172: சுயநிர்ணய உரிமை!
இரண்டாம் சுற்றுப் பேச்சுவார்த்தை தாய்லாந்து தலைநகர் பாங்காக் அருகேயுள்ள
ரோஸ் கார்டன் ரிசார்ட்டில் நடைபெற்றது (3-11-2002). புலிகள் சார்பில்
சுப.தமிழ்ச்செல்வனும் கருணாவும் புதிதாகச் சேர்க்கப்பட்டனர். இது தவிர, ஜெய்
மகேஸ்வரன், விஸ்வநாத ருத்ரகுமாரன் கள ஆய்வில் உள்ளவர்கள் என்ற முறையில்
இணைக்கப்பட்டனர். அரசுப் பிரதிநிதிகளாக பாதுகாப்புச் செயலாளர் ஆஸ்டின்
ஃபெர்ணான்டோ, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் அஜீஸ் ஆகியோரும்
சேர்த்துக் கொள்ளப்பட்டனர். பேச்சுவார்த்தையின்போது அமைச்சர் பீரிஸ்,
கிழக்குப் பகுதியில் முஸ்லிம்-புலிகள் மோதல் நடைபெறுவதாகக் குறிப்பிட்டார்.
மேலும் அவர், இந்த மோதல் நிலத் தகராறு காரணமாக எழுகின்றது என்றும்
தெரிவித்தார். உடனே பாலசிங்கம், "இது தொடர்பான நடவடிக்கைகளை புலிகள் தலைமை
எடுத்து வருகிறது. இந்தப் பிரச்னை குறித்து, பிரபாகரன்-ஹக்கீம் இடையே
ஏப்ரலில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றும் கையெழுத்தாகியுள்ளது. புலிகளின்
பாதுகாப்புப் பிரிவினர் மோதல் நடைபெறாமல் ரோந்து சுற்றிவருகின்றனர். இது
குறித்த உளவுத் தகவல் அடிப்படையில் மோதலில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கைகளும்
மேற்கொள்ளப்படுகின்றன' என்றார். பேச்சுவார்த்தை முடிவில், கண்காணிப்புக்
குழுவின் அலுவலகக் கிளை ஒன்று மட்டக்களப்பு-அம்பாறை பகுயில் அமைக்கவும்
முஸ்லிம்கள் மீதான தாக்குதலை, அதன் தலைவர்கள், புலிகளின் தலைமையிடம்
உடனுக்குடன் தெரிவிக்கவும் வலியுறுத்தப்பட்டது. இது தவிர, மறுவாழ்வுப் பணிகள்
(சிரான்), இயல்பு வாழ்க்கை (எஸ்.டி.என்.), அரசியல் நிலவரம் (எஸ்.பி.எம்.)
ஆகிய துணைக் குழுக்களும் அமைக்கப்பட்டன. தேசியப் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட
விவரங்கள் மற்றும் முடிவுகள் தனக்குத் தெரிவிக்கப்படுவதில்லை என்று சந்திரிகா
(2-10-2002) தெரிவித்ததையொட்டி, இரண்டாம் சுற்றுப் பேச்சுவார்த்தை முடிவுகளை
சந்திரிகாவிடம் பிரதமர் தெரிவித்தார்.
இந்நிலையில், சற்றும் எதிர்பாராத விதமாக லட்சுமண் கதிர்காமர், "நார்வே
உண்மையான நடுநிலை நாடல்ல' என்று கருத்து தெரிவித்து அனைவரையும் அதிர்ச்சியில்
ஆழ்த்தினார். அப்படி ஒரு கருத்தை அவர் வேண்டுமென்றே தெரிவித்தாரா, அதிபர்
சந்திரிகாவுக்குத் தெரிந்துதான் வெளியிட்டாரா என்கிற சர்ச்சை தொடர்ந்தது.
