ஜூலை 25, 1984-இல் சென்னை பெரியார் திடல் ராதா மன்றத்தில் இலங்கை தமிழினப்
படுகொலை நினைவாக ""கண்ணீர் நாள்'' எனத் தி.மு.கழகத்தால் அனுசரிக்கப்பட்டது.
அன்று நடந்த கூட்டத்தில் மு.கருணாநிதி குறிப்பிட்டதாவது:
""அரும்பாடுபட்டு நான் பலமுறை சந்தித்து, சந்தித்து, இந்த விடுதலை
இயக்கங்களின் இளம் தோழர்களிடம் பேசிப்பேசி, ஒருவேளை என்னுடைய முயற்சியினாலோ
அல்லது என்னைப் போல வேறு யாருடைய முயற்சியினாலோ-எனக்குத் தெரியாது-அந்த
இளைஞர்களே மனப் பக்குவப்பட்டு அந்த முடிவுக்கு வந்தார்களோ தெரியாது; ஸ்ரீ
சபாரத்தினம் தலைமையில் இயங்குகிற டொலோ என்கிற (பஉகஞ) இயக்கமும், பாலகுமார்
தலைமையில் இயங்குகிற ஈரோஸ் (உதஞந) என்கிற இயக்கமும், பத்மநாபா தலைமையில்
இயங்குகிற உடதகஊ என்கிற இயக்கமும் இந்த மூன்று இயக்கங்களும் ஓரணியில்
திரண்டு-அவர்கள் தனித்தன்மை வாய்ந்தவர்களாக இருந்தாலும் ஒரு கூட்டணியாக
உருப்பெற்று-தமிழ் ஈழத்தை முழுமையான சுதந்திர நாடாக
ஆக்குவது-உழைக்கும்-மக்களைக் கொண்ட அரசை உருவாக்குவது, முதலாளிகளுக்குச்
சொந்தமான வங்கிகளை, நிறுவனங்களை, தொழிலாளர், விவசாய அரசாங்கத்தின்
கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வருவது என்கிற ஒரு சமதர்ம சமத்துவ
நோக்கோடு-சுதந்திர தமிழ் ஈழத்தைப் பெற்றெடுக்க வேண்டும்; ஈன்றெடுக்க வேண்டும்
என்ற நிலையிலே இன்றைக்கு ஒன்று கூடி இருக்கிறார்கள். இன்னும் இரண்டு
இயக்கங்கள் இருக்கின்றன. ஒன்று முகுந்தன் தலைமையிலே இயங்குகிற தமிழ் ஈழ
மக்கள் விடுதலைக் கழகம் (டகஞப), இன்னொன்று தம்பி பிரபாகரன் தலைமையிலே
இயங்குகிற விடுதலைப் புலிகள் இயக்கம் (கபபஉ). அந்த இரண்டு இயக்கங்களும், இந்த
மூன்று இயக்கங்களோடு இணைந்து-அல்லது அவர்கள் விரும்பினால் அந்த இரண்டோடு இந்த
மூன்று இயக்கங்களும் இணைந்து-யார் யாரோடு இணைவது என்று பார்க்காமல் இந்த
ஐந்து பெரும் இயக்கங்களும் ஒன்றாக இணைய வேண்டும் என்பதுதான் காலத்தின்
கட்டாயம். அனைவரின் எதிர்பார்ப்பு'' என்றார். கூட்டத்தில் பேச வந்தவர்களும்,
கேட்க வந்தவர்களும் இக் கருத்தையே கருணாநிதி பேச்சுக்குப் பிறகு
வலியுறுத்தினார்கள் என்பது உண்மை.
அதே கூட்டத்தில் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன்,
""இந்தக் கண்ணீர் நாளில் நாம் குட்டிமணியை, தங்கதுரையை, ஜெகனை நினைத்துக்
கொள்கிறோம். வெலிக்கடை சிறையில் நான் குட்டிமணியுடன் ஒன்றாக இருந்தேன்; ஒரே
அறையில் இருந்தேன். அப்போது குட்டிமணிக்குக் குழந்தை பிறந்தது என்று செய்தி
வந்தது. என் குழந்தை கருப்பாய் இருக்குமா? சிகப்பாய் இருக்குமா என்று என்னைக்
கேட்டான். அந்தக் குழந்தையைப் பார்க்கவே இல்லை. இந்த நாளில் நாம்
கண்ணீரைத்தான் சிந்துகிறோம். குட்டிமணி கண்ணையே சிந்தியவன்'' என்றார்.
கூட்டத்தில் இரா. செழியன், அப்துல் லத்தீப், ஆற்காடு வீராசாமி, செ.
