Saturday, November 6, 2010

94 - பாதகத்தை சாதகமாக்கிய ஜெயவர்த்தனா!,95: பாதுகாப்பு வளையத்தில் பிரபாகரன்!

 94 - பாதகத்தை சாதகமாக்கிய ஜெயவர்த்தனா! ஆபரேஷன் லிபரேஷன்' வெற்றியானது சிங்களவர்களைச் சந்தேக மனநிலையிலிருந்து
      விலக்கி, புளகாங்கித நிலைக்கு ஆளாக்கியது. செஞ்சிலுவைச் சங்கத்தினரை ஏற்றி
      வந்த இந்திய மீன்பிடிக் கப்பல்கள் சாதுவாகத் திரும்பிச் சென்றபோது
      சிங்களவர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தையே அடைந்தனர். மூத்த அரசியல்வாதிகளால்
      விடப்பட்ட வீரதீர அறிக்கைகளும், பத்திரிகைப் பத்தி, எழுத்தாளரின்
      புகழ்ச்சிகளும் அன்றைய நாள்களை ஆட்சி கொண்டிருந்தன. இந்தியா
      விமானத்திலிருந்து நிவாரணப் பொட்டலங்களைப் போட்டதுடன், சிங்கள மக்களின்
      புத்துணர்ச்சி பெற்ற சந்தோஷம் மிக வெறுப்புக் கலந்த கடுங்கோபமாக மாறியது.
      (முறிந்த பனை-பக்.158). சிங்கள மக்களும் செய்வதறியாது திகைத்தனர். உலகத்தின்
      பார்வையில் இலங்கைக்கு எவ்வளவு கீழிறக்கம் ஏற்பட்டிருக்கிறது எனக் கண்டு
      அதிர்ந்தனர். இந்நிலையில், 1987 ஜூலை 19-ஆம் தேதியிட்ட, இலங்கை அரசின் ஆதரவு
      மற்றும் யதார்த்த நிலையைத் துணிந்து எழுதும் பத்திரிகை எனப் பெயரெடுத்த
      "வீக்எண்ட்' சில மனப் பதிவுகளை வெளியிட்டது. அதுபோன்ற ஒரு கட்டுரையில்
      குமுதினி ஹெட்டியாராட்சி என்பவர் எழுதிய ஒரு கட்டுரை சிங்களவர்களை மேலும்
      அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பத்திரிகையில் வெளிவந்த கட்டுரைக்குத் தலைப்பு
      "நான்காண்டுகளுக்குப் பின்னும் அதே நிலையா?' என்பதாகும். கட்டுரையின் முக்கிய
      பகுதிகளைப் பார்க்கலாம்:
      ""நான், பிரிட்டன் சென்றபோது, பலரைச் சந்தித்து, எமது இனப்பிரச்னை குறித்து
      கலந்துரையாடும் சந்தர்ப்பத்தைப் பெற்றேன். என் முன்னே இருந்த பலர், பல்வேறு
      தேசிய இனப் பிரச்னைகள் பற்றிய தெளிவான கருத்துக்கொண்டவர்கள் ஆவர். அவர்களில்
      ஒருவர் சொன்னார், நாம் ராணுவத் தீர்வுக்கும் அரசியல் தீர்வுக்குமிடையே
      ஊசலாடுகிறோம் என்று. அவர்களது பொதுவான கருத்து அதுவே ஆகும். ஸ்ரீலங்கா,
      இனப்பிரச்னையை நிரந்தரமாகத் தீர்ப்பதில் உண்மையிலேயே அக்கறை கொண்டுள்ளதா என
      அவர்கள் என்னிடம் பல சந்தர்ப்பங்களில் வினவினார்கள். விடாப்பிடியான போக்கு
      இலங்கையில் இனப் பிரச்னையை ஒருபோதும் தீர்க்காது என்றும், இனப் பிரச்னைக்குத்
      தீர்வு அரசியல் தீர்வே என்றும் அவர்கள் கருத்துத் தெரிவித்தார்கள். இன்றைய
      நிலையில், "ஆபரேஷன் லிபரேஷன்' பிழையான அறிவுறுத்தலால் நடத்தப்பட்ட முயற்சியென
      அவர்களால் கருதப்பட்டது. பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு எல்லோரும் விரும்பும்
      சமாதான முறைகளைக் கையாண்டு இழந்துபோன சில கெüரவங்களை மீட்டுப் பெறுவதில்
      ஸ்ரீலங்கா அரசு அக்கறை கொள்ளவேண்டும். இந்த அரசியல் தீர்வு என்கிற முடிவு
      உதட்டளவில் இல்லாமல் உள்ளத்தளவில் இருக்கவேண்டும் என்றும் அவர்கள்
      வலியுறுத்தினார்கள். ஆக்ஸ்போர்டு நகரில் எனக்குத் தெரிந்த குடும்பம்,
      பிபிசியிலே வெளிவந்த போர்க்காட்சிகளைப் பார்த்த பாதிப்பில், "எவ்வாறு சிங்கள
      அரசு இவ்வளவு மிருகத்தனமாக நடந்துகொள்ளமுடியும்?' என்று என்னைக் கேட்டது.
