Friday, November 5, 2010

35: தமிழ் ஈழத்துக்கான முதல் குரல்

இலங்கையில் 1918-இல் "இலங்கை தேசிய காங்கிரஸ்' எனும் அரசியல் கட்சியை
      ஆரம்பித்து வைத்த சர்.பொன்னம்பலம் அருணாசலம், பின்னாளில் அதில் சிங்களவரின்
      ஆதிக்க வெறியை எதிர்த்து, "தமிழ் லீக்' (1924) என்னும் அமைப்பைக் கண்டார்.
      இதன் நோக்கம் தமிழ் இனத்தின் தனித்துவம் காக்க "தனிநாடு' வேண்டும்
      என்பதாகும்.பின்னர் சோல்பரிப் பிரபுவின் தலைமையில் அமைந்த ஆணைக்குழுவின் முன்
      இலங்கைத் தமிழ் மக்களின் உரிமைக் கோரிக்கையை ஒரே குரலில் எடுத்துக்கூற
      "இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்' (1944) நிறுவப்பட்டது. அதன் தலைவர்
      ஜி.ஜி.பொன்னம்பலம். அவர் தனது வாதங்களை ஆதாரத்துடன் எடுத்து வைத்த போதிலும்
      சோல்பரிக் குழுவினர் சிங்களவரின் கோரிக்கைக்கே இணங்கினர். பின்னர் ஏற்பட்ட
      சுதந்திர அரசில் பங்கேற்பது குறித்தும், இந்திய-பாகிஸ்தானியர் பிரஜா உரிமைச்
      சட்டத்தை ஆதரிப்பது தொடர்பாகவும் இலங்கை தமிழ்க் காங்கிரஸ் இரண்டாகப்
      பிளவுபட்டு, இலங்கைத் தமிழரசுக் கட்சி 1949-இல் மலர்ந்தது. தந்தை செல்வா
      தலைமையில் இக்கட்சி தமிழர்களின் சமவாழ்வு மற்றும் உரிமைகளுக்காகப் போராடியும்
      கேட்காமல் 1972-ஆம் ஆண்டு மே 22-ஆம் தேதி புதிய சிங்கள புத்தக் குடியரசு
      அமைந்தது. இதன் மூலம் தமிழரின் பாரம்பரியத் தாயகத்தை இழப்பதற்கான சிங்கள அரசு
      ஏற்பட்டதும், தமிழ் மண்ணில் சிங்களர் குடியேற்றம் நிகழ்ந்தது. தனி ஆட்சி
      முறையில் தமிழர்களின் சமநிலை உரிமையும்-மண்பாதுகாப்பும் பறிக்கப்படும்
      என்பதைக் கண்டுபிடிக்க தமிழர் அமைப்புகளுக்கு மேலும் 24 ஆண்டுகள் பிடித்தன.
      இந்நிலையில் 1972-ஆம் ஆண்டு அக்டோபர் 3-இல் தந்தை செல்வா, தனது நாடாளுமன்ற
      உறுப்பினர் பதவியை உதறினார். அப்போது அவர் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை
      வரலாற்றுச் சிறப்புமிக்கது. "இந்நாட்டில், சென்ற 24 ஆண்டுகளாக (1948-1972)
      நடந்தவற்றை மனதில் கொண்டு தமிழர்கள் இங்கு ஓர் அடிமை இனமாக -அழிவதா அல்லது
      விடுதலை பெற்ற மக்களாக வாழ்வதா என்ற தமது வருங்காலத்தை முடிவு செய்யும் உரிமை
      அவர்களுக்கு வேண்டும் என்பதே எனது கொள்கை. விடுதலை பெற்ற மக்களாக வாழ
      வேண்டும் என்ற கொள்கைக்கு வாக்களிக்குமாறு தமிழ் மக்களைக் கேட்பேன். இந்தக்
      கொள்கையில் அரசாங்கமே என்னோடு போட்டியிடட்டும். நான் தோல்வியடைந்தால் என்
      கொள்கையை விட்டுவிடுகிறேன். அரசாங்கம் தோல்வியடைந்தால் தனது கொள்கையையோ,
      அரசின் திட்டத்தையோ தமிழர்கள் ஆதரிப்பதாக மேற்கொண்டும் கூறக்கூடாது.'