அந்தப் புதிர் இன்றுவரை அவிழ்க்கப்படவில்லை (இலங்கையில் சமாதானம்
பேசுதல்-அடையாளம் வெளியீடு). போர்நிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தைகளின்
வெற்றியானது சர்வதேச நாடுகளின் உதவிகளில் தங்கியுள்ளது என
கண்டுகொள்ளப்பட்டது. போர் நடைபெற்ற காலங்களில் மறைமுக உதவிகள் தவிர,
வெளிப்படையான வேறு எந்த உதவிகளும் இலங்கை அரசுக்கு வந்து சேரவில்லை.
புலிகளின் விமானப்படை விமானத்தளம் மற்றும் சர்வதேச விமானநிலையம்
தாக்குதலுக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகளின் வருகை முற்றிலுமாக தடைப்பட்டது.
எனவே இலங்கைக்கு நிதி அளிப்போர் மாநாடு ஒன்றைக் கூட்டுவது அவசியமாயிற்று.
போர்நிறுத்தத்தின் பலன் சாதாரண மக்களின் வாழ்வில் முன்னேற்றமும், வளமும்,
வசதியும் சேர்ப்பதில் தங்கியிருந்தபடியால், இந்த நிதியளிப்போர் மாநாட்டைக்
கூட்ட புலிகளும் உறுதுணையாக இருந்தனர். இதன்படி இந்த மாநாடு, நார்வே நாட்டின்
தலைநகர் ஆஸ்லோவில் உள்ள ஹோல்மெங்கொலன் பார்க் ஓட்டலில், 2002-ஆம் ஆண்டு
நவம்பர் 25-இல் கூடியது. 37 நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட
பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டனர். ஆசியா-பசிபிக் நாடுகள், வடஅமெரிக்க,
ஐரோப்பிய நாடுகள் ஆகியவை இம்மாநாட்டில் பங்கேற்றன.
இந்த மாநாட்டில் நார்வே நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் பீட்டர்சன்
பேசுகையில், "போர்நிறுத்தத்தின் வெற்றி, மக்களின் ஆதரவில் உள்ளது. இந்த ஆதரவு
நீடிக்க வேண்டுமானால், அவர்களது வாழ்க்கையில் போர்க்காலச் சூழலைவிட
நிம்மதியான, வசதியான, அத்தியாவசியப் பொருள்கள் உடனடியாக கிடைக்கிற சூழல்
நிலவவேண்டும். இதற்கு மற்ற நாடுகளின் நிதியுதவி தேவைப்படுவதாக உள்ளது' என்று
குறிப்பிட்டார். இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, "இந்தப்
போர்நிறுத்தம், 18 ஆண்டுகளின் போரால் ஏற்பட்ட பாதிப்புகளின் பின்
உருவாகியுள்ளது. மக்களின் வாழ்க்கையை போர் புரட்டிப் போட்டுவிட்டது. அவர்களது
வாழ்க்கையில் புத்தொளியும், புதுவாழ்வும் தென்பட வேண்டுமானால் சர்வதேச சமூகம்
தங்களது நிதியளிப்பு மற்றும் முதலீடுகள் மூலம் ஆதரவளிக்க வேண்டும். இந்த
இடைக்காலப் போர்நிறுத்தமானது நிரந்தரப் போர்நிறுத்தமாக மாற நீங்கள்
உதவவேண்டும்' என்றும் தனது பேச்சில் வலியுறுத்தினார். அடுத்துப் பேசிய
அமெரிக்க வெளியுறவுத்துறை துணை அமைச்சர் ரிச்சர்ட் ஆர்மிடேஜ் வன்முறை
குறித்தும், புலிகளின் செயல்பாடுகள் குறித்தும் விமர்சித்தார். புலிகள்
ஆயுதங்களைக் கீழே போடுவதுடன், தனிநாடு கோரிக்கையையும் கைவிட வேண்டும்
என்றார். இந்தக் கருத்து, விடுதலைப் புலிகளைப் பற்றிய இலங்கை அரசுகளின்
விமர்சனத்தினால் எழுந்தது ஆகும். இதனை உடனடியாக மறுக்க பாலசிங்கம்
விரும்பினாலும், தனக்கு வழங்கப்படும் நேரத்துக்காகக் அவர் காத்திருந்தார்.
