண அரசுக்கென ஒரு
      படையமைக்க ஒப்பந்தத்தில் குறிப்பிடப்படவில்லை என்றும் அதிபர் கருதுவதாகக்
      குறிப்பிட்டார்.
       இவையெல்லாவற்றையும் விட இந்திய அமைதிப் படை யாருடன் மோதுகிறதோ அவ்வமைப்பும்,
      இலங்கை அரசும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வரும் நிலையில் அமைதிப் படை
      தேவையா என்பது குறித்து அதிபர் வினா எழுப்புகிறார் என்றும் தெரிவித்தார்.
       ஹமீது மேலும் பேசுகையில், இந்தியாவின் நிலைமைகள் குறித்து, முந்தின
      கூட்டத்தில் கலந்துகொண்டபோது பேசியது போலன்றி வெளிப்படையாகத் தெரிவித்தார்.
      இவை யாவும் விமரிசனங்களாகும்.   பேச்சுவார்த்தைகளின் இறுதியில் தமிழ் தேசிய
      ராணுவம் குறித்து இந்தியாவிடம் பேசும்போது குறிப்பிட வேண்டிய அம்சம் என
      எடுத்துக் கொள்ளப்படும் என்றார்.
       பேச்சின் இறுதியில், போர் நிறுத்தத்தை விடுதலைப்புலிகள், அரசு இரண்டும்
      சேர்ந்தே அதாவது கூட்டாக அறிவிப்பது என முடிவெடுத்தனர்
      புதன்கிழமை, 06 ஜனவரி 2010 22:49 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

No comments:

Post a Comment