Sunday, November 7, 2010

158: போராட்டம் தொடர்கிறது...!, 159: கிட்டுவின் உயிர்த் தியாகம்!!

 158: போராட்டம் தொடர்கிறது...!
      தடா சட்டம், தேசிய பாதுகாப்புச் சட்டம் ஆகியவை பிரயோகிக்கப்பட்டன. இதன்
      உச்சகட்ட நடவடிக்கையாக விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு இந்திய அரசு
      தடைவிதித்தது. இது குறித்து பழ.நெடுமாறன் தனது நூலில், "தமிழகத்தில்
      செயல்படாத ஓர் இயக்கத்தின் மீது உண்மைக்கு மாறான குற்றச்சாட்டுகளின்
      அடிப்படையில் இத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய மீட்புப்படை என்ற
      பெயரில் சில இளைஞர்களுக்கு பயிற்சி கொடுத்து, இந்தியாவிலிருந்து
      தமிழ்நாட்டைப் பிரிக்க, விடுதலைப் புலிகள் சதி செய்தனர் என்ற குற்றச்சாட்டு
      நகைப்புக்கு இடமான குற்றச்சாட்டாகும். தமிழ் தேசிய மீட்புப் படையைச்
      சேர்ந்தவர்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் சில இளைஞர்கள் கைது
      செய்யப்பட்டு, அவர்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. அந்த வழக்கின்
      விசாரணையே இன்னும் தொடங்கப்படவில்லை. வழக்கு விசாரிக்கப்பட்டு, குற்றச்சாட்டு
      உண்மை என நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை. அவ்வாறு நிரூபிக்கப்பட்ட
      பின்பே தமிழ்த் தேசிய மீட்புப்படை உண்மையில் இருந்தது என்பது நிரூபணம் ஆகும்.
      இந்த வழக்கே விசாரணைக்கு வராத நிலையில் இந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில்
      விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குத் தடை விதித்துள்ளது சரியல்ல' என்று
      குறிப்பிட்டிருந்தார். இவ்வாறு தடை அறிவிக்கப்பட்டதும் விடுதலைப் புலிகள்
      இயக்கம் ஓர் அறிக்கையினை வெளியிட்டது. அவ்வறிக்கையில், "தமிழ்நாட்டு
      இளைஞர்கள் சிலருக்கு யாழ்ப்பாணத்தில் ஆயுதப் பயிற்சி அளித்ததாகவும்,
      தமிழ்நாட்டில் பிரிவினைவாதத்தைத் தூண்டிவிட்டதாகவும் இந்தியா, விடுதலைப்
      புலிகள் மீது அபாண்டமான பழிகளைச் சுமத்துகின்றது. இந்தக் குற்றச்சாட்டில்
      எந்தவித உண்மையுமில்லை' என்று தனது மறுப்பினை வெளியிட்டு, இலங்கையின் இனப்
      பிரச்னையில் இந்தியாவின் தவறுகள் குறித்தும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
      விடுதலைப் புலிகள் இயக்கத்திற்குத் தடை விதிக்கும் நடவடிக்கையைக் கூட
      சட்டப்படி இந்திய அரசு செய்யவில்லை. 14-5-1992 அன்று இந்தியாவில் விடுதலைப்
      புலிகள் இயக்கத்தைத் தடை செய்வதாக ஓர் அறிவிப்பை வெளியிட்டது. இந்தத் தடை
      சரிதானா? என்பதைப் பற்றி முடிவு செய்ய நடுவர் மன்றம் ஒன்றையும் அமைத்தது
      (தமிழீழம் சிவக்கிறது - பழ.நெடுமாறன், பக்-488). 8-7-1992 அன்று நடுவர்
      மன்றம் வெளியிட்ட அறிவிப்பில், "விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு
      விதிக்கப்பட்ட தடையை எதிர்ப்பவர்கள் தங்கள் மனுக்களை, தம்மிடம் அளிக்கலாம்'
      என்றும் தெரிவித்திருந்தது. இதனையொட்டி, பழ.நெடுமாறன், மணியரசன், தியாகு,
      தீரன், சுப.வீரபாண்டியன் உள்ளிட்டோர் தங்கள் மனுக்களைத் தாக்கல் செய்தனர்.
      விடுதலைப் புலிகளின் பன்னாட்டுச் செயலகம் சார்பில் திலகர் ஒரு மனுவைத்
      தாக்கல் செய்தார்.
