88 - விடுதலைப் புலிகளின் முதல் களப்பலி!தேர்ந்தெடுக்கப்படும் போராளிகளுக்குப் பயிற்சியளிக்க வவுனியா
காட்டுப்பகுதியில் ஓர் இடத்தைத் தேர்வு செய்து, அந்த இடத்துக்குப்
"பூந்தோட்டம்' என்று பெயர் வைக்கப்பட்டது. குடும்பத்தைத் துறத்தல், புகை
மற்றும் மதுவைத் தொடாதிருத்தல், ரகசியம் காத்தல் உள்ளிட்ட விதிகளுக்குட்பட்ட
போராளிகளுக்கு பயிற்சியளிக்கப்பட்டது. பல்வேறு வகையான துப்பாக்கிகள், ஏ.கே.47
வகைத் துப்பாக்கிகள், சிறு -குறு துப்பாக்கிகள் போன்றவற்றை இயக்குவது,
ராக்கெட் மூலம் குண்டு செலுத்துவது, நிலக்கண்ணி வெடிகளை வைப்பது, வெடிக்கச்
செய்வது, எறிகுண்டுகளை வீசுவது உள்ளிட்ட பயிற்சிகள் இங்கு அளிக்கப்பட்டன.
"புலிகளின் பயிற்சி முகாம்களில் போர்க்குரல், கைத்துப்பாக்கியால் சுடுவது
எப்படி, உயிர் பாதுகாப்பு, நீர் அடியில் நீச்சல், குண்டுவீச்சிலிருந்து
தப்புவது எப்படி?, போரில் கையாளப்படவேண்டிய முறைகள் மற்றும் ஒழுக்க விதிகள்
எனப் பல்வேறு தலைப்புகளில் நூல்களைப் பார்த்தேன். போர் முறைகள் பற்றி
ஆங்கிலத்தில்தான் நூல்கள் உண்டு. ஆனால் தமிழில் முதன்முதலாக புலிகளின்
முகாமில்தான் இதுபோன்ற நூல்களைப் பார்த்தேன்' என்று பழ.நெடுமாறன் தான்
எழுதியுள்ள "ஈழப் போர்முனையில் புலிகளுடன்' என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.
அந் நூலில் அவர் மேலும், "போராட்ட வரலாறு சம்பந்தப்பட்ட நூல்களையும் அங்கு
பார்த்தேன். அதில் ஒன்று, "தன்பிரீன் தொடரும் பயணம்' என்ற நூல் ஆகும். அந்த
நூலை எழுதியவர் எழுத்தாளர் கல்கியின் நண்பர் ப.ராமஸ்வாமி. அவர் 1932-34-இல்
சிறையில் இருந்தபோது அயர்லாந்து போராட்ட வரலாற்றைத் தமிழில் எழுதினார். அரை
நூற்றாண்டுக்குப் பிறகு தமிழீழத்தில் போராளிகளுக்கு இந்நூல் உத்வேகம்
ஊட்டுகிறது' என்றும் குறிப்பிட்டுள்ளார். இவ்வகையான முதல் படையணியில் கிட்டு,
சங்கர், பண்டிதர், செல்லக்கிளி, சுப்பையா, பொன்னம்மான் உள்ளிட்டோரும்,
இரண்டாவது அணியில் சீலன், புலேந்திரன், சந்தோஷம், ரஞ்சன் ஆகியோரும் மூன்றாவது
அணியில் பொட்டு, விக்டர், பஷீர்காக்கா, லிங்கம், கணேஷ், அருணா ஆகியோரும்
இடம்பெற்றிருந்தனர். புலிகள் தங்களுக்கு வேண்டிய ஆயுதங்களைத் தாக்குதல் மூலமே
பெற்றனர். இயக்கத்தில் ஏராளமான பேர் சேரவும் ஆயுதத் தேவையும் அதிகரித்தது.
அந்தச் சமயத்தில் ஆயுதங்கள் வெளிநாடுகளிலிருந்து வாங்கப்பட்டன. இதற்கான நிதி
வசதியை மக்களே அளித்தனர்.