      அந்த வீட்டுத்தலைவர் வடக்கிலே குண்டுமழை பொழிவதாகக் கூறினார். பிபிசி
      செய்தியாளர், "தீக்காயங்களுடன் காட்டப்பட்ட குழந்தைகள் பற்றி என்ன
      கூறுகிறீர்?' எனக் கேட்டார்.
      உங்கள் நாட்டிலே வியத்நாம் பாணி போர் உத்திகளைக் கையாளுமாறு உத்தரவிட்டவர்
      யார்? இதற்கு யார் பொறுப்பு? இரவு உணவுக்காக பல நாட்டுப்
      பத்திரிகையாளர்களுடன் உணவருந்த என்னையும் அழைத்திருந்த நிலையில், அவர்கள்
      முன்னிலையில் என்னைக் குடைந்து எடுத்தார். இது கேட்ட ஒரு பத்திரிகையாளர்,
      "இலங்கை ஒரு பூலோக சொர்க்கம். மற்ற எல்லாம் நல்லவையாக இருக்க, மனிதன் மட்டுமே
      கெட்டவனாக இருக்கிறான் என்பதற்கு ஸ்ரீலங்கா ராணுவம் நடந்துகொள்ளும் விதமே
      சான்றாக உள்ளது' என்றார். நாம் விரைவான-அமைதியான நல்ல தீர்வுக்கு வருவது
      அவசியமானாதும் முக்கியமானதும் ஆகும்; இதற்குத் தேவைப்படுவது நேர்மையும்
      நம்பிக்கையும்தான்'' என்ற குமுதினியின் விருப்பம், ஸ்ரீலங்கா அரசுத் தரப்பில்
      பல தாக்கத்தை ஏற்படுத்தியது.
      விமானத்திலிருந்து உணவுப் பொட்டலங்களை யாழ் பகுதிகளில் போட்டது முதல்,
      இந்தியா, இலங்கையின் தலைவிதியை நிர்ணயிக்கிற முக்கிய நாடாயிற்று. இந்த
      விஷயத்தை ஜெயவர்த்தனா விரும்பினார் இல்லை. ஆனால், இந்தப்போக்கை அவரால்
      தடுக்கமுடியவில்லை. காரணம், ராணுவத்தின் ஒரு பிரிவினர் ஸ்ரீமாவோ காலத்தில்
      பணியமர்த்தப்பட்டனர் என்ற காரணத்தால், அவர்கள் ஜெயவர்த்தனா மீது எப்போதுமே
      கோபத்தில் இருந்தனர். இந்நிலையில், யாழில் இந்தியா உணவுப் பொட்டலங்களைப்
      போட்டதை இலங்கை கடுமையாகக் கண்டிக்கவேண்டும் என்றும், ஏதேனும் ஒரு தாக்குதலை
      நடத்தவேண்டும் என்று அவர்கள் குமுறினார்கள். அந்தப் பிரிவினர் ராணுவத்
      தலைமைக்குக் கட்டுப்படாமல் புரட்சியில் இறங்கிவிடுவார்களோ என்றும்
      ஜெயவர்த்தனா பயந்தார்.
      புத்த பிக்குகளும், ஜேவிபியினரும் கையாலாகாத அரசு என்று விமர்சனம் செய்தனர்.