கந்தப்பன், தி.சு. கிள்ளிவளவன், செல்வேந்திரன், கோவை மகேசன், சிகாமணி,
தெள்ளூர் தருமராசன், டி.ஆர். பாலு முதலியோரும் கலந்துகொண்டு பேசினார்கள்.
"இலங்கையிலே கண்டிப்பகுதியை ஆண்ட கடைசித் தமிழ் மன்னன் பெயர்
விக்கிரமராஜசிங்கன். அவனைப் பிரிட்டிஷார் போரில் தோற்கடித்துக்
கண்டிப்பகுதியைக் கைப்பற்றினர். தோற்கடிக்கப்பட்ட விக்கிரமராஜசிங்கனுக்குக்
கண்ணுசாமி என்ற பெயரும் உண்டு. வேலூர் சிறையிலேயே தன் வாழ்க்கையைக் கழித்த
அம்மன்னன் தனது 56-வது வயதில் மரணமடைந்தான். அவனது கல்லறை வேலூர்
பாலாற்றங்கரையில் இன்றும் இருக்கிறது' என்று சென்னைக் கடற்கரையில் (8.8.83)
நடந்த கூட்டத்தில் திமுக தலைவர் மு. கருணாநிதி கூறினார். அது தொடர்பாக
பெங்களூரில் வசித்த விக்கிரமராஜசிங்கனின் கொள்ளுப்பேரன் கே.ஜி.எஸ்.
ராஜசிங்கனைச் சந்தித்தபோது கிடைத்த தகவல்கள்:
இலங்கையை ஆண்ட (கண்டிப் பகுதியை) மன்னன் நரேந்திரசிங்கன் மணமுடிக்க அரச
குடும்பத்துக்கு இணையான பெண்கள் கிடைக்கவில்லை. பட்டத்து அரசியாக சூரிய
வம்சத்தைச் சேர்ந்த பிற தேசத்து அரச குடும்பங்களிலிருந்து பெண் எடுப்பதெனத்
தூதுவர்களை மதுரைக்கு அனுப்பி வைத்தார்கள். மதுரையை (1709-இல்) நாயக்கர்கள்
ஆண்டு வந்த நேரம். அவர்கள் சூரிய வம்சமானதால் நாயக்கர் குடும்பத்திலிருந்து
பெண்ணெடுத்து அரசியாக்கிக் கொண்டான் நரேந்திரசிங்கன். அவனுக்கு பிள்ளைப்பேறு
இல்லை. தனக்குப் பிறகு நாடாளவென்று மனைவியின் சகோதரனை மதுரையிலிருந்து
வரவழைத்து பட்டத்திற்குரியவனாக்கினான். அவன்தான் கண்டியின் முதலாவது தமிழ்
மன்னன். பட்டப் பெயர் ஸ்ரீ விஜயராஜசிங்கன். அவரும் எங்களுடைய வம்சத்திலேயே
பெண் எடுத்தார். அவருக்கும் ஆண் வாரிசில்லை. அவர் இறந்த பின் அவரது தம்பி
கீர்த்தி ஸ்ரீராஜசிங்கா மன்னரானார்.
அவர் அரசாண்ட சமயத்தில் இலங்கையில் புத்தமதம் வலுவிழந்திருந்தது. மீண்டும்
அங்கே புத்தமதத்தைப் புத்துயிர் பெற வைக்கும் முயற்சியில் கீர்த்திஸ்ரீ
தீவிரம் காட்டினார். தூதுவர்களைச் சயாம் நாட்டுக்கு அனுப்பி, அங்கிருந்து
புத்த பிட்சுக்களை வரவழைத்து இலங்கையில் உள்ளோரைப் புத்த பிட்சுக்களாக
மாற்றும் வேலையில் ஈடுபடுத்தினார். அப்படி முதன் முதலாக வந்த புத்தபிட்சு
வெளிவத்தை சரணங்கரா என்பவராவார். இவரைக் கொண்டு, தமிழ்நாட்டில் தெய்வ
விக்கிரகங்களை ஊர்வலமாக எடுத்துச் செல்வது போல் புத்தரின் பல்லை ஊர்வலமாக
எடுத்துச் சென்று வழிபடச் செய்தார். இன்றுவரையும் நடைபெறும் "பெரஹரா'
எனப்படும் அவ்விழாவுக்கு அவரே மூலகர்த்தா!