அவருக்குப் பேசுவதற்கான நேரம் வழங்கப்பட்டபோது, மிக மென்மையான மொழியில்,
இலங்கை இனப் பிரச்னை குறித்தும் அந்தப் பிரச்னையில் ஏற்பட்ட நிகழ்வுகள்
குறித்தும் தமிழர்கள் மெல்ல மெல்ல ஆயுதம் தாங்கவேண்டிய அவசியம் ஏற்பட்டது
குறித்தும் விளக்கினார்:
"ஜனநாயக வழிமுறைகளில் போராடிய எங்கள் தலைவர்களைப் பேரினவாதிகள் தங்களது
சட்டங்களின் மூலம் ஒடுக்கியதும், தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டதும், அவர்களது
உரிமைகள் மறுக்கப்பட்டதும், மொழி குறித்த சட்டங்களாலும், அரச வன்முறைகளாலும்
நடைபெற்றன. வடக்கு-கிழக்கில் கடந்த 20 ஆண்டுகளாக போர்ச் சூழல் நிலவுகிறது.
இதற்கெல்லாம் வழிவகை காண அரசியல் விவகாரக் குழு அமைக்கப்பட்டிருக்கிறது.
அக்குழு பேசி நல்ல முடிவெடுத்தால், யாரும் ஆயுதமேந்தமாட்டார்கள். எங்கள் மீது
திணிக்கப்பட்ட போரினால், உடைமைகளையும் உயிர்களையும் இழந்தது தமிழர்கள்தான்.
60 ஆயிரம் பேர் இறந்தனர். ஒரு லட்சம் பேர் படுகாயமுற்று ஊனமுற்றவர்களாகவும்
ஆனார்கள். லட்சக்கணக்கான மக்கள் உங்களது நாடுகளில் மட்டுமல்ல, இதர
நாடுகளிலும் அகதிகளாக வாழ்கிறார்கள். எங்களது பகுதிகளில் மனித உரிமைகள்
அப்பட்டமாக மீறப்படுகின்றன. ராணுவத்தினருக்கு சகல அதிகாரங்களும் சட்டங்கள்
மூலம் வழங்கப்பட்டுவிட்டன. அவர்கள் விரும்பினால் எந்தத் தமிழனையும்
பிடித்துச் செல்லலாம்; விசாரிக்கலாம்; கொல்லலாம். அவர்களது உடலைப்
பெற்றோரிடம் உறவினரிடம் தரவேண்டியதில்லை. எரிக்கவும், புதைக்கவும்
அவர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுவிட்டது. இவ்வாறு ஆயிரக்கணக்கானோர் மறைந்து
போயிருக்கிறார்கள். இவையெல்லாவற்றுக்கும் ஒரு முடிவு ஏற்பட்டது. அதுதான்
தமிழர்களின் ஆயுதப் போராட்டம். நாங்கள் இதனை விரும்பவில்லை. எங்களது உரிமைகள்
மீண்டும் எங்களுக்கு வழங்கப்பட்டால் இந்த ஆயுதமே எங்களுக்குத் தேவையில்லை.
ஏ-9 என்பது தேசிய நெடுஞ்சாலை. யாழ்ப்பாணம்-கண்டி செல்லும் சாலை. வவுனியா
வழியாகச் செல்கிறது. இந்தச் சாலையில் நீங்கள் பயணம் செய்து பாருங்கள்.