      இதற்கு முன்பே அங்கு வன்முறை தீவிரமான நிலையில், இந்தியாவின் நடவடிக்கையும்
      சேர்ந்தது. இலங்கையின் தெற்குப் பகுதியில் ஏற்பட்ட வன்முறைகளை அரசால்
      கட்டுப்படுத்த முடியவில்லை. எதிர்க்கட்சிகளோ அரசைக் கலைத்து உடனே தேர்தலை
      நடத்த வலியுறுத்தின. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி என்னும் நிலையைப்
      பெறவேண்டிய நெருக்கடியும் அவருக்கு ஏற்பட்டது. இதுபோன்ற சூழ்நிலையில்
      இந்தியாவுடன் ஜெயவர்த்தனாவால் முரண்பட முடியவில்லை. காரணம், இந்திய உணவுப்
      பொட்டலங்கள் போட்டதை "அத்துமீறல்' என்று குரல்கொடுத்தும் நட்பு நாடுகள்கூட
      வாய்திறக்காததால் மிகுந்த வேதனைக்கும் வெறுப்புக்கும் அவர் ஆளானார்.
      அனைத்துப் பிரச்னைகளிலிருந்தும் தப்பிக்கவேண்டுமானால், இந்தியாவின் பங்கை
      ஏற்கவேண்டும் என்று முடிவு எடுத்ததுடன், எது பாதகமானதோ, அதைப் பற்றிக்கொண்டு
      அதிலிருந்து சாதகம் பெறத் திட்டம் தீட்டினார். "ராணுவத்தின் மூலமே தீர்வு
      என்றும், ஒன்று புலிகள் வெற்றிபெறவேண்டும் இல்லையென்றால் அரசாங்கம் வெற்றிபெற
      வேண்டும். இறுதிவரை போர்தான் - சமாதானம் இல்லை' என்று அடம்பிடித்த
      ஜெயவர்த்தனா ஏதேனும் ஓர் ஒப்பந்தத்துக்காகத் துடித்தார். "இறுதிவரைப் போர்'
      என்கிற வார்த்தைப் பிரயோகம் இலங்கையின் இந்தியத் தூதர் ஜே.என்.தீட்சித்
      எழுதிய, "அசைன்மெண்ட் கொழும்பு' நூலில் குறிப்பிடப்பட்டுள்ள வாசகமாகும்.
      இந்தக் குழப்பமான நிலையில் யாழ்த்தளபதி கிட்டு வாகனத்தின் மீது
      குண்டுவீசப்பட்டது. இதில் படுகாயமுற்ற கிட்டு, இறுதியில் தனது கால்களில்
      ஒன்றை இழந்தார். மருத்துவத்துக்காக அவரைத் தமிழகத்துக்கு அழைத்து வந்தனர்.
      ஜெயவர்த்தனா தனக்குப் பிடிக்காத வடக்கு-கிழக்கு மாகாணங்கள் இணைப்பை
      ஏற்றுக்கொண்டார். இந்தியா-இலங்கை என இரு அரசுகள் மட்டத்தில் மட்டுமே
      பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. அதிகாரிகள் கொழும்புவுக்கும் தில்லிக்குமாகப்
      பறந்தனர். இந்தப் பிரச்னைகளில் சம்பந்தப்பட்ட தமிழர்களின் பிரதிநிதியான
      விடுதலைப் புலிகள் அமைப்பை எந்தவிதத்திலும் கலந்து ஆலோசிக்கவில்லை. இந்த
      நிலையில், அன்டன் பாலசிங்கத்தை தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர். சந்திக்க
      விரும்புவதாகக் கூறி அவரைக் காவலர்கள் அழைத்துச் சென்றனர். அங்கே முதலமைச்சர்
      எம்.ஜி.ஆருடன் மத்திய அமைச்சர் ப.சிதம்பரமும் இருந்தார். புன்முறுவலுடன்
      எம்.ஜி.ஆர். வரவேற்று பாலசிங்கத்தை அமரச் சொன்னார். அவர் உட்கார்ந்ததுமே
      ப.சிதம்பரம் கடுமையாகப் பேசினார் என்றும், விடுதலைப் புலிகள் இயக்கத்தினர்
      நன்றியுள்ளவர்கள்தானா என்றும், இந்தியா மற்றும் எம்.ஜி.ஆர். செய்த உதவிகள்
      குறித்தும், இலங்கை இனப்பிரச்னைத் தீர இந்தியா எடுத்துவரும் முயற்சிகள்
      குறித்தும் குறிப்பிட்ட அவர், "இப்பொழுது பிரபாகரன் எங்கே? திடீரென மாயமாக
      மறைந்துவிட்டார். யாருக்கும் தெரிவிக்காமல் யாழ்ப்பாணம் சென்றுவிட்டாராமே?
