அன்றைய நிகழ்வுகளை பண்ருட்டி இராமச்சந்திரன் (எம்.ஜி.ஆரும் ஈழத்
தமிழரும்-வே.தங்கநேயன்) நினைவு கூர்கிறார். ""எம்.ஜி.ஆர்., பிரபாகரன்
நட்புத்தான் பணம் கொடுக்க வைத்தது. நான்தான் கொடுத்தேன் நாலுகோடி. மூன்று
கோடி எல்.டி.டி.க்கும் ஒரு கோடி ஈரோசுக்கும். ""இந்த பணம் ஒரு நாள் அரசு
ஊழியர்களிடம் இருந்து வசூல் செய்ததை எடுத்து கொடுத்தார். அப்ப வந்து தமிழர்
பகுதியில், இலங்கை அரசு குண்டுமாரி பொழிந்தது. அங்ககுள்ள மக்களுக்கு
பாதுகாப்பு கொடுக்கணும்னா ராஜீவ்காந்தி முன்வரல. நீங்க கொடுக்கலனா பரவாயில்லை
நாங்க பணம் கொடுக்கிறோம் என்றார் எம்.ஜி.ஆர். அந்த மக்கள் தங்களை
பாதுகாத்துக் கொள்ளட்டும் என்று சொல்லி கொடுத்தார். உடனே ராஜீவ்காந்தி
அலறியடித்துக்கிட்டு இன்னொரு நாட்டுல போர்க்களம் நடத்துறத்துக்கு நம்ம
நாட்டுல இருந்து பணம் கொடுத்தா என்ன ஆகிறது அந்த மாதிரி கொடுக்க கூடாது
அப்படினு சொல்லி அலறியடிச்சுகிட்டு ஆளை அனுப்பிச்சாரு. அப்ப நாங்க சொன்னோம்
மனிதாபிமான பணிகளுக்காக எல்.டி.டி.யியும் ஈரோசும் ஒரு அமைப்பு
வைச்சிருக்காங்க அதுக்கு பணம் கொடுத்தோம்னு. ""அதாவது அன்று காலை புரட்சித்
தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களைப் பார்க்கிறேன். "என்ன எல்லோரும் நம்மள
கைவிட்டுடாங்க நாம ஏதாவது பண்ணணும்னாரு. அதோடு நம் ஆட்கள் சண்டை போடுவதற்கு
ரெடியா இருக்காங்க, பணம் இல்ல ஆயுதம் வாங்குவதற்கு, பணம் கொடுத்திடுவோம்
பாதுகாத்துக் கொள்ளட்டும்' என்றார். சரின்னு ஒத்துக்கிட்டு வீட்டில் இருந்து
நேரேபோய் நாலுகோடி அறிவிச்சு பேசுகிறோம். ""அப்ப என்ன முதலமைச்சர்
சொல்கிறாருன்னா, இதனால ஆட்சி போனாலும் பரவாயில்லை. பணம் கொடுத்திடுவோம்.
அதாவது இந்திய அரசாங்கத்தை மீறி, அரசியல் சட்டத்தை மீறி, அந்நிய நாட்டு
உறவுகளுக்கு பாதகமாக இலங்கையில் போராடுகின்ற விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு
நிதி உதவி ஒரு அரசாங்கமே செய்யுதுன்னா, அது சட்டவிரோத நடவடிக்கை நம்ம ஆட்சியை
கலைப்பாங்க. கலைச்சாக்கூட பரவாயில்லை. நம்ம வெளிய போயிரலாம்னு உறுதியாக
இருந்தாங்க.''
எம்.ஜி.ஆர். அரசின் முடிவை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் வரவேற்றதோடு,
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இது ஒரு "திருப்பு முனை' என்று கூறியது.
"ஈரோஸ்' இயக்கமும் தனது வரவேற்பை தெரிவித்துக் கொண்டது. நிதியுதவி
வழங்கியதைக் கேட்ட ஜெயவர்த்தனா கொதித்து எழுந்து ""இலங்கையின் வடகிழக்குப்
பகுதியில் உள்ள தமிழர்களுக்கு உணவு, மருந்து பொருள்களை வழங்கப் போவதாக
தமிழ்நாடு முதலமைச்சர் எம்.ஜி.இராமச்சந்திரன் கூறியிருக்கிறார். நாங்களே உணவு
அளிக்க முடியும். அதற்கு இந்திய பணம் தேவை இல்லை. உணவுப் பொருள்கள் என்றால்
எம்.ஜி.ஆரின் பாஷையில் ஆயுதங்கள் என்று பொருள் இருக்கலாம். விடுதலை புலிகள்
இயக்கம் தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் தனிப்படை'' - (தினமணி 30-4-87)
என்றார்.
இதனைத் தொடர்ந்து கொழும்பு நகரத்தில் புத்த கோவிலுக்கு எதிரே 10,000 சிங்கள
மாணவர்களை எம்.ஜி.ஆருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த ஜெயவர்த்தன
உசுப்பிவிட்டார். நிதியளிப்பு குறித்து அப்போதைய அரசவைக் கவிஞர் - புலவர்
புலமைப்பித்தன் கூறுவதாவது:
""தனிப்பட்ட இன உணர்வு காரணத்தினால்தான் விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆதரிக்க
முன்வந்தார். முதலிலே உமாவுக்கு (உமாமகேஸ்வரன் என்ற முகுந்தன்) பணம்
கொடுத்திருக்கிறார். தம்பிக்கு (பிரபாகரன்) பணம் கொடுத்திருக்கிறார். ""ஆனால்
அதற்கு பின்னாலே உமாவின் மீது துளிக் கூட நம்பிக்கை ஏற்படவில்லை. தம்பியின்
மீது இருந்த முழுமையான நம்பிக்கை காரணமாக அவர் ஒருவர் மட்டும்தான் களத்தில்
இருப்பார் என்று முடிவு செய்த காரணத்தினால் எவ்வளவு என்று யாருக்கும் தெரியாத
அளவுக்கு உதவி செய்தார். ""ரிசர்வ் பேங்கில் இருந்து தமிழ்நாட்டு அரசின்
சார்பாக 4 கோடி ரூபாய் விடுதலைப் புலிகள் மற்றும் ஈரோஸ் இயக்கங்களுக்கு
கொடுத்தார் என்றால், அவர் எந்த அளவுக்கு மிகத் துணிச்சலோடு இருந்தார் என்பதை
அறியலாம்.
""தமிழீழம் விடுதலை பெற்றுவிடும் என்கிற ஒரு முழுமையான நம்பிக்கை உருவாகிற
சூழ்நிலையில் - தமிழீழம் விடுதலை பெறுவது, தங்களுக்கு மிகவும் கெடுதலான
காரியமாக அமைந்துவிடும் என்று நம்பினார்கள் இந்தியத் தரப்பினர்.
No comments:
Post a Comment