இலங்கைத் தமிழர்களின் போராட்ட வரலாற்ரில் இந்தியாவின் பங்களிப்பு இலங்கை
சுதந்திரம் அடைந்த நாளிலிருந்து தொடர்ந்து வந்தது. இலங்கைத் தமிழர்களின்
போராட்ட ததை இந்திய பதிதிரிகை யாளர்கள் எப்படி பார்கிறார்கள் என்பதையும்
இக்கட்டரை மூலம் அறியலாம்
இலங்கைத் தமிழர் போராட்டம் குறித்தும், ஈழம் குறித்தும், அங்குள்ள மக்களின்
எதிர்காலம் குறித்தும் ஆதியோடந்தமாக கட்டுரைத் தொடர் வெளியிட வேண்டும் என்கிற
எண்ணம் கடந்த ஆறு மாதமாகவே "தினமணி' ஆசிரியர் குழுவுக்கு இருந்து வருகிறது.
இப்படி ஒரு தொடரை எழுதுவதற்குத் தனக்கு எந்தவித விருப்பு வெறுப்போ, அரசியல்
முலாமோ இல்லாத ஒரு பத்திரிகையாளர்தான் பொருத்தமாக இருப்பார் என்பதும் எங்கள்
தேர்ந்த முடிவு.
அதற்கு 1985-ஆம் ஆண்டிலேயே "இலங்கைத் தமிழர் போராட்ட வரலாறு' என்ற புத்தகத்தை
வெளியிட்ட மூத்த பத்திரிகையாளர் பாவை சந்திரனைவிட பொருத்தமான ஒருவர் இருக்க
முடியாது என்பது எங்கள் ஆசிரியர் குழுவின் ஒருமித்த கருத்து. இனி, பாவை
சந்திரன் தொடர்கிறார்.
-ஆசிரியர் ஈழத் தமிழர் எனும் இலங்கைத் தமிழர்களும் உலக அளவில் நியூசிலாந்து,
ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா, மலேசியா, சிங்கப்பூர், யாங்கூன் என்கிற பர்மா,
தாய்லாந்து, மோரிஷஸ், தென் ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வசித்து
வரும் தமிழர்களும் ஒன்றல்ல என்ற உண்மைகூட நம்மில் பலர் புரியாமல் விவாதம்
செய்து வருகின்றனர். மேலே குறிப்பிட்டவர்களைப் போலக் கடந்த இரண்டு நூற்றாண்டு
காலத்தில் வேலைக்காகவும் வயிற்றுப் பிழைப்புக்காகவும் இலங்கைக்குப் போய்
அங்கே குடியேறியவர்கள் அல்ல ஈழத் தமிழர்கள்.
அவர்கள் அந்தத் தீவின் பூர்வ குடியினர். மண்ணின் மைந்தர்கள். இந்நிலையில்
இலங்கைத் தமிழர் என்பவர் அந்நாட்டையே பூர்வீகமாக கொண்டவர் என்ற உண்மையை
எடுத்துரைக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.
பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா - இல்லையா என்ற விவாதம் நடந்து கொண்டிருக்கிற
நிலையில் அவர் இல்லாத ஈழமும், ஈழமக்களும் இனி பெறப்போவது என்ன என்பதைவிட,
அவர்கள் எதையெல்லாம் இழந்தார்கள் என்று அறிவது அவசியம்.
விடுதலைப்புலிகளாகட்டும் இன்னபிற அமைப்புகளாகட்டும் ஆயுதம் ஏந்தவேண்டிய
அவசியம் ஏன் ஏற்பட்டது என்பது குறித்தும் அறிய வேண்டியது அவசியமாகிறது.
அதேபோன்று இந்தியாவின் பார்வை மற்றும் பங்களிப்பு, தமிழகத் தலைவர்களின்
பார்வை மற்றும் பங்களிப்பு, உலக நாடுகளின் பார்வை மற்றும் அதன் பங்களிப்பு
குறித்தும், இலங்கைக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் அளித்த உதவிகள்
குறித்தும் அலசவேண்டியதும் அவசியமாகிறது.
இன்று, இலங்கை வரலாற்று ஏடுகளைப் புரட்டுபவர்கள் யாராக இருந்தாலும்,
உண்மைக்கு மிக நெருக்கமாக இருக்க வேண்டும் என்று அவர்கள் கருதுவார்களேயானால்,
அவர்கள், இதுவரை சொல்லப்பட்டிருக்கும் இலங்கை வரலாற்றை ஒதுக்கிவிட்டு, புதிய
உண்மைகளின் அடிப்படையில், புதிய பார்வையுடன் இலங்கை வரலாற்றை அணுகவேண்டியது
அவசியமாகும்.
இதுவரை சொல்லப்பட்ட இலங்கைத் தீவின் வரலாறு, கற்பனையின் அடித்தளம் மீது
கட்டப்பட்ட இலக்கிய ஆதாரங்களைக் கொண்டு எழுதப்பட்ட மாய வரலாறு என்பதற்கான
ஆதாரங்கள் நிறையவே கிடைத்துள்ளன. இன்று பல்வேறு ஆராய்ச்சியாளர்களின் கடுமையான
உழைப்பின் மூலம் உண்மைகள் வெளிவரத் தலைப்பட்டிருக்கின்றன. எதிர்காலத்தில்
இன்னும் அதிகமான புதிய உண்மைகள் கிடைக்கலாம்.
மகாபாரதத்தையும், ராமாயணத்தையும் மட்டுமே துணையாகக் கொண்டு இந்தியாவின்
வரலாற்றைக் கூறுவது எப்படி உண்மைக்குப் புறம்பாக இருக்குமோ, அதுபோலத்தான்
சிங்களவரின் இதிகாசமான மகா வம்சத்தை மட்டும் வைத்துக்கொண்டு இலங்கை வரலாற்றை
எழுதுவது என்பது! அப்படியென்றால் உண்மையான வரலாற்றை எந்த அடிப்படையில்
எழுதுவது அல்லது பார்ப்பது என்ற நியாயமான கேள்வி எழுகிறது. உண்மையான வரலாறு
என்பது ஆதாரபூர்வமான உண்மைகளையும், விஞ்ஞான ரீதியான பகுப்பாய்வுகளையும்
கொண்டு முடிவுக்கு வரவேண்டிய ஒன்றாகும்.
இலங்கை இன்றிருக்கும் ரணகள சூழலில், இனவெறித் தாக்குதல்கள் அத்துமீறி
நடக்கும் அந்த குட்டித்தீவின் வரலாற்றுப் பின்னணியை அறிவது, இலங்கைத்
தமிழர்களுக்காக மட்டுமன்றி, ஒடுக்கப்பட்ட மக்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ
அவர்களுக்காகக் கண்ணீர் சிந்தும் ஜனநாயக உணர்வுகொண்ட ஒவ்வொருவரின்
கடமையாகிறது. அந்தக் கடமையுணர்வின்பேரில் நிகழ்ந்த தேடல்களின் விளைவே
இத்தொடர். இஃது இலங்கையின் வரலாற்று நூல் மட்டுமல்ல; மாறாகத் தமிழர்களின்
போராட்ட வரலாறு, தமிழர்களின் போராட்ட வரலாறோ இலங்கையின் வரலாற்றோடு பின்னிப்
பிணைந்திருக்கிறது.
எனவேதான், சிங்களவரைவிடத் தமிழர்களுக்கு இலங்கையில் எந்தவிதமான ஆதிபத்திய
உரிமைகள் உண்டு, அவர்களது தொன்மையான வரலாறுதான் என்னவென்று அறிந்தோமானால்
அரையும் குறையுமான விமர்சனத்திற்கு ஆளாக வழியிருக்காது.
இலங்கையில் இப்படியொரு நிலைமை எதனால் ஏற்பட்டது? ஏன் ஏற்பட்டது? இலங்கையில்
பிரிட்டிஷாரிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்கு முன்னும் பின்னுமாக இருந்த
நிலைமை என்ன? இனரீதியாகவும், மதரீதியாகவும் சட்டவடிவிலும் தமிழர்கள்
எப்படியெல்லாம் நசுக்கப்பட்டார்கள்? என்ற கேள்விகளைக் கேட்டுக்கொண்டு அதற்கான
விடையைத் தேட... பல நூல்களை ஆராய முயன்றபோது, எளிதாகக் கிடைத்த Story of
Ceylon, Ancient Ceylon போன்ற நூல்களிலும் மற்றும் சிங்களவர் பற்றிய பல
நூல்களிலும் சிங்கள புத்தபிக்குகளின் ஒருதலைப்பட்சமான கருத்துக்களே மிகுதியாக
இடம் பெற்றிருக்கின்ற என்பதை அறிய முடிகிறது. அந்த நூல்களின் ஆசிரியர்கள்
மிகுந்த சிரத்தையுடன் சிங்கள மத குருமார்களுக்கே நன்றி தெரிவித்துக்
கொண்டிருக்கின்றனர்.
சிங்களவ புத்த குருமார்களும் வரலாற்றில் தங்கள் மதமும், இனமும், கலாசாரமும்
பழுதுபடாமல் இருக்க வேண்டும்; தமிழனும், அவனது கலாசாரமும் வீழ்த்தப்பட
வேண்டும் - என்ற நோக்கத்திலேயே தகவல் அளித்திருக்கின்றனர் என்பதும்
புலனாகிறது. இலங்கையில் நடைபெறும் இனமோதல்கள் பற்றி உலகப் பத்திரிகைகளில்
மாறுபட்ட செய்திகள் வெளியானதால் உலக கிறிஸ்தவ ஆலயங்கள் கழகம் (Council of
Churches) சார்பில் அதன் ஆசியக் கிளையின் பிரதிநிதிகள் இலங்கை சென்று அங்கு
நடைபெறும் கொடுமைகளை நேரடியாகப் பார்த்து மிக விரிவான அறிக்கையொன்றை
(1985-ல்) வெளியிட்டனர்.
