98 - ஒப்பந்தம் கையெழுத்தானது!ஒப்பந்தங்கள் போடுவது என்பது ஒரு நாட்டினது இயல்பு. இந்த ஒப்பந்தங்கள்
மக்கள் நலன், நாட்டின் நலன் சார்ந்ததாக இருக்கும். மக்கள் நலன் சார்ந்த
ஒப்பந்தங்கள் பிற இன குழுக்களின் மேலாதிக்கத்தால் முறியடிக்கப்படவும்,
நாட்டின் நலன் சார்ந்ததென்றால், ஏதேனும் ஒரு விதியைக் காரணம் காட்டி,
அந்நாட்டின் ஆன்ம பலம் சிதறடிக்கப்படவுமான முயற்சிகளை இன்றுவரை உலகம் கண்டு
வருகிறது. இலங்கையில் 1915, 1956, 1958, 1961, 1974, 1977, 1979, 1981-ஆம்
ஆண்டுகளில் தமிழர்கள் மீது கட்டற்ற வன்முறைகள் ஏவிவிடப்பட்டதற்கு சிங்கள
மேலாதிக்கமே காரணம். இதன் உச்சம் 1983-இல் நடத்தப்பட்ட இனப்படுகொலைகள். இதனை
உலகமே கண்டித்தது. இலங்கையில் சிறுபான்மையினராக, பல்வேறு காலகட்டங்களில்
ஆட்சி செலுத்தியவராக, பிறிதொரு காலங்களில் சிங்கள ஆட்சிகளில் தலைமை
நிர்வாகிகளாக இருந்தவர் தமிழர்கள் என்பதாலும், இலங்கையின் அண்டை நாடான
இந்தியாவில் ஒரு மாநிலம் தமிழகம் என்பதாலும், இலங்கையில் தமிழர்கள்
இன்னலுக்கு ஆளாகும்போது அதன் தாக்கம் தமிழகத்திலும் எதிரொலித்தது. இதனைக்
காரணமாகக் கொண்டு இந்தியா இவ்வினப் பிரச்னையில் தலையிட வேண்டியிருந்தது.
1983-இல் இந்திய வெளியுறவு அமைச்சராக இருந்த பி.வி.நரசிம்மராவ் இலங்கை
வந்தார்; பேசினார். பின்னர் அரசியல் ஆலோசகரான ஜி.பார்த்தசாரதி உள்ளிட்ட பலர்
இலங்கையுடன் பேசினர். பேச்சுவார்த்தைகள் தொடர்ந்துகொண்டே இருந்தன. இலங்கையின்
ஆளும் வர்க்கம் இந்தப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும்போது நாளையே பிரச்னைகள்
தீர்ந்துவிடும் என்பது போலத் தோற்றம் காட்டி, பின்னர் அதை நிராகரித்துவிடும்.
ஏமாற்றப்பட்டவர்களாக எப்போதும் தமிழர்களே இருந்தனர். வெளிச்சமும் இருட்டும்
அவர்களது வாழ்வில் தொடர்ந்து கண்ணாமூச்சி ஆடிக்கொண்டே இருந்தன.
இலங்கையிலும் ஒப்பந்தங்கள் என்பது புதிதல்ல. பண்டாரநாயக்கா-செல்வநாயகம்
ஒப்பந்தம் (1957), டட்லி-செல்வநாயகம் ஒப்பந்தம் (1965) ஆகியவை ஏராளமான
விளம்பர வெளிச்சங்களுடன் போடப்பட்டு பின்னர் அவை பொசுங்கிவிட்டன.
