170: நாங்கள் இந்தியாவை நேசிக்கிறோம்! !
பிரபாகரன் பேட்டி தொடர்கிறது... ""சமாதானப் பேச்சுக்கு அமெரிக்கா இடையூறு செய்கிறதா?'' ""நான் அப்படி நினைக்கவில்லை'' ""மேற்குலக நாடுகள் புலிகள்
இயக்கத்துக்குத் தடை விதித்ததால் ஆயுதங்கள் பெறமுடியாத சூழ்நிலை ஏற்பட்டு
சமாதானத்துக்கு வந்ததாகக் கருதலாமா?'' ""ராணுவத்தினருடன் நடத்தும் மோதல்
மற்றும் போர்களில் இருந்தே எமக்கு ஆயுதங்கள் கிடைக்கின்றன. ஆனையிறவுத்
தாக்குதலிலும், முல்லைத்தீவு தாக்குதல்களிலும் சிறியரக ஆயுதங்களில் இருந்து
கனரக ஆயுதங்கள் வரை பெற்றிருக்கிறோம்'' (ராணுவத்தினரிடமிருந்தே ஆயுதங்களைப்
புலிகள் பறித்தனர் என்பது புரிந்து, பத்திரிகையாளர்களிடையே சிரிப்பலை
எழுந்தது). ""இந்தியா உங்கள் மீது விதித்துள்ள தடை குறித்து?'' ""எங்கள்
மீதான தடையை இந்திய அரசு நீக்கவேண்டும். இதை சந்தர்ப்பம் கிடைக்கும்போது
நாங்கள் வற்புறுத்துவோம். இந்தியாவுடன் நல்லுறவையே விரும்புகிறோம். நாங்கள்
இந்தியாவைப் புறக்கணிக்கவில்லை. சமாதானப் பேச்சுகளில் இந்தியா முக்கியப்
பங்கு வகிக்க முன்வரவேண்டும் என்றே விரும்புகிறோம். இந்திய அமைதிப்படை எங்கள்
மக்களுக்கு வேதனைதரும் நினைவுகளை அளித்தபோதிலும் எங்கள் மக்கள் இப்போதும்
இந்தியாவை நேசிக்கிறார்கள். இந்தியத் துணைக்கண்டத்தில் பிராந்திய வல்லரசாக
இருந்துவரும் இந்தியாவுடன் எங்களது உறவு கலாசார ரீதியானது'' ""மலையகத்
தமிழர்கள் பற்றி?''
""இந்திய வம்சாவளித் தமிழருடனான உறவையும் வளர்த்துக் கொள்ளவே
விரும்புகிறோம். எங்களைச் சந்தித்துப் பேச அழைப்பு விடுத்துள்ளோம்''
""உங்களைச் சந்திக்க வரும் மலையகப் பிரதிநிதிகள் உண்மையான பிரதிநிதிகள்
அல்லவே!''
""மலையகத் தமிழர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுடன் பேசாமல் வேறு
யாருடன் பேசுவது?''
""இடைக்கால நிர்வாக அரசு கோரிக்கை ஏன்?''
""இன்றைய சூழ்நிலையில் ரணில் அரசால் நிரந்தரத்தீர்வை நோக்கிச் செல்லமுடியாது.
அவர் பிரதமர் என்றாலும்; அதிபர் அல்ல. அதிபரிடம் அதிகாரம் புதைந்துள்ளது.
எனவேதான், இடைக்கால நிர்வாக அரசு என்ற திட்டத்தை வலியுறுத்துகிறோம்''
""வடபகுதியில் இருந்து முஸ்லிம்கள் காலி செய்யவேண்டும் என்று கூறப்பட்டதே?''
""வடபகுதியில் இருந்து இஸ்லாமியர்கள் வெளியேற்றப்பட்டதற்கு வருத்தம்
தெரிவிக்கிறோம். இஸ்லாமியர், மலையகத் தமிழர் பிரச்னைகளுக்கான தீர்வு குறித்து
ஆக்கப்பூர்வமான ஆலோசனை நடத்தப்படும்''
""முஸ்லிம்களில் யாரும் பிணைக்கைதிகளாக உள்ளார்களா?''
""அப்படி யாரும் இல்லை. ஆதாரம் இருந்தால், பெயர் விவரங்கள் இருந்தால்
அரசியல்துறைப் பொறுப்பாளர் சுப. தமிழ்ச்செல்வனிடம் கொடுக்கலாம்''
""முஸ்லிம்கள் வடபகுதியில் எப்போது அனுமதிக்கப்படுவார்கள்?''
""யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட இஸ்லாமியர்கள் மீண்டும் திரும்பி
வருவதற்கான புறச்சூழ்நிலைகள் உருவாக்கப்பட்டபின் அவர்கள் திருப்பி
அழைக்கப்பட்டு தமிழர்களுடன் இணைந்து வாழ அனுமதிக்கப்படுவார்கள் என
உறுதியளிக்கிறோம்''
""அமெரிக்காவின் இரட்டைக் கோபுர தாக்குதல் குறித்து?''
""செப்டம்பர் 11-இல் அமெரிக்கா மீதான தாக்குதலை நாங்கள் கண்டித்து அறிக்கை
வெளியிட்டுள்ளோம். அமைதியை விரும்பும் மதத்தின் பேரால் மனித உயிர்கள்
கொல்லப்படுவதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். நாமும் இப்போது சமாதான
முயற்சியில் வெளிநாட்டு அரசின் உதவியுடன் ஈடுபட்டுள்ளோம். இது போன்ற
தற்கொலைத் தாக்குதல்கள் பற்றிப் பேச விரும்பவில்லை''
""தற்போதைய முயற்சிகள் குறித்து...''
""தற்போதைய சமாதான முயற்சிகளில் திருப்தியடைகிறேன். ஸ்ரீலங்கா பிரதமரும்
உறுதியான முடிவுகளை எடுக்கிறார். அதன்மூலம் சமாதான முயற்சிகள் வெற்றிகரமாக
நகரும் என்று நம்புகிறேன்''
""சுயாட்சி வழங்கப்படாது என்றால்?'' ""சுயாட்சி, சுயநிர்வாகம் போன்ற எங்கள்
கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்ட நிலையிலேயே சுயநிர்ணய உரிமையை நாங்கள்
வலியுறுத்தினோம். அதாவது தமிழர்களுக்கான சுயாட்சி அல்லது பிரிவினை என்பதே
இதன் சாராம்சம். அரசு சுயநிர்வாகத்தைத் தொடர்ந்து மறுத்தால் பிரிவினைதான்
வழி'' ""அப்படியென்றால் சமாதானத்தை எதிர்க்கிறீர்களா?''
""பொதுவாக எங்களது போராட்டம் சமாதானத்தில்தான் ஆரம்பித்தது. எங்களுடைய
முந்தைய தலைவர்கள்கூட சமாதான வழியில் போராடி எங்களுடைய உரிமைகளை
வென்றெடுக்கலாம் என்று முயற்சி செய்துள்ளார்கள். ஆனால் தொடர்ந்தும்
அவர்களுடைய அந்த சமாதான முயற்சிகள் மறுக்கப்பட்டு இனவாதம் எங்கள்மீது
கட்டவிழ்த்து விடப்பட்டதால் நாங்கள் ஆயுதம் ஏந்தும் நிலைக்குத்
தள்ளப்பட்டோம். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சமாதான முயற்சிகளைத்
தவிர்த்ததில்லை'' ""பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால்?''
""தோல்வியடைந்தாலும் தொடர்ந்து சமாதான முயற்சிகளை மேற்கொள்வோம்'' ""உங்களது
சமாதானப்பேச்சு ஆர்வம், அமெரிக்க இரட்டைக்கோபுரம் தகர்ப்பையொட்டி அமைந்ததா?''
""அமெரிக்கா மீதான செப்டம்பர் 11 தாக்குதலுக்கு முன்பே சமாதானத்துக்கான
நல்லெண்ண முயற்சிகளாக ஒருதலைப்பட்ச யுத்த நிறுத்தத்தை நாங்கள்
அறிவித்துவிட்டோம்''
""வடக்கு-கிழக்கு நிர்வாகம் யார் பொறுப்பில் இருக்கும்?''
""பேச்சுவார்த்தைக்கான ஆரம்ப நிலையே தற்போது உள்ளது. நிர்வாகம் பற்றிப் பேச
இயலாது'' ""இடைக்கால அரசு குறித்து?'' ""அதுகுறித்து தாய்லாந்தில் பேச
உள்ளோம்'' ""ராஜீவ் காந்தி கொலை குறித்து...
'' ""ராஜீவ் காந்தி கொலை, 10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த வேதனை தரும்
துன்பியல் சம்பவம் ஆகும்'' ""ராஜீவ் காந்தி கொலை வழக்கில், உங்களைப் பிடிக்க,
சர்வதேச போலீஸ் உதவி நாடப்பட்டுள்ளதே?''
