Saturday, November 6, 2010

57 : அறிஞர் அண்ணாவின் தலையங்கம்!

    அறிஞர் அண்ணா அவர்கள் 1958 ஜூன் 29, திராவிட நாடு இதழில், காலா காலமாகத்
      தமிழன் இலங்கையில் முறை வைத்துக் கொண்டு எவ்வாறு நசுக்கப்படுகிறான் என்பதற்கு
      எடுத்துக்காட்டாக எழுதிய தலையங்கக் கட்டுரை இதோ... ""தெருக்களில்
      தமிழர்கள்மீது பெட்ரோலைக் கொட்டி அவர்கள் உயிருடன் எரிக்கப்படுகையில்,
      ஜனங்கள் பேசாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததாக நேரில் கண்டவர்கள்
      என்னிடம் கூறினர். கடந்த மூன்று வார பயங்கர ஆட்சியில் முதல் சில தினங்களில்
      மாண்டவர்கள் மட்டும் குறைந்தபட்சம் 800 பேர் இருப்பார்கள். இவர்களில்
      பெரும்பாலோர் கலகங்களில் கொலையுண்டவர்கள். 400 முதல் 500 பேர் வரையிலாவது
      கொல்லப்பட்டிருப்பார்கள் என்பது அநேகரின் மதிப்பீடு.'' தமிழர்கள் தீவின்
      வடபகுதிக்கு ஓடுகிறார்கள். குறைந்தபட்சம் 20,000 பேர் தம் வீடு வாசல்களை
      விட்டு ஓடியிருப்பார்கள். இந்தத் தகவலை வெளியிட்டிருப்பது, தி.மு.க. அல்ல!
      லண்டன் மாநகரிலிருந்து வெளிவரும் ""டெய்லி டெலிகிராப்'' எனும் ஏட்டின்
      நிருபர். இலங்கையிலிருந்தால் இச்செய்திகளை அனுப்ப இயலாதென்று சென்னைக்குப்
      பறந்துவந்து, இங்கிருந்து ஜூன் 29-ஆம் தேதி இந்த விவரங்களை
      அனுப்பியிருக்கிறார். லண்டனுக்கு!! ""தினமணி'' ஏடு, இதனை எடுத்து, ஓரளவு
      போட்டிருக்கிறது. லண்டனிலிருந்து வெளிவரும் நியூ ஏட்டின் நிருபர் அவர்.
      அவருக்கு, இவ்வளவு அக்கறை! பறந்துவந்து, சென்னையிலிருந்து எழுதி
      அனுப்புகிறார்!! இலங்கையிலிருந்து நடந்ததென்ன என்பதைப் பற்றிச் சரியான விவரம்
      யாருக்கும் கிடைக்கவில்லை. நிருபர் பறந்து வருகிறார், செய்தி எடுக்க!
      இந்தியாவின் ஹை கமிஷனராக இலங்கையில் வீற்றிருக்கும் கண்டேவிய என்பார்
      பறந்தும் வரவில்லை-அதிகாரியையாவது அனுப்பி விவரம் தெரிவித்ததாகவும்
      தகவலில்லை!!
      நெஞ்சு கொதிக்குமளவிலும், உள்ளம் எரிமலையாகும் விதத்திலும் ஓராயிரம்
      செய்திகள் வருகின்றன. இலங்கைத் தமிழர்படும் அவதிகள் பற்றி... ஆவலுடன்
      அச்சமும் இங்குள்ள ஒவ்வொருவரையும் பிடித்தாட்டுகிறது. அங்கே, தமிழர்களின்
      நலன் பேணும் பொறுப்பிலிருப்பவரோ, பேசாதிருக்கிறார். அவரை அந்த வேலைக்கு
      அனுப்பிய தில்லி பீடமோ ஏதும் செய்யவில்லை. தில்லியின் அடிவருடி போல்
      விளங்கும் சென்னை அரசோ ஆகட்டும் பார்க்கலாம் போக்கிலேயே உள்ளது. தி.மு.க.