ஒப்பந்தத்தில் ஈடுபடுகிற அரசாங்கங்கள் அதனை நடைமுறைக்குக் கொண்டுவராதபடி
காரியமாற்றும். இதற்குப் பேச்சுகளும், வன்முறைகளும், குடியேற்றங்களும்,
சட்டவடிவுகளும், சட்டங்கள் இயற்றுவதும் காரணமாக அமைந்துவிடும். தமிழர்களைக்
கீழ்மைப்படுத்தும் இதுபோன்ற நடவடிக்கைகள் காலாகாலமாகத் தொடர்ந்துகொண்டே
வருகின்றன. இந்நிலையில், இலங்கையின் இனப்பிரச்னை தொடர்பாக பாதிக்கப்பட்ட
மக்களையோ, அவர்களின் பிரதிநிதிகளையோ சம்பந்தப்படுத்தாமல், அவர்களின்
விருப்பங்களையும் உரிமைகளையும் கண்டுகொள்ளாமல், போடப்படுகிற ஒப்பந்தமாக
(ரோஹனா குணவர்த்தனா - இண்டியன் இண்டர்வென்ஷன் இன் ஸ்ரீலங்கா - நூலில்
கூறியவாறு) இந்திய-இலங்கை ஒப்பந்தம்-1987, அமைந்தது.ஜூலை 29-ஆம் நாள்,
இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்ச்சிக்கு எம்.ஜி.ஆரும்
வரவேண்டும் என்று ராஜீவ் காந்தி விரும்பினார். வற்புறுத்தவும் செய்தார்.
ஆனால் எம்.ஜி.ஆரோ தனது உடல்நிலையைக் காரணம் காட்டித் தவிர்த்து விட்டார்.
ராஜீவ் காந்தியின் கட்டாயத்தின்பேரில் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் இந்த
நிகழ்ச்சியில் கலந்துகொள்வது என்று முடிவாயிற்று.
இதே நேரம், கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா
கொதிப்பின் உச்சத்தில் இருந்தார். புத்தபிக்குகளின் கூட்டத்தைக் கூட்டி,
அவர்களை உசுப்பிவிட்டார். அவர்களும் தங்களது முழு எதிர்ப்பையும் காட்டுவது
என்று தீர்மானித்தார்கள். மற்ற எதிர்க்கட்சிகள் இந்தப் போக்கை உற்று
கவனித்துக்கொண்டிருந்தன. நகரெங்கும் வன்முறை தலைவிரித்தாடியது. உச்சகட்ட
வன்முறை ஜூலை 27-ஆம் தேதியன்று தலைதூக்கியது. வன்முறையைக் கட்டுப்படுத்த
எடுத்த முயற்சிகளில் 19 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதன் காரணமாக
கொழும்பில் சில பகுதிகளில் ஊரடங்குச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. பின்னர்,
நகர் முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமலானது. இதற்கிடையே, தீட்சித் பறந்து
வந்து, ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கான இறுதிக்கட்ட வேலைகளைப் பார்வையிட்டார்.
ஒப்பந்தத்தில் கையெழுத்திடும்வரை பிரபாகரன் உள்ளிட்டோர் அசோகா ஹோட்டலில்
சிறைவைக்கப்பட்ட நிலையில், பிரதமர் ராஜீவ் காந்தி ஜூலை 29-ஆம் தேதி அதிகாலை
கொழும்பு புறப்பட்டார். கொழும்பு விமானநிலையத்தில் அவருக்கு, அளிக்கப்பட்ட
வரவேற்பு சம்பிரதாய ரீதியில் அமையவில்லை. குண்டு துளைக்காத காரில் அவரும்
சோனியாவும் ஏறி வெளியே வந்தபோது, பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட புத்தபிக்குகள்
கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர். ஊரடங்கு அமலில் இருக்கும்போது, பெருமளவில்
மக்கள் கூடினால், அது பெரும் வன்முறையில் முடியும் என அரசுகளும் நடவடிக்கை
எடுக்கும். எனவே, இந்த எதிர்ப்பைத் தெரிவிக்க புத்தபிக்குகளைத் தயார்படுத்தி
அனுப்பியிருந்தார் ஸ்ரீமாவோ. புத்தபிக்குகள் மீது நடவடிக்கை எடுத்தால் அது
மதப் பிரச்னை ஆகிவிடும் என்று கருதப்பட்டு, அவர்களது ஆர்ப்பாட்டம்
கலைக்கப்படவில்லை.