""ராஜீவ் காந்தி கொலை வழக்கு இருக்கும்வரை இதுகுறித்து கருத்து கூறமுடியாது''
""முந்தைய பேச்சுவார்த்தைகளுக்கும் இந்தப் பேச்சுவார்த்தைக்கும் என்ன
வித்தியாசம்?''
""இது முந்தைய பேச்சுவார்த்தைகளைவிட வித்தியாசமான அணுகுமுறையாக இருக்கும்.
ஏனெனில் இந்தப் பேச்சுவார்த்தையில் மூன்றாம் தரப்பாக நார்வே நாடு
தொடர்பாளராகப் பங்கேற்றுள்ளது. இம்முறை பேச்சுவார்த்தை ஓரளவு சுமுகமாக
இருக்கும் என்றே நம்புகிறோம்''
""பேச்சுவார்த்தையில் அதிபர் சந்திரிகா குழப்பம் ஏற்படுத்துவார் என்று
நினைக்கிறீர்களா?''
""சந்திரிகா குழப்பம் ஏற்படுத்துவார் என்று நாங்கள் நினைக்கவில்லை. அவர்
அப்படி ஏதும் செய்தால் அதைப் பார்த்துக்கொள்வது ரணிலின் பொறுப்பு'
171:தாய்லாந்தில் முதல்கட்டப் பேச்சுவார்த்தை! போர் நிறுத்த ஒப்பந்தமும், பிரபாகரனின் பத்திரிகையாளர் சந்திப்பும்
முடிந்த நிலையில், பாலசிங்கம் தனது சிகிச்சையைத் தொடர லண்டன்
செல்லவேண்டியிருந்தது. வன்னிப் பகுதிக்கு அவர்கள் வந்திறங்கியபோது உண்டான
இயல்பு சூழல் திரும்பும்போது இல்லாமல் போனது. இலங்கை கடற்படையினரின் தொல்லை
காரணமாக சில இழுத்தடிப்புகளுக்குப் பின்னர் பாலசிங்கமும், அடேலும், நார்வே
நாட்டு வெளியுறவுத்துறை அலுவலர் செல்வி.ஜெர்ஸ்தி ட்ரோம்ஸ்டலுடன் கடல்
விமானத்தில் ஏறி மாலத்தீவு சென்றனர். அங்கே ஒருநாள் தங்கி, மறுநாள் லண்டன்
சென்றனர். அதிபர் சந்திரிகாவின் பொறுப்பின்கீழ் இருந்த ராணுவத் தளபதிகள்
ஒப்பந்தப்படி நடக்க மறுத்தார்கள். சில பொது இடங்களில் இருந்து வெளியேற
மறுத்தனர். கடலில் மீன்பிடிக்க மீனவர்களுக்கு அனுமதியளிக்க கடற்படை மறுத்தது.
புலிகளின் மீதான தடையும் விலக்கப்படவில்லை. இந்த நிலையில், ஜூனில்,
தாய்லாந்தில் நடைபெற இருந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள பிரபாகரன்
விரும்பாததால், இந்தப் பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில்,
நார்வே தூதுக்குழுவினர், தாய்லாந்து பேச்சுவார்த்தை குறித்து விவாதிப்பதற்காக
லண்டனில் பாலசிங்கத்தைச் சந்தித்தனர். அவர்களிடம், ஒப்பந்தத்தின் நிலை
குறித்தும், ஒப்பந்தம் சரிவர நிறைவேற்றப்படாதது குறித்தும் பாலசிங்கம் கவலை
தெரிவித்தார்.
இதனையொட்டி இலங்கையின் அரசுப் பிரதிநிதியான அமைச்சர் மிலிண்டா மோரகோடா நார்வே
குழுவினருடன் வந்து பாலசிங்கத்தைச் சந்தித்தார். இதன் தொடர் நிகழ்வாக நார்வே
நாட்டின் தலைநகர் ஆஸ்லோவில் இருதரப்புப் பிரதிநிதிகளும் சமாதானக் குழுவினர்
முன்னிலையில் தாய்லாந்துப் பேச்சுவார்த்தைக்கான தேதி குறித்துப் பேசினர்.
