இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன்பாக ஆங்கிலேய ஆட்சியின்போதே, "தமது
ஆட்சிக்குரிய பகுதிகளின் பாதுகாப்பு' என்று கூறி அந்நாட்டுக்கு ஏராளமான ராணுவ
உதவிகளை இங்கிலாந்து அளித்தது. இவ்வகை ராணுவ உதவி என்பது வெடிமருந்துகள்
மற்றும் ஆயுதங்கள் ஆகும். இவற்றைக் கையாள இலங்கையின் அன்றைய ராணுவத்தினருக்கு
பயிற்சி அளிக்க இலங்கை - இங்கிலாந்து இடையே ஏற்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தம் வகை
செய்தது. இந்த ஒப்பந்தம் காரணமாகவே 1955 வரை, இலங்கை ஐ.நா.வில் ஓர் உறுப்பு
நாடாக சேர முடியாமல் சோவியத் நாடு தனது "வீடோ' அதிகாரத்தைப் பயன்படுத்தி
தடுத்தது. இலங்கை - இங்கிலாந்து பாதுகாப்பு ஒப்பந்தப்படி திருகோணமலையில்
கப்பற்படை, கட்டுநாயக்காவில் விமானப்படை என இங்கிலாந்து ராணுவத் தளங்கள் அமைய
வழியேற்பட்டது. (பெüத்த சிங்களவரும் சிறுபான்மையினரும் - சந்தியாபிள்ளை கீத
பொன்கலன் பக். 185) இந்த ஒப்பந்தத்தின் பலன், இலங்கை ராணுவத்தினருக்கு
தொடர்பயிற்சி அளிக்கப்பட்டதுதான். 1983 வன்முறையின்போது இலங்கை அரசு
இங்கிலாந்து, அமெரிக்கா, பங்களாதேசம் உள்ளிட்ட நாடுகளிடம் ராணுவ உதவிகளைக்
கேட்டபோது பெரும் சர்ச்சை எழுந்தது. இங்கிலாந்து அரசு அந்தக் கோரிக்கையை
மறுத்த அதே நேரத்தில் கோரிக்கை வைக்கப்பட்டதை அந்த நாட்டின் வெளி
விவகாரத்துறை ஒப்புக் கொண்டது. எவ்வித ஆயுத உதவியும் செய்யவில்லை என்று
இங்கிலாந்து கூறி வந்த போதிலும் இலங்கைக்குத் தேவையான ராணுவத் தளவாடங்கள்
இங்கிலாந்திலிருந்துதான் வந்தன. 1977-இல், செவர்டன் கம்பெனி என்ற ராணுவத்
தளவாட நிறுவனம் கடற்காவலுக்கென 5 விசைப்படகுகளை இலங்கைக்கு அனுப்பி வைத்தது.
இரு அரசுகளிடையேயும் அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் ஒன்று 1980-இல்
மேற்கொள்ளப்பட்டு, ராணுவத் தளவாடங்கள் விற்பனைக்கு உறுதி செய்யப்பட்டது.
இங்கிலாந்தில் உள்ள தனியார் நிறுவனங்கள் அந்நிய நாடுகளுக்கு ஆயுத விற்பனையைச்
செய்ய முடியாது. ஆயுதங்கள் விற்பதானால், அந்நிய நாட்டின் பாதுகாப்புக்
காரணங்களுக்காக மட்டும் ஆயுதங்களை ஏற்றுமதி செய்ய, வர்த்தக இலாகாவின்
அனுமதியைப் பெற வேண்டும். இந்த அனுமதியின் காலம் ஓராண்டாகும்.
அரசு கனரக, ராணுவத் தளவாடங்கள் ஆலை இதே போன்று ஏற்றுமதியைச் செய்ய
வேண்டுமானால், வெளி விவகார இலாகா அனுமதிவேண்டும். அதுமட்டுமன்றி ஏற்றுமதி
செய்யப்படும் பொருட்களின் பட்டியல் குறித்து ஆய்வும் மேற்கொள்ளப்படும். இது
நடைமுறை. ஆனால் இங்கிலாந்திலிருந்து பல தடவை ராணுவத் தளவாடங்கள் இலங்கை வந்து
சேர்ந்திருக்கின்றன. இஸ்ரேலிய நாட்டுடன் இலங்கைக்கு சுமுகமான உறவில்லாத நிலை.
பாலஸ்தீனிய அரசு உரிமை சார்ந்த ஐ.நா.வின் 242-வது தீர்மானத்தின்படி, ஒத்துப்
போகாத இஸ்ரேலுடன் உலக நாடுகள் பலவும் தூதரக உறவைத் துண்டித்தன. அந்த
நாடுகளில் இலங்கையும் ஒன்று.
