Sunday, November 7, 2010

118 - புலிகளின் எதிர்த் தாக்குதல், 119:அமைதிப்படையிடம் யாழ்ப்பாணம்!

118 - புலிகளின் எதிர்த் தாக்குதல் அக்டோபர் 10-ஆம் தேதி மோதல் தொடங்கப்பட்டதன் நோக்கம், விடுதலைப் புலிகள்
      தலைவர் வே.பிரபாகரனை சிறைப்பிடிப்பது அல்லது சுட்டுக் கொல்வது என்பதே!
      தலைமையைக் குறி வைத்து அழித்துவிட்டால் விடுதலைப் புலிகள் அமைப்பு
      சிதறிவிடும் என்பது திட்டம். இத்திட்டப்படி, தளபதிகளைக் கைது செய்யவும் படைப்
      பிரிவுகளில் சிலவற்றை இறக்கியது அமைதிப் படை. அடுத்து பிரபாகரன்
      இருக்குமிடத்தைச் சுற்றிவளைப்பது. இவ்விரு திட்டங்களும் பெரிய அளவில்
      முடுக்கிவிடப்பட்டன. யாழ் புறநகரில், கொக்குவில், பிரம்படி பகுதியில் உள்ள
      தலைமையிடத்தில் பிரபாகரன் இருக்கிறார் என்று இலங்கை உளவுப் படை அளித்த
      தகவலையடுத்து, இந்திய அமைதிப்படை அப்பகுதியை முற்றுகையிட முடிவு செய்தது.
      அக்டோபர் 12-ஆம் தேதியன்று சிறப்பு அதிரடிப் படைப் பிரிவை ஹெலிகாப்டர் மூலம்
      இரவு ஒரு மணியளவில் இறக்கியது. (சேகர் குப்தா கூற்றுப்படி 70 பேர்)
      ""அதிரடிப் படை வீரர்களைத் தொடர்ந்து 13-வது சீக்கிய மெதுரகக் காலாட்படையைச்
      சேர்ந்த 30 வீரர்கள் அடங்கிய இன்னொரு பட்டாளமும் தரையிறங்கியது. அதிரடிப்
      படையினர் விடுதலைப்புலித் தலைவரைக் கைது செய்யும் பணியில் இறங்க, சீக்கியப்
      படையினர் தங்கள் தளத்தைக் கண்காணிப்பில் வைத்துக் கொள்வது என்பதுதான்
      ஏற்பாடு. அதிரடிப் படை வீரர்களைக் கொண்டு வந்த ஹெலிகாப்டர்கள் துப்பாக்கிச்
      சூட்டுத் தாக்குதலுக்கு உள்ளானதால், சீக்கிய காலாட் படையினர் கொக்குவில்
      கிராம சபைக்கு 300 அடி தள்ளி கிழக்கே இருந்த பல்கலைக்கழக மருத்துவ
      பீடத்திற்கு அருகில் தரையிறக்கப்பட்டனர். அவர்கள் அசையக் கூட முடியாமல்
      நாலாப்புறமும் விடுதலைப் புலிகளால் துரிதகதியில் சுற்றி வளைக்கப்பட்டுச்
      சுடப்பட்டனர்.
      மருத்துவ பீடத்தின் பலமான மூன்று மாடிக் கட்டடத்திற்குள் உள்புகுந்து கொண்ட
      விடுதலைப் புலிகள் அதன் மேல் மாடியில் பாதுகாப்பான - சுடுவதற்கு வசதியான
      இடங்களில் தங்களை நிலைப்படுத்திக் கொண்டனர். அதிகாலையிலேயே இரு
      தரப்பினருக்கும் துப்பாக்கிச் சூடு ஆரம்பமாகிவிட்டது''- என்று "முறிந்தபனை'
      மோதலின் ஆரம்பத்தை விவரிக்கிறது. இதே சம்பவத்தை தீபிந்தர் சிங் தனது நூலில்
      குறிப்பிடுகையில், ""பலமுறை பறந்து அதிரடிப் படையைச் சேர்ந்த 103
      வீரர்களையும் சீக்கியப் படையைச் சேர்ந்த 30 வீரர்களையும் இறக்கினோம். ஆனால்
      நாலாபுறத்திலிருந்தும் விடுதலைப் புலிகளின் குண்டுகள் சீறிப் பாய்ந்து வந்தன.