இதற்கிடையே விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவது உள்ளிட்டவற்றை
உடனடியாகத் தீர்ப்பது என்றும் முடிவானது. அதன்படி 2002, செப்டம்பர் 6-ஆம்
தேதியன்று புலிகள் மீதான தடையை நீக்கி பாதுகாப்பு அமைச்சர் திலக் மாரபோனே
அரசிதழில் வெளியிட்டார். உடனடியாக, நார்வே சமாதானக்குழுவின் சார்பில்
செப்டம்பர் 16-18 தேதிகளில் புலிகள்-அரசுத்தரப்புப் பேச்சை தாய்லாந்தில்
நடத்த இரு தரப்பும் ஏற்றுக்கொண்டதாக அறிவிக்கப்பட்டது. இங்கிலாந்து, நார்வே
போன்ற நாடுகளைப் போலவே, முடியாட்சியும் நாடாளுமன்ற ஆட்சிமுறையும்
தாய்லாந்திலும் நடைபெற்றதே இந்த ஏற்பாட்டுக்குக் காரணம். தாய்லாந்தின்
தலைநகர் பாங்காக்கிலிருந்து 50 கி.மீ. தொலைவிலுள்ள "ஜோம் தாய்' என்ற
பகுதியில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலான "அம்பாசடர் சிட்டி'யில் நடைபெற்றது.
இலங்கை அரசின் சார்பில் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், மிலிண்டா
மோரகோடா மற்றும் ரவூப் ஹக்கீம் கலந்துகொண்டனர். புலிகள் சார்பில் பாலசிங்கம்
தம்பதியினர் கலந்துகொண்டனர். தாய்லாந்து நாட்டின் நிரந்தர வெளியுறவு அமைச்சர்
தேஜ் பன்னாக் தொடக்க உரையாற்றுகையில், "இலங்கையில் அமைதியும் சமாதானமும்
நிகழ, எங்களின் பங்களிப்பாக இந்தப் பேச்சுவார்த்தை இங்கே ஆரம்பமாகிறது.
இந்தப் பேச்சுவார்த்தைகள் வெற்றியடைய வேண்டும்' என்றார். அடுத்து பேசிய
இலங்கை அமைச்சர் பீரிஸ், "இலங்கையில் 50 ஆண்டுகளாக நடைபெற்றுவரும் இனப்
பிரச்னைக்குத் தீர்வு காண, சர்வதேச அரங்கில் பேச்சுவார்த்தையாக
வெளிப்பட்டிருக்கிறது. யுத்தத்தால் இப்பிரச்னை தீராது என்பது எங்களது முடிவு.
அதில் உறுதியாக இருப்பதன் காரணமாகவே நார்வேயின் இந்த முயற்சியை ஏற்றோம் என்று
தெரிவித்தார். பாலசிங்கம் பேசுகையில், "புதிய அரசு பொறுப்பேற்றதும் நார்வே
தரப்பு பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு அளித்தது. போர்நிறுத்தம்
அறிவிக்கப்பட்டு, அதனை நார்வே தலைமையில் அமையப்பெற்றுள்ள கண்காணிப்புக்குழு
கண்காணிக்க ஏற்பாடாகியுள்ளது. இந்த முயற்சியானது இலங்கையில் தமிழர்கள்,
சிங்களர்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் அனைத்துப் பிரிவினரும்
அமைதியான முறையில், அனைத்துவிதமான சலுகைகளையும் பெற்று சுகவாழ்வு பெற வகை
செய்துள்ளது. நல்லெண்ண அடிப்படையில் இந்த ஒப்பந்தத்தின் கூறுகள் அமையப்
பெற்றுள்ளன. எங்களது மக்களின் ஒட்டுமொத்த விருப்பமாக அமைதி முயற்சி
இருக்கிறது. அவர்கள் நிரந்தர அமைதியையும், சுதந்திரத்தையும், நிலைத்த
நீதியையும் விரும்புகிறார்கள்' என்றார். முதற்கட்ட பேச்சுவார்த்தை சத்தாஹிப்
என்னுமிடத்தில் உள்ள கடற்படைதளத்தில் அமைந்த வளாகத்தில் நடைபெற்றது. இந்த
இடம் அனைத்துவகையிலும் பாதுகாப்பான பகுதியாகும்.