தமிழர் பகுதிகளில் உள்ள குடும்பத்தினர், ஒரு குடும்பத்துக்கு ஒரு பவுன்
தங்கம் வீதம் வழங்கினர். இதுபற்றி அறிந்த சிங்கள அரசு, அடகுக்கடை மற்றும்
வங்கிகளில் அவசரத்தேவைக்காக வைத்த நகைகள் அனைத்தையும் கொழும்பில் மத்திய
கிளைக்கு எடுத்துச் சென்றது. நகையை மீட்கச் சென்றபோதுதான் இந்த உண்மை
மக்களுக்குத் தெரியவந்தது. இதன் காரணமாக மக்கள் அடகுக்கடை மற்றும் வங்கிகள்
முன்பாக பெரும் போராட்டங்களை நடத்தினர். இவ்வகையான 300 கோடி மதிப்பிலான
தங்கநகைகள், கொழும்பில் முடங்கியிருந்தது. அதில் பெரும்பாலான நகைகள்,
சம்பந்தப்பட்டவர்கள் அகதிகளாக நாட்டை விட்டுச்சென்றுவிட்டதால் இலங்கை அரசின்
கஜானாவில் சேர்க்கப்பட்டுவிட்டது. ஆயுதம் மற்றும் பயிற்சி செலவுகளுக்காக,
தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். பெருமளவு நிதியளித்ததாக ஆன்டன்
பாலசிங்கம் தனது "விடுதலை' என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார். விடுதலைப்
புலிகளின் மூத்த தலைவர்களில் ஒருவரான பேபி சுப்ரமணியம் (இளங்குமரன்),
வீரச்சாவு எய்திய கர்னல் சங்கர், "விடுதலைப்புலிகள்' என்னும் பத்திரிகையின்
ஆசிரியராகப் பணிபுரிந்த மு.நித்தியானந்தன் ஆகியோருடன் முதலமைச்சர் எம்.ஜி.ஆரை
அவரின் ராமாவரம் தோட்டத்தில் சந்தித்தபோது ஆயிரம் போராளிகளுக்கு
பயிற்சியளிக்க ஒரு கோடியும், அந்த ஆயிரம் பேருக்கு ஆயுதம் தரிக்க இன்னொரு
கோடியுமாக இரண்டு கோடி தேவைப்படும் என நிதியுதவி கேட்டதாகவும், அவரும்
மறுநாள் வரும்படி கூறியதாகவும் அந்நூலில் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து பாலசிங்கம் அந்நூலில் குறிப்பிட்டுள்ளதாவது: "நள்ளிரவில்
கோடிக்கான பணத்துடன் திருவான்மியூரில் உள்ள அலுவலகத்துக்குச் செல்வதில்
சிக்கல்கள் எழலாம். காவல்துறையினர் மடக்கினால் பிரச்னைகள் வரலாம்.
எம்.ஜி.ஆரிடம் விஷயத்தைக் கூறினோம். பாதுகாப்புக்கு ஒழுங்கு செய்வதாகக் கூறி,
யாரிடமோ தொலைபேசியில் பேசினார். இரு ஜீப் வண்டிகளில் ஆயுதம் தரித்த
காவல்துறையினர் அங்கு வந்தனர். எமது வாகனத்துக்கு முன்னும் பின்னுமாக ஆயுதம்
தரித்த காவல்துறையினர் வர திருவான்மியூரை அடைந்தோம். எமது வீட்டில் தலைவர்
பிரபாகரன், தமிழேந்தி, கர்னல் சங்கர் மற்றும் போராளிகள் காத்திருந்தனர். நூறு
ரூபாய் நோட்டுகளை எண்ணி முடிக்க விடிந்துவிட்டது' என்று தெரிவித்துள்ளார்.
இந்தப் பணத்தைக்கொண்டு ஆயிரம் போராளிகளுக்குப் பயிற்சியளிக்கும் திட்டம்
தொடங்கப்பட்டது.
