142: மாவீரர் தினக் கொண்டாட்டம் ஏன்?தமிழகப் பத்திரிகைகளில், நவம்பர் 26-ஆம் நாள், விடுதலைப் புலிகள் தலைவர்
பிறந்தநாள் என்றும், அதனைச் சிறப்பாகக் கொண்டாட, புலிகள் புதிய தாக்குதலை
நடத்த இருப்பதாகவும் செய்தி வெளியாயிற்று. "உண்மையில் பிரபாகரன் எப்போதுமே
தனது பிறந்தநாளைக் கொண்டாடியவரல்ல. தான் மட்டுமன்றி மற்றவர்களையும்
பிறந்தநாள் கொண்டாட அனுமதித்ததில்லை' என்கிறார், பழ.நெடுமாறன் (தமிழீழம்
சிவக்கிறது பக்-271). உண்மையில் நடந்ததென்ன? 1989-ஆம் ஆண்டு நவம்பர் 27-இல்,
மாவீரர் தினம் கொண்டாடவே அனுமதிக்கப்பட்டது. இந்த நாள், விடுதலைப்
போராளிகளில், முதன்முதலில் வீரமரணமடைந்த சங்கரின் நினைவுநாள் ஆகும். இந்த
நாளில், போர்க்களத்தில் உயிர்நீத்தவர்கள் மற்றும் வீரத் தியாகம் புரிந்த
லெப்டினன்ட் கர்னல்கள் விக்டர் ஓஸ்கா, பொன்னம்மான், இராதா, திலீபன்,
புலேந்திரன், குமரப்பா, சந்தோஷம், பாண்டியன், இம்ரான், ஜானி, மதி, நவம்,
ரீகன், கிரேஸி போர்க், சுபன், வேணு, சஹா, சூட்டி, ஜாய், குட்டிஸ்ரீ உள்ளிட்ட
ஆயிரக்கணக்கான நினைவில் வாழும் புலிகளுக்கு சிறப்பான முறையில் அஞ்சலி
செலுத்தப்படுகிறது. மணலாற்றுக் காட்டில் பதுங்கியிருந்து போரை நடத்தியபோது
பிரபாகரன், இந்த முடிவினை மேற்கொண்டார். இந்த முடிவினைத் தமிழீழமெங்கும்
நிறைவேற்றவும் ஆணையிட்டார். இதுகுறித்து விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர்
வே.பிரபாகரன், பழ.நெடுமாறனிடம் விவரிக்கையில், இந்திய ராணுவத்துடன் நாங்கள்
நடத்திய போரில் எந்த இடத்தில் எங்கள் தோழர்கள் விழுந்தார்களோ, அவர்களை
அங்கேயே புதைத்து கல்லறை எழுப்பியிருக்கிறோம். போர்க் காலத்தில் அவர்களின்
உடல்களைப் பெற்றோரிடமோ, உறவினர்களிடமோ ஒப்படைக்க முடியாது போனதால், ஏற்பட்ட
முடிவல்ல; இறந்த மாவீரர்களின் விருப்பமும் இதுவே ஆகும். இந்திய அமைதிப் படையை
எதிர்த்து நடத்திய "ஓயாத அலைகள்' என்கிற போரில் எங்களுக்கு அடைக்கலம் தந்தது
இந்த காடே ஆகும். இந்தக் காட்டினை நாங்கள் மிகவும் நேசிக்கிறோம். எங்கள்
தோழர்களுக்கு எந்தக் காடு அடைக்கலம் தந்ததோ, எந்தக் காட்டில் எதிரிகளுடன்
போரிட்டு வீரத்தை நிலைநிறுத்தினோமோ, அந்தக் காட்டிலேதான் எங்களைப் புதைக்க
வேண்டும் என்று அவர்கள் விரும்பியதில் வியப்பு ஏதுமில்லை. மணலாற்றுக்
காட்டுக்குள் தங்கியிருந்து போராடிய புலிகள் தாங்கள் எங்கே சென்று போராடி
வீரமரணம் அடைந்தாலும் தங்கள் உடலை மணலாற்றுக் காடுகளில்தான் புதைக்க வேண்டும்
என்று நேரிலும், எழுத்துமூலமாகவும் எனக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்கள்
என்று கூறியுள்ளார். இதுதவிர தமிழீழத்தின் பிற பகுதிகளிலும் மாவீரர்கள்
கல்லறைகள் கட்டப்பட்டுள்ளன. இந்தக் கல்லறைக்கு "மாவீரர் துயிலும் இடங்கள்'
என்று பெயரிடப்பட்டுள்ளன.
