110- இடைக்கால நிர்வாக சபையை நோக்கி...திலீபன் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் போது தீட்சித் வந்திருந்து,
அவரின் ஐந்து அம்சக்கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டிருந்தால் அவரது உயிர்
காப்பாற்றப்பட்டிருக்கும். ஆனால் அவர் பிரபாகரனை 26-ஆம் தேதி காலை 11 மணிக்கு
"திலீபனின் உயிர் பிரிந்த பிறகு 15 நிமிடம் கழித்து' சந்திப்பதற்கு நேரம்
ஒதுக்கியிருந்தார். கெüரவம் பார்க்காமல் அவர் நேராக வந்திருந்தாலோ,
கோரிக்கைகளை நிறைவேற்றுவதாகவோ வாக்குறுதி அளித்திருந்தால் நிலைமையே மாறி
இருக்கும். திலீபன் உயிர் போன பிறகு ஐந்து அம்சக் கோரிக்கைகளை ஏற்பதாகவும்,
அதனை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்தபோதிலும்,
விடுதலைப் புலிகளின் மனதிலிருந்து அமைதிப்படையின் மீதிருந்த மரியாதையும்
நம்பிக்கையும் அகன்றுவிட்டிருந்தது; மக்களுக்கும்தான். தீட்சித்தின்
பிடிவாதம் மாறாத வடுவை அவர்கள் மனதில் ஏற்படுத்திவிட்டது. திலீபன்
உயிரிழப்பைத் தாங்கமுடியாத மக்கள் கூட்டம் வன்முறையில் இறங்கியது. இரண்டு
பேருந்துகளுக்கு தீ வைக்கப்பட்டன. போக்குவரத்து நிறுத்தப்பட்டதற்கு
தண்டவாளங்களில் ஏற்பட்டிருந்த தடையே காரணமானது. யாழ்ப்பகுதி முழுவதும்
திலீபனின் உடல் எடுத்துச் செல்லப்பட்டது. சாலை எங்கும் மனிதத் தலைகளாகவே
காட்சியளித்தன. அவர்களின் மனதில் தாங்க முடியாத சோகம். அரசுகளின் மீது
வெறுப்பு. ஒவ்வொரு வீட்டிலும் கருப்புக் கொடி ஏற்றப்பட்டிருந்தது.
யாழ்ப்பாணத்தில் துக்கம் நேர்ந்தால் வீட்டில் வாழை மரம், தென்னங் குருத்துத்
தோரணம் கட்டும் பழக்கமுண்டு. மக்கள் சந்துக்குச் சந்து இந்த வாழை மரங்களை,
தங்கள் வீட்டில் நடந்த துக்கம் போன்று கட்டியிருந்தார்கள். இறுதி நாள்
அஞ்சலிக் கூட்டத்தில் மட்டும் 3 லட்சம் பேர் கலந்து கொண்டனர்.
"திலீபன் மரணமே தியாகத்தில் தோய்ந்த மரணமாகும். வாழும்போது மட்டுமல்ல;
சாவுக்குப் பின்னரும் அவருடைய தியாகம் தொடர்ந்தது. தான் இறந்தால், மருத்துவக்
கல்லூரி ஆராய்ச்சிக்குத் தனது உடலை வழங்க வேண்டும்' என்று சொல்லியிருந்தார்.
அதன்படி அவரது உடல் அடங்கிய பெட்டி யாழ் மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள்
வசம் ஒப்படைக்கப்பட்டது. "வாழ்விலும் சாவிலும் தியாக வரலாறு படைத்தான்
திலீபன். மில்லர் புரிந்தது மறத்தியாகம் என்றால் திலீபன் புரிந்தது
அறத்தியாகம்' என்கிறார் பழ.நெடுமாறன் தனது "தமிழீழம் சிவக்கிறது' நூலில்.