பிரதமர் ராஜீவ் காந்தி ஆளரவமற்ற சாலையில் பயணித்து, நிகழ்ச்சி நடைபெற இருந்த
பதினேழாம் நூற்றாண்டு காலத்தில் கட்டப்பட்ட அதிபர் மாளிகையைச் சென்றடைந்தார்.
ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்ச்சியை ஜெயவர்த்தனாவின் சொந்தக்
கட்சியினரே புறக்கணித்தனர். பிரதமர் ஆர்.பிரேமதாசா, பாதுகாப்பு அமைச்சர்
அதுலத் முதலி, விவசாய அமைச்சர் காமினி ஜெயசூரியா, விமல கன்னங்கர முதலியோர்
அங்கு தலைகாட்டவே இல்லை. முரண்பாடுகள் நிறைந்த, பிரச்னைகளின் வடிவிலான
இந்திய-இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தானது. பிரதமர் ராஜீவ் காந்தியும் இலங்கை
அதிபர் ஜெயவர்த்தனாவும் கையெழுத்திட்ட ஒப்பந்தப் பிரதிகளை பரஸ்பரம்
மாற்றிக்கொண்டனர்.
99: இந்திய - இலங்கை ஒப்பந்தம்! இந்தியக் குடியரசின் பிரதமர் ராஜீவ் காந்தியும், இலங்கை ஜனநாயக சோசலிசக்
குடியரசின் அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவும் 1987-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29-ஆம்
தேதி கொழும்பு நகரில் சந்தித்துக்கொண்டனர். இந்தியா-இலங்கை ஆகிய இரு
நாடுகளுக்கும் இடையே நிலவிவரும் தொன்றுதொட்ட நட்புறவைப் பலப்படுத்தவும், அதனை
வளர்த்து, பராமரிக்கும் உயர்மிகு முக்கியத்துவத்தை இணைத்து, இலங்கையின்
இனப்பிரச்னையைத் தீர்க்கும் உடனடித் தேவைக்கு ஏற்ப, இலங்கையில் வசிக்கும்
அனைத்து இன மக்களின் பாதுகாப்பு வளமை, மேம்பாடு ஆகியவற்றுக்காகவும்,
வன்முறையைத் தவிர்ப்பதற்காகவும். இந்த இலக்கினை நிறைவேற்றும் வகையில்
கீழ்க்கண்ட ஒப்பந்தம் இந்த நாளில் கையெழுத்திடப்படுகிறது. இதன் தொடர்பாக,
1.1) இலங்கையின் ஒற்றுமை, இறையாண்மை, பிரதேச ஒருமைப்பாடு ஆகியவற்றைப்
பராமரிப்பதில் ஆர்வம் கொண்டு,
1.2) இலங்கை பல இன, பல மொழி பேசும் மக்களை அதாவது சிங்களர், தமிழர்,
முஸ்லீம்கள் (மூர்ஸ்), பறங்கிகள் ஆகியோரைக் கொண்டது என்பதையும்
அங்கீகரிக்கிறது.
1.3) ஒவ்வொரு இனமும் கவனமாகப் போற்றப்பட்டவேண்டிய, தனி கலாசார, மொழியை,
தனித்துவத்தைக் கொண்டது; அவற்றை வளர்ப்பது அவசியம் என்பதை ஏற்று,
1.4) இலங்கைத் தமிழர்களின் வரலாற்று ரீதியான வாழ்விடமாக, வடக்கு-கிழக்கு
மாகாணங்கள் இருந்து வந்திருக்கின்றன. இங்கு மற்ற இனத்தவருடன் தமிழர்கள்
சேர்ந்து வாழ்கிறார்கள் என்பதையும் அங்கீகரிக்கிறது.