மறைந்த தன்னுடைய தோழர்கள் குறித்து வே.பிரபாகரன் கூறியதாக பழ.நெடுமாறன் பதிவு
செய்துள்ள வரிகள் ஒவ்வொன்றும் பல்வேறு அர்த்தங்களைச் சுமந்து நிற்கின்றன.
அவை: எமது விடுதலை வரலாறு மாவீரர்களின் ரத்தத்தினால் எழுதப்பட்டிருக்கிறது.
அவர்களுடைய இறப்புகள் அர்த்தமற்ற இறப்புகள் அல்ல. இந்த வீரர்களின் சாவுகள்
எமது வரலாற்றை இயக்கும் உந்துசக்திகளாக அமைந்துவிட்டன. அந்த மாவீரர்கள்
காலத்தால் அழியாதவர்கள். சுதந்திரச் சிற்பிகள். எமது மண்ணிலே ஒரு மாபெரும்
எழுச்சிக்கு வித்திட்டுச் சென்ற வீரமறவர்கள். எமது இனத்தின்
சுதந்திரத்திற்காகவும் பாதுகாப்புக்காகவும் தமது இன்னுயிரை ஈந்தவர்கள்
அவர்கள். இந்த மகத்தான தியாகிகள் காலம் காலமாக எமது இதயக் கோயிலிலே
பூசிக்கப்பட வேண்டியவர்கள். ஒரு விடுதலை வீரன் சாதாரண வாழ்க்கை வாழும் ஒரு
சாதாரண மனிதன் அல்லன். அவன் ஒரு லட்சியவாதி. ஓர் உயர்ந்த லட்சியத்துக்காக
வாழ்பவன். தனக்காக வாழாமல் மற்றவர்களுக்காக வாழ்பவன். மற்றவர்களுடைய
விடிவுக்காகவும் விமோசனத்துக்காகவும் வாழும் சுயநலமற்ற, பற்றற்ற அவன்
வாழ்க்கை உன்னதமானது; அர்த்தம் உள்ளது. சுதந்திரம் என்ற உன்னத
லட்சியத்திற்காக அவன் தனது உயிரையும் அளிக்கத் துணிகிறான்.
எனவே விடுதலை வீரர்கள் அபூர்வமான மனிதப் பிறவிகள், அசாதாரணப் பிறவிகள் என்று
பிரபாகரன் பெருமிதத்துடன் கூறியுள்ளார். (தமிழீழம் சிவக்கிறது -பக்.277-278).
முதன்முதலாக அனுசரிக்கப்படும் மாவீரர் தினத்தில் கலந்துகொள்ளவென்று
பாலசிங்கம், அடேல் பாலசிங்கம், யோகி மூவரும் விமானப்படையின் ஹெலிகாப்டர்
மூலம் மட்டக்களப்பு நகரத்துக்கு கொழும்பிலிருந்து சென்றார்கள். அங்கிருந்து
அம்பாறை மாவட்டத்திலுள்ள பொத்துவிலுக்குக் கார் மூலம் சென்றனர். மக்கள்
அமைதிப்படையின் பிடியிலிருந்து விடுபட்டிருந்த நேரம். வழியெங்கும் மக்கள்
இவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். எங்கும் புலிகளின் சிவப்பு மஞ்சள்
கொடிகள் பறந்தன. குறிப்பிட்ட இடத்தைச் சென்றடைய இவர்களுக்கு இரட்டிப்பு நேரம்
பிடித்ததாகவும், கூட்டம் நடைபெறும் இடங்களில் மக்கள் நீண்டநேரம்
காத்திருந்ததாகவும் அடேல் பாலசிங்கம் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். இங்கு
குறிப்பிடவேண்டிய இன்னோர் செய்தி, கிட்டுவுக்கு செயற்கைக் கால் பொருத்த
லண்டன் பயணம் மேற்கொள்வதாக இருந்தது. எனவே அவர் ஹெலிகாப்டரில்
வன்னிக்காட்டிலிருந்து கொழும்பு வந்தார். கிட்டுவை நீண்ட காலமாகக் காதலித்து
வந்த மருத்துவ மாணவி சிந்தியா கொழும்புவுக்கு வரவழைக்கப்பட்டு, அவர்களின்
திருமணம் எளிய முறையில் பாலசிங்கம் குழுவினர் தங்கியிருந்த ஹில்டன்
ஓட்டலிலேயே நடைபெற்றது.