இறுதி நாள் ஊர்வலத்தில் அவரும் கலந்துகொண்டு, அஞ்சலிக் கூட்டத்திலும்
பேசினார்.
திலீபன் மரணத்தைத் தொடர்ந்து, இடைக்கால நிர்வாக சபை அமைப்பதில் வேகம்
பிடித்தது. செப்டம்பர் 26-இல் பேசியதையொட்டி, அடுத்தப் பேச்சு செப்டம்பர்
28-இல் என்று முடிவெடுத்தபடி பிரபாகரன் உள்ளிட்டோர் பலாலி ராணுவ முகாமில்
கூடியிருந்தனர். இந்தியத் தூதுவர் வருகை சிறிது நேரம் தடைப்பட்டது. நிர்வாக
சபைத் தலைவர் பதவிக்கு மூன்று பெயர்கள் கொண்ட பட்டியலில் ஜெயவர்த்தனா
ஒருவரைத் தேர்ந்தெடுப்பார். ஜெயவர்த்தனா யாரைத் தேர்ந்தெடுக்கிறார் என்கிற
விவரத்துடன் தீட்சித் வருகை எதிர்நோக்கப்பட்டது. தீட்சித் வந்தார்.
ஜெயவர்த்தனா, சி.வி.கே.சிவஞானத்தைத் தேர்ந்தெடுத்ததாக அறிவித்தார்.
பிரபாகரனுக்கு இந்த முடிவு உகந்ததாக இல்லை. என்.பத்மநாதனை அவர் முடிவு
செய்திருந்தார்.
தீட்சித், ""பட்டியலில் உள்ளபடிதான் அவர் தேர்வு செய்திருக்கிறார்'' என்றார்.
""இருக்கலாம்...எனது விருப்பம் நான் கொடுத்த வரிசைப்படி முதலாவது பெயராக
பத்மநாதனில் ஆரம்பிக்கிறது. பத்மநாதன் முன்னாள் அரசு ஊழியர். தாசில்தார்
ரேங்கில் பணிபுரிந்தவர். கிழக்குப் பகுதியில் அவர் பணிபுரிந்ததால்,
கிழக்குக்கு முக்கியத்துவம் கொடுத்தது போன்று இருக்கும்'' என்றார்.
""ஜெயவர்த்தனா வேறு மாதிரி சிந்தித்தார். "பத்மநாதன் மட்டக்களப்பு சிறை
உடைப்பில் ஒரு குற்றவாளி. அதனால் அவர், அவரை விரும்பவில்லை.''
""ஜெயவர்த்தனாவுக்கு நாங்கள் எல்லோருமே குற்றவாளிகள்தான். அவரது நியாயம்
எங்களுக்கு ஏற்பில்லை'' என்று பிரபாகரன் தெரிவித்தார். பிரபாகரனை எப்படியாவது
சம்மதிக்க வைத்துவிட வேண்டும் என்று தீட்சித் பெரிதும் முயன்றார்.
வாக்குவாதங்கள் - இடையிடையே சிற்றுண்டி எல்லாம் குறுக்கிட்டும் மாலை 5 மணி
வரை பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை.
முடிவில் பிரபாகரன் சம்மதித்தார் - என்று லெப். ஜெனரல் தீபிந்தர் சிங் இந்தச்
சம்பவம் பற்றித் தனது நூலில் குறித்து வைத்திருக்க, மேஜர் ஜெனரல் ஹர்கிரத்
சிங்கின் நூலில் சிறிது மாற்றம் உள்ளது. "சி.வி.கே. சிவஞானம் பெயர்,
ஜெயவர்த்தனா, தீட்சித் விருப்பம் என்றும், சிவஞானம் தீட்சித்தின் நெருங்கிய
சகா மற்றும் அவருக்கு உளவு சொல்கிறவர் தீட்சித்தின் நிதி வழங்கும் பட்டியலில்
அவர் உள்ளவர் என்றும், அவரையே அந்தப் பதவியில் அமர்த்துவதில் உறுதியாக
ஜெயவர்த்தனா இருந்தார்' என்றும் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து
விடுதலைப்புலிகள் தாங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை அரசு தனது
முடிவுக்கு எங்களைக் கட்டாயப்படுத்துகிறது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
ஒப்பந்தத்தின் முன்னதாக பேசித் தீர்க்க வேண்டியவற்றை பின்னர் பேசுவதால்
ஏற்படும் விளைவுகளில் இதுவும் ஒன்று.
திலீபனின் உயிரிழப்பு விடுதலைப் புலிகளிடத்தும், யாழ் மக்களிடத்தும் மாறாத
சோகத்தை ஏற்படுத்தியருந்த நிலையில், இவ்வியக்கம் அடுத்ததொரு சோகத்தையும்
சந்திக்க நேர்ந்தது. கசப்பு மருந்தாக இடைக்கால நிர்வாக சபைத் தலைவர் தேர்வு
இருந்தாலும், கெட்டதில் நல்லதைத் தேடுவது என்ற அடிப்படையில் விடுதலைப்புலிகள்
நிலைப்பாடு இருந்தது. சென்னையில் இருந்த அவர்களது அலுவலகத்தை முற்றும்
முழுதாகக் காலி செய்து கொண்டு யாழ்ப்பாணம் வரும் முடிவுடன் புலேந்திரன்,
குமரப்பா உள்ளிட்ட 17 பேர் படகில் இலங்கையிலிருந்து கிளம்பினர்.
அவர்களின் பயணம் இந்திய அமைதிப்படைத் தலைவர்களுக்கும் இந்தியத் தூதுவருக்கும்
தெரிவிக்கப்பட்டே நடந்தது. இந்நிலையில், சிங்களக் கடற்படை, குமரப்பா,
புலேந்திரன் உள்ளிட்டோர் சென்ற படகைச் சுற்றி வளைத்தது. அவர்கள் ஆயுதம்
கடத்துவதாகக் கூறி கைது செய்ததாகவும் அறிவித்தது. இந்த செய்தி, விடுதலைப்
புலிகள் மத்தியிலும் யாழ்ப்பாண மக்கள் மத்தியிலும் அதிர்ச்சி அலைகளை
எழுப்பியது
111: புலேந்திரன், குமரப்பா தற்கொலை! சிங்களக் கடற்படையினரால் ஆயுதம் கடத்துவதாகக் கூறி, படகைச் சுற்றி
வளைத்துக் கைது செய்யப்பட்ட குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்டோர் அதிர்ச்சியில்
ஆழ்ந்தனர். அமைதிப்படைத் தலைவருக்கும், இந்திய தூதுவருக்கும் தகவல்
தெரிவிக்கப்பட்டது என்று அவர்கள் சொன்னதை சிங்களக் கடற்படையினர் சட்டை
செய்வதாக இல்லை. அவர்கள் அனைவரும் பலாலி ராணுவ முகாமுக்குக் கொண்டுவரப்பட்டு,
காவலில் வைக்கப்பட்டனர். அவர்களுக்கு விலங்கு பூட்ட வேண்டும் என்று சிங்களத்
தளபதி வலியுறுத்தினார். ஆனால் அம்முடிவை அமைதிப்படை ஏற்கவில்லை.