1.5) இலங்கையின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, இறையாண்மை ஆகியவற்றை பலப்படுத்துவதன்
அவசியத்தை உணர்ந்து, இலங்கையின் பல இன, பல மொழி மதங்கள் கொண்ட சமூகத்தின்
தன்மையையும் பாதுகாக்கும் தேவையையும் மனதில் கொண்டு அதன் அனைத்துக்
குடிமக்களும் உரிமைகளுடனும், மகிழ்ச்சியோடும் வாழ கீழ்க்கண்டவாறு முடிவு
செய்யப்படுகிறது.
2.1) கீழ்க்கண்டவாறு வடக்கு-கிழக்கு மாகாணங்கள் ஒன்றிணைந்த நிர்வாகப்
பகுதியாக இணையவும் இதனை வாக்கெடுப்பு மூலம் தனியாகப் பிரிக்கவும், அனுமதிக்க
இலங்கை அரசு தீர்மானித்திருக்கிறது.
2.2) மாகாணக் கவுன்சிலுக்கான தேர்தல் தேதி பத்தி 2.8-இல்
குறிப்பிட்டுள்ளபடியும் நிர்வாகப் பகுதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாகாணக்
கவுன்சிலுடன் இயங்கும். இந்த ஒன்றிணைந்த நிர்வாகப் பகுதிக்கு ஓர் ஆளுநரும்,
ஒரு முதல்வரும், ஓர் அமைச்சரவையும் இருக்கும்.
2.3) 1988-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதியோ அதற்கு முன்னரோ ஒரு பொதுமக்கள்
வாக்கெடுப்பு நடைபெறும். இந்த வாக்கெடுப்பு, அ) வடக்கு மாகாணத்துடன் கிழக்கு
மாகாணம் ஒரே நிர்வாகப் பகுதியாக இணைந்து இருப்பதா? தொடர்ந்து 2.2-இல்
கண்டுள்ளபடி ஆளப்படுவதா அல்லது ஆ) கிழக்கு மாகாணம் தனி நிர்வாகப் பகுதியாக
தனக்கென தனி மாகாணக் கவுன்சில், தனி ஆளுநர், தனி முதல்வர், தனி
அமைச்சரவையுடன் இயங்குவதா என்பதைத் தீர்மானிக்கும். இலங்கை ஜனாதிபதி தனது
அதிகாரத்தைப் பயன்படுத்தி, அத்தகைய பொதுமக்கள் வாக்கெடுப்பை ஒத்தி வைக்கவும்
உரிமை உண்டு.
2.4) இன வன்முறை அல்லது மற்ற காரணங்களுக்காக அல்லது வேறு காரணங்களுக்காகவும்
இடம் பெயர்ந்தவர்களும் அத்தகைய பொதுமக்கள் வாக்கெடுப்பில் வாக்களிக்க உரிமை
உண்டு. அவர்கள் எந்த இடத்திலிருந்து வெளியேறினார்களோ அந்த இடங்களுக்குத்
திரும்பத் தேவையான சூழ்நிலைகள் உருவாக்கப்படும்.
2.5) அத்தகைய பொதுமக்கள் வாக்கெடுப்பு நடத்தப்படும்போது, இலங்கைத் தலைமை
நீதிபதி தலைமையில் இலங்கை அரசால் குறிப்பிடப்பட்டு, இலங்கை ஜனாதிபதியால்
நியமிக்கப்பட்ட ஒருவர், கிழக்கு மாகாணத் தமிழர்களின் பிரதிநிதிகளினால்
குறிப்பிடப்பட்டு, ஜனாதிபதியால் நியமிக்கப்படும் ஓர் உறுப்பினர், ஆகியோரைக்
கொண்ட குழுவால் கண்காணிக்கப்படும்.
2.6) பொதுமக்கள் வாக்கெடுப்பு முடிவு சாதாரண பெரும்பான்மை அடிப்படையில்
அமையும்.
2.7) பொதுமக்கள் வாக்கெடுப்புக்கு முன்னதாக இலங்கை சட்டங்கள் அனுமதிக்கும்
வகையில் பிரசாரம் செய்ய அனுமதிக்கப்படும்.