விடுதலைப் புலிகள் அமைப்பில் முதன்முதலில் களப்பலியானவர் சங்கர். 1982-ஆம்
ஆண்டு ஜூலை 2-ஆம் தேதி யாழ்ப்பாணத்திலிருந்து பதினாறு கல் தொலைவில் உள்ள
நெல்லியடியில் ரோந்து சென்று கொண்டிருந்த போலீஸ் படையின் மீது கொரில்லாப்
படைகள் தாக்குதல் மேற்கொண்டனர். இந்தத் தாக்குதலில் நான்கு போலீசார்
சுட்டுக்கொல்லப்பட்டதுடன், மூன்று போலீசார் படுகாயமுற்றனர். போலீஸ்
படையினரிடமிருந்து பெருமளவு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. இந்தத் தாக்குதலை
அடுத்து சங்கரை வேட்டையாடியது ராணுவம். அவர் பதுங்கியிருந்த வீட்டை ராணுவம்
சுற்றிவளைத்துத் தாக்கியது. நேருக்கு நேராக நடந்த துப்பாக்கிச் சண்டையில்
சங்கரின் வயிற்றில் குண்டு பாய்ந்தது. ரத்தம் பீறிட்ட நிலையிலும் மூன்று
கிலோமீட்டர் தூரம் ஓடித் தன் நண்பர்களிடம் துப்பாக்கியை ஒப்படைத்துவிட்டு
மயங்கி விழுந்தார்.
பின்னர் மதுரைக்குக் கொண்டு சென்று மருத்துவமனையில் சேர்த்தனர்.
தமிழ்நாட்டில் நடந்த பயிற்சியை ஒழுங்குபடுத்துவதற்காக அப்போது
தமிழகத்திலிருந்த பிரபாகரன், உடனே மதுரை விரைந்தார். சங்கரின் கைகளைப்
பற்றிக்கொண்டு திகைத்து நின்றார். கடைசி நிமிடம், பிரபாகரன் கைகளைச் சங்கர்
என்கிற சத்தியநாதன் பற்றியபடியே இருக்க -அவருடைய உயிர் பிரிந்தது. தனது
இயக்கப் போராளியை, உயிர் நண்பனை இழந்த துக்கத்தில், "என் கைகளில் உயிர்
பிரிந்ததை இன்றுதான் காண்கிறேன்' என்று கண்ணீர் சிந்தினார் பிரபாகரன். அந்த
சங்கர் உயிர்துறந்த நவம்பர் 27-ஆம் நாள் மாவீரர் தினமாகக்
கடைபிடிக்கப்படுகிறது. "நடுகல்' வழிபாட்டு முறையும் அப்போதுதான் வந்தது.
89: கரும்புலிகளும், கடற்புலிகளும்!
1982-ஆம் ஆண்டு அக்டோபர் 27-ஆம் தேதி சாவகச்சேரி காவல்நிலையத்தின் மீது
நடத்தப்பட்ட தாக்குதல் அரசைக் கதிகலங்கச் செய்தது. இந்தத் தாக்குதலுக்குப்
பிறகு வடமாகாணத்தின் பல காவல் நிலையங்கள் மூடப்பட்டன. 1982, அக்டோபர் 27-ஆம்
தேதி அதிகாலை யாழ்-கண்டி பிரதான சாலையைத் துண்டித்த அதேசமயம், கடத்தப்பட்ட
மினி பஸ்ஸில் வந்த இன்னொரு பிரிவினர் காவல்நிலையத்தைத் தாக்கினர். கைக்குண்டு
வீசி ஆயுதக்கூடத்தை உடைத்துத் திறந்து 19 ரிப்பீட்டர் துப்பாக்கிகள், ஒன்பது
303 ரைபிள்கள், இரண்டு எந்திரத் துப்பாக்கிகள், ஒரு சுழல் துப்பாக்கி
உள்ளிட்ட ஆயுதங்களைக் கைப்பற்றினர். இத்தாக்குதலில் 10-க்கும் மேற்பட்ட
காவலர்கள் இறந்தனர். தாக்குதலுக்குத் தலைமை ஏற்ற சீலன் உள்ளிட்ட இரு
போராளிகள் அப்போது காயமுற்றனர்.