முதலில் கிட்டுவும், பின்னர் சிந்தியாவும் லண்டன் சென்றனர். மாவீரர் நினைவு
நாளில், அதாவது 26-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி அடித்ததும், மாவீரர் துயிலும்
இடங்களில் கூடி, தளபதிகள் முதல் சுடரை ஏற்ற, மணியோசை முழங்கும். அடுத்து
மாவீரர்களின் பெற்றோர், உறவினர்கள், தோழர்கள் என கல்லறைக்கு நெய் விளக்கு
ஏற்றி வணங்குவார்கள். இது பின்னர் ஒவ்வோர் ஆண்டும் நடைமுறைக்கு வந்தது. இந்த
நாளுக்கு அடுத்த நாள் நவம்பர் 28-ஆம் நாள், விடுதலைப் புலிகள் சார்பில்
வெளியிடப்பட்ட அறிக்கையில் பெண்புலி அனிதாவுக்கு வீர அஞ்சலி வெளியிடப்பட்டது.
வன்னி, மன்னார், யாழ்ப் பிராந்தியங்களில் புலிகளுக்குத் தேவையான
உணவு-பொருள்கள்-தளவாடங்கள் சேர்ப்பது என்பது எளிது. தமிழீழத்தின்
நிலப்பரப்பில் இரண்டாயிரம் சதுர மைலில் பெரும்பகுதி, தமிழீழத்தில் எல்லை
மாவட்டங்களாக கிழக்குப் பிராந்தியத்தைச் சார்ந்ததாகும். இங்கே சிங்களக்
குடிகள் மட்டுமன்றி, போலீஸ், ராணுவம் சார்ந்த முகாம்களும் எண்ணிலடங்காத
அளவில் உள்ளன. இத்தகைய சூழலில் புலிகளுக்கு உணவு சேகரிப்பதும் அவர்களுடன்
தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்வதும் பெரும் பிரச்னையாக இருந்தது. சிறிதளவு
கவனக்குறைவும் ஏற்பட்டாலும் கொரில்லாப் புலிகளுக்கு மிகுந்த சிரமம்
ஏற்பட்டுவிடும். இந்தக் கத்திமேல் நடக்கிற வித்தையை லெப்டினன்ட் அனிதா
மேற்கொண்டு வந்தார். அசாத்திய நிர்வாகத் திறமைகள் மிகுந்த இவர்,
ஆரையம்பதியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். எண்பதாயிரம் முஸ்லிம்கள், இரண்டு
லட்சத்து எண்பதாயிரம் தமிழர்கள் வாழுகின்ற மட்டக்களப்பு மாவட்டத்தில்
பணியாற்றிவந்த அனிதா 28-11-1988 அன்று ஈபிஆர்எல்எஃப் இயக்கத்தவரால் அடையாளம்
காட்டப்பட்டு களுவாஞ்சிக்குடியில் வைத்துக் கைது செய்யப்பட்டார். விசாரணை
இடத்திற்குக் கொண்டு செல்லப்படும்போது, உயிருடன் இருக்கக்கூடாது என்ற
முடிவில் சயனைட் உட்கொண்டு வீரமரணத்தைத் தழுவினார். இவரின் ஓராண்டு நினைவு
நாளையொட்டி, அஞ்சலி செலுத்தப்பட்டது. கிழக்குப் பிராந்தியத்தைப்
பொறுத்தவரையில் வீரமரணத்தைத் தழுவிக்கொண்ட முதல் கொரில்லா வீராங்கனை அனிதா
ஆவார். அனிதா உள்பட வீரமரணத்தைத் தழுவிய பெண்புலிகளின் எண்ணிக்கை 23 என்றும்
அவ்வறிக்கையில் (28-11-1989) குறிப்பிடப்பட்டிருந்தது.