கைதானவர்களில் புலேந்திரன் இருப்பதை அடையாளம் கண்ட இலங்கை கடற்படை பெரிய
அளவில் மகிழ்ச்சி அடைந்தது. காரணம், ஏப்ரல் 1987-இல் திருகோணமலையில் நடைபெற்ற
வாகனத் தகர்ப்பு சம்பவத்தில் சிங்களர்கள் இறந்ததையொட்டி, விடுதலைப்புலிகளின்
திருகோணமலை தளபதி புலேந்திரன் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. எனவே
அவரையும் மற்றவர்களையும் கொழும்புவுக்குக் கொண்டு செல்ல இலங்கை கடற்படை
விரும்பியது. பாதுகாப்பு அமைச்சர் லலித் அதுலத் முதலியும் அவர்களை உடனே
கொழும்பு கொண்டு வரும்படி உத்தரவிட்டார். இதுகுறித்து அறிந்ததும் மாத்தையா,
இந்திய அமைதிப்படைத் தளபதிகளிடம் பேசினார். ""அனைத்துப் போராளிகளுக்கும் பொது
மன்னிப்பு வழங்கப்பட்ட நிலையில் கைது செய்வது - ஒப்பந்த மீறலாகும். அவர்கள்
ஆயுதம் எதுவும் கடத்தவில்லை. தங்கள் பாதுகாப்புக்கு என்று துப்பாக்கி
வைத்திருக்கிறார்கள். இதுவும் கூடத் தளபதிகளுக்கு அனுமதிக்கப்பட்ட சலுகைதான்.
இந்த நிலையில் அவர்களை விடுவிப்பது அமைதிப்படையின் பொறுப்பாகும்' என்று
வாதிட்டார்.
அமைதிப்படையினரும் சிங்களக் கடற்படையினர் செய்தது சரியில்லை என்று கூறி,
அவர்களை விடுவிக்க முயற்சி எடுக்கிறோம் என்று உறுதி கூறினர். இது குறித்து
பழ.நெடுமாறன் எழுதியுள்ள நூலில், மாத்தையா தன்னிடம் சொன்ன தகவல்களைப் பதிவு
செய்துள்ளார். அதில் மாத்தையா சொல்கிறார்: ""நானும் நடேசனும் ராணுவ
முகாமுக்குச் சென்று எங்களது தோழர்களைப் பார்த்தோம். அவர்கள் யாரும்
எதைப்பற்றியும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. சிரித்துப் பேசிக்
கொண்டிருந்தார்கள். பின்பு எல்லாரையும் வீடியோ படம் எடுத்தோம். அவரவர் தம்
குடும்பத்தினருக்குக் கடிதம் எழுதிக் கொடுத்தார்கள். புலேந்திரன் தன்
மனைவிக்கு எழுதிய கடிதத்தில், "எல்லாச் சோதனைகளிலும் வென்றிருக்கிறேன்.
இதிலும் நிச்சயமாக வெல்வேன். இல்லாவிட்டால் லட்சியத்திற்காகச் சாவேன்' என்று
எழுதியிருந்தார். குமரப்பா தனது மனைவிக்கு எழுதிய கடிதத்தில், "அவர்
எப்போதும் விரும்பிப் படிக்கும் பாடல் ஒன்றை நினைவுப்படுத்தி'
எழுதியிருந்தார்.
கரன் என்ற தோழர் தன் மனைவிக்கு எழுதிய கடிதத்தில், "மகனை ஒரு மாலுமியாக'
ஆக்குமாறு குறிப்பிட்டிருந்தார். இவ்வாறு ஒவ்வொருவரும் தங்களது விருப்பங்களை
எழுதிக் கொடுத்தனர். இதற்கிடையில், இந்திய அமைதிப்படை இவர்களுக்கு உணவு
கொண்டு வந்தது. அவ்வுணவை அவர்கள் ஏற்க மறுத்துவிட்டார்கள். எனவே, அவர்களுக்கு
வெளியே இருந்து உணவு வரவழைத்துக் கொடுத்தேன். பின்னர் மேஜர் ஹர்கிரத்
சிங்கைச் சந்தித்தேன். அவர் நியாயங்களை உணர்ந்து பேசினார். ஆனாலும் இந்தியத்
தூதுவர் தீட்சித்திடம் இருந்து வந்த செய்தியை அவர் தெரிவித்தார். "இடைக்கால
அரசை விடுதலைப்புலிகள் ஒப்புக் கொண்டால், அனைவரையும் விடுதலை செய்வதாக
தீட்சித் கூறுகிறார்' என்று அவர் தெரிவித்தார். எங்களை நிர்ப்பந்தப்படுத்தி
இடைக்கால அரசை ஏற்கவைக்க முயலுகிறார்கள் என்பது புரிந்தது. நிபந்தனை என்றால்
அது தேவையில்லை. ஒப்பந்தப்படி இலங்கை அரசை வலியுறுத்த வேண்டிய அவசியம்
இருக்கிறது. பொதுமன்னிப்பு வழங்கிய நிலையில் கைது நடவடிக்கை அத்துமீறல் என்று
சொல்லவேண்டும் என்று வலியுறுத்தினோம். எங்கள் வசமுள்ள சிங்களக் கைதிகள் 8
பேரையும் விடுதலை செய்கிறோம். பதிலுக்கு எங்கள் தோழர்களை விடுதலை
செய்யுங்கள்' என்று கேட்டோம்.
