Friday, November 5, 2010

52 : தி.மு.க.வின் முகவை மாநாடு!

 இலங்கையில் ஏற்படும் சம்பவங்கள் தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவது
      புதிதல்ல. ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்த தொப்புள்கொடி உறவு என்பதால்,
      இலங்கையில் ஏற்படும் அவலங்கள் இங்கே பாதிப்பை ஏற்படுத்தத் தவறவில்லை. 1983
      இனக்கலவரத்தைப் பற்றி கேள்விப்பட்டதுமே மதுரை மாவட்டம் நத்தம் என்ற பேரூரைச்
      சேர்ந்த திராவிட முன்னேற்றக் கழக இளைஞர் அணியைச் சேர்ந்த ஷாஜகான், சென்னை
      இலங்கைத் தூதுவர் அலுவலகம் முன் இலங்கை அரசை எதிர்த்துத் தீக்குளித்தார்.
      இவரது திடீர்ச் செயலால் பரபரப்படைந்த மக்கள், உடலில் தீ பரவாமல் தடுத்தனர்.
      பின்னர் சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஜூலை 18,
      1983-இல் நடந்த கலவரத்திற்கு ஆரம்பமாக விடுதலைப் புலிகளின் இயக்கத்தைச்
      சேர்ந்தவரான சார்லஸ் அந்தோனி என்பவர் ராணுவத்தாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
      இலங்கையில் விடுதலை உணர்வு உள்ள தமிழர்களைப் பற்றியும், அவர்களை
      ஒடுக்குவதற்காக எடுக்கப்படும் ராணுவ நடவடிக்கைகளைப் பற்றியும் தகவல்
      வெளியிடத் தடை விதிக்கப்பட்டது. கடந்த இருபத்து நான்கு மணி நேரத்தில் 18 பேர்
      சுட்டுக் கொல்லப்பட்டனர். இலங்கையில் தமிழர்கள் யாவரும் தங்கள் உயிருக்குப்
      பயந்து இந்தியத் தூதுவர் அலுவலகத்திற்குள் வந்து தஞ்சம் புகுந்தனர்.
      தமிழர்கள் பெருமளவில் கொல்லப்படுவதற்கு இந்தியா கவலை தெரிவித்தது. இதற்கு
      இந்தியாவின் தற்காலிகத் தூதர் ஆர்.எம். அய்யங்காரை அழைத்து, வெளி விவகார
      அமைச்சர் தன் அதிருப்தியைத் தெரிவித்தார். இலங்கை பத்திரிகைகளான தி ஐலண்ட்,
      சன் போன்றவைகள், இந்தியா இலங்கையின் உள்விவகாரத்தில் தலையிடுவதாகக் கண்டித்து
      எழுதின.
      ஜூலை 23-இல் 168 உறுப்பினர்கள் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் முக்கிய
      எதிர்க்கட்சியாக இருந்த தமிழர் ஐக்கிய விடுதலைக் கட்சியின் 16
      உறுப்பினர்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். ஜூலை 26-இல் தமிழ்நாட்டில்
      திமுக தலைவர் மு.கருணாநிதி, தனக்கு, இதுவரை நாற்பது பேர் சுட்டுக்
      கொல்லப்பட்டிருப்பதாக லண்டன், பாரிஸ் மூலம் தகவல் வந்திருப்பதாகத்
      தெரிவித்தார். மறுநாள் (ஜூலை 27-இல்) இலங்கைத் தமிழர் பாதுகாப்புப் பேரணி
      நடத்தப்படும் என்றும் அறிவித்தார். இலங்கைக்கும், சென்னைக்கும் முற்றாகச்
      செய்தித் தகவல் தொடர்பு இல்லாமல் துண்டிக்கப்பட்டது. மறுநாள் இலங்கைச்
      சிறையில் குட்டிமணி, தங்கதுரை, ஜெகன் உள்பட மொத்தம் முப்பத்தி ஏழு பேர்
      சிங்களக் கைதிகளால் அடித்துக் கொல்லப்பட்டனர் என்ற செய்தியுடன் விடிந்தது.