143: இந்தியாவில் அரசியல் மாற்றம்! அமைதிப்படை இலங்கையை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்ட நிலையில்,
அவ்வாறு நடந்து கொண்டிருக்கவும், அமைதிப்படையால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய
ராணுவத்தினருடன் ஏற்படப் போகும் மோதலைத் தவிர்க்க பிரபாகரன் விரும்பினார்.
எனவே, அவர் இருவகையான யோசனைகளை வெளியிட்டார். ஒன்று, தமிழ் தேசிய
ராணுவத்தினர், அவ்வமைப்பில் இருந்து தானாக வெளியேறுவது, இரண்டாவதாக இந்த
அழைப்புக்குப் பலன் ஏற்படாத நிலையில், ஏற்படப்போகும் மோதலில் சிங்களப்
படையினர் கலந்துகொள்ளாது ஒதுங்கியிருக்க வேண்டும் என்பதாகும். எனவே,
இரண்டாவது கோரிக்கையை பாலசிங்கம் மூலமாக இலங்கை அதிபர் பிரேமதாசாவுக்குத்
தெரியப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து தமிழ் தேசிய ராணுவத்தினருக்கு ஒரு
வேண்டுகோளை விடுத்தார். அவ்வேண்டுகோளில், ""பலாத்காரமாக சேர்க்கப்பட்ட
இளைஞர்களாலும் நிர்ப்பந்தத்தின் பேரில் சேர்ந்துகொண்ட இளைஞர்களாலும்
தொடங்கப்பட்ட தமிழ் தேசிய ராணுவம், இன்று ஓர் இக்கட்டான நிலையில் உள்ளது.
அம்பாறை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அமைதிப்படை வெளியேறியதைத் தொடர்ந்து
நூற்றுக்கு மேற்பட்ட இளைஞர்கள் அப் படைப்பிரிவிலிருந்து வெளியேறி எம்மிடம்
சேர்ந்துள்ளார்கள். தற்போது மட்டக்களப்பிலிருந்தும் அமைதிப்படை வெளியேறுகிற
நிலையில், தமிழ் தேசிய ராணுவத்தினரைக் குற்றவாளிகளைப் போல லாரிகளில் ஏற்றி
திருகோணமலைக்குக் கொண்டு செல்லப்படுகிறது. நாளை திருகோணமலையிலிருந்தும்
அமைதிப்படை வெளியேறும். அப்போது தமிழ் தேசிய ராணுவத்தினரை இந்தியாவுக்குக்
கொண்டு செல்லப்போவதில்லை. மாறாக அவர்களை விடுதலைப் புலிகளுடன் போரிடுமாறு
உத்தரவிடப் போகிறது.
அப்படியொரு யுத்தம் நேரிட்டால் வீணாகச் செத்துமடியப் போகிறீர்கள். எனவே,
தமிழ் தேசிய ராணுவத்தில் அங்கம் வகிக்கும் இளைஞர்களே, இன்னும் சில நாள்களில்
அமைதிப்படையால் பூரணமாகக் கைவிடப்படப்போகும் நீங்கள் தொடர்ந்து அவர்களுடன்
சேர்ந்து குற்றச் செயல்களைப் புரிந்துகொண்டு இருக்காது, உடனடியாக
ஆயுதங்களுடன் வந்து சரணடையுங்கள். அதன் மூலம் தமிழீழப் போராட்டத்தில்
நீங்களும் பங்காளிகளாக மாற முடியும்'' என்று குறிப்பிடப்பட்டிருந்தது
(விடுதலைப் புலிகள் அறிக்கை: 30-11-1989). விடுதலைப் புலிகளின் வேண்டுகோளை
அடுத்து, ஏராளமான தமிழ் தேசிய ராணுவத்தினர் மட்டக்களப்புப் பகுதியில்
சந்திரவெளி, முனைக்காடு, அம்பலாந்துறை, வண்டாருமுனை, மணல்பட்டி,
வாழைச்சோனையிலும், திருகோணமலையில் கின்னியா, தம்பலகாமம் எனும் இடத்திலும்,
கிளிநொச்சியில் கல்முனை, உண்ணிச்சை பழுகாமம், மண்டூர், தம்பிலிவில் மற்றும்
வவுனியாவில் குழுமாட்டுச் சந்திப்பிலுமாக ஈபிஆர்எல்எஃப், ஈஎன்டிஎல்எஃப்
அணியைச் சேர்ந்தோர் சரணடைந்தனர். அவர்களிடமிருந்து ஏராளமான ஆயுதங்களும்
கிடைத்தன. மீதமிருந்த தமிழ் தேசிய ராணுவத்தினர் மீது முதலில் அம்பாறையிலும்
பின்னர் மட்டக்களப்பிலும் புலிகள் இயக்கம் தாக்குதலைத் தொடுத்தது. இத்
தாக்குதலின் காரணமாக பல ராணுவத் தளங்கள் விடுதலைப் புலிகள் வசமாயின. ஏராளமான
இளைஞர்கள் சரணடைந்தார்கள்.
