Sunday, November 7, 2010

132: பேச்சுவார்த்தைக்கு இலங்கை அழைப்பு, 133: பிரேமதாசாவுடன் சந்திப்பு!

132: பேச்சுவார்த்தைக்கு இலங்கை அழைப்பு திம்புப் பேச்சுவார்த்தையின்போது அனைத்து தமிழர் குழுக்களும்
      வலியுறுத்திய நான்கு அடிப்படை அம்சங்களுக்கு எதிரான செயலாக, ஈபிஆர்எல்எஃப்
      ஆட்சியில், இலங்கை சுதந்திர தினத்தன்று (4-2-1989) சிங்களக் கொடியை ஏற்றிய
      செயல் தமிழ் மக்களிடையே கடும் விமர்சனத்துக்கு ஆளானது.
       இதே திருகோணமலையில் இலங்கை சுதந்திர தினத்தன்று, இலங்கை தேசியக் கொடியான
      சிங்கக்கொடியை இறக்க முயன்ற தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த திருமலை நடராஜன்
      என்பவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் நடந்ததுண்டு. இதே திருகோணமலையில்தான்
      8-8-1988 அன்று புலிக்கொடியை ஏற்ற முயன்ற தமிழர்களும்
      சுட்டுக்கொல்லப்பட்டார்கள். இந்த நிலையில் ஈபிஆர்எல்எஃப் இயக்கத்தினரின்
      சுதந்திரதினக் கொண்டாட்டம் தமிழ்மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தவில்லை. 
      இந்நிலையில் திமுகவைச் சேர்ந்தவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வை.கோபால்சாமி
      ரகசியமாக இலங்கை சென்றார். தான் வன்னிப்பகுதிக்குச் சென்றபிறகு கட்சித்
      தலைமையிடம் தெரிவிக்கச் சொல்லி நண்பர் ஒருவரிடம் கடிதம் ஒன்றையும் அவர்
      கொடுத்துச் சென்றிருந்தார். இந்தத் தகவல் பத்திரிகை மூலம் வெளியானதால்,
      வை.கோபால்சாமியின் நடமாட்டம் அமைதிப் படையால் கண்காணிக்கப்பட்டது.
      இந்நிலையில், அவர் வன்னிப் பகுதியில், விடுதலைப் புலிகளின் முகாம்களில் 24
      நாள்கள் தங்கினார். பிப்ரவரி 15-ஆம் நாள், அவர் பிரபாகரனைச் சந்தித்தார்.
       இந்த நாள்களைத் தனது வாழ்க்கையின் பொன்னான நாட்கள் என்று பின்னர்
      வை.கோபால்சாமி குறிப்பிட்டார். அவர் இலங்கைக்கு எவ்வாறு ரகசியமாகச் சென்றாரோ,
      அதேபோன்று ரகசியமாக அவர் இந்தியா திரும்பி, தனது பயணம் குறித்து
      விளக்குவதற்காக பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது வை.கோபால்சாமி விசா
      இல்லாமல் இலங்கை சென்றது குறித்த கேள்விக்கு "எதுவும் சொல்ல விரும்பவில்லை'
      என்றார்.
       இதுகுறித்து அவர் மேலும் விளக்குகையில், "உயிரே பிரச்னையல்ல என்றுதான்
      இந்தப் பயணத்தை (பிப்ரவரி 7-இல்) எனது சொந்தப் பொறுப்பில் மேற்கொண்டேன்.
      பயணம் எப்படி நடந்தது. யாரால் சென்றேன்-திரும்பினேன் என்பது பற்றியும்
      எதுவும் கூற விரும்பவில்லை. முதலமைச்சர் எதுவும் கூறிவிடுவாரோ என்றுதான்
      அதிகம் பயந்தேன். நல்லவேளை! அப்படி எதுவும் நடக்கவில்லை. இதுபோல "ரிஸ்க்'
      எடுத்துச் செல்லக்கூடாது. இலங்கைத் தமிழர் பிரச்னையில் ஆர்வம் இருக்கலாம்.