      இதன் விளைவாக 3 ஹெலிகாப்டர்கள் சேதமடைந்தன. எனவே, மேற்கொண்டும் பறக்க இயலாது
      என விமானிகள் மறுத்துவிட்டனர். எனவே 13-வது சீக்கியப் படையணியில்
      எஞ்சியிருந்தவர்களை அனுப்பமுடியவில்லை. பிற படையணிகளையும் அனுப்ப முடியவில்லை
      என்ற செய்தியை ஏற்கெனவே திடலில் இறங்கியவர்களிடம் செய்தி தெரிவிக்கவும்
      முடியாதவாறு அவர்களின் "வாக்கி-டாக்கி செட்டுகள்' புலிகளால் தாக்கப்பட்டு
      பழுதாகிவிட்டன.
      இதற்குள் விடியும் வேளை நெருங்கி விட்டதால் அதிரடிப் படையினர் பிரபாகரன்
      இருக்குமிடத்தை வளைத்துக் கொள்ள முன்னேறினார்கள். ஆனால், அவர்கள் புலிகளால்
      சுற்றிவளைக்கப்பட்டனர். கடும் போரின் முடிவில் ஒரேயொருவர்தான் மிஞ்சினார் .
      இந்தச் சண்டையின்போது அந்தப் பகுதியில் இருந்த கவிஞர் காசி ஆனந்தன் கூறியதாக
      பழ.நெடுமாறன் நூலில் கூறப்பட்டுள்ள தகவல் வருமாறு: ""தம்மைச் சுற்றிவளைத்துப்
      பிடிக்க இந்தியப் படை முயலும் என பிரபாகரன் உணர்ந்திருந்தார். ஹெலிகாப்டர்கள்
      மூலம் படைகளைக் கொண்டு வந்து இறக்குவார்கள் என்பதையும் அவர்
      ஊகித்துணர்ந்திருந்தார். இதன் காரணமாக அவர், பல்கலைக்கழக வளாகத்திற்குள்
      புலிகளை மறைவாக நிறுத்தி வைத்திருந்தார். இவர்கள் இருப்பது தெரியாமலேயே
      வந்திறங்கிய அமைதிப் படை வீரர்கள் புலிகளின் துப்பாக்கிக் குண்டுகளுக்குப்
      பலியாயினர். இந்த இடத்துக்கு அருகில்தான் நாங்கள் தங்கியிருந்தோம். தம்பி,
      தானே தலைமை ஏற்று ஆயுதமேந்தி, களத்தில் நின்று, உத்தரவுகளைப் பிறப்பித்த
      காட்சி, நிலவொளியில் அவர் நெருப்பாகத் தெரிந்தார்'' என்று கூறியுள்ளார்.
      இந்தப் போரில் பிரபாகரன், மாத்தையா, ஜானி, பொட்டு அம்மான், யோகி, நடேசன்
      ஆகியோர் பங்கேற்றனர். விடுதலைப் புலிகள் தரப்பில் பொட்டு அம்மான் வயிற்றில்
      குண்டு பாய்ந்து படுகாயமுற்றார். கையிலும் பலத்த காயத்துடன் தப்பித்தார். இப்
      போர் குறித்து அடேல் பாலசிங்கம் எழுதிய "சுதந்திர வேட்கையில்'
      கூறப்பட்டிருப்பதாவது:
      ""இதேவேளை, பாரசூட் அதிரடிப் படையினர் சீக்கியப் படையணியிலிருந்து பிரபாகரனை
      அழித்தொழிக்கும் இலக்கை மட்டும் தங்கள் தனி இலக்ககாகக் கொண்டு அவர் இருந்த
      இடத்தைக் குறி வைத்து நகரத் தொடங்கினர். அந்த இடத்தை நெருங்குவதற்கு முன்னமே
      அங்கிருந்து அவர் வெளியேறி விட்டதை அவர்கள் அறிந்தார்கள் என்று
      குறிப்பிட்டுள்ள அவர், ""தமக்கு பரிச்சயமில்லாத சூழலில் தாம் யாரைத் தேடிச்
      செல்கிறார்களோ, அவரை முன்பின் பார்த்தறியாத நிலையில், தங்களது இலக்குக்குள்
      அகப்பட்ட அப்பாவிப் பொதுமக்களை அமைதிப்படை ஈவிரக்கமின்றி சுட்டுக்கொன்றது.