      எங்களுக்குத்தான் தெரிவிக்கவில்லை. தமிழ்நாட்டு அரசுக்காவது, முதலமைச்சர்
      எம்.ஜி.ஆருக்காவது தெரிவித்திருக்கலாமே?' என்று கேட்டதாகவும் பாலசிங்கம் தான்
      எழுதிய "விடுதலை' என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து
      பாலசிங்கம் மேலும் குறிப்பிடுவதாவது:
      ""எண்பத்துமூன்றாம் ஆண்டின் இறுதியிலிருந்து பல ஆண்டுகள் பிரபாகரன்
      இந்தியாவில் கழித்துவிட்டார். அவர் இங்கு தஞ்சம் கேட்டு வரவில்லை. ராணுவப்
      பயிற்சித்திட்டம் சம்பந்தமாக இந்திய அரசின் அழைப்பின் பேரில் அவர் இங்கு
      வந்தார். வந்த இடத்தில் பல கசப்பான அனுபவங்களையும் பெற்றார். இப்பொழுது
      போராட்டக்களத்துக்குச் செல்லவேண்டிய காலமும் வரலாற்றுத் தேவையும் அவருக்கு
      ஏற்பட்டுவிட்டது. தமிழீழக் களத்திலிருந்துதான் எமது மக்களின் உரிமைப்
      போராட்டத்தை அவர் முன்னெடுக்க விரும்புகிறார். அதனால்தான் அவர் தாயகம்
      செல்லவேண்டியதாயிற்று. சென்னையிலிருந்து யாழ்ப்பாணம் செல்வது மிகவும் ஆபத்தான
      பயணம். தரைப் பாதை மட்டுமன்றி, கடல் கடந்தும் செல்லவேண்டும். பிரபாகரனுக்குப்
      பல எதிரிகள் இருக்கிறார்கள். அவருக்கு விரோதமாகப் பல சக்திகள்
      செயல்படுகின்றன. ஏனைய போராளி அமைப்புகளும் அவரைப் பழிதீர்க்க வெறிகொண்டு
      அலைகின்றன. இப்படியான சூழ்நிலையில் பிரபாகரனின் பாதுகாப்பு கருதியே அவரது
      பயணத்தை ரகசியமாக வைத்திருக்க எமது இயக்கம் முடிவெடுத்தது'' இப்படியான ஒரு
      விளக்கம் கொடுத்தேன். அமைச்சர் சிதம்பரம் என்னை விட்டபாடில்லை. ""சரி,
      பிரபாகரன்தான் பாதுகாப்புக் கருதி அவசரமாக, ரகசியமாக யாழ்ப்பாணம்
      போய்விட்டார். நீங்களாவது முதலமைச்சருக்கு அத்தகவலைத் தெரிவித்திருக்கலாம்
      அல்லவா?'' என்று கூறி என்னை மடக்க முயன்றார்.
      முதலமைச்சரும் என்னைக் கேள்விக்குறியுடன் நோக்கினார்.
      முதலமைச்சரைப் பார்த்து சொன்னேன், "சார்! பிரபாகரன் யாழ்ப்பாணம் சென்றது
      உண்மையில் எனக்கும் தெரியாது. அவர் எனக்கும்கூடத் தெரியப்படுத்தவில்லை.
      மிகவும் ரகசியமான காரியங்களை ரகசியமாகச் செய்து முடிப்பதுதான் எமது
      இயக்கத்தின் மரபு. நேற்றுதான் எனக்கு யாழ்ப்பாணத்திலிருந்து தகவல்
      அனுப்பியிருந்தார், பிரபாகரன். உங்களுக்கு அறிவிப்பதற்கு முன்னதாக நீங்கள்
      என்னை இங்கு அழைத்துவந்துவிட்டீர்கள்' என்றேன். முதலமைச்சருக்கு நிலைமை
      புரிந்தது. பிரபாகரன் தாயகம் திரும்பியதன் அவசியத்தை அவர் உணர்ந்துகொண்டார்.