      அந்த மனுவில், "தமிழீழ மக்களுக்கு எதிரான இன ஒழிப்பு நடவடிக்கையில்
      ஈடுபட்டிருக்கிற ஸ்ரீலங்கா அரசுக்கு எதிராக, ஆயுதப் போராட்டத்தில் விடுதலைப்
      புலிகள் ஈடுபட்டுள்ளார்கள். பன்னாட்டுச் சட்டங்களின் கீழும், பன்னாட்டு
      முறைமைகளின் கீழும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்ட நிலை
      ஏற்றுக்கொள்ளப்பட்டு இருக்கிறது. 1985-ஆம் ஆண்டில் திம்புவில் நடைபெற்ற
      பேச்சுவார்த்தையின்போதும், 1987-ஆம் ஆண்டில் இந்திய-இலங்கை
      உடன்படிக்கையின்போதும் இந்திய அரசு தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப்
      பேராட்ட ஈடுபாட்டை ஏற்றுக்கொண்டுள்ளது. விடுதலைப் புலிகள் தங்கள்
      போராட்டத்தைத் தொடங்குவதற்கு ஆயுதமும், பயிற்சியும் கொடுத்துள்ளது. 1967-ஆம்
      ஆண்டு சட்டவிரோதச் செயல்பாடுகள் சட்டத்தின் கீழ் கூறப்பட்டுள்ள கருத்துகளின்
      கீழ் விடுதலைப் புலிகளின் இயக்கம் வரவில்லை. இந்திய அரசின் நீதி-நிர்வாக
      எல்லைக்குள்ளும் அஃது இயங்கவில்லை. எனவே, எந்தச் சட்டத்தின் கீழ் தடை
      விதிக்கப்பட்டாலும் அது செல்லத்தக்கதன்று. இந்தியாவின் உள் அரசியலிலோ அல்லது
      அதனுடைய எல்லைகளுக்கு அபாயம் விளைவிக்கும் வகையிலோ, நேரடியாகவோ, மறைமுகமாகவோ
      குறுக்கிடும் எண்ணம் விடுதலைப் புலிகளுக்கு அறவே இல்லை' என்று கூறிய அவர்,
      மேலும் கூறுகையில், "இந்திய அரசால் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை வீணானது;
      தேவையற்றது. சட்டத்தினால் செயல்படுத்த முடியாதது' என்றும்
      குறிப்பிட்டிருந்தார். இந் நிலையில், நடுவர் மன்றத்தில் தங்களது கருத்துகளைச்
      சொல்ல வாய்ப்பளிக்க வேண்டும் என்றும், விசாரணைகள் ரகசியமாக நடக்கின்றன
      என்றும், இதனால் ஒருதலைப்பட்சமான முடிவு அறிவிக்கப்படலாம் என்றும்
      இவ்விசாரணைக்குத் தடை கோரி, தியாகு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
      இம் மனுவை ஏற்ற உயர்நீதிமன்றம், 27-10-1992 அன்று விசாரணைக்கு
      எடுத்துக்கொண்டு, இரண்டு வாரத்தில் பதிலளிக்க நடுவர் மன்றத்தின் பதிவாளருக்கு
      அறிவிப்புக் கொடுக்க உத்தரவிட்டது. ஆனால், உயர்நீதிமன்றத்தின் அறிவிப்பு
      கிடைக்கும் முன்பாகவே, நடுவர் மன்றம் ரகசியமாகக் கூடி விடுதலைப் புலிகளுக்கு
      அறிவிக்கப்பட்ட தடை செல்லும் என்ற தீர்ப்பை வழங்கியது (ஆதாரம்: மேலது நூல்).