இரண்டாம் உலகப் போரின் அழிவுகள், பேய்கள் வாழும் ஊரை நினைவுபடுத்தியதாக
வரலாறுகளில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. அதேவகையான காட்சிகளை நீங்கள் இந்த
ஏ-9 சாலையில் காணமுடியும். வறுமையும் இயலாமையும் எங்களுக்கு
விதிக்கப்பட்டுவிட்டன. இதிலிருந்து விடுபட எங்கள் மக்கள் விரும்புகிறார்கள்;
நாங்கள் விரும்புகிறோம்' என்று பாலசிங்கம் குறிப்பிட்டதும் அங்கு நிசப்தம்
பேசியது. சற்று நேரம் அமைதி நிலவியது. கூடியிருந்தவர்களின் உள்ளங்களில்
கண்ணீர் துளிர்விட்டது. இதனைத் தொடர்ந்து 70 லட்சம் டாலர் நிதியை மனிதநேய
நிதியாக அளிப்பது என்று கூட்டத்தில் முடிவாயிற்று. மாநாட்டின் இறுதித்
தீர்மானத்தில் வரலாற்று சிறப்புமிக்க இந்தப் பேச்சுவார்த்தை வெற்றிபெற
வாழ்த்தும் தெரிவிக்கப்பட்டது. புலிகள் சார்பில் ஜெய் மகேஸ்வரன், ரெக்கி,
சுதாகரன் நடராஜா, அடேல் உள்ளிட்டோரும் பாலசிங்கத்துடன் கலந்துகொண்டனர். இந்த
மாநாட்டில் கலந்துகொண்ட ஜப்பானியப் பிரதிநிதியான ஆகாஸி, இதேபோன்ற நிதியளிப்பு
கூட்டம் ஒன்றை 2007-ஆம் ஆண்டு மே மாதத்தில் கூட்ட தங்கள் அரசு முடிவு
செய்திருப்பதாக, பாலசிங்கம், ரணில் விக்ரமசிங்கே இருவரிடமும் தெரிவித்தார்.
27-11-2002 அன்று, பிரபாகரனின் மாவீரர் தின உரையில், "திம்பு மாநாட்டின்போது
எங்களது விருப்பம் என்னவென்பதை தெளிவுபடுத்திவிட்டோம். எங்களது மூன்று
அடிப்படைக் கோட்பாடுகளான தமிழர் தாயகம், தமிழ்த்தேசியம், சுயநிர்ணய உரிமை
ஆகியவை ஏற்கப்பட்டு அதனடிப்படையிலான அரசியல் தீர்வை மக்கள் தீர்மானிப்பர்
என்று அப்போது கூறினோம். தாய்லாந்தில் பேச்சுவார்த்தை நடக்கிற இப்போதும்
இதையே வலியுறுத்த விரும்புகிறோம். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்த எமது
மக்களுக்கு பூரண உரிமையுண்டு. தமிழர்கள் தங்களது மண்ணில் மரியாதையுடன் கூடிய
சுயநிர்ணய ஆட்சியில் வாழ விரும்புகிறார்கள். அவர்கள் மொழி மற்றும் தேசியம்
குறித்த தங்களது அடையாளத்தை என்றுமே இழக்க விரும்பமாட்டார்கள். தனித்துவமான
இனம் என்ற அடிப்படையில், அவர்கள், சுயநிர்ணய உரிமை உடையவர்களாவர்.
இவ்வுரிமை உள்ளக மற்றும் வெளியக சுயநிர்ணய உரிமை என்ற இரண்டு அம்சங்களைக்
கொண்டதாகும். உள்ளக சுயநிர்ணய உரிமை என்பது பிராந்திய சுயாட்சியை
வழங்குகிறது. வெளியக சுயநிர்ணய உரிமை என்பது ஐ.நா. வரையறுத்த அம்சங்களைக்
கொண்டதாகும். இதனைத் தவிர்த்த எந்த முடிவும் எங்களது மக்களுக்கு ஏற்றதாகாது.
சுய ஆட்சி, சுய நிர்வாகம் போன்ற எங்களது கோரிக்கைகளை ஏற்காத நிலையில்தான்
சுயநிர்ணய உரிமையை வலியுறுத்துகிறோம். இதனை மறுத்தால் சுதந்திர அரசு என்பதே
எங்களது வழி' என்று தெளிவுபடுத்தினார்.