      அந்தப் பயணம் குறித்து ரகசியம் பேணப்பட்டதையும் அவர் புரிந்துகொண்டார்.
      ""பிரபாகரன் செüக்கியமாக இருக்கிறாரா?'' என்று கேட்டார். தொடர்ந்து, "அவரைப்
      பாதுகாப்பாக இருக்கச்சொல்லுங்கள்; நான் விசாரித்ததாகவும் சொல்லுங்கள்'
      என்றார்.
      95: பாதுகாப்பு வளையத்தில் பிரபாகரன்!      திடீர் திருப்பமாக இலங்கையிலுள்ள இந்தியத் தூதரகத்தின் முதன்மைச் செயலர்
      ஹர்தீப் பூரி, யாழ்ப்பாணத்துக்கு ஜூலை 19, 1987 அன்று வருகை தந்தார். அவருடன்
      வேறு சிலரும் வந்து விடுதலைப் புலிகள் அலுவலகத்தைத் தொடர்புகொண்டு
      பிரபாகரனைச் சந்திக்க வேண்டும் என்று தெரிவித்தனர். மிகவும் அவசரமான
      சந்திப்பு எனவும் தெரிவித்தனர். உடனே பிரபாகரனுடனான சந்திப்புக்கு ஏற்பாடு
      நடைபெற்றது. சந்திப்பின்போது பிரபாகரனுடன் யோகி (எ) யோகரத்தினமும் இருந்தார்.
      பூரி, அவர்களிருவரிடமும், இந்தியா-இலங்கைக்கு இடையே ஓர் ஒப்பந்தம்
      உருவாக்கப்பட்டிருப்பதாகவும் அதில் கையெழுத்திடும் முன்பாக பிரபாகரனைச்
      சந்திக்க பிரதமர் ராஜீவ் காந்தி விரும்புகிறார் என்றும் தெரிவித்தனர்.
      இது தொடர்பாக பிரபாகரன் மேலும் கேட்டதற்கு, அதுபற்றிய விவரங்களை பிரதமர்
      தெரிவிப்பார் என்றும், விவரம் குறித்து அவரிடம் விவாதிக்கலாமென்பதையும் பூரி
      தெரிவித்தார். பிரபாகரனும் யோகியும் இதுகுறித்து தங்களுக்குள்ளே யோசிக்கவும்,
      "இதுபற்றி அதிகம் யோசிக்க வேண்டாம். மிக முக்கியமான விஷயம். இதைத் தவறவிட
      வேண்டாம்' என்று பூரி அவர்களைச் சம்மதிக்க வைக்கும் முயற்சியில் இறங்கினார்.
      பிரபாகரன் தில்லிக்குச் செல்ல ஒத்துக்கொண்டார். அதே வேளையில் அன்டன்
      பாலசிங்கமும் எங்களுடன் இருக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினார். பூரி
      தில்லிக்குத் தொடர்புகொண்டு பாலசிங்கம் உடன் இருப்பதற்கான உறுதியைப்
      பெற்றார். இந்நிலையில், தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆருடன் கலந்தாலோசனை
      நடத்துவதற்காக பாலசிங்கத்தை, காவலர்கள் குழு ஒன்று அழைத்துச் சென்றது. அங்கே
      அவருக்கு யாழ்ப்பாணத்திலிருந்து பிரபாகரனும் மற்றவர்களும் சென்னை
      வருகிறார்கள் என்றும் அவர்களுடன் விமானநிலையத்தில் சேர்ந்துகொண்டு டெல்லி
      செல்லவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. (சுதந்திர வேட்கை நூலில் அடேல்
      பாலசிங்கம்-பக்.170) அடுத்த நான்கு நாட்கள் கழிந்த பின்னர் ஜூலை 23-ம் தேதி,
      யாழ்ப்பாணம் சுதுமலை அம்மன் கோயில் திடலில் இரு ஹெலிகாப்டர்கள் வந்து
      தரையிறங்கின. ஹெலிகாப்டரில் ஏறும் முன்பாக விடுதலைப் புலிகள் சார்பில்
      அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில், இந்தியாவுக்கும்
      இலங்கைக்கும் இடையே எழுந்துள்ள ஒப்பந்தத்தை முன்னிட்டு இந்தியா செல்கிறேன்.