      விடுதலைப் புலிகளுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு இந்தியாவில் அரசியல் தலைவர்கள்
      தங்கள் கண்டனத்தைத் தெரிவித்தனர். பத்திரிகைகளும் பல்வேறு விமர்சனங்களை
      வெளியிட்டன. அது குறித்த விவாதங்கள் தொடர்ந்துகொண்டே இருந்தன
      
      159: கிட்டுவின் உயிர்த் தியாகம்!!         புலிகள்-பிரேமதாசா பேச்சுகளுக்கு முற்றுப்புள்ளி விழும் முன்பாக,
      கிட்டுவும் அவரது மனைவி சிந்தியாவும் லண்டன் சென்றார்கள். அங்கு கிட்டுவின்
      இழந்த காலுக்கு ஏற்ற சிகிச்சை மேற்கொண்டதுடன், புலிகளின் பன்னாட்டுச்
      செயலகத்தை அமைக்கும் முயற்சியிலும் அவர் ஈடுபட்டார். உலக நாடுகளின் 52
      நாடுகளில் உள்ள விடுதலைப் புலிகளின் அலுவலகங்களை லண்டன் அலுவலகத்துடன்
      இணைத்தார். இதன்மூலம் வெளிநாடுகளில் வசித்த ஈழத்தமிழர்கள் மட்டுமன்றி
      ஒட்டுமொத்த தமிழர்களும் ஒன்றிணைந்தனர். மேற்குலக நாடுகளின் பிரதிநிதிகளுடன்
      தொடர்ந்து பேசி புலிகளின் பிரச்னைகளையும், ஸ்ரீலங்கா அரசு இழைத்துவரும்
      அடக்குமுறைகளையும் விவரித்தார் கிட்டு. இந்நிலையில், இந்தியா மற்றும் இலங்கை
      அரசுகள், கிட்டுவை லண்டனிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று வலியுறுத்தின.
      இறுதியாகக் கிட்டு, லண்டனிலிருந்து வெளியேற்றப்பட்டார். ஐரோப்பிய நாடுகளில்
      ஒரு நாடோடி போலத் திரிந்தார். எந்த நாட்டில் இருந்தாலும், அந்நாட்டிலிருந்தே
      தனது அலுவலக வேலைகளைச் செய்தார். மேற்குலக நாடுகளில் பிரபலமான குவேக்கர்ஸ்
      அமைப்பு இலங்கை சென்றது. அங்கு அரசுத்தரப்பு மற்றும் புலிகளுடன் பேசி,
      சமாதானப் பேச்சுவார்த்தையைத் தொடங்க வலியுறுத்தியது. இலங்கையைத் தவிர்த்து
      வேற்று நாடொன்றில் அந்தப் பேச்சு அமைவது என முடிவெடுக்கப்பட்டது. அந்தப்
      பேச்சுவார்த்தைகளின் பின்னணியில் கிட்டு இருந்ததால், அவர் பிரபாகரனிடம்
      நேரில் பேசி, முடிவெடுக்க, தமிழீழம் நோக்கிப் புறப்பட்டார். 1993-ஆம் ஆண்டு
      ஜனவரி 13-ஆம் நாளன்று, எம்.வி.அகதா என்ற கப்பலில், இந்தியாவின் கடல்
      எல்லைக்கு 440 கடல் மைலுக்கு அப்பால் வந்து கொண்டிருந்தார். அவருடன்
      லெப்டினன்ட் கர்னல் குட்டிஸ்ரீ உள்ளிட்ட 9 போராளிகளும் உடன் வந்தனர். இந்தக்
      கப்பலை, இந்தியக் கடற்படை முற்றுகையிட்டது. கப்பலை இந்தியாவை நோக்கித்
      திருப்பும்படி சொல்லப்பட்டது. கிட்டு அதற்கு உடன்பட மறுத்தார். ஹெலிகாப்டர்
      மூலம் அதிரடிப் படைகள் கப்பலில் இறங்கி, கிட்டுவையும் அவருடன் வந்த
      போராளிகளையும் கைது செய்ய முயன்றனர். இரு நாள்கள் நடந்த இந்தப்
      போராட்டத்தில், அதிரடிப் படைவீரர்கள், கப்பலில் இறங்க முயன்ற நேரத்தில்
      கிட்டுவும் அவரது நண்பர்களும் சயனைட் குப்பி கடித்து உயிர்துறந்தனர்.
      கோபமுற்ற கடற்படையினர் அக் கப்பலைத் தாக்க முயன்றபோது, கப்பல் வெடித்துச்
      சிதறி, கடலில் மூழ்கியது.
      கப்பலை இயக்கிய மாலுமி உள்ளிட்ட ஊழியர்கள் கைது செய்யப்பட்டு விசாகப்பட்டினம்
      நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர். கிட்டுவின் உயிர்துறப்பு உலகின்
      கவனத்துக்கு வந்தபோது, யாழ்ப்பாணத் தமிழர்கள் மட்டுமல்ல, உலகளாவிய மனித உரிமை
      ஆர்வலர்கள் அனைவருமே கலங்கினர். ஆனால், சதிவேலைகளுக்காக இந்தியாவுக்குள்
      ஊடுருவ முயன்றபோது, கப்பல் சுற்றிவளைக்கப்பட்டதாக இந்திய அரசு கூறியது.