173:! பேச்சுவார்த்தை முறிந்தது! புலிகளின் சுயநிர்ணயப் பிரகடனமே நார்வே நாட்டின் தலைநகரான ஆஸ்லோவிலுள்ள
ரேடிசன் ஹோட்டலில் நடைபெற்ற மூன்றாவது சுற்றுப் பேச்சுவார்த்தையின் முக்கிய
அம்சமாக இருந்தது. டிசம்பர் 2,3,4,5 தேதிகளில் அடுத்தடுத்து நடந்த
அமர்வுகளில் சுயாட்சிக்கான அதிகாரப் பகிர்வுக்கு அரசுத் தரப்பு
ஒத்துக்கொண்டது. நான்காவது சுற்றுப் பேச்சுவார்த்தை தாய்லாந்து நாட்டின்
நாக்கோன் பத்தோம் என்னும் நகரில் 2003-ஆம் ஆண்டு ஜனவரி 6 முதல் 9-ஆம் தேதிவரை
நடைபெற்றது. பேச்சுவார்த்தைகளின் இறுதியில் உலக நாடுகளிடமிருந்து
வடக்கு-கிழக்குப் பகுதிகளின் புனரமைப்பு மற்றும் மறுவாழ்வுக்காகப் பெறப்படும்
நிதியினை யார் பெறுவது, எவர் பொறுப்பில் வைத்துக் கையாளுவது என்பதும்,
பாதுகாப்புவளையப் பகுதிகளில் தமிழர்கள் குடியேற்றம், குறித்தும் அவ்வாறு
குடியேறும் மக்களில் விடுதலைப் புலிகள் அமைப்பினர் இருந்தால், அவர்கள்
ஆயுதங்களைக் களையவேண்டும் என, ஏற்கெனவே ஜெனரல் சரத் ஃபொன்சேகா துணைக்குழு
கூட்டத்தில் (டிசம்பர் 14, 2002) கூறியது குறித்தும் விரிவாக
விவாதிக்கப்பட்டது. விவாதத்தின்போது, போர்நிறுத்தம் நடைபெறுவதைச்
சீர்குலைக்கவே ராணுவத்தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என புலிகள்
சுட்டிக்காட்டினர்.
இறுதித் தீர்மானமாக, உலக நிதியளிப்போரிடமிருந்து பெறப்படும் நிதியைக் காப்பது
உலக வங்கியின் பொறுப்பில் விடுவது என்றும் முடிவானது. ஐந்தாவது சுற்றுப்
பேச்சுவார்த்தை, பாலசிங்கத்தின் உடல்நிலை மோசமானதன் காரணமாக, அவரால்
அதிகதூரம் பயணம் செய்யமுடியாத நிலையில், ஜெர்மனியின் பெர்லின் நகரத்தில் உள்ள
நார்வே தூதரக வளாகத்தில் நடைபெற்றது (7-8, பிப்ரவரி 2003). இந்தப்
பேச்சுவார்த்தைத் தொடங்க இருந்த சிறிது நேரத்துக்கு முன்பாக கடற்படையானது,
புலிகளின் படகொன்றை வழிமறித்தது என்றும், அதிலிருந்த 3 கடற்புலிகள் சயனைட்
அருந்தத் தயாராக இருப்பதாகவும் கடற்பிரிவுத் தலைவர் சூசை, பாலசிங்கத்திடம்
தெரிவித்தார். அங்கிருந்த அமைச்சர் மிலிண்டா மோரகோடாவிடம், விளைவுகள்
மோசமாவதைத் தடுக்கவேண்டும் என்று பாலசிங்கம் கேட்டுக்கொண்டார். இந்தச்
செய்திப் பரிமாற்றத்துக்கிடையே 3 கடற்புலிகளிடமிருந்தும், தகவல் தொடர்பு
இல்லை என்று மீண்டும் சூசையைத் தொடர்புகொண்டு, தெரிவித்தார்.
போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழுத் தலைவர் ஜெனரல் ஃபுருகோவ்ட், அந்த மூன்று
கடற்புலிகளும் சயனைட் அருந்திய நிலையில் படகு தகர்க்கப்பட்டது என்றும் தகவல்
தெரிவித்தார். இந்தச் சம்பவம், இந்தப் பேச்சுவார்த்தையைக் குலைப்பதற்காக
நடத்தப்பட்ட ஒன்று என்று பாலசிங்கம் குற்றம் சாட்டினார். கடற்புலிகளின்
அத்தியாவசியத் தேவைகளை இவ்வாறு தடுப்பது தவறு என்றும் கூறினார். இதற்கான
வழிமுறைகள் உடனடியாக வகுக்கப்படும் என்று மிலிண்டா கூறினார். உலக
நாடுகளிலிருந்து பெறப்படும் நிதியிலிருந்து வடக்கு-கிழக்குப் பகுதிகளின்
புனரமைப்புக்கு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும் என வலியுறுத்திய
பின்னர், அவ்வாறு ஒதுக்க ஒப்புக்கொள்ளப்பட்டது. பெர்லின்
பேச்சுவார்த்தைக்குப் பிறகு பாலசிங்கத்தை வன்னிப் பகுதிக்கு பிரபாகரன்
அழைத்தார். அவரும் மார்ச் 2-ஆம் தேதி பிரபாகரனைச் சந்தித்த அடுத்தநாள்
போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுத் தலைவர் ஜெனரல் ஃபுருகோவ்டுக்குப் பதிலாக
நியமிக்கப்பட்ட ஜெனரல் ட்ரைகாஃப் டெலிப்சன் பிரபாகரனையும் மற்றவர்களையும்
சந்தித்தார். அப்போது பிரபாகரன் கடலில் எங்களது நடமாட்டத்தைத் தடுக்கும்
ராணுவம், போர்நிறுத்தக் காலத்திலும் ஏராளமான நவீன ஆயுதங்களை வாங்கிக்
குவிக்கிறது; மாறாக எங்களை ஒடுக்குகிறது என்றும் முறையிட்டார்.
இந்த நேரத்தில் புலிகளின் கப்பல் என்று கருதி, வணிகக் கப்பல் ஒன்றை கடற்படை
தாக்கி, மூழ்கடித்தது. அந்தக் கப்பலில் இருந்த 11 கடற்புலிகள்
கொல்லப்பட்டனர். இதற்கிடையில் ஆறாவது சுற்றுப் பேச்சுவார்த்தை நடைபெறவேண்டும்
என நார்வே சமாதானப் பேச்சுவார்த்தைக் குழுவினர் வற்புறுத்தினர். ஆறாவது
சுற்றுப் பேச்சுவார்த்தை ஜப்பான் நாட்டின் ஹக்கோனே என்னும் இடத்தில்
நடைபெற்றது (18-21, மார்ச் 2003). இந்தப் பேச்சுவார்த்தையின் தொடக்கமே சூடாக
இருந்தது. கடற்படைத் தாக்குதல் மற்றும் 3 கடற்புலிகள் மரணம் நேர்ந்தது
குறித்தும், வணிகக்கப்பல் தாக்கப்பட்டது குறித்தும், போர்நிறுத்தத்தைப்
பயன்படுத்திக்கொண்டு ஏராளமான அளவில் ஆயுதங்களை ராணுவத்துக்காக வாங்கியது
குறித்தும், மறுவாழ்வுத் திட்டங்களுக்குப் போதிய நிதியளிக்காமை, இடம்பெயர்ந்த
தமிழர்களின் இடங்களில் குடியமர்த்த ராணுவம் விதிக்கும் தடைகள் குறித்தும்
விவாதிக்கப்பட்டன. அமைச்சர் பீரிஸ், ஆயுதம் வாங்கிக் குவிக்கப்படுவதை
மறுத்தார். மற்ற புகார்கள் குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தை ஏப்ரல் 29-லிருந்து மே 2-ஆம் தேதி வரை
தாய்லாந்தில் நடைபெறும் என்று உறுதி செய்யப்பட்டது.