      வெறியாகிவிடக்கூடாது என்று முதல்வர் சொன்னதாக' அவர் தெரிவித்தார்.
       இன்னொரு கேள்விக்குப் பதிலளிக்கையில், "முதல்வருக்குத் தெரிவிக்காமல்,
      அவரிடம் அனுமதியும் பெறாமல்தான் நான் ஈழத்துக்குச் சென்றேன். எனது இந்தப்
      பயணம் தவறானதல்ல. ஆனால் தி.மு.கழகத்தின் செயல்முறைகளுக்கு இந்தப் பயணம்
      ஏற்றதல்ல; அந்த வகையில் எனது பயணம் தவறுதான்' என்றார். இலங்கைப் பிரச்னையில்
      பிரதமருக்கும் தமிழக முதல்வர் மு.கருணாநிதிக்கும் பேச்சு நடந்து
      கொண்டிருப்பது தனக்குத் தெரியாது என்றார். (நாளிதழ்களில் வந்தவாறு 6-3-1989).
       விசா இல்லாமல் வை.கோபால்சாமி இலங்கைக்குச் செல்லலாமா? அவரைக் கைது
      செய்யவேண்டும் என்ற சர்ச்சை பெரிய அளவில் நடந்து கொண்டிருந்தது.
      பத்திரிகைகளிலும் விவாதங்கள் நடந்து கொண்டிருந்த நிலையில் "தினசரி'
      பத்திரிகையில் 9-3-1989 அன்று, க.சச்சிதானந்தன் எழுதிய கட்டுரை இந்த விசாப்
      பிரச்னைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தது.
       இலங்கைக்கும் இந்தியாவுக்கும் "விசா' நடைமுறை என்பது 1948-லிருந்துதான்
      வந்தது என்றும், 1983-இல் இலங்கைப் படுகொலையையொட்டி ஏராளமான பேர் அகதிகளாக
      வந்து இந்தியாவில் குடியேறியபோது, "விசா' முறை பின்பற்றப்படவில்லை என்றும்,
      1987-இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின்போது, ஹெலிகாப்டரிலும், மிராஜ்
      விமானங்களிலும், தமிழகத்திலிருந்து பத்திரிகையாளர்கள் பலரும் "விசா' நடைமுறை
      இல்லாமல்தான் செல்கிறார்கள் என்றும், எனவே, விசா இன்றி, வை.கோபால்சாமி
      போகலாமா என்ற வினாவுக்கே இடமில்லை என்றும் ஈழத் தமிழர் நன்மை பேணப்பட
      வேண்டுமென்றால் அரசியல்வாதிகட்கும், அரசுப் பணியாளர்களுக்கும் அது பொருந்தாது
      என்றும் இப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
       வை.கோபால்சாமி இந்தியா திரும்பியது குறித்து விடுதலைப் புலிகளின் தளபதிகளில்
      ஒருவரான பால்ராஜ் பின்னாளில் கூறியது வருமாறு:
       ""வை.கோபால்சாமியைப் பத்திரமாக தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைக்கும்படி தலைவர்
      (பிரபாகரன்) என்னிடம் ஒப்படைத்தார். ஒவ்வொரு இடமாகத் தப்பி வந்தோம்.
      மணலாற்றில் வை.கோபால்சாமி இருப்பதாக அறிந்த அமைதிப் படை அவரை உயிருடனோ,
      பிணமாகவோ பிடிக்கப் பெரும் முயற்சிகளை மேற்கொண்டது. அலம்பில் பகுதியில்
      அவரைப் படகேற்றும்வரை அவரது பயணம் பாதுகாப்பாகவே இருந்தது. ஆனாலும்,
      அங்கிருந்து படகில் அவர், நல்லதண்ணி தொடுவாயைச் சென்றடைந்திருந்தபோது, அங்கு
      ராணுவத்தினருடன் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் வை.கோபால்சாமி
      காப்பாற்றப்பட்டார். ஆனால் அப்போது நடந்த மோதலில் லெப்டினன்ட் சரத் என்ற
      போராளி உயிரிழந்தார் (ஈழமுரசு கட்டுரை).''
