Saturday, November 6, 2010

76 :'டெசோ' மாநாட்டில் தேசியத் தலைவர்கள்!

 மதுரையில் நடைபெற்ற "டெசோ' மாநாட்டில் கலந்துகொண்டு ஆந்திர மாநில
      முதல்வர் என்.டி.ராமராவ் ஆற்றிய உரையின் சில பகுதிகள் வருமாறு:
      ""இந்த மக்கள் மகாசமுத்திரத்தில், ஒவ்வொருவர் முகத்திலும் கவலையைக்
      காண்கிறேன். இலங்கையில் நம் தமிழ்க்குடிமக்கள் படும் கஷ்டத்தை நினைக்கும்போது
      நம் கண்கள் குளமாகின்றன. மக்களைக் காப்பாற்ற வேண்டிய அரசாங்கமே வன்முறையைக்
      கடைப்பிடிக்கிறது. மக்களை அடக்கி ஒடுக்குகிறது... சிறுபான்மையினருக்கு அன்பு
      காட்டி, கட்டிக்காத்து, பெரும்பான்மையினரையும் வளர்ப்பது எந்த அரசிற்கும்
      தலையாய கடமையாகும். சிறுபான்மையினர் அதிகமாக உள்ள பகுதிகளில் அவர்களுடைய
      மொழி, மதம், இனம், இதர உரிமைகள் காக்கப்பட வேண்டியது போக, அவர்களிடமிருந்து
      சாதாரண குடிமக்களுக்குரிய உரிமைகளைக்கூடப் பறித்து ஆதரவற்றவர்களாகச் செய்யும்
      முறையை என்னென்பது? சிறுபான்மை-மைனாரிட்டி வர்க்கத்தினர் இருக்கும் பகுதியில்
      அவர்களுக்கு அவசியமான பாதுகாப்பு கொடுப்பது அரசியல் நீதி அல்லவா? இதை இலங்கை
      அரசாங்கம் மறந்தது ஏன்? இது நியாயமா? இது தர்மமா? இது பொறுக்குமா? தர்மத்தின்
      பெயரால், சட்டத்தின் பெயரால், குடியரசு, ஜனநாயகம் என்ற உயர் அரசியல் முறையின்
      பெயரால், பண்பாட்டின் பெயரால், இந்த மாபெரும் அநீதிக்குத் தீர்வு காண
      அறைகூவல் விடுக்கிறேன். பரிகாரம் -பிராயச்சித்தம் செய்யக் கோருகிறேன்.
      இங்கே நாம் விடுக்கும் அறைகூவல் அனைவரது காதுகளிலும் விழவேண்டாமா? அனைவரது
      இல்லங்களிலும் எதிரொலிக்க வேண்டாமா? சுதந்திரம் நமக்கு உயிர் என்று
      சொல்லிக்கொடுத்தது சீவகசிந்தாமணி. உயிர் கொடுக்கும் தமிழரின் சுதந்திரம்
      பறிபோகக்கூடாது'' என்.டி.ராமராவ் தமிழில் பேசியபோது கரவொலி விண்ணைப்
பிளந்தது.
      பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ஏ.பி.வாஜ்பாய் பேசியதாவது: ""இலங்கையிலே
      தமிழர்களுக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய துயரத்தையும் -அதன் காரணமாகத் தமிழர்கள்
      எல்லாம் கொண்டிருக்கும் வேதனையையும் மனதில் கொண்டு அவைகளில் பங்குகொள்வதற்கு
      இங்கே வந்திருக்கிறேன். இலங்கையிலே தமிழர்கள் படுகிற அவதி உங்களை மட்டுமல்ல,
      இந்தியாவையே பாதிக்கக்கூடிய பிரச்னையாகும். அந்தத் தமிழர்களின் அவதி நம்முடைய
      அவதி. அவர்களுடைய கஷ்டம் நம்முடைய கஷ்டம். அந்நாட்டுத் தமிழர்களுடைய ரத்தம்
      நம்முடைய ரத்தம். அவர்களுடைய உணர்வுகளோடு நாங்களும் ஒன்றுபட்டு இருக்கின்றோம்
      என்பதைக் காட்டிக்கொள்ள நாம் இங்கே கூடியிருக்கிறோம்.