      யாழ் கோட்டையிலிருந்து புறப்பட்ட கவச வாகனங்கள் மக்கள் மீது ஏறிச் சென்றது''-
      என்றும் குறிப்பிட்டுள்ளார். அமைதிப் படையின் இந்நடவடிக்கை "ஆபரேஷன் பவான்'
      என்றழைக்கப்படுகிறது. விடுதலைப் புலிகளின் ஆயுதங்களைக் களைவது என்று
      ஆரம்பித்து அவ்வியக்கத் தலைமையை அழித்தொழிப்பது என்றானது. "பவான்' என்கிற
      "சுத்தமான காற்று' விடுதலைப் புலிகளினதும் தமிழ்மக்களினதும் துயர்களுக்கு
      புயற்காற்றானது. புயலில் சிக்குண்ட மக்களின் நிலைக்கு அவர்கள் ஆளானார்கள்.
      பிரபாகரனைப் பிடிப்பது-அழிப்பது என்பது நடைபெறவில்லையென்றாலும் விடுதலைப்
      புலிகளின் வெளிப்படையான யாழ்ப்பாண நடவடிக்கைகள் மறைந்து போயிற்று.
      119:அமைதிப்படையிடம் யாழ்ப்பாணம்!         யாழ் பல்கலை மருத்துவ பீடத்திற்கருகே நடைபெற்ற யுத்தத்தில், சீக்கியப்
      பிரிவின் காலாட்படையின் கடைசிவீரன், தனது கடைசித் தோட்டா தீரும்வரைப்
      போராடியதாகக் குறிப்புகள் உண்டு. வாக்கி-டாக்கியைப் பயன்படுத்திய வீரர் கீழே
      இறங்கிய நிமிடத்திலேயே கொல்லப்பட்டார். பட்டாளத்தின் தலைவர் மேஜர்
      பீரேந்திரசிங் தான் இறங்கவேண்டிய இடம் என்று தீர்மானித்த இடத்தில்
      இறங்கினார். எஞ்சியுள்ள அதிரடிப் படையினர் வாக்கி-டாக்கியை எடுத்துக்கொண்டு
      விரைந்து, தாங்கள் பதுங்கியிருக்கும் இடத்திற்கு வரும்படி அவரை
      அழைத்திருக்கிறார்கள். ஆனால், அவரோ தனது வீரர்கள் விடுதலைப் புலிகளால் சுற்றி
      வளைக்கப்பட்டதை அறியாமல் அங்கேயே நின்று, துப்பாக்கிக் குண்டுகளுக்குப்
      பலியானார் (சேகர் குப்தா - முறிந்தபனையில் வந்தவாறு) என்றும் ஒரு குறிப்பு
      உள்ளது.
      விடுதலைப் புலிகளை அழிப்பது என்பதிலிருந்து தடம்புரண்டு, மக்களை அழித்தது
      குறித்த விமர்சனம் எழுந்தபோது, அமைதிப் படையைச் சேர்ந்த ஒருவருக்கும்
      பிரம்படி பகுதியைச் சேர்ந்த மக்களுக்குமான உரையாடலை இங்கே குறிப்பிடுவது
      பொருத்தமாக இருக்கும்: ""உங்களுக்கு இங்கே என்ன வேலை? உங்களுக்கு என்று
      ஒதுக்கப்பட்ட முகாமில் அல்லவா நீங்கள் தங்கியிருக்க வேண்டும்'' என்று
      தளபதிகளில் ஒருவர் கேட்டதும்,
      பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர், ""அந்த அறிவிப்பு - யாழ் நகருக்கு
      மட்டுமானது. நாங்கள் புறநகர்ப் பகுதியில் வசிக்கிறவர்கள். ஊரடங்கு அமலில்
      உள்ளதால் வீட்டினுள்ளேயே அடைபட்டிருக்கிறோம்'' என்றார். தொடர்ந்து அவர்,
      ""'நீங்கள் யாரை வேட்டையாடுகிறீர்கள்? மக்களையா, புலிகளையா?'' என்று
      கேட்டார். ""மக்களின் பின்னே அவர்கள் நின்றால் என்ன செய்வது?''
      ""இப்படித்தான் சிங்கள அரசும் சொன்னது. இப்போது நீங்களும் அதையே
      சொல்கிறீர்கள். கொஞ்சம் மாற்றியாவது சொல்லக்கூடாதா?'' என்றார்.
      ""நீங்கள் யார்?'' ""யாராக இருந்தால் பதில் சொல்வீர்கள்? நான் பல்கலைக்கழக
      விரிவுரையாளராக இருக்கிறேன். உங்களது நடவடிக்கைகள் சிங்களவரைவிட உயர்வாக
      இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்'' என்றார். ""அப்படியா! அப்படியிருந்தால்
      இவ்விடத்தைவிட்டு அகலுகிறேன்'' என்று கூறிவிட்டு ராணுவ நிர்வாக அதிகாரி
      கிளம்பிச் சென்றார்.
      இந்த உரையாடல் மூலம், யாழ் நகரில் வசிப்பவர்கள் அனைவரும் தங்களது
      வீடுகளிலிருந்து வெளியேற வேண்டும் என்று வானொலி மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது
      தெரிய வருகிறது. அவர்கள் அனைவரும் நல்லூர் கந்தசாமி கோயில், யாழ் இந்துக்
      கல்லூரி, இந்து மகளிர் கல்லூரி ஆகியவற்றில் சென்று தங்குமாறு
      பணிக்கப்பட்டிருந்தார்கள். இந்த அறிவிப்பைப் பின்பற்றுவது என்பது நடைமுறை
      சாத்தியமற்றது என்பதை அறிவிப்பு வெளியிட்டவர்கள் உணரவில்லை. யாழ் நகரில் உள்ள
      மக்கள்தொகைக்கு இந்த மூன்று இடங்களும் போதுமானதல்ல. அப்படியே சென்று
      தங்கினாலும் அங்கே கழிப்பிட வசதிகளும் அவ்வளவாக இல்லை. அதனால் பெரும்பாலான
      மக்கள் தங்கள் இருப்பிடத்தை விட்டு அகலாத நிலையிலும், வானிலிருந்து
      வீசப்படும் குண்டுகளுக்குப் பயந்த மக்கள் அந்த இடநெருக்கடி மிகுந்த இடத்தை
      தஞ்சம் அடையவே செய்தனர். மழைக்காலம், பண்டிகைக்காலம் எல்லாம் சேர்ந்து
      அமைதிப்படை மீது மக்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தியது. அவர்கள் மனதில்,
      போராளிக்குழுவில், பலசாலியான விடுதலைப் புலிகளே தங்கியிருந்தனர்.
      படுகாயமுற்ற விடுதலைப் புலிகள் யாழ் பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
      இவர்களுக்கும் முன்பாக, அங்கே பொதுமக்களும் ஏராளமான அளவில்
      சேர்ந்திருந்தார்கள். வயிற்றில் குண்டு வாங்கிய பொட்டு அம்மானுக்கு யாழ்
      மருத்துவமனையில் அவசர அறுவைச்சிகிச்சை செய்த பின்னர், அவர் அங்கே இருப்பது
      பாதுகாப்பற்றது என இடமாற்றம் செய்யப்பட்டார். வடமராட்சியில் உள்ள
      வல்வெட்டித்துறை கிட்டுவின் வீடு பாதுகாப்பானது என்று, அவரின் தாயார்வசம்
      பொட்டு அம்மான் ஒப்படைக்கப்பட்டார். பாலசிங்கமும் அடேல் பாலசிங்கமும் பொட்டு
      அம்மானைப் பார்க்க வந்த இடத்தில் அவருக்கு ஏற்பட்ட காயம் மிகவும் ஆபத்தானது;
      உடனிருந்து வேளைதோறும் மருந்திட்டு கவனிக்க வேண்டியது என்று கண்டனர். பொட்டு
      அம்மானைத் தவிர்த்து வேறு இரு போராளிகளும் காயங்களுடன் அங்கே இருந்தனர்.
      போராளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியை, நர்ஸ் தொழிலில் முன்னர் இருந்த
      அடேல் ஏற்றுக்கொண்டார். மிகவும் ரகசியமாக அவர்களைப் பருத்தித்துறை
      மருத்துவமனைக்குக் கொண்டுபோய் கட்டுப்போட்டு அழைத்து வரும் வேலையும் அவரைச்
      சேர்ந்ததாயிற்று. உடன் உள்ளூர் போராளிகளும் ஒத்துழைத்தனர்.
      அமைதிப் படையின் அடுத்த இலக்கு சாவகச்சேரி ஆயிற்று. அங்கே புலிகளின்
      நடமாட்டம் இருப்பதான தகவலை அடுத்து, சாவகச்சேரி சந்தையில் வான் தாக்குதல்
      நடத்தப்பட்டது. காரணம், அங்கே பிரபாகரன் துப்பாக்கியுடன் நடமாடுவதாகக்
      கிடைத்த ஒற்றுத் தகவல். எனவே உள்ளூர் சந்தையில் கூடியிருந்தோர் மீது
      குண்டுவீச்சு நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் கொல்லப்பட்டவர் எண்ணிக்கை 30.
      புலிகள் கொல்லப்பட்டதாக செய்தி அறிவிப்பு வெளியானது. உண்மையில் அவர்கள்
      பொதுமக்களே ஆவார்கள். மக்கள் குடல் சிதறி, உடல் பாகங்கள் பிய்த்தெறியப்பட்டு
      நாலாபுறமும் வீசப்பட்டனர். இவர்களை, பருத்தித்துறை மருத்துவமனையில்
      கொண்டுவந்து சேர்த்தனர். அம்மருத்துவமனையை விட யாழ் மருத்துவமனை மிகப்
      பெரியது. ஆனால், அம்மருத்துவமனையைப் புலிகள் பயன்படுத்துவதாகவும், அங்கே
      நோயாளிகள் போர்வையில் படுத்துக்கிடப்பதாகவும் வந்த ஊர்ஜிதமாகாதத்
      தகவலையடுத்து, அங்கே குண்டு வீசப்பட்டு, டாக்டர்கள், நர்சுகள், பணியாளர்கள்,
      நோயாளிகள் என்று 21 பேர் கொல்லப்பட்டிருந்தனர் (அக்டோபர் 21-இல்). இதனை
      அறிந்த மக்கள் யாழ் மருத்துவமனை பக்கம் போகவே பயந்தனர்.
      பருத்தித்துறை மாந்திகை மருத்துவமனைக்கு வந்துசேர்ந்த காயம்பட்டவர்களுக்கு
      அவசர சிகிச்சை தேவைப்பட்டது. அங்கோ இடவசதி குறைவு; ஆள் பற்றாக்குறை. அடேலும்
      அங்கிருந்த பணியாளர்களுடன் சேர்ந்து சிகிச்சையளித்துவிட்டு "கிட்டுவின்
      அம்மா' வீட்டுக்கு வந்து சேர்ந்தார். வலிகாமத்தில் அமைதிப் படை
      குவிக்கப்பட்டது. வடக்கே வடமராட்சி, தெற்கே தென்மராட்சியில் உள்ள
      சாவகச்சேரியில் தாக்குதல் நடத்த திட்டம். சாவகச்சேரி விடுதலைப் புலிகளை
      அதிகம் தந்த பகுதியாகும். மக்கள் அனைவரும் புலிகளோ என்ற தோற்றம் கொண்ட ஊர்.
      எனவே புலிகளின் ஆயுதம் களையும் நடவடிக்கை அங்கே பெரிய அளவில் நடைபெற்றது.