       இந்திய அமைதிப் படையின் சோதனைச் சாவடிகளில் ஒரு சுவரொட்டி ஒட்டியிருக்கும்.
      அந்தச் சுவரொட்டியில் "அப்பாவிக் குடிமக்களைப் பாதுகாப்பதற்காகத்தான் நாங்கள்
      இங்கு தங்கியிருக்கிறோம்' என்ற வாசகம் குறிப்பிடப்பட்டிருக்கும். இத்தகைய
      சுவரொட்டிகளால், இந்திய அமைதிப் படை மிக நீண்டகாலம் வடக்கு-கிழக்குப்
      பகுதியில் நின்று நிலைத்து விடுமோ என்ற அச்ச உணர்வு, பிரேமதாசா
      உள்ளிட்டவர்களுக்கும், ஜேவிபி போன்ற இனத்தீவிரவாத கட்சிகளுக்கும் எழுந்தது.
       தீவிரத் தமிழர் எதிர்ப்பு - தீவிர சிங்களவர் எதிர்ப்பு இரண்டையும்
      அரவணைத்துச் செல்லும் ஒரு வழிமுறையைக் கண்டாக வேண்டிய நெருக்கடிக்கு
      பிரேமதாசா தள்ளப்பட்டார். அதுவே, தமிழர்களைக் காத்தருள வந்ததாகக் கூறும்,
      இந்திய அமைதிப் படையை இலங்கைத் தீவினில் இருந்து வெளியேற்ற உதவும் என்றும்
      அவர் கண்டார். சிவில் அமைப்புகளில் இந்தியாவின் ஈடுபாட்டை மிகக் குறைந்த
      அளவிலேனும் கட்டுப்படுத்த வேண்டுமானால், விடுதலைப் புலிகளுடன் சமரசம் என்பது
      அவரின் முடிவாயிற்று.
       கிழக்குப் பகுதியில் - கடற்கரையோரமாக ரயில் பாதையை அமைக்கவும் வடக்கிலும்
      கிழக்கிலும் சில முதலீட்டுத் திட்டங்களை மேற்கொள்ளப் போவதாகவும் இந்தியா
      அறிவித்ததன் தொடர்ச்சியாக இந்தப் பயம் ஆளும் தரப்புக்கு அதிகம் எழுந்தது.
       "இன்றுள்ள நிலைமையில் "ஈபிஆர்எல்எஃப் மற்றும் ஈரோஸ் போன்ற இயக்கங்களின்
      தலைமையில் சில சீர்திருத்தத் திட்டங்களை நடைமுறைப்படுத்தக்கூடிய அறிகுறிகள்
      இவர்களிடம் தென்பட்டதாயினும் இந்தியாவிற்குக் கீழ்ப்படிந்து செல்லும்
      இவர்களின் செயல் இப்போதில்லாவிடினும் பின்னர் இந்திய மேலாதிக்கம் தொடர்பான
      தீவிரமான பிரச்னைகளில் சமரசம் செய்துகொண்டு போகும் நிலைமைக்கே இட்டுச்
      செல்லும். அப்பாவிப் பொதுமக்களின் மீது அமைதிப் படை நடத்திய அட்டூழியங்களை
      இதுகாலம் வரை இவர்கள் எதிர்க்க முன்வராததிலிருந்து இதனைக் கண்டு கொள்ளலாம்.
      எனவே சாத்தியமான மாற்றுத் தீர்வினை இவர்கள் வழங்கப் போவதில்லை' என்று
      "முறிந்தபனை' நூலில் குறிப்பிட்டவாறே, இலங்கையின் ஆளும் வர்க்கத்தின்
      சிந்தனைப் போக்கும் அமைந்து அவர்களை விடுதலைப் புலிகளின் பக்கம் நெருங்கத்
      தூண்டிற்று.
       பதவி ஏற்ற நாளில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த பிரேமதாசா, ஜேவிபி மற்றும்
      விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் பேசத் தயார் என்றார். இலங்கைத் தீவின் ஒரு
      பிடி மண்ணையும் இன்னொரு நாட்டின் ஆளுகைக்கு உட்படுத்தமாட்டோம் என்றார். எமது
      நாட்டின் உள் விவகாரங்களைப் பேசித் தீர்ப்போம் என்றார். எல்லாமே மயக்கம்
      தரும் வார்த்தைகளாக இருந்தன.