2.8) மாகாண கவுன்சிலர்களுக்கான தேர்தல் அடுத்த 3 மாதங்களுக்குள் 1987
டிசம்பர் 31-ஆம் தேதிக்கு முன்னதாக நடைபெறும். வடக்கு - கிழக்கு மாகாண
தேர்தல்களின்போது இந்தியப் பார்வையாளர்கள் அழைக்கப்படுவர்.
2.9) 1987-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி வாக்கில் வடக்கு - கிழக்கு
மாகாணங்களில் அவசர நிலை நீக்கப்படும். இந்த ஒப்பந்தம் கையெழுத்தான 48 மணி
நேரத்திற்குள் போர் நிறுத்தம் அமலுக்கு வரும். போராளிகள் தங்களது ஆயுதங்களை
இலங்கை அரசு குறிப்பிடும் அதிகாரிகளிடம், ஒத்துக்கொள்ளப்பட்ட நடைமுறைப்படி
ஒப்படைப்பார்கள். போர் நிறுத்தம், ஆயுத ஒப்படைப்பு ஆகியவைகளின் விளைவாக
இலங்கை ராணுவமும் மற்ற பாதுகாப்புப் படைகளும் 1987-ஆம் ஆண்டு மே மாதம் 25-ஆம்
தேதி நிலைப்படி தங்களது முகாம்களுக்குத் திரும்ப வேண்டும். ஆயுத ஒப்படைப்பு,
இலங்கை பாதுகாப்புப் படைகள் முகாம்களுக்குத் திரும்புவது ஆகியவை போர்
நிறுத்தம் ஏற்பட்ட 72 மணி நேரத்திற்குள் நடைபெறும்.
2.10) வடக்கு-கிழக்கு மாகாணங்களின் சட்ட அமல், பாதுகாப்பு மற்றும்
பராமரிப்புப் பணிகளுக்காக நாட்டின் மற்ற பகுதிகளில் உள்ளது போன்ற அமைப்புகள்
பயன்படுத்தப்படும்.
2.11) எல்லா அரசியல் கைதிகளுக்கும், பயங்கரவாதச் சட்டம், மற்ற அவசரநிலைச்
சட்டங்களின் கீழ் சிறையிலுள்ள, வழக்கு விசாரணையில் உள்ளவர்களுக்கும் மற்றும்
போராளிகளுக்கும் பொதுமன்னிப்பு வழங்கப்படும். தேசிய வாழ்க்கை நீரோட்டத்திற்கு
போராளி இளைஞர்களைக் கொண்டுவர விசேஷ முயற்சிகளை இலங்கை அரசு மேற்கொள்ளும்.
இந்த முயற்சிகளுக்கு இந்திய ஒத்துழைப்பு வழங்கும்.
2.12) மேலே கண்ட ஷரத்துகள் அனைத்தையும் இலங்கை அரசு ஏற்று அமல் செய்யும்.
மற்றவர்களும் அவ்வாறே செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2.13)
இந்தத் தீர்மானங்களுக்கான சட்டவரைவு ஏற்றுக்கொள்ளப்பட்டதும் சம்பந்தப்பட்ட
முன்மொழிவுகளை இலங்கை அரசு உடனடியாக அமல் செய்யும்.
2.14) இந்தத் தீர்மானங்களுக்கு இந்திய அரசு உத்தரவாதம் அளிக்கும். இந்தத்
திட்டங்களை அமல்படுத்துவதில் ஒத்துழைக்கும்.