1983-ஆம் ஆண்டில், இலங்கை அரசு கேட்ட இடங்களில் இருந்து ராணுவ உதவி
கிடைக்கவில்லை. இதனையொட்டி, இஸ்ரேலிய உதவியும் நாடப்பட்டது என்று இலங்கைப்
பத்திரிகைகளில் செய்தி வெளியாயின. உதவி கோரி அமைச்சரவைச் செயலர் இஸ்ரேலுக்கு
ரகசியப் பயணம் மேற்கொண்டார். இதன் தொடர்ச்சியாக இலங்கை - இஸ்ரேல் உடன்பாடு
ஏற்பட அமெரிக்காவின் ராணுவ ஜெனரல் வெர்னன் வால்டர்ஸ் பெரிதும் உதவினார்.
1984-இல், அமெரிக்கத் தூதுவர் அலுவலகத்தில் "இஸ்ரேலிய நலன் பிரிவு' ஒன்று
தொடங்கப்பட்டது. ஆசியப் பகுதியில் இஸ்ரேலிய நலப் பணியாளர் பொறுப்பு வகித்த
டேவிட் மத்நாய் இலங்கைப் பிரிவின் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டார். இஸ்ரேலிய
ராணுவப் பிரிவினர் இலங்கை வந்து ராணுவத்தினருக்கு பயிற்சிகள் அளிக்க
ஆரம்பித்தனர். இந்தச் செயல் முஸ்லிம்களிடையே கொதிப்பை ஏற்படுத்தியது.
மட்டக்களப்பு பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகை முடிந்து வெளியே வந்தவர்கள்,
அமைதியான முறையில் இஸ்ரேலியர் வருகையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் காயமுற்றனர்.
தொடர்ந்து அவசர கால ஒழுங்குவிதி 14(ஐஐ) பயன்படுத்தப்பட்டது. பத்திரிகைத்
தணிக்கையும் அமல்படுத்தப்பட்டது. இதன்மூலம் இஸ்ரேலியரின் வருகை -
ராணுவத்தினருக்கான பயிற்சி தொடர்பான செய்திகளுக்குத் தடைவிதிக்கப்பட்டது.
தொடர்ந்து ஐக்கிய தேசிய கட்சியின் உயர்மட்டக் குழு கூடியபோது அதில் அங்கம்
வகித்த முஸ்லிம் தலைவர்கள், இஸ்ரேலிய ராணுவப் பயிற்சிக்கும், மட்டக்களப்பில்
ஏற்பட்ட மோதலுக்கும் கடும் கண்டனம் எழுப்பினர். "முஸ்லீம் பாராளுமன்ற
உறுப்பினர்கள் அரசாங்கத்தின் முடிவை ஆதரிக்க வேண்டும் - ஆதரிக்க
விருப்பமில்லாவிட்டால் கட்சியை விட்டு வெளியேறலாம்' என்று குடியரசுத் தலைவர்
ஜே.ஆர். ஜெயவர்த்தன எச்சரித்தார். அடுத்த சில நாட்களிலேயே இலங்கையின்
பாதுகாப்புத் துறை அமைச்சர் லலித் அதுலத் முதலி, "ராணுவத்தினருக்கு
இஸ்ரேலியரின் ஷின்பெய்த் என்னும் நிறுவனம் பயிற்சியளிப்பது உண்மைதான்' என
ஒத்துக்கொண்டார். இஸ்ரேலிய நலன்பிரிவின் கொழும்பு பொறுப்பை கூடுதலாக கவனித்த
டேவிட் மத்நாய் விடுவிக்கப்பட்டு, நிரந்தர அதிகாரியாக அக்ரயில் கார்பி'
என்பார் பொறுப்பேற்றார்.
இஸ்ரேலியரின் இலங்கை வருகை "விசா' எதுவுமின்றி அனுமதிக்கப்பட்டது. இவர்களின்
வருகையும், பயிற்சியும் இலங்கை ராணுவத்தினரின் செயல்பாடுகளில் நன்கு
வெளிப்பட்டது. பாலஸ்தீனத்தில் நடைபெறும் இஸ்ரேலியரின் வெஸ்ட்பாங்க் தாக்குதலை
அவை ஒத்திருந்தன. தொடர்ச்சியான ஒரு மணி நேர ஊரங்குச் சட்டம் அமல்
செய்யப்பட்டது. இளைஞர்கள் கைது, தொடர்ந்து விசாரணைக்காக பெற்றோர்கள்
பிள்ளைகளை ஒப்படைக்கும் உத்தரவு அறிமுகம் செய்யப்பட்டது. பொய்வாக்குறுதிகள்,
சிறையில் தள்ளுதல், மோசமான வழிமுறைகளைப் பயன்படுத்தி விசாரணை, கடற்கரை
கிராமங்களில் குண்டுவீச்சு, கிராமங்கள் தீக்கிரை-என எல்லாமே இஸ்ரேலிய
உத்திபடி நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
புதன்கிழமை, 21 அக்டோபர் 2009 20:11 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
No comments:
Post a Comment