      உலகமே கண்டிராத காட்டுமிராண்டிச் செயலாக அந்தச் சிறைச்சாலைப் படுகொலை
      அமைந்திருந்தது என்பதை பின்பு வந்த செய்திகள் உறுதிப்படுத்தின. இலங்கை அரசு
      இஸ்ரேல் ராணுவத்தின் அதிரடிப் பிரிவு ஒன்றை வரவழைத்து ஒரு மாதம் ராணுவப்
      பயிற்சி கொடுத்ததாகச் செய்திகள் வெளியாயின. கொழும்பிலும் இதர நகரங்களிலும்
      வீடு வாசல் இழந்த பத்து லட்சம் பேர் யாழ்ப்பாணத்துக்கு ஓட விரும்பினர் என்று
      டெய்லி டெலிகிராஃப் (லண்டன்) செய்தி வெளியிட்டது. டாக்ஸி டிரைவரை தாஜா செய்து
      சிங்கப்பூர் வந்த பாகிஸ்தானிய நிருபர் ஜாவேத் அப்பாஸ், ""இம்முறை
      சிங்களவர்களின் கொடுமையால் தமிழர்கள் முற்றிலுமாக அழிந்து போவார்கள்!
      கொழும்பு சுடுகாடாகக் காட்சியளிக்கிறது'' என்றார்.
      தில்லி செல்லும் வழியில் நிருபர்களைச் சந்தித்த இலங்கை வெளிநாட்டுச் செயலரை,
      "ராணுவம் ஏன் கலவரக்காரர்களை அடக்கவில்லை?' என்றனர் பத்திரிகையாளர்கள்.
      ""அடக்கினால் அவர்கள் அரசுக்கெதிராகத் திரும்பிவிடுவார்கள்'' என்றார் அவர்.
      பல அகதிகள் முகாம்கள் கூண்டோடு கொளுத்தப்பட்டன. தமிழ்ப் பெண்கள்
      கற்பழிக்கப்பட்டனர். ஏழு மணி நேர அவகாசத்தில் திமுக தலைவர் மு.கருணாநிதி
      அறிவித்த தமிழர் பாதுகாப்புப் பேரணியில் லட்சக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
      கடைகள் அடைப்பு; ஆட்டோக்கள் ஓடவில்லை.
      ""தமிழன் வாழ்வதா? வீழ்வதா? என்கிற கேள்விக் குறியில் நிற்கிறான். அம்மையார்
      (இந்திரா காந்தி) அவர்களே, உங்களிடமிருந்து பதில் தேவை. வெறும் வார்த்தைகளால்
      அல்ல. செயலால் பதில் தேவை... ""இந்திய ராணுவம் இலங்கைக்கு வரும் என்று குரல்
      கொடுத்தால் தமிழனுடைய பிணம் விழாமல் தடுக்கலாம்'' என்று பேரணியின் முடிவில்
      திமுக தலைவர் மு.கருணாநிதி கூறினார். தில்லியிலுள்ள இலங்கைத் தூதரக வாசலில்
      திமுக உள்பட பல்வேறு கட்சிகளின் எம்.பி.க்கள் ஊர்வலம் சென்று எதிர்ப்பு
      தெரிவித்தனர். ஜூலை 28-இல் குட்டிமணி பிறந்த ஊரே பெட்ரோல் ஊற்றி
      எரிக்கப்பட்டது. நான்கு நாட்கள் வன்முறையில் சுமார் 1000 பேர் உயிரிழந்தனர்.
      தமிழர் கட்சியும் ஏனைய பிரிவினைக் கோரும் அமைப்புகளும் தடை செய்யப்படும்.
      அவர்களது சிவில் உரிமைகள் பறிக்கப்படும் என்றார் ஜெயவர்த்தன. இன்னொரு
      சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழர் தலைவர்கள் 17 பேர் கொலை செய்யப்பட்டனர்.
      இந்திரா, ஜெயவர்த்தனாவுடன் பேசிய பிறகு நிலைமை அறிய இந்திய வெளிநாட்டு
      மந்திரி நரசிம்மராவ் இலங்கைக்கு அனுப்பப்பட்டார். நரசிம்மராவிற்கு அகதிகள்
      முகாம்களைப் பார்வையிட அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
      சென்னையில் வசிக்கும் குட்டிமணி, ஜெகன் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல்
      கூறினார் மு.கருணாநிதி. ஜூன் 29, தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். சென்னையில்
      அனைத்துக் கட்சி கூட்டம் ஒன்றைக் கூட்டினார். அக்கூட்டத்தில் இலங்கையில்
      தமிழர்கள் கொல்லப்படுவதைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஐக்கிய
      நாடுகள் சபை உடனே தலையிட வழிவகை காணவேண்டும் என வற்புறுத்தி பிரதமர் இந்திரா
      காந்திக்கு தந்தி ஒன்றை எம்.ஜி.ஆர். அனுப்பினார். ஜூலை 30-இல் இலங்கையில்
      தமிழர்களைக் காப்பாற்றுகிறேன் என்று சொல்லி ரயிலில் அழைத்துச் சென்று தீ
      வைத்தனர். 200-க்கு மேற்பட்டவர்கள் மரணமடைந்தனர். பலநூறு பேருக்கு
      தீக்காயம்.கொழும்பு நகருக்குள் ராணுவத்தை எதிர்த்து விடுதலைப்புலிகள்
      துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர். ராணுவ உடையில் வந்து தாக்கினர். அவர்கள்
      கப்பற்படை உடை போன்று ஆடை அணிந்திருந்தனர் என்று தப்பி வந்தவர்கள்
      தெரிவித்தனர்.