கீர்த்தி ஸ்ரீராஜசிங்காவுக்கும் ஆண் வாரிசில்லை. அவருக்குப்பின் அவரது தம்பி
ராஜ அதிராஜசிங்கா ஆட்சிக்கு வந்தார். இவர் ஆட்சிக் காலத்தில் இந்தியாவில்
பிரிட்டீஷாரும் பிரெஞ்சுக்காரர்களும் போர்ச்சுகீசியரும் கவனம் செலுத்தியதைப்
போலவே இலங்கையின் மீதும் நாட்டம் கொண்டனர். ராஜ அதிராஜசிங்கா திடீரென
இறந்துவிடவே, ஆண் வாரிசில்லாத நிலையில் அவரது ஆட்சியில் மந்திரியாக இருந்த
பிலிமத்தலாவைக்கு மன்னராக வேண்டும் என்ற ஆசை இருந்தது. எனவே, மன்னரின்
மைத்துனரைப் பேருக்கு மன்னராக்கினார். அவரது பட்டப்பெயர்
ஸ்ரீவிக்கிரமராஜசிங்கன். அப்போது அவருக்கு வயது பதினெட்டு. மந்திரி
பிலிமத்தலாவையின் ஆசை நிறைவேறாதபடி ஸ்ரீவிக்கிரமராஜ சிங்கன் சிறப்பாக ஆட்சி
புரியவே, வெறுப்புற்ற மந்திரி கபடமாய்ச் செயல்பட ஆரம்பித்தார். பிரிட்டீஷார்
கண்டியைக் கைப்பற்ற பல முயற்சி செய்து தோற்றுப் போயிருந்த நேரம். மன்னர்
தமிழரானாலும் அதிகாரிகளாகச் செயல்பட்டவர்களில் சில சிங்களர்களும்
இருந்தார்கள். இவர்கள் அப்பாவி மக்களைக் கொடுமைப்படுத்தும் வேலைகளில்
ஈடுபட்டு வந்தனர். இந்த கொடுமைகளில் மந்திரிக்கும் உடன்பாடு உண்டு. கண்டியைப்
பிடிக்கும் நோக்கில் செயல்பட்டு வந்த பிரிட்டீஷாருக்கு நண்பரானார் மந்திரி
பிலிமத்தலாவை. கண்டி மன்னர் மீது பல அவதூறான கதைகளையும், அவரைக்
கொடுங்கோலனாகச் சித்திரிக்கும் நிகழ்ச்சிகளையும் ஆங்கிலேயர்கள்
பரப்பினார்கள். இவைகளுக்கு அந்த மந்திரி பேருதவியாக இருந்தார்.
ஒரு நாள் மன்னர் தெல்தெனியாவுக்கு அருகில் மெதமசநுவரா என்னுமிடத்தில் தன்
குடும்பத்தினருடன் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அங்கு பிரிட்டீஷார்
திடீரென்று தோன்றி மன்னரையும் குடும்பத்தினரையும் சிறைப்படுத்தினார்கள். இது
நடந்தது 18 பிப்ரவரி 1815-இல். அலவரடிக் குடும்பத்தினரையும் பிரிட்டீஷார்
கொழும்புக்குக் கொண்டு வந்தனர். அங்கு ஓராண்டு காலம் சிறையில் அடைத்து
வைத்திருந்தனர். இந்த ஓராண்டு காலம் முழுவதும் மக்கள் தங்கள் எதிர்ப்பைக்
காட்டிப் பலவகையில் பிரிட்டீஷாருக்கு இடைஞ்சல் செய்தனர். பிரிட்டீஷாருக்கு
உடந்தையாக இருந்த மந்திரிக்கும் பதவி தராமல் மொரீஷியஸýக்கு அடித்து
விரட்டினார்கள்.
மன்னர் கொழும்புவில் இருக்கும் வரை இது போன்ற தொந்தரவுகள் இருக்கத்தான்
செய்யும் எனக் கருதி எச்.எம்.எஸ். கான்வாலிஸ், எச்.எம்.எஸ். ஆன் என்னும்
கப்பல்கள் மூலம் மன்னன் ஸ்ரீவிக்கிரமராஜசிங்கனையும் குடும்பத்தினரையும்
பிரித்து தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைத்தனர். சென்னையை ஆண்ட பிரிட்டீஷ் அரசோ,
அவர்கள் அனைவரையும் வேலூர் கோட்டைச் சிறையில் அடைத்து வைத்தது. வேலூர்
கோட்டையில் சப்-ரிஜிஸ்தரார் அலுவலகம் இருக்கும் இடத்தில் மன்னரின்
குடும்பத்தினர் வழிபட்ட துளசிமாடம் இன்றும் இருக்கின்றது. மன்னர் சிறையிருந்த
இடம் இன்றைக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ட்ரெயினிங் ஸ்கூல் இருக்கிறதே அந்த இடம்
தான்! அவர் வேலூர் கோட்டைச் சிறையிலேயே வசித்து 1836-ஆம் ஆண்டு ஜனவரி 30-இல்
காலமானார். பாலாற்றங்கரையில் அவரை அடக்கம் செய்தனர்.
சனிக்கிழமை, 24 அக்டோபர் 2009 22:28 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
No comments:
Post a Comment