பேச்சுவார்த்தை தடைபடக் காரணமானவர்கள் என்ற நினைப்பில் விடுதலைப்
புலிகளின் ஆலோசகர் பாலசிங்கம், டெலோ இயக்கத்தவர்களான சந்திரகாசன்,
சத்தியேந்திரா ஆகியவர்களை இந்தியா நாடு கடத்தி, ஜெயவர்த்தனவுக்கு தீவிர
நண்பனாயிற்று. இந்தச் செயல் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை
ஏற்படுத்தியது. தி.மு.க., திராவிடர் கழகம், தமிழ்நாடு காமராஜர் காங்கிரஸ்
(பழ.நெடுமாறன்) மற்றும் டெலோ அமைப்பில் உள்ளவர்கள் பெரும் கிளர்ச்சியில்
ஈடுபட்டனர். பலர் கைதாகி சிறையிலும் அடைக்கப்பட்டனர். "தமிழர்களுக்கு நியாயம்
பெற்றுத்தர வேண்டிய நிலையில் உள்ள இந்தியா, சிங்களவருக்குத் துணை போவது ஏன்?'
- என்று தமிழகமெங்கும் கண்டனக் குரல் எழுந்தது. இந்த ஒட்டுமொத்த எதிர்ப்பு
காரணமாகவும் வெளியேற்றப்பட்ட பாலசிங்கம், சந்திரகாசன், சத்யேந்திரா மூவரையும்
அமெரிக்கா கொண்டு சென்ற நிலையில், அங்கு தரையிறங்க அனுமதிக்கப்படாத
நிலையிலும் இந்தியாவுக்குள் வர அனுமதிக்கப்பட்டார்கள். இச்செயலைக் கிண்டல்
செய்து "அமெரிக்காவுக்கு ஓர் இலவசப் பயணம் - இலங்கைத் தமிழர்களுக்கு மட்டும்'
என்று ஆர்.கே. லட்சுமணன் வரைந்த கேலிச்சித்திரம் பலரையும் பேச வைத்தது.
திம்பு பேச்சின் பலன் என்று எதுவும் இருக்குமானால் அந்தப் பலன் யாவும்
ஜெயவர்த்தனாவையே அடைந்தது. போராளிக் குழுக்களை இந்திரா வளர்த்தார்;
ஜெயவர்த்தனவோடு சாமர்த்தியமாக ராஜீவ் காந்திக்கு அவர்களுடன் பிணக்கு ஏற்பட
வைத்து விட்டார். மாறுபட்ட கருத்துகளைக் கூறி, அபிப்பிராய பேதம் ஏற்பட
வைத்து, போராளிக் குழுக்களின் புதிய அமைப்பான உசகஊ - க்கும் சோதனை
ஏற்படுத்திவிட்டார்.
அதுமட்டுமன்றி தமிழர் விடுதலைக் கூட்டணியைத் தனிமைப்படுத்தி, அவ்வமைப்பை
ராஜீவை மேலும் நெருங்க வைத்துவிட்டார். ஸ்ரீமாவோ-சாஸ்திரி ஒப்பந்தம் மூலம்
தமிழர்-மலையகத் தமிழர்களிடையே பெரும் பிளவை ஏற்படுத்தியதுடன், நேரு காலத்தில்
இருந்த கொள்கையை மாற்றி மலையகத் தமிழரில் பெரும்பாலோரை இந்தியாவுக்கு அனுப்ப
வகை செய்ததன் மூலம் ஒரே கல்லில் பல மாங்காய் அடித்தவர் என்று முன்பு ஸ்ரீமாவோ
பண்டாரநாயக்காவைச் சொல்வார்கள். இப்போது ஜெயவர்த்தன அதே அணுகுமுறையை
வெற்றிகரமாக நடத்திக் காட்டியுள்ளார். திம்பு பேச்சுவார்த்தைக்கிடையே போர்
கூடாது என்று ஒப்பந்தம் போட்டு போராளிக் குழுக்களும், ராணுவத்தினரும் தங்கள்
நிலையில் இருந்து வெளிவரக் கூடாது என்று சொல்லப்பட்டது. ஆனால் வவுனியா
சம்பவம் உணர்த்துவதென்ன? ராணுவ முகாம் அருகே உள்ள மதகடிக்குக் கீழே குண்டு
வைக்கப்பட்டு வெடிக்கப்பட்டதைக் காரணம் காட்டி வவுனியா நூல் நிலையம்
எரிக்கப்பட்டதில் 200 பேருக்கு மேல் சாவு. இதன் பின்னணி பற்றி இந்திய தரப்பு
ஆராயவே இல்லை; பிரதமர் ராஜீவ் காந்தி உள்பட!
சுதந்திர தமிழ் அரசுக்காக போராடுகின்ற போதிலும் வெவ்வேறு அரசாங்க முறைமையான
வடிவமைத்துக் கொள்ள இலங்கை அரசு வைக்கின்ற தீர்வுத் திட்டத்தை பரிசீலனைக்கு
ஏற்கத் தயார் என்று போராளிக் குழுக்கள் அறிவித்துவிட்டன. இதற்குரிய விடையை
அளிக்கவேண்டிய கட்டாயத்தில் இருந்த ஜெயவர்த்தன அரசு அதற்குத் தீர்வுத்
திட்டம் அளிக்க தயாராக இல்லாத நிலையில் - வவுனியா பகுதியில், ராணுவ முகாம்
அருகே உள்ள மதகடியில் வெடிகுண்டு வைத்து, வெடிக்கச் செய்து நூல்நிலையம்
எரிப்பும் நடத்தியாயிற்று. போர்நிறுத்த ஒப்பந்த மீறல் என போராளிகள்
கோபப்பட்டு பேச்சுவார்த்தையிலிருந்து வெளியேறுவார்கள் என்று திட்டமிட்டே,
ராணுவமும் ஜெயவர்த்தன அரசும் செய்த சதிவேலை அது என்பதை "இந்திய மத்தியஸ்த
தரப்பு' கவனத்தில் கொள்ளவே இல்லை. மாறாக, தீர்வுக்கு ஒத்துவராதவர்கள் என்று
கூறி, போராளிக் குழுவினர் மீது கோபம் கொண்டனர்.
போராளிக்குழுக்களின் தயவின்றி, அவர்களை முன்னிலைப் படுத்தாமலே இலங்கை அரசுடன்
தீர்வுத் திட்டம் ஒன்றுக்கு பிரதமர் ராஜீவ் காந்தி தீவிரம் காட்டினார்.
ஜெயவர்த்தனவின் சகோதரர் எச்.டபிள்யூ. ஜெயவர்த்தன - ராஜீவ் காந்தி ஆகிய இருவர்
மட்டுமே முன்னின்று தயாரித்த திட்ட அடிப்படையில் இந்திய வெளியுறவு அமைச்சகம்
31 ஆகஸ்ட் 1985 அன்று வெளியிட்ட குறிப்பில், "எல்லா விஷயங்களையும் உள்ளடக்கி,
வரைவுத் திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட தரப்புகள் இதன்
அடிப்படையில் ஓர் ஒப்பந்தத்துக்கான பேச்சு நடத்தலாம்' என்று
தெரிவிக்கப்பட்டிருந்தது. இதில் ஆறுதல் அளிக்கக் கூடிய ஒரேயொரு அம்சம் இலங்கை
அரசு முதன்முதலாக "அதிகாரப் பகிர்வின் ஓர் அளவாக மாகாணம் என்பதை
ஏற்றுக்கொண்டது' என்பதுதான்.
No comments:
Post a Comment