       அந்த அளவுக்கு ஜேவிபி தென் இலங்கையில் சிங்கள மாவட்டங்களின்
      கிராமப்புறங்களைத் தனது அதீதமான வன்முறைக் கோட்பாட்டின் மூலம் வளைத்துப்
      பிடித்து அரசு நிர்வாகத்தைச் சீர்குலைத்திருந்தது.
       எங்கு நோக்கினும் ரத்தவெள்ளம்-பிணவாடை. ராணுவம், காவல்துறை முற்றிலுமாக
      செயலிழந்துபோன நிலை. கல்விக்கூடங்கள் மூடப்பட்டன. போக்குவரத்தும்
      சீர்குலைந்திருந்தது. இத்தனைக்கும் காரணம் என்ன? இந்திய அமைதிப் படை
      வருகைதான். "சிங்கள பூமியில் இந்தியப் படைகளா? கொண்டுவந்தவர்களை விரட்டுவோம்'
      என்ற ஒற்றைக் கோஷத்துடன் ஜேவிபி தனது "செம்படை'யுடன் கொழும்பை நோக்கி
      முன்னேறிற்று.
       இதனைத் தடுத்து நிறுத்த, ஜேவிபியின் ஆயுள்கைதிகள் 1800 பேரை பிரேமதாசா
      விடுதலை செய்தார். பதிலுக்கு ஜேவிபி இரண்டு மாதங்கள் தங்களது கிளர்ச்சிகளை
      ஒத்திப் போட்டது.
       விடுதலைப் புலிகளுடன் தொடர்பு கொள்ள, முயன்ற பிரேமதாசா, ஈரோஸ் பாலகுமார்,
      பரராஜசிங்கம் முதலானவர்களைத் தொடர்பு கொண்டார். அவர்கள் பாலசிங்கத்தின்
      தொலைபேசி எண்ணைத் தந்தார்கள்.
      
      133: பிரேமதாசாவுடன் சந்திப்பு!         பாலசிங்கத்துடன் பேசிய பிரேமதாசா, பேச்சுவார்த்தை நடத்துவதற்கான தமது
      விருப்பத்தை வெளியிட்டார். வன்னியில் உள்ள பிரபாகரனுடன் தொடர்புகொண்டு அவரது
      விருப்பம் அறிந்ததும் பேசலாம் என பாலசிங்கம் பதிலளித்தார். அப்போது
      பாலசிங்கம் அமைதிப்படையை விலக்கிக்கொள்ளவேண்டும் என்று பிரேமதாசா
      வெளிப்படையாக அறிவிப்பது பலன் தரும் என்றும் யோசனை கூறினார்.
      அதன்படியே, பிரேமதாசாவும் தமிழ்-சிங்களப் புத்தாண்டு தினமான 1989 ஏப்ரல்
      12-ஆம் நாள், விடுதலைப் புலிகளுடனான போரை முடிவுக்குக் கொண்டு வந்து,
      போர்நிறுத்தம் அறிவித்தார். இந்திய அமைதிப்படையும் அமைதியைக் கடைப்பிடிக்க
      வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
       பிரேமதாசாவின் அறிவிப்பையொட்டி, இலங்கை அதிபருக்கு பகிரங்கக் கடிதம் ஒன்றை
      விடுதலைப் புலிகள் இயக்கம் வெளியிட்டது. அக் கடிதத்தில், "இந்திய அமைதிப்படை
      விடுதலைப் புலிகளை ஒடுக்கும் வேலையில் ஈடுபட்டிருக்கும் நிலையில்,
      அவ்வமைதிப்படை இம்மண்ணை விட்டு அகலும் வரை போர்நிறுத்தம் என்ற பேச்சுக்கே
      இடமில்லை' என்று அரசு அழைப்பை உடனடியாக நிராகரித்தார்கள். பிரேமதாசா
      நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது இந்திய அமைதிப்படை இலங்கையைவிட்டு
      வெளியேறுவதற்கான ஏற்பாட்டைச் செய்வதாகக் கூறியிருந்ததையும் அக்கடிதத்தில்
      நினைவுபடுத்தியிருந்தார்கள் (சுதந்திர வேட்கை: அடேல் பாலசிங்கம்-பக்.281).