      ஆனால், இந்தியக் கடல் எல்லைக்குள்ளேயே வராத இந்தக் கப்பல் ஏன், எதற்காக
      இப்படிச் சுற்றி வளைக்கப்பட்டது என்பதற்கு யாரும் எந்தவித விளக்கமும்
      இன்றுவரைத் தரவில்லை. இதுபற்றித் தில்லியில் உள்ள ராணுவ இலாகா அதிகாரி கூறிய
      செய்தி, சென்னை நாளிதழ்களில் பின்வருமாறு இருந்தது. கிட்டு பயணம் செய்த
      கப்பலில் நிறைய ஆயுதங்களும் வெடிமருந்துகளும் இருந்தன. கப்பலை மடக்கிக்
      கொண்டுவரும்பொழுது, விடுதலைப் புலிகள் கப்பலை மூழ்கடிக்கும் வண்ணம்
      வெடிவைத்துவிட்டனர். தீப்பிடித்த கப்பலில் இருந்து ஒன்பது விடுதலைப் புலிகள்
      கடலுள் குதித்தனர். அவர்களைக் கடற்படை வீரர்கள் காப்பாற்றி, நமது
      கப்பலுக்குக் கொண்டுவந்து காவலில் வைத்தனர். கைதான விடுதலைப் புலிகளில்
      கிட்டு இல்லை. இவ்வாறு அந்தச் செய்தி கூறியது. கிட்டுவின் கப்பல்
      சுற்றிவளைக்கப்பட்ட செய்தியை பிரான்ஸிலிருந்து திலகர், பழ.நெடுமாறனுக்குத்
      தெரிவித்தார். இதனையொட்டி, பழ.நெடுமாறன் பத்திரிகையாளர்களின் கூட்டத்தைக்
      கூட்டி, தகவல் தெரிவித்த பின்னரே இந்தச் செய்தி, தமிழீழப் பத்திரிகைகளில்
      வெளியானது.
      இதுகுறித்து பழ.நெடுமாறன் கூறுகையில், "1993-ஆம் ஆண்டு ஜனவரி மாத இறுதியில்
      கிட்டுவின் படுகொலைக்குக் கண்டனம் தெரிவித்துப் பேச அனைத்துக்கட்சி கூட்டம்
      ஒன்றினைக் கூட்டியிருந்தேன். இதில் பெருஞ்சித்திரனார், சாலை.இளந்திரையன்,
      பண்ருட்டி ராமச்சந்திரன், துரைசாமி, மணியரசன், தியாகு, தீனன்,
      சுப.வீரபாண்டியன், புலமைப்பித்தன் உள்ளிட்ட 26 அமைப்புகளின் பிரதிநிதிகள்
      கலந்து கொண்டனர். கிட்டுவின் மரணத்தைக் கண்டித்து, தென்பிராந்திய ராணுவத்
      தலைமையகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்தோம். செய்தி வெளியான அன்றே
      என்னையும், புலமைப்பித்தன், சுப.வீரபாண்டியன், தீனன், சரஸ்வதி இராசேந்திரன்
      ஆகியோரையும் கைது செய்தனர். ஐந்து நாள்களுக்குப் பிறகு ஜாமீனில்
      விடப்பட்டோம். ஜனவரி 27-ஆம் நாளன்று மீண்டும் என்னையும், பெருஞ்சித்திரனார்,
      பொழிலன் ஆகியோரையும் தடா சட்டத்தில் கைது செய்தனர். கிட்டுவின்
      படுகொலையையொட்டி தமிழகத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்புச் சம்பவங்களுக்கு,
      எங்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. சிறையில் இருந்தபடியே சென்னை உயர்
      நீதிமன்றத்தில் கிட்டு பற்றிய ஆட்கொணர்வு மனு ஒன்றினைத் தாக்கல் செய்தேன்.
      எதிர்மனுதாரர்களாக இந்தியப் பாதுகாப்புத் துறை, இந்திய உள்துறை, தமிழகக்
      காவல்துறைத் தலைவர் ஆகியோரைச் சேர்த்திருந்தேன். இவர்கள் சார்பில் பதில் மனு
      தாக்கல் செய்யப்பட்டு, வாதாடுவதற்காக இந்திய அரசின் இணை.சொலிசிட்டர் ஜெனரல்
      கே.டி.எஸ்.துளசி வந்தார். இந்த மனு தாக்கல் செய்யப்பட்டபோது, இந்திய அரசு
      முதலில் சாதாரணமாகத்தான் நினைத்தது. ஆனால், அரசின் உயர் வழக்கறிஞர் வந்து
      வாதாடவேண்டிய நிலை ஏற்பட்டது.