      தமிழ் மக்களைக் கஷ்டப்படுத்திக்கொண்டிருக்கும் ஜெயவர்த்தனாவிற்கு இந்த மாநாடு
      ஓர் எச்சரிக்கையாக விளங்க வேண்டும். இந்தக் கூட்டத்தைக் கண்டபிறகாவது மத்திய
      அரசு தனது மெத்தனப்போக்கைக் கைவிட வேண்டும். தேவையான நடவடிக்கைகளை
      எடுக்கவேண்டும். இந்தியா, இலங்கையிலே நடைபெறும் மனித வேட்டைகளைப்
      பார்த்துக்கொண்டு, சகித்துக்கொண்டிருக்காது என்பதை மெய்ப்பிக்க வேண்டும்''
      கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் (எஸ்) பிரிவுத் தலைவர் உண்ணிக்கிருஷ்ணன்
      கூறியதாவது:
      ""இலங்கைத் தமிழர்கள் அங்கே போய் குடியேறியவர்கள் அல்ல. அவர்கள் அந்த மண்ணின்
      பூர்வீகக் குடிகள். அவர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்வார்கள் என்ற
      நம்பிக்கை எனக்குண்டு. ஆனாலும் அவர்கள் தாங்கள் மானத்தோடு வாழ ஓர் இடம்
      வேண்டுமென்று கேட்கிறார்கள். இலங்கையிலே, தங்களுடைய மண்ணிலே, தங்களுடைய
      தனித்தன்மையைக் காப்பாற்றிக்கொள்ள அவர்கள் வாழவேண்டுமென்றுதான்
      கேட்கிறார்கள். அதிலே என்ன தவறு இருக்கமுடியும்?
      பல லட்சக்கணக்கான தமிழ்மக்கள் மீது ஜெயவர்த்தனா ஒரு யுத்தப் பிரகடனமே
      செய்திருக்கின்றார். இலங்கையிலே தமிழர்களுக்கு நடக்கின்ற கொடுமை
      இங்கேயிருக்கக்கூடிய நமக்கும் ஆபத்து வரவிருக்கின்றது என்பதற்கான அறிகுறி.
      ராஜீவ் காந்தி இந்தியாவின் பிரதமரானதிலிருந்து துரதிருஷ்டவசமாக இந்தியாவின்
      வெளிநாட்டுக்கொள்கையில் மாறுதல் ஏற்பட்டிருக்கிறது. தமிழர்களின் நிலைமையை,
      பிரச்னையைப் புரிந்துகொள்ள அவர் மறுக்கிறார். இலங்கைத் தமிழர்களே, தொடர்ந்து
      போராடுங்கள். இறுதி வெற்றி உங்களுக்கே'' அகாலிதளப் பிரதிநிதியான பல்வந்த்சிங்
      ராமுவாலியா எம்.பி. பேசியதிலிருந்து:
      ""இலங்கையில் போராடும் தமிழர்களின் வீரத்திற்கு என்னுடைய வணக்கம். இலங்கையில்
      காற்று உள்ளவரையிலும், நீர் உள்ள வரையிலும், நிலம் உள்ள வரையிலும்
      தமிழர்களின் கலாசாரம் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்குத் தொடர்ந்து நீடிக்கும்.
      ஆயிரம் ஜெயவர்த்தனாக்கள் வந்தாலும் அவர்கள் போவார்களே தவிர, அவர்களுடைய
      முயற்சியால் உங்களது கலாசாரத்தை, தனித்தன்மையை அழித்துவிட முடியாது.
      தமிழர்களே, உங்களுடைய போராட்டத்திற்கு எங்களது ஆதரவு என்றென்றும் உண்டு''
      மாநாட்டில் டாக்டர் சுப்ரமணியன்சுவாமி பேசியது:
      ""இலங்கையில் தவித்துக்கொண்டிருக்கும் என் சகோதர சகோதரிகளுக்கு நான்
      கூறுகிறேன் -என் குரல் உங்களுக்குக் கேட்குமானால், நான் சொல்வதைக் கேளுங்கள்
      -கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள். இந்தியா எப்போதும் உங்கள் பக்கம்தான்.