தனது ஐந்தாண்டுக்கால ஆட்சியில் கொடிய அடக்குமுறைகளையும், இனவெறியையும்
கட்டவிழ்த்துவிட்ட ஜெயவர்த்தனா, ஜனாதிபதி தேர்தலில் வாக்குக் கேட்க (1982
செப்டம்பர்) யாழ்ப்பாணம் வந்த அதே நாளில், பொன்னாலை பாலத்துக்கு அருகில்
வாகனங்கள் வருகையில் கொரில்லா வீரர்கள் தாக்கினர். பாலமும் நிலக்கண்ணி
வெடிமூலம் தகர்க்கப்பட்டது. கொடுமைகள் இழைப்பதில் பேர்போன பருத்தித்துறை
போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயவர்த்தனா விடுதலைப் புலிகளால்
சுட்டுக்கொல்லப்பட்டார். கிளிநொச்சியருகே, உமையாள்புரத்தில்
ராணுவப்படையினருடன் நடந்த நேரடி மோதலில் ராணுவத்தினர் காயத்துடன் தப்பி
ஓடினர். புலிகளை ஒழிக்க 1983 ஏப்ரலில் யாழ்ப்பாணத்தில், பாதுகாப்பு மாநாடு
என்ற பெயரில் நடக்கவிருந்த மாநாட்டுக்கு, யாழ் மாவட்ட அமைச்சர் விஜயக்கோன்
தலைமை ஏற்க, முப்படை அதிகாரிகள், தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்கள்
கலந்துகொள்வதாக இருந்தது. அம்மாநாட்டு மண்டபத்தையும், யாழ் செயலகத்தையும்
மாநாடு தொடங்கச் சில மணி நேரம் முன்னதாய் புலிகள் வெடிகுண்டுகளால் (1983
ஏப்ரல்) தகர்த்தனர். 1983 மே 18-இல் உள்ளூராட்சித் தேர்தலை வடக்குப்
பகுதியில் நடத்த இருப்பதான அறிவிப்பை சிங்கள அரசு வெளியிட்டது. இத்தேர்தலை,
தமிழர்கள் போட்டியிடாமலும், வாக்களிக்காமலும் புறக்கணிக்க வேண்டும் என்றும்,
மக்கள் ஸ்ரீலங்காவின் தேர்தல் மாயையிலிருந்து முற்றிலுமாக விடுபடுமாறும் அதன்
சகல நிர்வாகங்களையும் நிராகரிக்குமாறும் மக்கள் பங்கெடுக்கும் ஆயுதப்
போராட்டத்துக்குத் தயாராகுமாறும் வே.பிரபாகரன் அறிக்கை வெளியிட்டார்.
"தேர்தலில் வெற்றிபெற தமிழீழக் கோரிக்கையை முன்வைத்து வெற்றி பெற்ற தமிழர்
விடுதலைக் கூட்டணி, இதுபோன்ற தேர்தல்களில் மீண்டும் பங்கெடுப்பது, ஸ்ரீலங்கா
இனவாத அரசுக்கு முட்டுக்கொடுக்கும் செயலாகும்' என்றும் கடுமையாகக்
கண்டித்தார் பிரபாகரன். அவரின் கோரிக்கையை ஏற்காமல் தேர்தலில் போட்டியிட்ட
மூவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். தமிழீழ அரசியல் வரலாற்றில் விடுதலைப்
புலிகளின் கோரிக்கையை ஏற்று, மக்கள் தேர்தலை முற்றாகப் புறக்கணித்தனர்.
விடுதலைப்புலிகளின் கோரிக்கையை புறந்தள்ளி தேர்தல் களத்தில் நின்ற தமிழர்
விடுதலைக்கூட்டணியினர் பருத்தித்துறையில் 1 சதவீதமும், வல்வெட்டித்துறையில் 2
சதவீதமும், சாவகச்சேரியிலும் யாழ்ப்பாணத்திலும் பத்து சதவீதத்துக்கும்
குறைவான வாக்குகளைப் பெற்று மக்களிடையே மதிப்பிழந்தனர். இந்நிலையில் இலங்கை
அரசியலின் போக்கை மாற்றும்விதத்தில், யாரையும் சுட்டுத்தள்ளவும், அப்படி
சுட்டுத்தள்ளுவது விசாரணைக்கு உள்படுத்தப்படாமல் இருக்கவும், இறந்தவர் உடலை
ராணுவமே புதைக்கவும், எரிக்கவும் சட்டப் பாதுகாப்பைப் பெற்றது. இதன் காரணமாக
அரசின் பயங்கரவாதம் தலைவிரித்தாடியது. தமிழர் பெரும்பான்மையாக வசிக்கும்
பகுதிகளில் சிங்களவர்களைக் குடியமர்த்தும் போக்கும் தமிழ்ப்பெண்கள்
கற்பழிப்பும், கொலைகளும், தமிழ்க் கோயில்கள் தீவைத்து எரிக்கப்படுவதும்
அதிகரித்தது.