      ஜூலை 31-இல், வெவ்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய
      குழுவொன்றுக்கு தலைமை தாங்கி, புது தில்லி சென்றார் முதல்வர் எம்.ஜி.ஆர்.
      அப்போது பிரதமரிடம் அளிக்கப்பட்ட மனுவில், ""இலங்கையின் கொடிய,
      காட்டுமிராண்டித்தனமான கொலைகளை அந்நாட்டின் உள்நாட்டு விவகாரமெனத் தள்ளிவிட
      முடியாது. இந்திய அரசு, இலங்கையிலுள்ள தமிழர்களைக் காப்பாற்றுவதற்கு உரிய
      முயற்சிகளைத் தீவிரமாகவும் அவசரமாகவும் தலையிட்டு எடுக்க வேண்டிய நேரம்
      வந்துவிட்டதென நாங்கள் திட்டவட்டமாக உணர்கிறோம்'' என்று கூறப்பட்டிருந்தது.
      1983 ஜூலை 31-இல் ராமநாதபுரத்தில் நடந்த முகவை மாவட்ட தி.மு.க. மாநாடு
      ஈழத்தமிழர்களுக்கான மாநாடாகவே நடந்தது. ஆகஸ்ட் 2-இல் முழு அடைப்பு நடத்துவது
      என்ற தீர்மானத்தை, திமுக செயற்குழு அங்கீகரித்தது.
      ""இலங்கையில் தனித் தமிழ்நாடு கேட்பவர்களின் சுயஉரிமையை-குடிஉரிமையை ரத்து
      செய்வதற்காக வருகிற ஆகஸ்ட் 4-ஆம் தேதி இலங்கைப் பாராளுமன்றத்தில் சட்டம்
      கொண்டு வரப்படுவதைக் கண்டித்து அதே ஆகஸ்ட் நான்காம் தேதி வியாழக்கிழமை
      தமிழ்நாடு முழுவதும் அனைத்துத் தமிழர்களும் வீடுகளிலும், கடைகளிலும்,
      அலுவலகங்களிலும் கறுப்புக் கொடி ஏற்ற வேண்டும்'' என்றும் மத்திய அரசு
      அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் 5-ஆம் தேதி ரயில்
      நிறுத்தப் போராட்டம் செய்வதென்றும் திமுக செயற்குழு தீர்மானித்தது. ""சர்வதேச
      அமைதிப் படையை அனுப்புவதற்கான முயற்சியை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும்
      என்றும் இது சைப்ரஸ் தீவில் கிரேக்க மொழி பேசுவோர்க்கும், துருக்கி மொழி
      பேசுவோர்க்கும் இடையே நடைபெற்ற போரில் அமைதியான சூழ்நிலையை உருவாக்க ஐக்கிய
      நாடுகள் சபை சார்பில் சர்வதேச அமைதிப் படை அனுப்பியது போலாகும்'' என்றும்
      கருணாநிதி செய்தியாளர்கள் கூட்டத்தில் கூறினார்.
      அன்று இரவு மாநாட்டில் கருணாநிதி பேசும்போது, ""ஆகஸ்ட் 4 மத்திய அரசு
      அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம், 5-ஆம் தேதியன்று ரயில் நிறுத்தப்
      போராட்டம், தில்லியில் மாநிலங்களவை உறுப்பினர்களான எல்.கணேசன், வை.கோபால்சாமி
      ஆகியோர் துவக்கும் உண்ணாவிரதம் ஆகிய அறப்போராட்டங்கள் நடைபெறும்'' என்று
      அறிவித்தார். 
      வெள்ளிக்கிழமை, 23 அக்டோபர் 2009 18:47 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

No comments:

Post a Comment