2.15) இந்தத் திட்டங்கள் 4-5-1986-ஆம் தேதிக்கும் 19-12-1986-ஆம் தேதிக்கும்
இடைக்காலத்தில் விவாதிக்கப்பட்ட தீர்வாலோசனைகளை ஏற்பது என்னும் நிபந்தனையையே
தீர்வாலோசனைகள் கொண்டுள்ளன. மேற்கண்ட காலத்தில் இறுதியாக்கப்படாத விவரங்கள்
இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் தேதியிலிருந்து ஆறு வார காலத்திற்குள்
இந்திய - இலங்கை அரசுகள் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காணவேண்டும். மேலும்
இலங்கை அரசோடு, இந்திய அரசு நேரடியாக இந்தத் திட்டங்களை அமல் செய்ய
ஒத்துழைப்பதையும் நிபந்தனைகளாகக் கொண்டுள்ளன. 2.16) மேலும் இந்த ஒப்பந்தத்
திட்டங்களை இலங்கையில் செயல்படும் எந்த ஒரு போராளிகளின் குழுவாவது
ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில் இந்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளையும் இந்தத்
திட்டங்கள் நிபந்தனைகளாகக் கொண்டுள்ளன. இதன்படி, அ) இலங்கை ஒற்றுமை,
ஒருமைப்பாட்டுக்கு விரோதமான நடவடிக்கைகளுக்கு இந்தியப் பகுதி
பயன்படுத்தப்படாமல் பார்த்துக்கொள்ள இந்தியா தேவையான நடவடிக்கைகளை
மேற்கொள்ளும். ஆ) தமிழ்ப் போராளிகள் நடவடிக்கைகளைத் தடுக்க இலங்கைக்
கடற்படையுடன் இந்தியக் கடற்படை, கடலோரக் காவல் படை ஒத்துழைப்பு தரும். இ)
இந்தத் திட்டங்களை அமல் செய்ய ராணுவ உதவி வழங்கும்படி இலங்கை அரசு கோரினால்,
அந்த உதவியை இந்தியா வழங்கும். ஈ) இலங்கையில் உள்ள இந்தியக் குடிமக்களை
இந்தியாவுக்கு அழைத்துக்கொள்வதற்கான நடவடிக்கைகளை இந்திய அரசு
துரிதப்படுத்தும். அதேபோன்று தமிழ்நாட்டில் உள்ள தமிழ் அகதிகள் இலங்கை
திரும்பவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். உ) வடக்கு-கிழக்கு மாகாணங்களில்
வாழும் அனைத்து இனத்தவரின் உயிருக்கும் உடலுக்கும் ஊறு விளை ஏற்படாமல்
பாதுகாப்பை உறுதிசெய்ய இந்திய-இலங்கை அரசுகள் ஒத்துழைக்கும்.
2.17) இந்த ஒப்பந்தத்தில் கண்டுள்ள வடக்கு - கிழக்கு மாகாணத் தேர்தல்களில்
அனைத்து இனத்தவரும் சுதந்திரமாக, முழுமையாக, நேர்மையாகப் பங்கு பெறுவதை
இலங்கை அரசு உறுதிப்படுத்த வேண்டும். இது தொடர்பாக இலங்கை அரசுக்கு இந்தியா
முழு ஒத்துழைப்பு வழங்கும். 2.18) இலங்கையின் அரசு அலுவல் மொழி சிங்களமாக
இருக்கும். தமிழ் மற்றும் ஆங்கிலம் கூட அலுவல் மொழியாக இருக்கும். 3. இந்த
ஒப்பந்தம் கையெழுத்தானதும் அமலுக்கு வரும். அதிகாரப்பூர்வமான அசல் நகல்
உள்ளிட்ட இரண்டு பிரதானப் பகுதிகளையும் 1987-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29-ஆம்
நாள் அன்று இலங்கை கொழும்புவில் நம் இருவரின் சாட்சிப்படி இவ்வொப்பந்தத்தில்
கையெழுத்திடுகிறோம். ஒப்பந்தத்தின் முடிவில் இந்தியக் குடியரசின் பிரதமர்
ராஜீவ் காந்தியும், இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் அதிபர் ஜே.ஆர்.
ஜெயவர்த்தனாவும் கையெழுத்திட்டனர்
No comments:
Post a Comment