      நாங்கள் விரைவில் உங்களுக்கு உதவ வருவோம். ஜெயவர்த்தனாவே கேளும். உமது
      முதுமைப் பருவத்தில் உமது மூளை மழுங்காமல் இருந்தால், உமது காதுகள்
      செவிடாகாமல் இருந்தால் கேளும். தமிழர்கள் தனியாக இல்ல. அவர்கள் பக்கம் 80
      கோடி இந்தியர்கள் இருக்கின்றார்கள். தமிழர்களுக்கு நீர் செய்யும்
      கொடுமைகளுக்குப் பிரதியாகத் திரும்ப அனுபவிக்கும் நேரம் வந்தே தீரும்''
      கர்நாடக அரசுக் கொறடா பெருமாள் பேசுகையில், ""இந்திய ஒருமைப்பாட்டில் ராஜீவ்
      காந்திக்கு அக்கறை இருக்குமானால் ஈழத்தமிழர் பிரச்னைக்கு மத்திய அரசு உடனடித்
      தீர்வு கண்டிட வேண்டும்'' என்று குறிப்பிட்டார்.
      தெலுங்கு தேசக்கட்சி பொதுச்செயலாளர் உபேந்திரா எம்.பி. பேசுகையில்,
      ""இலங்கைத் தமிழர் பிரச்னை உள்நாட்டுப் பிரச்னை என்று ராஜீவ் காந்தி
      சொல்வாரானால், நடுநிலை நாடுகள் மாநாட்டில் நமீபியா பிரச்னையை, பாலஸ்தீனப்
      பிரச்னையை அவர் எதற்காக எழுப்பினார். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே
      போடப்பட்டுள்ள ஒப்பந்தங்கள் அத்தனையும் கடைப்பிடிக்கப்படவில்லை. இப்பொழுது
      சிதம்பரம் தலைமையில் சென்றிருக்கிற குழுவின் பேச்சுவார்த்தைகளும் எந்த
      முடிவுக்கும் கொண்டு வரபோவதில்லை. அப்படி முடிவிற்கு வந்தாலும் நிச்சயமாக
      அதனை ஜெயவர்த்தனா நிறைவேற்றப்போவதுமில்லை. கொடுத்த வாக்குறுதிகளை மீறுவது
      ஜெயவர்த்தனாவுக்கு வாடிக்கை'' என்றார்.
      காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சியின் அப்துல் ரஷீத் காபூலி எம்.பி.
      பேசும்போது, ""இலங்கைத் தமிழர் பிரச்னை -இங்கேயுள்ள தமிழர்கள் பிரச்னை
      மாத்திரமல்ல; இந்தியா பூராவும் இருக்கின்ற மக்கள் குமுறி எழவேண்டிய
      -கவலைக்குரிய, பிரச்னை என்பதால், இந்தப் பிரச்னையைத் தீர்க்க நாம் வழிகாண
      வேண்டும்... இலங்கையில் தமிழர்கள் இனப் படுகொலைக்கு ஆளாக்கப்பட்டுக் கொன்று
      குவிக்கப்படுவதை இந்தியா உணர்ந்துகொள்ள வேண்டும். இந்தப் பிரச்னையை
      உடனடியாகத் தீர்ப்பதற்கு வழிவகைகளைக் கண்டாக வேண்டும்'' என்றும் அவர்
      குறிப்பிட்டார்.