      உதித்த நாள் முதல், ""தமிழர்கள் சென்று வாழும் வெளிநாடுகளிலே எல்லாம் கூடிய
      வரையில் ஒரு தமிழரையாவது ஹை கமிஷனராக நியமிக்க வேண்டும்; அப்போதுதான், தானாடா
      விட்டாலும் தன் சதையாடும்; கொஞ்சமாவது தமிழர் தம் பிரச்னை புரியும்'' என்று
      கூறிவருகிறோம். நடைபெற்றுள்ள பல மாநாடுகளில் தீர்மானம் மூலமும் அரசுக்கு
      மக்கள் குரலை எடுத்துக்காட்டி வந்துள்ளோம். தில்லி எவ்வளவு தான் செவிடாக
      இருந்தாலும் ஒரு தமிழர் ஹை கமிஷனராக இருந்தால் அடிக்கடி சங்காவது ஊதிக்
      கொண்டிருப்பாரல்லவா, என்கிற சபலம் நமக்கு. அங்கே இந்தியத் தூதராக ஒரு வடவர்
      இருக்கிறார்! வடவர்களுக்குத்தான் தென்னாட்டின் பிரச்னைகள் என்றாலே
      புரிவதில்லையே!!
      சென்ற கிழமை பிரஜா சோஷியலிஸ்டு கட்சியின் பொதுக்காரியதரிசி எனப்படும் என்.ஜி.
      கோரே என்பார் தமிழ்நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுப் பல ஊர்களிலே
      பேசியிருக்கிறார். அகில இந்திய ரீதியிலிருக்கும் ஓர் இயக்கத்தின் காவலர்
      அவர்! அவரிடம் ""இலங்கைத் தமிழர் பிரச்னை பற்றித் தங்கள் கருத்து யாது?''
      என்று கேள்வி கேட்டிருக்கிறார்கள். ""அந்தப் பிரச்னையின் முழு விபரமும்
      எனக்குத் தெரியாது. எனவே நான் அதைப் பற்றி அதிகம் சொல்லுவதற்கில்லை'' என்று
      பதிலிறுத்திருக்கிறார். கோரே அவர்களின் கூற்றில் அடங்கியிருக்கும் அடக்கத்தை
      நாம் பாராட்டுகிறோம். ""விபரம் அறியேன்'' என்று வெளிப்படையாக அவர் வெளியிட்ட
      தன்மையை மெச்சுகிறோம். அதே சமயத்தில் ஒரு அகில இந்தியக் கட்சிக்குத்
      தமிழர்களின் பிரச்னை குறித்து எந்தளவுக்குப் புரிந்திருக்கிறது என்கிற
      உண்மையையும் நாம் உணரத் தவறக் கூடாது. கோரேக்கு மட்டுமல்ல, அ.இ. கம்யூனிஸ்டு
      கட்சியின் டாங்கேயானாலும் அஜாய்குமாரானாலும், அகில இந்தியக் காங்கிரசின்
      நேருவானாலும், தேபரானாலும் அவர்களுக்கெல்லாம் தமிழர்களின் பிரச்னை பற்றி
      அறிந்திடும் ஆவலும் அக்கறையும் அதிகம் இருப்பதில்லை. ஏனெனில் இந்தியா ஒரு
      உபகண்டம், அதிலும் தென்னகம் ஒரு மூலையில் கிடக்கிற பகுதி. இதன் துயரங்களையும்
      சோகங்களையும் நாம்தான் ஒருவருக்கொருவர் கட்டி அழுதுகொள்ள வேண்டுமே ஒழிய
      வடவர்களை நம்புவதிலும் அவர்கள் மூலம் பரிகாரம் கிடைக்கும் என
      எதிர்பார்ப்பதிலும் அர்த்தமில்லை.
      இலங்கையில் தமிழர்களுக்கேற்பட்ட அளவுக்கு இன்னலும் துன்பமும் ஒரு பத்து
      மார்வாடிகளுக்கும், குஜராத்திகளுக்கும் ஏற்பட்டிருக்குமானால் அவர்களது
      உள்ளமெலாம் பதறும். நேரு அவர்கள் "குளு'வுக்குப் போய் குளிர்ச்சி தேட
      மாட்டார்! கொதிக்கிறதே உள்ளம் என்று குமுறுவார்; அலறுவார்; அறிக்கைகள்
      விடுப்பார்; இலங்கைக்கு அதிகாரிகளையும் அனுப்புவார்!
      பெட்ரோலைக் கொட்டி எரிக்கப்பட்டனர். மாண்டோர் தொகை. 300-க்கு மேலிருக்கும்.
      வீடுவாசல்களை விட்டு ஓடினார்கள். கொள்ளையடிக்கப்பட்டனர். சூறையாடப்பட்டன.
      இப்படிச் செய்திகள் வருகின்றன. திடுக்கிடுகிறோம்; திகைக்கிறோம். ஏனைய அகில
      இந்திய கட்சிகளைப் போலன்றி இலங்கைவாழ் தமிழர்களின் பிரச்னை நமக்கு நன்றாகப்
      புரிகிறது. அங்குவாழ் தமிழர் தம் உழைப்பும் வியர்வையும் இலங்கையின்
      வளத்துக்கு எவ்வளவு பயன்பட்டிருக்கிறதென்பதை நம்மால் அறிய முடிகிறது.
      இலங்கையும் தமிழகமும், இன்று நேற்றல்ல. சரித்திர காலந்தொட்டுச் சகோதர
      நாடுகளாகும்! அங்கு இப்போது நடைபெறும் அமளிகளை இலங்கை முழுவதிலும் உள்ள
      சிங்களர் அனைவரும் விரும்புவர் என எண்ணுவதில்லை. படிப்பாளிகளும் நாகரிக
      மேன்மையும் நிரம்பிய அங்கு, வெறி கொண்டவர்கள் மட்டுமே இருப்பார்கள் என்பதல்ல;
      நல்லோரும் இருப்பார்கள். அதனை உணர்ந்த காரணத்தால்தான் கடந்த 22-ஆம் தேதி,
      நாடெங்கும் "இலங்கைத் தமிழர் உரிமைப் பாதுகாப்பு நாள்' நடத்திய தி.மு.க.
      பின்கண்ட தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறது. சம்பந்தப்பட்டோர் அனைவரது
      பார்வையிலும் படட்டும் என்று மீண்டும் அதனை இங்கு வெளியிடுகிறோம்.
      இலங்கையிலுள்ள ஒரு சில பொறுப்பற்ற சிங்கள அரசியல்வாதிகளின் தூண்டுதலின்
      பேரில் நடைபெறும் வெறிச் செயல்களுக்கு ஆளாகி உயிரையும், உரிமையையும்,
      உடமையையும் இழந்து அவதியுறும் இலங்கைவாழ் தமிழர்களின் நிலை கண்டு இக்கூட்டம்
      மிகவும் இரங்குகிறது. நீண்ட காலமாக இலங்கையைத் தாயகமாகக் கொண்டுள்ள
      தமிழர்களுக்கு நியாயமாக அளிக்கப்பட வேண்டிய ஜனநாயக உரிமைகளை வழங்குமாறு
      இலங்கை அரசியலாரை இக்கூட்டம் விரும்பிக் கேட்டுக்கொள்கிறது.
      அந்தப்படிக்கு இலங்கை அரசியலாரை இணங்க வைக்கும் முறையில், தங்களுடைய
      நல்லுறவையும், செல்வாக்கையும் முழுக்க முழுக்கப் பயன்படுத்த வேண்டும் என்று
      இந்தியப் பேரரசினரை இப்பொதுக்கூட்டம் வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறது. அந்த
      வகைக்கு இந்தியப் பேரரசினரைச் செயல்படத் தூண்டுவதற்கு ஆவனவெல்லாம் செய்யுமாறு
      சென்னை அரசியலாரை இந்தப் பொதுக்கூட்டம் வற்புறுத்துகிறது. இலங்கைத் தமிழர்தம்
      பிரச்னையில், சுமுகம் ஏற்படவேண்டுமென்பதில், தி.மு.க. எவ்வளவு அக்கறையும்
      விருப்பமும் கொண்டிருக்கிறது என்பதை, தீர்மானத்தின் வாசகங்கள் விளக்கும்.
      தில்லியும் சென்னையும் எவ்வளவுதான் இலங்கைவாழ் தமிழருக்கு இதுநாள் வரையில்
      "துரோகம்' செய்திருந்தாலும், இனியேனும் கொஞ்சம் சிரத்தை கொள்ள வேண்டும் என்று
      நாம் எதிர்பார்க்கிறோம்''.
      1958-இல் அறிஞர் அண்ணா அவர்கள் பிரச்னை எப்படி இருந்ததோ அதேபோன்ற பிரச்னைகள்
      இன்றும் கடுமையாக உருமாறி இருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால்,
      இந்தியா-தமிழ்நாடு-இலங்கை ஆகிய மூன்றிலுள்ள ஆட்சியாளர்களின் போக்கு மட்டும்
      மாறவே இல்லை. இருந்தாலும் தாய்த்தமிழகத்தின் தமிழ் இனமான உணர்வுள்ள தமிழர்கள்
      அனைவருமே தமது துக்கத்தைச் சுமந்து கொண்டு இலங்கைத் தமிழனுக்காகக் குரல்
      கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். 
      வியாழக்கிழமை, 29 அக்டோபர் 2009 20:37 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

No comments:

Post a Comment