      வழக்கம்போல் புலிகளைவிடவும் மக்களே அதிகம் தாக்குதலுக்கு ஆளானார்கள்;
      உடைமைகளையும் இழந்தார்கள். சாவகச்சேரி அமைதிப்படை வசமாயிற்று. புலிகளோ
      கொரில்லாத் தாக்குதலுக்குத் தயாரானார்கள். தமிழ்ச்செல்வன் கொரில்லாப்
      படைக்குத் தலைமை தாங்கி பின் நாளில் அந்த ஊரை மீட்டெடுத்தார். புலிகளின்
      அரசியல் பிரிவுக்குப் பின் நாளில் பொறுப்பாளராகவும் பதவி உயர்வு பெற்றார்.
      யாழ்ப்பாணத்தை நான்கு நாள்களில் பிடிப்போம் என்று லெப்.ஜெனரல் தீபிந்தர்சிங்
      அக்டோபர் 10-ஆம் தேதி குறிப்பிட்டார். ஆனால் 16 நாள்கள் கழித்து அக்டோபர்
      25-இல் யாழ்ப்பாணத்தைப் பிடித்ததாக அமைதிப்படையின் செய்திக்குறிப்பு
      கூறினாலும், இது குறித்து கவிஞர் காசி ஆனந்தன் அளித்த பேட்டியில்,
      "யாழ்ப்பாணத்தைப் பிடிக்க 24 நாள்கள் (நவம்பர்-3) வரை அமைதிப்படைக்குத்
      தேவைப்பட்டது' என்று கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், "இரண்டாயிரம்
      புலிகளை எதிர்த்து 40 ஆயிரம் இந்திய வீரர்கள் களமிறக்கப்பட்டார்கள்' என்றும்
      குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், மேஜர் ஜெனரல் ஹர்கிரத்சிங் இந்தியாவுக்கு
      மாற்றப்பட்டு அவரது இடத்திற்கு லெப்.ஜெனரல் எஸ்.சி.சர்தேஷ் பாண்டே
      நியமிக்கப்பட்டார். ஜனவரி 1988-இல் இதற்கான உத்தரவை ஹர்கிரத்சிங் பெற்றதும்,
      சென்னை சென்று கோட்டையில் இருந்த ஐ.பி.கே.எஃப். அலுவலகத்தில் லெப்.ஜெனரல்
      தீபிந்தர்சிங்கைச் சந்தித்து ஆலோசனை கலந்தார்.
      "ஒரு போர்வீரன் என்று முறையில் உத்தரவுக்குக் கட்டுப்படுவது என்பது பாலபாடம்.
      எனவே உத்தரவுக்குக் கட்டுப்பட்டு இலங்கையுடனான எனது தொடர்பைத் துண்டித்தேன்'
      என்று ஹர்கிரத்சிங் குறிப்பிட்டுள்ளார். இந்தச் சூழ்நிலை ஏன் ஏற்பட்டது
      என்பது குறித்தும் அவர் எழுதியுள்ளார். பிரபாகரனை சுட்டுத்தள்ளவும்,
      இல்லையானால் கைது செய்யவேண்டும் என்று இலங்கையின் இந்தியத் தூதர் தீட்சித்
      விதித்த கட்டளையை நிறைவேற்றாதது குறித்து, 1987 செப்டம்பரில் அவர் எழுதிய
      கடிதம், தூசு தட்டப்பட்டு 1988 ஜனவரியில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
      அதுமட்டுமன்றி, இந்திய அமைதிப்படைக்கு உத்தரவிட இந்திய அரசு மட்டுமே
      உரித்தானது என்றும் வேறு யாரும் இப்படைக்கு உத்தரவிட முடியாது என்றும்
      குறிப்பிட்டுள்ளார்.
      இவருக்குப் பின் பலாலி முகாமில் வந்து இறங்கிய லெப்.ஜெனரல் சர்தேஷ்
      பாண்டேவும் தனது அனுபவங்களை "அசைன்மெண்ட் ஜாஃப்னா' என்று எழுதியுள்ளார்.
      அந்நூலில், "விடுதலைப்புலிகளின் மீது அமைதிப்படை எடுத்த நடவடிக்கைகளில்
      போதுமான அளவு திட்டமிடுதல் இல்லை' என்று ஹர்கிரத்சிங் பணிக்காலத்தை
      விமர்சித்திருந்தார்.

No comments:

Post a Comment