      திராவிடக் கழகத் தலைவர் கி.வீரமணி மாநாட்டில் பேசும்போது, ""எங்கள் தமிழர்கள்
      கொடுமைகளை அனுபவிக்கும்போது, இது ஏதோ தமிழ்நாட்டுப் பிரச்னை என்று பிரதமர்
      ராஜீவ் காந்தி இதுவரை சுட்டிக்காட்டி வந்தாலும் -தேசவிரோத சக்தி என்று
      சொன்னாலும் இப்போது வாஜ்பாய், பகுகுணா மற்றும் பல்வேறு தலைவர்கள் எங்களோடு
      குரல் கொடுக்கும்போது இனி என்ன சொல்ல முடியும்... மத்திய அரசே இனிமேல்
      தயவுசெய்து செப்படி விளையாட்டுக்களையெல்லாம் விளையாட வேண்டாம். எங்கள் இனம்
      அழிக்கப்படுவதை நாங்கள் ஒருக்காலும் பார்த்துக்கொண்டிருக்க முடியாது.
      இல்லாவிட்டால் அந்த முயற்சியில் நாங்களும் அழிந்துபோகத் தயாராகிவிட்டோம்''
      என்று குறிப்பிட்டார். மாநாட்டில் வரவேற்புரை நிகழ்த்திய ப.நெடுமாறன்
      பேசுகையில், ""இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு ஓர் அகில இந்திய வடிவம்
      கொடுக்கவும், இந்தியா முழுவதிலுமுள்ள அனைவரின் ஆதரவையும் இப்பிரச்னைக்குத்
      திரட்டவும், இது வெறும் தமிழர் பிரச்னை அல்ல; இந்தியாவின் தேசிய பிரச்னைகளில்
      ஒன்று என்பதை எடுத்துக்காட்டவும் இம்மாநாடு நடத்தப்படுகிறது... இந்திய அரசின்
      முயற்சியால் 1985-ஆம் ஆண்டு ஜூன் 18-ஆம் தேதி ஏற்படுத்தப்பட்ட போர்நிறுத்த
      உடன்பாடு ஒரு மோசடி நடவடிக்கையாக்கப்பட்டிருப்பதை நான் நேரில் கண்டேன். போர்
      நிறுத்த உடன்பாடு அமலில் இருந்ததாகச் சொல்லப்பட்ட மூன்று மாத காலத்தில்
      இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் சிங்கள ராணுவத்தால்
      சுட்டுக்கொல்லப்பட்டு விட்டார்கள். லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள்
      அகதிகளாக்கப்பட்டிருக்கிறார்கள்.
      அவர்கள் சொந்த நாட்டில் வாழமுடியாமல் இந்தியாவில் இரண்டு லட்சம் பேரும்,
      மலேசியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ்,
      ஜெர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகளிலும் சுமார் 3 லட்சத்துக்கும்
      மேற்பட்டவர்களும் அகதிகளாகச் சிதறிக் கிடக்கிறார்கள்... இலங்கைத் தமிழர்களின்
      பிரச்னையை இந்தியாவின் தேசியப் பிரச்னையாகக் கருதி, உடனடியாக நடவடிக்கை
      எடுக்கவேண்டும். தமிழர் பகுதிகளில் நேரில் சென்று 23 நாள்கள்
      சுற்றிப்பார்த்து அறிந்து வந்து சொல்கிறேன். அழிவின் விளிம்பில் நிற்கும்
      அந்த மக்களின் ஒரே நம்பிக்கை இந்தியாதான். அவர்களை அழிவிலிருந்து
      காப்பாற்றமுடியும் -காப்பாற்ற வேண்டும்'' என்றார்.
      இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநிலத் தலைவர் ஏ.கே.ஏ. அப்துல் சமது
      பேசும்போது, ""அந்த நாட்டில் ஒரு சமஷ்டி அரசியல் இருக்கவேண்டும் என்றுதான்
      தமிழ் மக்கள் ஆசைப்பட்டார்கள். ஆனாலும் அவர்களது கோரிக்கை புறக்கணிக்கப்பட்ட
      காரணத்தினால் சிங்களவரோடு சேர்ந்து வாழ முடியாததினாலேயே, இலங்கைத் தமிழர்கள்
      பிரிந்து வாழ்கிறோம் என்று சொல்கிற நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு உரிமைகள்
      முறையாக அளிக்கப்பட வேண்டும்'' என்று குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment