Friday, November 5, 2010

48:நிர்மலா சிறைமீட்பு!

தமிழீழப் புரட்சிகரப் போராளியான நிர்மலா 1982-ஆம் ஆண்டு நவம்பர் 20-ஆம் தேதி
      தனது கணவர் நித்யானந்தனுடன் கைது செய்யப்பட்டார். அவர்மீது சாட்டப்பட்ட
      குற்றம்:
      சாவகச்சேரி போலீஸ் நிலையத்தைத் தாக்கிக் காயமுற்ற ஈழ விடுதலைப் போராட்ட
      வீரர்களுக்குப் புகலிடம் கொடுத்தார். விடுதலைப் போராளிகளைப் பற்றிய தகவல்
      அறிந்தும் போலீஸôருக்குத் தெரிவிக்கவில்லை என்பதாகும். இவர் குருநகரின் ராணுவ
      முகாமில் சில காலமும் வெலிக்கடைச் சிறையிலுமாக வைக்கப்பட்டார். வெலிக்கடைச்
      சிறையில் தங்கதுரை, குட்டிமணி, ஜெகன் போன்றோர் படுகொலை செய்யப்பட்டபோது
      இவரின் உயிருக்கும் உலை வைக்கப்பட்டது. அந்தச் சதியிலிருந்து நிர்மலா
      தப்பினார். பின்னர் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார். 1983
      செப்டம்பர் 23-ஆம் தேதி ஈழப் போராட்ட வீரர்கள் மட்டுநகர்
      சிறைச்சாலையிலிருந்து தப்பி வெளியேறியபோது இவர் தப்ப முடியாத நிலை ஏற்பட்டது.
      இந்தத் தப்பித்தல் நடந்த பிறகு ராணுவத்தின் அதிரடிப் படைப்பிரிவினர்
      மட்டக்களப்பு சிறைச்சாலையின் பாதுகாப்புக்கென நிரந்தரமாக்கப்பட்டனர்.
      நிர்மலாவைத் தப்பிப்பது என்பது சாத்தியமில்லை என்று அனைவராலும் நம்பப்பட்டது.
      ஆனாலும் தமிழீழ விடுதலைப் புலிகள் துணிகரமான சிறை மீட்பு திட்டம் ஒன்றினைத்
      தீட்டினர். 1984 ஜூன் 15-இல் கொழும்பு உயர்நீதிமன்றத்தில் நடக்கும்
      விசாரணைக்கெனக் கொழும்பிற்கு நிர்மலாவைக் கொண்டு செல்ல அரசு முடிவு
      செய்திருந்தது. அதற்கு முன்னதாக நிர்மலாவை மீட்க வேண்டும்.விடுதலைப் புலிகள்
      ஜூன் 10-ஆம் தேதி இரவு 7.15 மணியளவில் அதி நவீன ரக ஆயுதங்களுடன்
      மட்டக்களப்புச் சிறைச்சாலையை முற்றுகையிட்டனர். வீரர்கள் அனைவரும்
      சிறைக்காவலாளி உடையில் இருந்தனர்.
      சிறைச்சாலைக் கதவைத் தட்டி, கொழும்பிலிருந்து சில கைதிகளை அடைப்பதற்காகக்
      கொண்டு வந்திருப்பதாகக் கூறி கதவைத் திறக்கச் சொன்னார்கள். முதலாவது கதவு
      ஒருக்களித்தவாறு திறக்கப்பட, விடுதலைப் புலிகள் உள்ளே நுழைவதற்குள்
      அசம்பாவிதம் நடக்கப்போகிறது என்று சிறை அதிகாரிகள் உணர்ந்து உஷாராயினர்.
      விரைவாகக் கதவை மூடவும் முற்பட்டனர். சிறைக்குள் துப்பாக்கிப் பிரயோகம்
      செய்வது நல்லதல்ல, பாதுகாப்பானதும் அல்ல என்ற முடிவுக்கிணங்க விடுதலைப்
      புலிகள் துப்பாக்கியின் துணையை நாடவில்லை. மாறாக, சற்றும் தாமதிக்காது அதிரடி
      முறையில் கைகளால் மட்டுமே தாக்குதலைத் தொடுத்தனர். சிறை அதிகாரிகளை
      மடக்கினர். இந்த மோதலில் இரண்டு சிறை அதிகாரிகளுக்குப் பலத்த காயம்
      ஏற்பட்டது. சிறைச்சாலைக்குள்ளேயும் பலத்த பாதுகாப்பு இருந்தது.
      இரண்டாவது-இரும்புக் கதவுக்குரிய சாவியைச் சிறை அதிகாரிகளிடமிருந்து
      பெறமுடியவில்லை. இரும்புக்கதவை உடைத்தே திறந்தனர். விடுதலைப்புலிகளின்
      தாக்குதலை அறிந்த காவலாளிகள் பலர் எதிர்த்துப் போராடாது தப்பினால் போதும்
      என்று ஓடி ஒளிந்தனர். இரும்புக் கதவை உடைத்துத் திறந்ததும் பெண்களுக்கான
      சிறைக் கதவையும் உடைத்தனர்.
      நிர்மலா இருந்த சிறைக்கதவுச் சாவியை வைத்திருந்தவர் ஓடி ஒளிந்து விட்டதால்
      அந்தக் கதவையும் உடைத்தே திறந்தனர். வெளியே ஏதோ நடக்கிறது என்பதைச் சூசகமாக
      உணர்ந்து கொண்ட நிர்மலா தனது அறையின் கதவு உடைபடுவதை அறிந்து தயார் நிலையில்
      இருந்தார். கொரில்லா வீரர்கள் சிறைக்கதவை உடைத்ததும், தாமதம் ஏதும் செய்யாது
      சில மணித்துளிகளில் அங்கிருந்து வீரர்கள் யாவரும் வெளியேறினர். நிர்மலா
      நித்யானந்தன் சிறை மீட்கப்பட்டதும் அவரையும் கணவர் நித்யானந்தனையும் அதி
      வேகப் படகு மூலம் தமிழகத்திற்கு அழைத்து வந்தனர். விடுதலைப்புலிகள் இயக்கத்
      தலைவர் வே.பிரபாகரன், பேபி சுப்ரமணியம், ரகு உள்ளிட்டோர் நிர்மலாவை புலவர்
      புலமைப்பித்தன் இல்லத்தில் தங்க வைத்தனர்.இந்தச் சிறை மீட்புப்பணி தமிழீழ
      விடுதலைப்புலிகளின் புரட்சிகரமான ஆயுதப் போராட்ட வரலாற்றில் சிறப்பான
      அத்தியாயமாயிற்று!
      ஞாயிற்றுக்கிழமை, 18 அக்டோபர் 2009 19:10 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

No comments:

Post a Comment