இதற்கும் அவர்கள் தரப்பிலிருந்து சரியான பதில் இல்லை. இதன்பின் பிரபாகரன் என்
மூலம், ஹர்கிரத் சிங்கிற்கு ஒரு கடிதம் அனுப்பினார். "எமது பிராந்தியத்
தளபதிகளையும் மற்றும் முக்கிய உறுப்பினர்களையும் ஸ்ரீலங்கா ஆயுதப்படையினர்
கைது செய்து காவலில் வைத்திருப்பது இந்திய - இலங்கை உடன்படிக்கையின் அடிப்படை
அம்சத்தையே மீறுவதாக அமைகிறது. உடன்படிக்கையின்படி இலங்கைக் குடியரசுத்
தலைவர் எமக்குப் பொதுமன்னிப்பு வழங்கியிருக்கிறார். இந்திய அரசு எமக்குப்
பாதுகாப்பு தருவதென உறுதிமொழி அளித்துள்ளது. இப்பொழுது
சிறைப்பிடிக்கப்பட்டிருக்கும் எமது வீரர்கள் எந்தவொரு குற்றச் செயலையும்
செய்யவில்லை. அவர்கள் தென்னிந்தியாவிலுள்ள விடுதலைப் புலிகள்
அலுவலகத்திலிருந்த ஆவணங்களையும் புத்தகங்களையும் இங்கு கொண்டு வருவதற்காகச்
சென்றனர். ஒரு மாதத்திற்கு முன்னதாகவே இது தொடர்பாக இந்தியக் கடற்படையினரிடம்
உதவி கோரியிருந்தோம். ஆனால் அவர்கள் இவ்விஷயத்தில் எதுவித முடிவும் எடுக்காத
நிலையில், எமது சொந்தப்படகில் ஆவணங்களையும் புத்தகங்களையும் கொண்டுவரத்
தீர்மானித்தோம்.