இதுவரை நடைபெற்ற ஆறு சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் புலிகளுக்கு சாதகம் என்று
பார்த்தால் அந்த அம்சம் குறைவு என்றும், பாதகமான அம்சங்களே அதிகம் என்றும்
புலிகள் இயக்கத்தால் மதிப்பிடப்பட்டது. அரசுத் தரப்பில் வழங்கப்பட்ட
வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை; வடக்கு-கிழக்கு புனரமைப்புப்
பணிகளுக்கும் போதிய நிதியாதாரம் வழங்கப்படவில்லை; மீனவர்கள் கடலில்
மீன்பிடிக்கச் செல்லமுடியவில்லை; போரில் இடப்பெயர்வு ஆனவர்களை மீண்டும்
அவர்களது இடத்தில் குடியமர்த்த முடியவில்லை; பாதுகாப்புக் காரணங்கள் என்று
ராணுவம் மறுக்கிறது என்றும் புலிகளால் புகார் கூறப்பட்டது. இதுகுறித்து
பாலசிங்கம், "வார் அண்ட் பீஸ்' என்னும் தனது நூலில், ""யுத்தநிலையைக்
குறைத்தல், இயல்பு நிலையை ஏற்படுத்துதல் இரண்டும் ஒன்றோடொன்று இணைந்ததாகும்.
இதன்மூலம் மக்களின் இயல்பு வாழ்க்கை சாத்தியப்படுத்தப்படும். ராணுவ
ஆக்கிரமிப்பு மூலம் மக்களின் உடைமைகள் பறிக்கப்பட்டு அவர்களின் அமைதி வாழ்வு
பறிபோவதை நியாயப்படுத்தும் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின்
நிலைப்பாடு, அரசுத்தரப்பால் எடுத்துவைக்கப்படும் அரசியல் தத்துவக்
கோட்பாடுகளுக்கு எதிரானது-முரணானது'' என்று போர் நிறுத்தக் கண்காணிப்புக்
குழுவின் தலைவருக்கு எழுதிய பதில் கடிதத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து புலிகள் தரப்பில் கூறப்பட்டதாவது- போர்நிறுத்த நடவடிக்கைகளுக்கு
ராணுவம் இடையூறு செய்கிறது. கடற்புலிகள் கடலில் செல்லத் தடை
விதிக்கப்படுகிறது. ராணுவத்துக்கு ஏராளமான ஆயுதங்களை வாங்கிக்
குவித்துக்கொண்டிருக்கிறார்கள். பேச்சுவார்த்தைகளில்கூட ஒப்பந்த நடவடிக்கைகள்
நடைபெறுகின்றனவா என்பதை ஆராய்வதை விட ஒவ்வொரு சுற்றுப் பேச்சுவார்த்தைக்கும்
முன்னதாகவும் அரசுத் தரப்பில் ஏதேனும் ஓர் அத்துமீறல் நடத்தப்பட்டு, அதன்
காரணமாக எழும், விவாதங்களிலேயே நேரம் வீணாகிறது.
இரண்டாம் சுற்றுப் பேச்சுவார்த்தையில் உருவாக்கப்பட்ட வடக்கு-கிழக்கு உடனடி
மனிதாபிமானப் புனரமைப்புத் தேவைகள் மீதான குழு, உலக வங்கியின்
பார்வைக்குண்டான வடக்கு-கிழக்கு புனரமைப்பு, கட்டமைப்புக்கான நிதிக்குழு
போன்றவற்றின் செயல்பாடுகள் சுருக்கப்பட்டுவிட்டன. மொத்தத்தில்,
""விடுதலைப்புலிகள் ஓரங்கட்டப்படுகிறார்கள். ஆகவே, பேச்சுவார்த்தைகளில்
இடம்பெறப்போவதில்லை என்று 21 மார்ச் 2003 அன்று அறிவித்தபோதிலும், தொடர்ந்து
யுத்தநிறுத்த உடன்படிக்கையை மதித்து நடக்கவும் சமாதானத்திற்காக புலிகள்
உழைக்கப் போவதாகவும்'' பாலசிங்கம் கூறினார்.
திங்கட்கிழமை, 15 பெப்ரவரி 2010 23:27 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
No comments:
Post a Comment