புலிகள் தரப்பில், ஒப்பந்த அடிப்படையில், இலங்கை ராணுவத்தினர் இன்னும்
பொதுவான இடங்களில் இருந்து வெளியேறாதது குறித்துப் பல சம்பவங்கள்
பட்டியலிடப்பட்டன. இதற்கு மிலிண்டா மோராகோடா, "இதனை இருதரப்பினரும் இணைந்த
குழு அமைத்து விரைவாக நடைமுறைப்படுத்தலாம்' என்றார். தொடர்ந்து பாலசிங்கம்
பேசுகையில், "நிர்வாகம் செம்மைப்படுத்தப்படவும், போர்க்காரணங்களினால்
வெளியேறிய மக்களை மீண்டும் குடியமர்த்தவும், மறுவாழ்வு மற்றும் மறுகட்டமைப்பு
போன்றவைகளைக் கவனிக்கவும், அன்றாடப் பணிகளை நிறைவேற்றவும் இடைக்கால நிர்வாக
அமைப்பு ஒன்றினை ஏற்படுத்துவது அவசியம்' என்றும் வலியுறுத்தினார். இந்த
யோசனைக்கு அமைச்சர் பேராசிரியர் பீரிஸ், "இது அரசமைப்புச் சட்டத்துக்கு
முரணானதாகக் கருதப்படும். இத்திட்டத்தை அதிபரோ, உயர்நீதிபதியோ
ஏற்கமாட்டார்கள். இப்படியொரு நிலை வந்தால் அதிபர் இந்தப் பிரச்னையில்
குறுக்கிட ஆரம்பித்துவிடுவார்' என்றார். நார்வே குழுவினர் அரசுத் தரப்புக்கு
சிறிதுகால அவகாசம் அளிக்கவேண்டும் என புலிகள் தரப்பினரிடம் கேட்டுகொண்டனர்.
பாலசிங்கம், "இதுபோன்ற நடவடிக்கைகளால் பிரபாகரன் மிகுந்த ஏமாற்றத்துக்கு
ஆளாகியுள்ளார்' என்று கூறியதற்குப் பதிலாக பீரிஸ், "இது வேண்டும் என்று
ஏற்படுத்தப்படுகிற தாமதம் அல்ல' என்றார். பேச்சுவார்த்தையின் இறுதியில்,
புலிகள்-அரசுத்தரப்பு இணைந்து செயல்படுவது (ஜாயிண்ட் டாஸ்க் ஃபோர்ஸ்) என்பதே
முக்கிய முடிவாக அமைந்தது. இது தவிர, இடைக்கால அரசு அல்லது நிர்வாகம்
உள்ளிட்டவற்றுக்கு எதிராக இருப்பது அரசமைப்பு என்பதும் அதிபர் என்பதும்
தெளிவாயிற்று. இதனை மீறி ரணில் விக்ரமசிங்கேவினால் எதுவும் செய்யமுடியாது
என்பதும் புரிந்துபோனது. முதல்கட்ட பேச்சுவார்த்தை விவரங்களை அக்டோபர்
இரண்டாவது வாரத்தில் வன்னி வந்த பாலசிங்கம், புலிகள் தலைவர் பிரபாகரனிடம்
விளக்கினார்.
பிரபாகரனும், "ரணில் விக்ரமசிங்கேவினால் அதிபரை எதிர்க்கமுடியாது,
அவ்வளவுதானே!' என்றார். "ஆமாம்!' என்ற பாலசிங்கம், "உலக அளவில் நாம்
சமாதானப்பேச்சின் பக்கம் உறுதியாக நிற்கிறோம் என்பது பதிவாகியிருப்பது ஒரு
சாதகமான அம்சம்' என்றார். அரசுத் தரப்பிலோ வேறுவகையான கண்ணோட்டம் இருந்தது.
"போர்நிறுத்தத்தால் அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் ஏற்றுமதித்துறையான ஆடைத்
தயாரிப்பு, அமெரிக்காவுடனான தேயிலை வர்த்தகம் மற்றும் முதலீடு உடன்படிக்கை
வரைவு மற்றும் முழு வடிவிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை
ஏற்படுத்துவதற்கு வழியமைத்த ராபர்ட், செலிக் அதிகாரிகளின் வாக்குறுதி மற்றும்
பிரசல்ஸில் கிடைத்த சலுகைகள் இவையெல்லாம் சாத்தியமாயின. அதற்கு முன்னர்
இருந்த இறுக்கமான சூழ்நிலையையும், தடைகளையும் இல்லாமல் செய்தது' என்கிறார்
பேச்சுவார்த்தையில் இலங்கை அரசின் சார்பில் பங்கேற்ற அமைச்சர் பேராசிரியர்
ஜி.எல்.பீரிஸ் (இலங்கையில் சமாதானம் பேசுதல்-கலாநிதி குமார் ரூபசிங்க,
பக்.184, பாகம்-2).
No comments:
Post a Comment