      அது ஒப்பந்தமோ அல்லது வேறு எதுவுமோ, எதுவாக இருந்தாலும் தமிழீழ மக்களின் நலன்
      காக்கப்படும் விதத்தில் அமைந்தால் மட்டுமே ஏற்கப்படும் என்று
      கூறப்பட்டிருந்தது.
      அங்கு வந்திருந்த பூரியிடம், "எந்த நிலையில் எங்களது தலைவரையும் தளபதிகளையும்
      உங்களிடம் ஒப்படைக்கிறோமோ அதே நிலையில், அவர்களை இங்கே கொண்டுவந்து
      சேர்க்கவேண்டும்' என்று வலியுறுத்திக் கூறினார்கள். அவரும் அவ்வாறே இந்தியா
      நடந்துகொள்ளும் என்று உறுதியளித்தார். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன்,
      யோகி (எ) யோகரத்தினம், யாழ்ப்பாணம் அரசியல் செயலாளர் திலீபன் ஆகியோரையும்
      மற்றவர்களையும் ஏற்றிக்கொண்டு ஹெலிகாப்டர் சென்னை மீனம்பாக்கம் விமானநிலையம்
      நோக்கிப் பறந்தது. விமானநிலையத்தில் இவர்கள் வருவதற்கு முன்பாகவே அன்டன்
      பாலசிங்கம் வந்திருந்தார். அங்கு பாலசிங்கத்தைச் சந்தித்ததும், "இந்தியப்
      பிரதமர் ராஜீவ் காந்தி ஏற்படுத்தவிருக்கும் ஒப்பந்தம் குறித்துத்
      தெரிவிக்கவும், ஆலோசிக்கவும் என்று வரச்சொல்லியிருக்கிறார்கள். ஆனால்
      ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள விஷயம் எதுவும் தெரியவில்லை. பூரியிடம் கேட்டால்
      அதுகுறித்து வாய்திறக்க மறுக்கிறார். அவர் திரும்பத் திரும்பச் சொல்வது
      தில்லியில் இந்தியத் தூதர் உங்களுக்கு விளக்குவார் என்பதுதான்' என்று
      பிரபாகரன் தெரிவித்தார்.
      அவர்கள் அனைவரும் விமானத்தில் தில்லி கிளம்பினர். சில மணி நேரங்களில் தில்லி
      வந்ததும், அவர்கள் தங்குவதற்காக ஒரு தளமே நட்சத்திர ஓட்டலான "ஓட்டல்
      அசோகா'வில் ஒதுக்கப்பட்டிருந்தது. அதில் 513 எண் கொண்ட அறைக்கு பிரபாகரன்
      அழைத்துச் செல்லப்பட்டார். ஓட்டலின் வெளியே கருப்புப்பூனைப் படை பாதுகாப்பு
      போடப்பட்டிருந்தது. இதனைக் கண்ட பிரபாகரன் கேள்வி கேட்பதற்கு முன்பாகவே,
      "உங்களது பாதுகாப்புக்காகத்தான்' என்றார்கள். இவர்களுக்காக ஒதுக்கப்பட்ட அறை
      இருந்த தளத்திலும் கருப்புப்பூனை அதிரடிப்படையினர் காவல் காத்தனர். அவர்கள்
      கைகளில் உயர்ரக ஆயுதங்கள். ஓட்டலின் அறையில் காலடி எடுத்துவைக்கும்போது,
      "உச்சகட்ட பாதுகாப்பில் இந்த அறையில் தங்குகிறீர்கள். அனுமதியின்றி
      இங்கிருந்து நீங்கள் வெளியேற முடியாது. யாரையும் சந்திக்கவும் முடியாது.
      அறையிலுள்ள டெலிபோன் தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருக்கின்றன' என்று உடன் வந்த
      அதிகாரி தெரிவித்தார்.
      அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக அடுத்தடுத்த சம்பவங்களை எதிர்கொள்ளும்
      நிலைக்குப் பிரபாகரனும் மற்றவர்களும் ஆளானார்கள். "பாலா அண்ணே, இந்த
      தகவல்தொடர்பு துண்டிக்கப்பட்ட உச்சகட்ட பாதுகாப்பு என்பது நமக்கு வைக்கப்பட்ட
      பொறி' என்று பிரபாகரன் சொன்னார். சற்று நேரத்தில் இலங்கையின் இந்தியத் தூதராக
      இருந்த ஜே.என்.தீட்சித் அவர்களின் அறைக்குள் நுழைந்தார். அவரது முகம் இறுகின
      நிலையில் இருந்தது. சோபாவில் அமர்ந்தார். தனது பாக்கெட்டிலிருந்து "பைப்'பை
      எடுத்து வாயில் வைத்துக்கொண்டு புகையிலைத் துகள்போட்டு பற்றவைத்துக்கொண்டார்.
      இரண்டு மூன்று தடவை புகையை இழுத்து வெளியேவிட்டார். பிரபாகரன் உள்ளிட்டோர்
      இவரது செயலையே பார்த்துக்கொண்டிருந்தனர். எதுவும் பேசவில்லை. அவர்
      சொல்லப்போகும் செய்தியை அறிந்துகொள்வதில் அவர்களிடையே ஓர் எதிர்பார்ப்பு
      இருந்தது. இறுதியில் அவர் வாய்திறந்து இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே
      ஓர் ஒப்பந்தம் ஏற்படப்போவதாகவும், விரைவில் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட
      பிரதமர் ராஜீவ் காந்தி கொழும்பு செல்லவிருப்பதாகவும், அவ்வொப்பந்தம்
      தமிழர்களுக்கு நியாயமான தீர்வாக இருக்கும் என்றும், தெரிவித்துக்கொண்டே
      வந்தவர், ""நீங்கள் இந்த ஒப்பந்தத்தை கட்டாயம் ஆதரிக்கவேண்டும்'' என்றும்
      தெரிவித்தார். தொடர்ந்து, ""இதோ அவ்வொப்பந்தத்தின் ஆங்கிலப் பிரதி'' என்று
      பாலசிங்கத்திடம் நீட்டி, ""இதனைப் பிரபாகரனுக்குத் தமிழ்ப்படுத்திச்
      சொல்லுங்கள். நான் இன்னும் இரண்டுமணி நேரத்தில் திரும்பி வருவேன். வரும்போது
      நீங்கள் இதன்மீது சாதகமான முடிவொன்றைத் தெரிவிக்கவேண்டும்'' என்று
      கூறிவிட்டு, அவர் அந்த அறையைவிட்டு வெளியேறினார்.
      1. ஒப்பந்தத்தில் இலங்கையின் ஐக்கியம் மற்றும் ஒருமைப்பாடு வலியுறுத்தலும்,
      2. தமிழ் பேசும் மக்களுக்கான மாகாண சுயாட்சி
      3. இந்தியாவின் பாதுகாப்பு அக்கறைகள்
      4. வடக்கு-கிழக்கு மாகாணங்களில் வசிக்கும் மக்களின் பாதுகாப்புக்கு
      உத்தரவாதம்
      5. வடக்கு-கிழக்குப் பகுதிகள் இணைப்புக்கு மக்கள் கருத்தறிய வாக்கெடுப்பு.
      போன்றவற்றை அடிப்படையாகக்கொண்டிருந்தது அந்த ஒப்பந்தம். சாதகமான அம்சம்
      என்னவென்றால் வடக்கு-கிழக்கு மாகாண இணைப்பு ஏற்றுக்கொண்டமைதான். மற்றொன்று
      போராளி இயக்கங்களை அங்கீகரித்ததும் அதன் உறுப்பினர்களைப் "போராளிகள்'
      என்றழைத்தது ஆகும். மத்திய அரசின் அதிகாரங்களை வலியுறுத்தும்போது
      வெளிப்படையாகவும், வடக்கு-கிழக்கு மாகாண இணைப்பு -விஷயத்தில் பூடகமாகவும்
      செய்திகள் உள்புகுந்திருந்தன. மொழி விஷயத்தில் சிங்களம் மட்டும்- ஆனால்
      தமிழும் ஆங்கிலமும் கூட இருக்கும் என்று கூறப்பட்டிருப்பதன் மூலம் சிங்களமும்
      தமிழும் சம அந்தஸ்தைப் பெற்றிருக்கும் என்று உறுதியாகக் கூறப்படவில்லை.