       இதன் பின்னர் அடுத்த நாளிலேயே, நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பிரேமதாசா,
      "அமைதிப்படையை இன்னும் 3 மாதத்திற்குள் இந்தியா திரும்ப அழைத்துக்கொள்ள
      வேண்டும்' என்று அறிவித்தார். அதே நாளில் வெளியுறவு அமைச்சர் ரஞ்சன்
      விஜயரத்னா அமைதிப் பேச்சுக்கு வருமாறு விடுதலைப் புலிகளுக்கு அழைப்பு
      விடுத்தார்.
       இதனைத் தொடர்ந்து, லண்டனில் இருந்த பாலசிங்கம், பேச்சுவார்த்தைக்கு
      விடுதலைப் புலிகள் தயார் என்றும் அதற்கான ஒழுங்குகளைச் செய்யுமாறும்
      பிரேமதாசாவுக்குக் கடிதம் எழுதினார். பாலசிங்கம் விடுதலைப் புலிகள் சார்பாகப்
      பேசுவார் என்பது உறுதியானது. அவரும் அடேலும் கொழும்பு (ஏப்ரல்-26) வந்தனர்.
      இவர்களுக்கென ஹில்டன் ஓட்டலில் அறை எடுக்கப்பட்டிருந்தது. அங்கு
      பிரேமதாசாவின் செயலர் விஜயதாசா, பாதுகாப்புத்துறைச் செயலாளர் சேப்பால
      அட்டிகல, வெளியுறவுத்துறை அமைச்சகச் செயலாளர் ஃபீலிக்ஸ் டயஸ் அபேசிங்கா
      ஆகியோர் வந்து பாலசிங்கத்தையும் அடேலையும் மரியாதை நிமித்தமாகச் சந்தித்தனர்.
       மறுநாள் சேப்பால அட்டிகல மற்றும் ராணுவத் தளபதி ரணதுங்கா இருவரும் வந்து,
      விடுதலைப் புலிகளின் இதரப் பிரதிநிதிகளை வன்னியிலிருந்து அழைத்து வருவதற்கான
      ஏற்பாடுகள் குறித்து விவாதித்தனர். 1989 மே 3-இல் பயணம் என்றும், உடன்
      பத்திரிகையாளர்களும் வன்னிப் பகுதிக்கு இன்னொரு ஹெலிகாப்டரில் வருவார்கள்
      என்றும் முடிவாகியது.
       கொழும்பிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் வன்னிப் பகுதிக்கு பாலசிங்கம் மற்றும்
      அடேல் பாலசிங்கம் கிளம்பினார்கள். விடுதலைப் புலிகளின் சார்பில்
      பாலசிங்கத்துடன் பங்கேற்க இருக்கும் தளபதிகளை அழைக்கவே இந்தப் பயணம்
      மேற்கொள்ளப்பட்டிருந்தது.   பிரேமதாசாவும் விடுதலைப் புலிகளும் நேரடிப்
      பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது குறித்து பொதுவாக வரவேற்றது இந்தியா.
       இந்த நிலையில் வன்னிப் பகுதி நோக்கிச் சென்ற இலங்கைப் படையின்
      ஹெலிகாப்டர்களை, அமைதிப் படையின் எம்124 ரக ஹெலிகாப்டர்கள் இரண்டு
      வழிமறித்து, பின்னர் குறிப்பிட்ட இடைவெளியில் தொடர்ந்து பறந்து வந்தன.