      இந்த வழக்கின் மூலம் பல உண்மைகள் வெளியாயின. கிட்டு, இந்தியக் கடல் எல்லையில்
      ஊடுருவவே இல்லையென்பதும், அவர் வந்த கப்பல் இந்தியாவின் கடல் எல்லைக்கு
      அப்பால் 440 கடல் மைலுக்கு வந்துகொண்டிருந்ததாகவும், கிட்டு கப்பலில் வரும்
      உளவுத் தகவல் கிடைத்தபிறகு அவரது கப்பலை வழிமறிக்க, இந்தியக் கப்பற்படை
      சென்றது என்பதும், அவரது கப்பலை வலுக்கட்டாயமாக இந்திய கடல் எல்லைக்குள்
      பிரவேசிக்கும்படி மிரட்டப்பட்டார் என்பதும், அவர் அதற்கு ஒத்துழைக்காத
      நிலையில் அதிரடிப்படை ஹெலிகாப்டர் துணையுடன் கப்பலினுள் இறங்கிய நிலையில்,
      அவரும், அவருடன் வந்த போராளிகளும் சயனைட் அருந்தி உயிர்துறந்தனர் என்பதும்
      தெரிய வந்தது. இந் நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் தனக்கு இந்த வழக்கை
      இதற்குமேல் விசாரிக்க அதிகாரமில்லை, ஆந்திர உயர் நீதிமன்றத்திற்குத்தான்
      அதற்கான அதிகாரம் உள்ளது என அறிவித்து ஒதுங்கிவிட்டது. எனவே, ஆந்திராவில்
      வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை மூலமே, கிட்டு மரணம்
      குறித்த உண்மைகள் பல வெளி உலகுக்குத் தெரிய வந்தன' என்ற நெடுமாறன், "தமிழீழம்
      சிறந்த தளபதி ஒருவரை இழந்துவிட்டது. கிட்டு ஒரு சிறந்த ராஜதந்திரியாக
      உருவானார். அவர் பேச்சுவார்த்தைகளில் சமர்த்தர். பேச்சுவார்த்தையின் மூலம்
      தீர்வு காண உலக நாடுகள் முயற்சிப்பது கிட்டு வழியாகத்தான் என்பதை உணர்ந்தே
      அவரைப் பழிதீர்த்திருக்கிறார்கள்' என்றும் குறிப்பிட்டார். கிட்டுவின்
      இழப்பு, வே.பிரபாகரனுக்குத் தாங்கமுடியாத சோகத்தை ஏற்படுத்தியது. அவர்
      கிட்டுவின் இழப்பைத் தொடர்ந்து, வெளியிட்ட அஞ்சலியில், "என் ஆன்மாவைப்
      பிழிந்த சோக நிகழ்வு. அதனைச் சொற்களால் வார்த்துவிட முடியாது. நான் கிட்டுவை
      ஆழமாக நேசித்தேன். தம்பியாக, தளபதியாக என் சுமைதாங்கும் லட்சியத் தோழனாக
      இருந்தவர். இது சாதாரண மனித பாசத்திற்கு அப்பாற்பட்டது. ஒரே லட்சியப்
      பற்றுணர்வில், ஒன்றித்த போராட்ட வாழ்வில், நாங்கள் பகிர்ந்துகொண்ட
      அனுபவத்தில், ஒருவரையொருவர் ஆழமாக இனங்கண்ட புரிந்துணர்வில், வேரூன்றி
      வளர்ந்த மனித நேயம் இது.
      கிட்டு ஒரு தனிமனித சரித்திரம். ஓய்வில்லாது புயல் வீசும் எமது விடுதலைப்
      போராட்ட வரலாற்றில் ஒரு காலத்தின் பதிவு. வங்கக் கடலில் பூகம்பமாக அவர் ஆன்மா
      பிளந்தது. அதன் அதிர்வலையில் எமது தேசமே விழித்துக் கொண்டது. கிட்டு... நீ
      சாகவில்லை. ஒரு புதிய மூச்சாகப் பிறந்திருக்கிறாய்' என்று
      குறிப்பிட்டிருந்தார்
 ராஜீவ்காந்தி படுகொலையைத் தொடர்ந்து, தமிழகத்தில் அதன் ஆதரவாளர்கள் மீது

No comments:

Post a Comment