      (கு.வே.கி. ஆசான் எழுதிய ஈழத்தமிழர்களின் உரிமைப்போர் -1948-1966).
      செல்வா பதவி விலகியதால் காலியான காங்கேயன்துறை இடைத்தேர்தல் இரண்டு
      ஆண்டுகளுக்கு மேலும் தள்ளிவைக்கப்பட்டது. பின்னர் நடந்த தேர்தலில் தந்தை
      செல்வாவே காங்கேயன்துறை வேட்பாளராக நின்றார். அரசு ஆதரவு கம்யூனிஸ்ட்
      வேட்பாளரைவிட இருமடங்கு வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். மீண்டும்
      நாடாளுமன்றத்தில் 1976, பிப்ரவரி 4-இல் செல்வா பேசியதாவது: "இலங்கையில் ஓர்
      ஆளப்படும் இனமாக வாழும் நிலையைத் தமிழர்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்.
      அடிமைத்தனத்திற்கு எதிராகப் புரட்சியில் இறங்குவார்கள். எங்கள் இனம் அழிவதை
      நாங்கள் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு
      ஒரு தனித் தமிழ்நாட்டை இங்கு நிறுவியே தீருவோம். தமிழ் மக்களின் குரலாக
      நின்றே இந்த அவையில் இதைக் கூறுகின்றேன்.' (ஈழத்தமிழர்களின் உரிமைப்போர்
      1948-1996 கு.வே.கி.ஆசான்).
      இதனைத் தொடர்ந்து காங்கேயன்துறை, உடுவில், மூதூர், வவுனியா, திருகோணமலை,
      கோப்பாய், சாவகச்சேரி, உடுப்பிட்டி, பருத்தித்துறை, ஊர்க்காவல்துறை,
      மட்டக்களப்பு, கிளிநொச்சி ஆகிய 12 தொகுதிகளின் நாடாளுமன்ற தமிழ்
      உறுப்பினர்கள் கையொப்பமிட்டு ஈழ விடுதலைக்கான தீர்மானத்தை நாடாளுமன்றத்தில்
      முன்மொழிந்தனர். அத்தீர்மானத்தின் கடைசி வரி இவ்வாறு அமைந்திருந்தது. அது
      வருமாறு: "காங்கேயன்துறை இடைத்தேர்தலில் மக்களால் வழங்கப்பட்ட தீர்ப்பை,
      விடுதலை பெற்ற அரசுரிமை உடைய, மதச்சார்பற்ற, சமனிய நாடான தமிழ் ஈழத்தை
      அமைப்பதற்குரிய செயலுரிமையாக ஏற்றுக் கொள்வதென இப்பேரவை தீர்மானிக்கிறது.'
      1976 மே 22-இல் சிங்களவர் குடியரசு நாள் கொண்டாட்டத்தை வெகுவிமரிசையாகக்
      கொண்டாடியபோது, தமிழர் பகுதிகளில் விடுதலை கோரும் அறிக்கையை அ.அமிர்தலிங்கம்,
      வ.ந.நவரத்தினம், க.பொ.இரத்தினம், க.துரைரத்தினம் ஆகிய தமிழர் தலைவர்கள்
      விநியோகம் செய்தனர். அரசு இவர்களைக் கைது செய்து அரசுத் துரோகக்
      குற்றச்சாட்டினைச் சுமத்தியது. இத்தலைவர்கள் மீது மேல்நீதிமன்ற நீதிபதிகள்
      அடங்கிய குழு (பழ்ண்ஹப் ஹற் ஆஹழ்) என்ற சிறப்பு நீதிமன்ற விசாரணை
      மேற்கொள்ளப்பட்டது. புகழ்பெற்ற சட்ட வல்லுநர்களான தந்தை செல்வா,
      ஜி.ஜி.பொன்னம்பலம், மு.திருச்செல்வம், வி.எஸ்.ஏ.புள்ளைநாயகம் முதலானோர்
      குற்றம்சாட்டப்பட்டோர் சார்பில் வாதாடியதையொட்டி, நால்வரும் (1976 டிசம்பர்
      10-ம் தேதி) விடுதலை பெற்றனர். பின்னர் வழக்கு வாபஸ் பெறப்பட்டது. மலையகத்
      தமிழர் அமைப்புகளையும் ஒன்றிணைத்து "தமிழர் விடுதலைக் கூட்டணி' (பமகஊ)
      1976-இல் அமையப் பெற்றது. 1977 ஏப்ரல் 26-இல் ஈழத் தந்தை செல்வநாயகம்
      மறைந்தார். அந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற தேர்தலில் ஈழவிடுதலையை முன்வைத்து
      "தமிழர் விடுதலைக் கூட்டணி'யினர் போட்டியிட்டனர். தமிழர் பகுதியில் 19
      தொகுதிகளில் போட்டியிட்டு 18 இடங்களில் வென்றனர்.
      ஜே.ஆர்.ஜெயவர்த்தனா தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சி (யு.என்.பி.) 140
      இடங்களையும் கடந்த நாடாளுமன்றத்தில் 116 இடங்களைப் பெற்றிருந்த ஸ்ரீமாவோ
      கட்சி எட்டே இடங்களையும்தான் பெறமுடிந்தது. இதன்மூலம் முக்கிய
      எதிர்க்கட்சியாக தமிழர் விடுதலைக் கூட்டணி ஆயிற்று. சிங்கள மேலாதிக்கத்தில்
      நாட்டம் கொண்ட இனவெறியர்களுக்குத் தமிழரின் கட்சி, முக்கிய எதிர்க்கட்சியானது
      பெருத்த ஏமாற்றத்தை அளித்தது. நாடெங்கும் இனக்கலவரத்தைத் தூண்டிவிட ஸ்ரீமாவோ
      கட்சி முயன்றது. இலங்கைக் காவல்துறையில் 17 ஆயிரம் போலீஸôர் இருந்தனர்.
      இவர்களில் 5 ஆயிரம் பேர் ஸ்ரீமாவோ ஆட்சியில் நியமிக்கப்பட்ட இனவெறியர் ஆவர்.
      இவர்களே இனக்கலவரத்துக்கு மூலகாரணம் என்று கருதப்படுகிறது.
      யாழ் மருத்துவமனையில் (1977 ஆகஸ்ட் 12-13) புற்றுநோய்ப் பிரிவு ஏற்படுத்த
      நிதி திரட்டும் விழாவொன்று நடைபெற்றுக்கொண்டிருக்கையில், சீருடை அணியாத
      போலீஸôர் கூட்டத்தினரிடையே புகுந்து முறைகேடாக நடந்தனர். பொதுமக்களுக்கும்
      இவர்களுக்கும் ஏற்பட்ட மோதலில் போலிசார் இருவர் காயமடைந்தனர். இதனைச்
      சாக்கிட்டு "யாழ்ப்பாணத்தில் சிங்களவருக்கு ஆபத்து' என வதந்தி, நாடு
      முழுவதும் பரப்பப்பட்டு கடைவீதிகளுக்கும் வீடுகளுக்கும் தீ வைத்தனர். எல்லா
      இடங்களிலும் (1977 ஆகஸ்டு 17) தமிழர் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டது.
      அதற்குப் பிறகு இன்றுவரை தொடர்ந்து நடந்துவரும் அடக்கு முறைகளும், ரத்தக்
      கிளரிக்கும் பிள்ளையார் சுழி போட்ட சம்பவம் தமிழர்கள்மீது தொடுக்கப்பட்ட
      இந்தக் தாக்குதல்தான்.
      புதன்கிழமை, 07 அக்டோபர் 2009 21:07 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

No comments:

Post a Comment