"தமிழர்களின் உயிரைப் பற்றியோ, தமிழர்கள் எங்களைப் பற்றி என்ன
நினைக்கிறார்கள் என்பது பற்றியோ எனக்கு எந்தவிதமான அக்கறையுமில்லை' என லண்டன்
நாளிதழுக்கு ஜெயவர்த்தனா பேட்டியளித்து, எரியும் நெருப்பில் எண்ணெய்
ஊற்றினார். அதே வேளை, 1983 ஜூலை 15-ஆம் தேதி ராணுவக்கூலிகளால் விடுதலைப்
புலிகளின் சிறந்த தளபதிகளில் ஒருவரான லூகாஸ் சார்லஸ் ஆண்டனி என்கிற சீலன்
படுகொலை செய்யப்பட்டார். இதற்கு பதிலடி கொடுக்க, திருநெல்வேலி பலாலி
வீதியில், புலிகளின் லெப்டினன்ட் செல்லக்கிளி தலைமையில் யுத்தச்
சீருடையுடனும் நவீன ரக ஆயுதங்களுடனும் 14 பேர் சென்று மாதகல் முகாமைச்
சேர்ந்த ராணுவத்தினர் நள்ளிரவில் ரோந்துபுரியச் சென்றபோது தாக்கி அழித்தனர்.
தாக்குதலில் ராணுவத்தினர் 13 பேர் கொல்லப்பட்டனர்.
இத்தாக்குதலில் கலந்துகொண்ட 14 போராளிகளுள் ஒருவராக பிரபாகரனும் இருந்தார்.
தானே தாக்குதலுக்குப் பொறுப்பேற்காமல், தனது தோழர்களும் அந்தப் பயிற்சியைப்
பெற வேண்டும் என்று செல்லக்கிளியைத் தலைமை தாங்கச் செய்தார். வெற்றிபெற்ற
நிலையில், தாக்குதலின் இறுதியில், செல்லக்கிளி எதிர்பாராதவிதமாக
உயிரிழந்தார். "பயங்கரவாதத்தை ஒழிப்போம்' என்று முழங்கிய ஜெயவர்த்தனா, தான்
அவமானமுற்றதாகக் கருதி, 1983 ஜூலை கலவரம் என்று அழைக்கப்படும் பயங்கர
கலவரத்தைத் தமிழர் வாழும் பகுதிகளிலெல்லாம் கட்டவிழ்த்துவிட்டார்.
ஜூலைக்குப் பிறகு விடுதலைப்புலிகளின் தேவை தமிழீழத்தில் உணரப்பட்டதால்,
பல்வேறு சமூகத்தாரும் அதில் இணைந்துகொள்ள ஆர்வம் காட்டினர். கொரில்லா
யுத்தக்குழுவாக இருந்த விடுதலைப்புலிகளின் எண்ணிக்கை உயரவும்,
ராணுவத்துக்குண்டான பலவகைப் பிரிவுகளாக, கரும்புலிகள் என்னும் தற்கொலைப்படை,
கடற்புலிகள் எனப்படும் கடற்படை, கடற்கரும்புலிகள் என்னும் தற்கொலைப்படை,
கிட்டு பீரங்கிப்படை, விக்டர் வாகனப்படை, சோதியா மகளிர் அணி, சார்லஸ் அந்தோனி
அதிரடிப்படை எனப் பல பிரிவுகள் தோற்றுவிக்கப்பட்டன.
No comments:
Post a Comment