      அமைதிப் படை பராமரிப்புப் பகுதியில் உள்ள வன்னிப் பகுதிக்கு சிங்கள
      ஹெலிகாப்டர்கள் செல்ல இருக்கின்றன என்ற தகவலைக் கூட அவர்களிடம்
      தெரிவிக்காமல்தான் புறப்பட்டு இருந்தன. இலங்கையின் வான் எல்லையில், இலங்கை
      விமானப் படையைச் சேர்ந்த ஹெலிகாப்டர்கள் பறக்க அனுமதி கோருவதை, தவிர்க்கவே
      இவ்வாறு எதுவும் சொல்லாமல் புறப்பட்டனர்.
       இதனை அறிவுறுத்தும் நோக்கத்துடன்தான், இந்திய அமைதிப் படையின்
      ஹெலிகாப்டர்கள் பின்தொடர்ந்து வந்து, பிறகு தங்கள் வழியே சென்றன. 
      நெடுங்கேணிக் காட்டில் குறிப்பிட்ட அடையாளத்தைப் பார்த்து ஹெலிகாப்டர்களை
      இறக்க விமானிகள் மிகுந்த சிரமப்பட்டனர். இவர்கள் தேடிய இலக்கு
      விமானிகளுக்குத் தெரியவில்லை. பிறகு சிலுவை குறியிடப்பட்ட அந்த அடையாளத்தைக்
      கண்டு ஹெலிகாப்டர் தரையிறங்கியது.
       எல்லாம் சரியாக நடைபெறுகிறது என்று உறுதிப்படுத்திய பின்னர்தான் காட்டின்
      மறைவிலிருந்து, பாதுகாப்புக்கு நின்ற போராளிகள் புடைசூழ யோகரத்தினம்
      யோகியும், பரமு மூர்த்தியும் இவர்களது மெய்க்காவலர் ஜுட்டும் வெளிவந்தனர்.
       ஹெலிகாப்டரில் இருந்து இறங்கிய பாலசிங்கம், அடேல் பாலசிங்கம், விமானிகள்,
      பத்திரிகையாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு அந்தக் காட்டிலும் பிஸ்கட், கேக்,
      தேநீர் வழங்கப்பட்டது. சிறிது நேர பேச்சுக்குப் பிறகு இவர்களை அழைத்துக்
      கொண்டு ஹெலிகாப்டர் கொழும்பு சென்றது. விமானப் படை விமானதளத்தில் இறங்கிய
      விடுதலைப் புலி தளபதிகள் கொழும்பு ஹில்டன் ஓட்டலுக்கு அழைத்துச்
      செல்லப்பட்டனர்.
       இதே ஹெலிகாப்டர்கள், முன்பு தமிழர் பகுதியில் குண்டுகளையும்,
      ராக்கெட்டுகளையும் ஏவியதுண்டு. விடுதலைப் புலிகள், இந்த ஹெலிகாப்டர்களைக்
      கண்டால் சுடவும் முயற்சி எடுத்ததுண்டு. ஆனால் இன்று தலைகீழ்த் திருப்பமாக,
      அதே ஹெலிகாப்டரில் பயணம்; நட்சத்திர ஓட்டலில் தங்க ஏற்பாடு. "இது ஒரு புதிய
      அத்தியாயம்' என்கிறார் அடேல் பாலசிங்கம் தனது "சுதந்திர வேட்கை' நூலில்.
       பிரேமதாசாவைச் சந்திக்கும் முன்பாக அவரைப் பற்றிய குறிப்புகளைத் தனது
      அணியினருக்கு பாலசிங்கம் விளக்கினார். இளவயதில் தான் பத்திரிகையாளராக இருந்த
      போது பிரேமதாசாவை நன்கு அறிந்தவர் அவர். "பிரேமதாசா தாழ்த்தப்பட்ட சமூகத்தில்
      பிறந்தவர். எளிமையானவர் -எல்லாவற்றிலும் ஒழுங்கை எதிர்பார்ப்பவர். கடும்
      உழைப்பாளி. கவிஞர். நாவலாசிரியர். பிரதமராக இருந்த காலத்தில் சமூக
      நீதிக்காகப் பாடுபட்டவர். ஒரே தேசிய இனம் -ஒரே தாயகம் -ஒரே மக்கள் என்ற
      லட்சியத்தில் பிடிப்பு கொண்டவர். இந்திய -இலங்கை ஒப்பந்தத்தை ஆரம்ப முதலே
      எதிர்த்தவர். இன்றும் எதிர்க்கிறார். நமது நோக்கமும் அதுதான். இந்தப்
      பின்னணியில் நமது பேச்சு செயல் எல்லாமே இருக்கும்; இருக்க வேண்டும்
      -முரண்பாடுகள் ஏற்பட இடம் கொடுக்கக்கூடாது' என்றும் வலியுறுத்தினார்
      பாலசிங்கம். (சுதந்திர வேட்கை -அடேல் பாலசிங்கம் -பக். 283-284).