அவ்வறிக்கை இத்தொடருக்குப் பேருதவியாக அமைந்தது. அது போன்றே "இண்டர்நேஷனல்
கமிஷன் ஆஃப் ஜூரிஸ்ட்' அமைப்பு வெளியிட்ட "எத்னிக் கான்ஃபிளிக்ட் அன்ட்
வயலன்ஸ் இன் ஸ்ரீலங்கா' அறிக்கையிலிருந்தும் உண்மைக்கு நெருக்கமான சில
செய்திகளைக் கையாண்டிருக்கிறேன். நடுநிலை நோக்கோடு, சிங்கள அறிஞர்களே
ஒத்துக்கொண்ட தகவல்களை ஆதாரமாகக் கொண்டே இத்தொடர் தொடுக்கப்பட்டுள்ளது.
நண்பர் ஓவியர் சந்தானம் ஒருமுறை சொன்னார்: "சாலையில் போய்க்
கொண்டிருக்கிறோம். வயதான மூதாட்டி வாகனம் ஒன்றில் அடிபட்டு வீழ்ந்து
விடுகிறார். கூட்டத்தை விலக்கிக்கொண்டு மூதாட்டியைப் பார்க்கிறோம். அவளைக்
கண்டு பரிதாபப்பட்டு நம்மால் முடிந்த உதவியைச் செய்கிறோம். இது மனித சுபாவம்.
ஆனால் அடிபட்டு விழுந்த மூதாட்டி நமது தாயாக இருக்கும் பட்சத்தில் நம் உடம்பே
ஆடிப்போய்விடும்; ஐயோ அம்மா உனக்கா இப்படி என்று சுற்றுப்புறச் சூழல் மறந்து
வீரிடுவோம்'. இது மனித சுபாவம். அதுபோன்று ஈழமக்கள் படும் துயரைக்
கருதவேண்டும்.
உலகின் ஏதோவொரு மூலையில் பெரும்பான்மை இனமக்கள், சிறுபான்மையோர் பேரில்
நடத்தும் கொடுமைகளைக் கேட்டு வேதனையுறுகிறோம். நம்மால் முடிந்தவரை
விமர்சித்துத் தீர்க்கிறோம். மனிதாபிமான உணர்வுள்ளவர்கள் செய்கிற வேலை இது.
ஆனால் நமது நாட்டுக்கு அண்மையில் சற்று ஏறக்குறைய இருபதாவது மைலில்
இலங்கையைப் பூர்வீக நாடாகக் கொண்ட நம் சகோதரத் தமிழர்கள்
தாக்கப்படுகிறார்கள். பெண்கள் கற்பழிக்கப்படுகிறார்கள். சிறார்கள் தரையில்
வீசிக் கொல்லப்படுகிறார்கள். அவர்களின் உடைமைகள் சூறையாடப்பட்டுத்
தீக்கிரையாகின்றன. .
இதையெல்லாம் பத்திரிகைகளில் படித்தும், வானொலியில் கேட்டும் மானமுள்ள
தமிழனால் எப்படிச் சும்மா இருக்க முடியும்? அதுவும் படைப்புத் துறை
சம்பந்தப்பட்ட பத்திரிகையாளன், எங்கோ எதுவோ நடக்கிறது என்று வாளாவிருந்துவிட
முடியுமா? இந்தப் பிரச்னையை எல்லாரும் புரிந்து கொள்ளும் அளவுக்கு உண்மை
என்னவென்று விளக்கப்படவில்லையா? ஆம் என்றால் இஃது ஆராய்ச்சிக்குரிய
விஷயம்தானோ! ஆகவேதான் "ஈழத்தமிழர் போராட்ட வரலாறு' என்ற இத்தொடர்
தொகுக்கப்பட்டிருக்கிறது.
இலங்கையின் முழுமையான வரலாறாக முதன்முதலாகத் தமிழில் நானறிந்தவரை
தொகுக்கப்பட்ட தகவல்களில் தவறு ஏதுமிருக்க வாய்ப்பில்லை. மேலும் இத் தொடரின்
சில தலைப்புகளில் வெளியாகும் விஷயங்களில் "கூறியது கூறல்' இருக்கலாம். ஒரு
விஷயத்தைத் திரும்பத் திரும்பக் கூறினால் மனதில் பதியும்தானே
வெள்ளிக்கிழமை, 04 செப்டம்பர் 2009 22:54 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
தொகுக்கப்பட்ட தகவல்களில் தவறு ஏதுமிருக்க வாய்ப்பில்லை. மேலும் இத் தொடரின்
சில தலைப்புகளில் வெளியாகும் விஷயங்களில் "கூறியது கூறல்' இருக்கலாம். ஒரு
விஷயத்தைத் திரும்பத் திரும்பக் கூறினால் மனதில் பதியும்தானே
வெள்ளிக்கிழமை, 04 செப்டம்பர் 2009 22:54 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
No comments:
Post a Comment