இறுதியில், ஈபிஆர்எல்எஃப்பின் தீவிர உறுப்பினர்கள் மட்டுமே புலிகளை
எதிர்த்தனர். சரணடைந்த தமிழ் தேசிய ராணுவத்தினரை கிழக்கு மாவட்டத்தில் உள்ள
பெற்றோர்களை அழைத்து அவர்கள் வசம், அவர்களது பிள்ளைகளை ஒப்படைத்தனர். கிழக்கு
மாகாணத்தில் அமைதிப்படை வெளியேறிய இடங்களில் எல்லாம், புலிகள் ஆயுத பலத்தால்
தங்களின்வசம் கொண்டுவருவதை கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் வரதராஜ
பெருமாள் எதிர்த்தார். இதுகுறித்து ராஜீவ் காந்தியிடமும் பிரேமதாசாவிடமும்
மனுப் போட்டு முறையிட்டார். வரதராஜ பெருமாளின் மனுமீது எந்த நடவடிக்கையும்
எடுக்க விருப்பமில்லாத நிலையில் பிரேமதாசா இருந்தார். நடவடிக்கை எடுக்க
ராஜீவ் காந்தி விரும்பினாலும் வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும்
ஆயுதம் வாங்கிய விவகாரத்தில் எழுந்த கடுமையான பிரசாரம் போன்ற காரணங்களினால்,
இந்தப் பிரச்னையில் தீவிரக் கவனம் செலுத்த முடியாதவராக ஆனார். இந்திய
அரசியலிலும் மாற்றம் நிகழவிருந்தது. நாடாளுமன்றத்துக்கு டிசம்பரில் தேர்தல்
நடக்கவிருந்தது. காங்கிரûஸ வீழ்த்த கூட்டணியால்தான் முடியும் என்று, அதே
1977-வது ஆண்டு சூத்திரப்படி, முன்னாள் காங்கிரஸ்காரரான வி.பி.சிங் தலைமையில்
தேசிய முன்னணி என்ற பெயரில் களம் அமைத்தனர். திமுக, தெலுங்குதேசம்,
அகாலிதளம், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தேசிய முன்னணி என்ற அமைப்பில் சேர்ந்து,
ஒரே குடையின் கீழ் தேர்தலைச் சந்தித்தனர். தேர்தல் முடிவில் காங்கிரஸ்
ஆட்சியை இழந்தது. தேசிய முன்னணி சார்பில் வி.பி.சிங் பிரதமரானார் (டிசம்பர்
2, 1989). வி.பி.சிங் ஆட்சிப் பொறுப்பேற்றதும், இலங்கைத் தமிழர்களின்
பிரச்னையில், அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டது. "ராஜீவ் காந்தி ஸ்ரீலங்காவில்
தலையிட்டமை ஒரு பெரிய ராஜதந்திரத் தவறுதலாக' வி.பி.சிங் அரசு கருதியது என
அடேல் பாலசிங்கம் தனது நூலில் குறிப்பிடுகிறார்.
அவர் மேலும் இதுகுறித்து குறிப்பிடுகையில், "ராஜீவ் காந்தி புரிந்த தவறு
நீடித்துச் செல்லக்கூடாது என்பதில் வி.பி.சிங், உறுதியாக இருந்தார். 1990
மார்ச் 31-க்குள் இந்திய அமைதிப்படையின் கடைசிச் சிப்பாய் இந்தியா
திரும்புவார்' எனவும் தேதி நிர்ணயமானதாகவும் தெரிவித்திருக்கிறார்.
பிரேமதாசாவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கிடையே பிரபாகரனின் குடும்பத்தினர்
கொழும்பு விமான நிலையத்தில் வந்து இறங்கினர். இதற்கு முன்பு, 1987 அக்டோபரில்
அமைதிப்படை தொடுத்த யுத்தத்தின்போது, யாழ் மக்களோடு மக்களாக நல்லூர் கந்தசாமி
கோயிலில் தங்கியிருந்த பிறகு, மதிவதனியும் குழந்தைகளும் எங்கு சென்றார்கள்
என்று குறிப்பு எதுவும் இல்லை. தற்போது, இவர்கள் பிரபாகரனுடன் சேர்ந்து வாழ,
அடேல் பாலசிங்கம் வழியமைத்துக் கொடுத்தார். அது தொடர்பான பேச்சுவார்த்தைகள்
நடந்து, பாஸ்போர்ட் ஒழுங்குகள் செய்யப்பட்ட பின்னர், இவர்கள் கொழும்பு வந்து
சேர்ந்தனர். இவர்களைக் கொழும்பு விமானநிலையத்திலிருந்து வன்னியிலுள்ள
அலம்பில் பகுதிக்கு அழைத்துச் செல்ல ஹெலிகாப்டர் வசதி செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையிலும், அமைதிப்படையினருடன் மோதலில் ஈடுபட்டதாக விடுதலைப் புலிகளின்
22-1-1990 தேதியிட்ட செய்திக் குறிப்பு கூறுகிறது. இந்த அறிக்கையில் துரோகச்
செயலில் ஈடுபட்ட ஈஎன்டிஎல்எஃப் கும்பல், விடுதலைப் புலிகளுடன் தாக்குதலில்
ஈடுபட்டபோது, இவர்களுக்கு உதவ நாவற்குழி முகாமில் இருந்து வெளியேற முயன்ற
அமைதிப் படையினரை, வெளியே வர வேண்டாமென விடுதலைப் புலிகள் கேட்டுக்கொண்டனர்.
ஆனால் இந்த வேண்டுகோளையும் மீறி ஜீப் வண்டி சகிதமாக வந்த இந்திய ராணுவத்தினர்
மீது தாக்குதல் நடத்தியதில், வண்டி எரிந்து சேதமானதுடன், அதில் பயணம் செய்த
அனைவரும் பலியாயினர். இந்தச் சம்பவத்தையடுத்து, அரியாலை முகாமிலிருந்தும்
அமைதிப்படையினர் வெளியே வந்தபோது, அவர்களையும் வெளியேற வேண்டாம் என புலிகள்
வேண்டுகோள் விடுத்தும், வெளியேறியவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும்
அந்த அறிக்கை கூறுகிறது.
இந்தப் போக்கு எதனால் ஏற்படுகிறது என்பது குறித்து பழ.நெடுமாறன் எழுதிய
"இந்தியப் படையே வெளியேறு' நூலில் ஒரு கருத்தினை வெளியிட்டுள்ளார். "சில
இந்தியத் தளபதிகள் இவ்வளவு காலம் போராடி ஆயிரக்கணக்கான வீரர்களைப் பலிகொடுத்த
பிறகும், மூவாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவிட்டபிறகும் எதையும்
சாதிக்காமல் திரும்புவது தலைகுனிவானது என நினைக்கிறார்கள். எனவே, அவர்கள்
போரைத் தொடர்ந்து நடத்தவேண்டுமென வற்புறுத்துகிறார்கள். இந்தத் தளபதிகளில்
பெரும்பாலானோர் மேற்கு மற்றும் மத்திய இந்தியாவைச் சேர்ந்தவர்கள். இதுவரை
இந்திய ராணுவத்திலுள்ள அதிகாரிகள் தமிழர்களை வீரப் பரம்பரை என்று
ஏற்றுக்கொண்டதே இல்லை. எனவே இப்போதும் அதை ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள்'
என்று பழ.நெடுமாறன் குறிப்பிட்டுள்ளதை இங்கு பதிவு செய்வது தேவையாகிறது.
No comments:
Post a Comment