       பிரேமதாசா விடுதலைப் புலிகளைச் சந்திக்க மே 4-ஆம் தேதி மாலை 5 மணியளவில்
      நேரம் ஒதுக்கி இருந்தார். இலங்கை அதிபர் வசிக்கும் மாளிகையான சுக்சித்ராவில்
      இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது. பேச்சுவார்த்தைக்கு ஒத்துக்கொண்டமைக்கு
      பரஸ்பரம் நன்றியும் பாராட்டும் தெரிவித்துக் கொண்டனர். தாம் தமிழர்களின்
      நண்பன் என்றும், அவர்களின் துன்பங்களையும் போராட்டத்தையும் புரிந்து
      கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். "இனப் பிரச்னை என்பது அண்ணன்
      -தம்பிக்கு இடையே ஏற்பட்டுள்ள பிரச்னை. நமக்குள் தீர்க்க வேண்டிய இந்தப்
      பிரச்னையில் இந்தியாவைக் கொண்டு வந்துவிட்டது ஜே.ஆர். செய்த தவறு' என்று
      ஜெயவர்த்தனாவைக் குற்றம் சுமத்தினார்.
       "இதனாலேயே நாடு பூராவும் வன்செயல் இடம்பெற்று ரத்த ஆறும் கிளர்ச்சியும்
      ஏற்பட்டுள்ளதாகவும்' கூறினார். பாலசிங்கம் இந்திய அமைதிப் படை, புலிகளின்
      தற்காப்புப் போர், மக்கள் படும் இன்னல்கள் ஆகியவற்றின் பக்கம் பேச்சைத்
      திருப்பினார்.
       "அமைதிப் படையை எதிர்த்து தெற்கில் போராட்டம் என்ற பெயரில் மக்களைக்
      கொல்கிறார்கள். விடுதலைப் புலிகளோ அமைதிப் படையை எதிர்த்து அவர்களுடன்
      போரிடுகிறார்கள். உண்மையில் அவர்களே தேசியவாதிகள்' என்று பாலசிங்கம் சொன்னதை
      பிரேமதாசா ஏற்றுக்கொண்டு பிரபாகரனையும் அவரது வீரத்தையும் பாராட்டினார்.
      ஜேவிபியினரைக் கோழைகள் என்றும் அமைதிப் படையினரைப் பார்த்து அவர்கள் ஒரு
      கல்லைக் கூட வீசவில்லை என்றும் கூறினார் பிரேமதாசா.
       பாலசிங்கம் பேசுகையில், மக்கள் தொண்டர் படை என்கிற பெயரில் ஒரு படைப் பிரிவு
      உருவாக்கி, அதில் மாணவர்களைச் சேர்த்து, அந்தப் படையை தமிழ்த் தேசிய
      ராணுவமாக, தனியார் படையாக, ஈபிஆர்எல்எஃப் கையில் வழங்க இருப்பதாகவும்
      கூறினார்.
       பேச்சுவார்த்தைக்கென ஒரு நிகழ்ச்சி நிரல் உருவாக்கப்படும் என்று
      பாலசிங்கத்தின் கேள்விக்குப் பதிலளித்தார். முதலில் அரசின் பிரதிநிதிகள்
      குழு, பின்னர் அதிகாரிகள் குழு, அமைச்சர்கள் குழு எனப் பேசப்பட்டு இறுதியில்
      அதிபருடன் பேச்சு என பட்டியல் தயாரானது.

No comments:

Post a Comment