எமது தளபதிகள் சொந்தப் பாதுகாப்பிற்காக துப்பாக்கிகளை மட்டும்
வைத்திருந்தனர். இப்பொழுது எமது தளபதிகளும் முக்கிய உறுப்பினர்களும் பலாலி
விமான தளத்தில் அமைதிப்படையின் மேற்பார்வையுடன் ஸ்ரீலங்கா ராணுவத்தினால்
தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்திய அமைதிப்படையினர் இவர்களுடைய
பாதுகாப்பிற்கு உறுதியளிக்கவேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் இவர்களை
ஸ்ரீலங்கா ராணுவம் கொழும்பு கொண்டு செல்ல அனுமதிக்கக் கூடாது. ஸ்ரீலங்கா
படையினர் அவர்களை பலாத்காரமாகக் கொழும்புக்குக் கொண்டு செல்ல முயன்றால்,
அவர்கள் சயனைட் அருந்தி தம்மைத்தாமே அழித்துக் கொள்வார்கள். இவ்விதமான
துர்ப்பாக்கிய சம்பவம் நிகழுமானால் அதனால் எழக்கூடிய பாரதூரமான விளைவுகளுக்கு
இந்திய அமைதிப் படையே பொறுப்பேற்க வேண்டும். எமது தளபதிகளும், முக்கிய
உறுப்பினர்களும் இறக்க நேரிட்டால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் யுத்த
நிறுத்தத்தைத் தொடரப்போவதில்லை. தமிழ்ப் பகுதிகளில் அமைதியை நிலைநாட்டுவதற்கு
இந்திய அமைதிப்படையினருக்கு நாம் ஒத்துழைப்பு வழங்கமாட்டோம். அமைதியையும், இன
ஒற்றுமையையும் நிலைநாட்டுவதில் உறுதிகொண்டிருக்கும் இந்திய அரசும், இந்திய
அமைதிப் படையினரும் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் எமது உறுப்பினர்களை எந்தவித
நிபந்தனையுமின்றி விடுதலை செய்ய ஆவன செய்யவேண்டும்'' என்று அந்தக் கடிதத்தில்
வேண்டுகோள் விடப்பட்டிருந்தது.
இக்கடிதத்தை ஹர்கிரத் சிங்கிடம் சேர்த்தபோது அவருடன் பிரிகேடியர்
ஃபெர்னாண்டஸ் மற்றும் மொழிபெயர்ப்பாளர் பெரியசாமி இருந்தனர். நிலைமை
அவர்களுக்குக் கவலையளித்தது. இவர்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போது
ஹெலிகாப்டர் ஆயத்த நிலையில் இருந்தது. இதுகுறித்து கேட்டபோது, பயிற்சிக்காக
அவ்வாறு செய்வதாகக் கூறப்பட்டது. நான் கோபமுற்று, "எங்கள் தோழர்களை
இங்கிருந்து கொழும்பு கொண்டு போனால், அடுத்த முறை அவர்களது உடல்களை எடுத்துச்
செல்லவே வருவேன்' என்று கூறினேன்.தீபிந்தர்சிங் தில்லிக்குச் செய்தி
அனுப்பினார். தில்லியில் ஜெயவர்த்தனாவின் செல்வாக்கே கொடிகட்டிப் பறந்தது.
மறுநாள் பகல் இரண்டு மணியளவில் 17 தோழர்களுக்கு இந்திய அமைதிப்படை அளித்த
பாதுகாப்பு விலக்கப்பட்ட நிலையில், ஸ்ரீலங்கா படையினர் அவர்களைச் சூழ்ந்து
கொண்டனர். இது என்ன மாற்றம் என்று வினவியபோது, பாதுகாப்புக்குப்
பொறுப்பேற்றிருந்த லெப்.கர்னல் பிரார், "இப் பிரச்னையில் நாங்கள்
தலையிடக்கூடாதென தில்லியிலிருந்து ஆணை வந்துள்ளது' என்றார். அதற்குமேல்
ஹர்கிரத் சிங்கால் எதையும் செய்யமுடியவில்லை.
மாலை 5 மணிக்கு சிங்கள வீரர்கள் புலிகள் இருந்த அறையின் ஜன்னலை உடைத்து உள்ளே
நுழைய முயன்றபோது, 17 புலிகளும் சயனைட் குப்பிகளைக் கடித்தனர். சில
விநாடிகளில் 12 பேர் உயிர்கள் பிரிந்தன. எஞ்சிய 5 பேரும் எப்படியோ பிழைத்துக்
கொண்டனர். மறுநாள் மாலை 4 மணியளவில் 12 பேர் உடல்களும் என்னிடம்
ஒப்படைக்கப்பட்டன' இவ்வாறு மாத்தையா குறிப்பிட்டிருந்தார்
No comments:
Post a Comment