      "எஞ்சிய விஷயங்கள்' பேசித் தீர்க்கப்படும் என்பதிலும் பல உட்பொருள்கள்
      இருந்தன. இவையெல்லாவற்றையும்விட ஒப்பந்தம் கையொப்பமான 72 மணிநேரத்தில் போராளி
      அமைப்புகள் தங்களிடம் உள்ள ஆயுதங்களை ஒப்படைக்கவேண்டும் என்று
      கூறப்பட்டிருந்ததைக் கண்ட பிரபாகரனின் கண்கள் சிவந்தன. அவர்,
      "இல்லை-முடியாது-இந்த ஒப்பந்தத்தை ஏற்கவே முடியாது' என்று கொதித்தெழுந்து
      சொன்னார்.
      தீட்சித் இரண்டுமணி நேரம் அவகாசம் கொடுத்தார். அந்த அளவுக்கு நேரம்
      தேவைப்படவில்லை. மேற்கொண்டு படிக்கத் தேவையில்லாத ஒப்பந்த வரைவாக அது
      அமைந்துவிட்டது. இரண்டு மணிநேரம் கழித்து, அந்த அறைக்கு தீட்சித் வந்தார்.
      வந்ததுமே, "தீர்மானத்துக்கு வந்தாகிவிட்டதா?' என்ற கேள்வியை எழுப்பினார்.
      பாலசிங்கம், "நாங்கள் இந்த வரைவு ஒப்பந்தத்தை ஏற்பதற்கில்லை' என்றார். "ஏன்,
      என்ன காரணம்?' கேட்டார் தீட்சித்.
      "சுருக்கமாகச் சொன்னால் தமிழர்களின் விருப்பத்தை ஒப்பந்தம் பூர்த்தி செய்வதாக
      அமையவில்லை. மேலும் விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை ஆயுதம் ஒப்படைப்பு என்பதை
      ஏற்பதாக இல்லை. உறுதியான தீர்வும், தமிழ்மக்களுக்கு உரிய பாதுகாப்பும்
      ஏற்படும்வரை நாங்கள் ஆயுதத்தை ஒப்படைப்பது என்பதை நினைத்துக்கூடப் பார்க்க
      முடியாது. எங்களது ஆயுதங்களை அரசிடம் ஒப்படைக்கவேண்டும் என்று இந்தியா
      எவ்வாறு கேட்கக்கூடும். இந்த ஆயுதங்களை நாங்கள் எந்த அரச பயங்கரவாதிகளிடம்
      இருந்து கடந்த 15 ஆண்டுகளாகப் பறித்தோமோ, அதே அமைப்பிடம் இவை திரும்பப்
      போய்ச்சேரும். நாங்கள் ஆயுதங்களைக் கையளிப்பது என்பது நடக்கவே நடக்காது'
      என்று சொன்னார். தீட்சித் இந்த வாதத்தை ஏற்கவில்லை. "இது ஒரு அருமையான
      திட்டம். இதை நிறைவேற்றியே தீருவோம். இந்திய அமைதிப்படை இங்கே இருக்கும்
      பட்சத்தில் உங்களுக்கு ஆயுதம் எதற்கு? எங்களை நம்புங்கள். யோசியுங்கள்'
      என்றார்.
      பிரபாகரன் தரப்பினர் பதிலளிக்காமல் இருக்கவும், "நீங்கள் ஒத்துக்கொண்டாலும்
      ஒத்துக்கொள்ளாவிட்டாலும் ஒப்பந்தம் கையெழுத்தாவது உறுதி. இது இரு
      நாடுகளுக்கிடையே ஏற்படும் ஒப்பந்தம்' என்றார். பிறகு மறுபடியும் தீட்சித்தே
      பேசினார், "நீங்கள் இதை ஏற்காவிட்டால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரும்.'
      "அப்படியா, என்னமாதிரியான விளைவு?' என்று யோகி கேட்டார். "நீங்கள் இந்த
      அறையிலேயே சிறை வைக்கப்படுவீர்கள்-ஒப்பந்தத்தை ஏற்கும்வரை' என்றார் தீட்சித்.
      .

No comments:

Post a Comment