120: பாலசிங்கம் எங்கே?அமைதிப் படையின் அடுத்த இலக்கு வடமராட்சியானது. வலிகாமம், சாவகச்சேரி ஆகிய
இடங்களில் நடத்திய தாக்குதலையும் பார்க்க, ஆயுதங்கள் பற்றாக்குறை, ஆட்கள்
அதிகமில்லாத நிலை. அமைதிப் படையுடன் மரபுவழித் தாக்குதல் என்பது நினைத்துப்
பார்க்க முடியாத ஒன்றாக, வடமராட்சிப் பொறுப்பாளராக இருந்த சூசைக்கு தெளிவாகத்
தெரிந்தது. அவரும் பாலசிங்கமும் கூடிப் பேசி அமைதிப் படையுடன் நேரடித்
தாக்குதலைத் தவிர்த்தனர். சூசையும் மற்ற போராளிகளும் கொரில்லாத் தாக்குதலைத்
தேர்ந்தெடுத்ததால் வடமராட்சிப் பகுதி மக்கள் பீரங்கிக் குண்டுத் தாக்குதலில்
இருந்து தப்பினர். வடமராட்சிக்குள் அமைதிப் படை நுழைந்தபோது, வல்வெட்டித்
துறையில் தங்கியிருந்த பாலசிங்கம், அடேல் பாலசிங்கம், பொட்டு அம்மான்
உள்ளிட்டோர் வடமராட்சியின் நடுப்பகுதிக்கு வந்தனர். இது சிறுவயதில்
பாலசிங்கம் வாழ்ந்த பகுதி. கரவெட்டியில் விடுதலைப் புலிகளின் மூத்த
உறுப்பினர், பொறுப்பாளர் சுக்ளா ஏற்பாட்டின்பேரில் வீடு எடுக்கப்பட்டது.
வடமராட்சியின் அமைப்பு அமைதிப் படையின் ஊடுருவலுக்கு இலகுவாக இல்லை. நகரப்
பகுதிகளில் மட்டுமே அவர்கள் நடமாட்டம் இருந்தது. இதுவே புலிகளுக்கு
வசதியாயிற்று. இந்நிலையில், ஈரோஸ் தலைவர் பாலகுமார், பாலசிங்கத்தைத் தேடி
வந்தார். இந்திய அமைதிப் படையிடம் மோதல் போக்கு இல்லாதவராக அவர் இருந்தார்.
பாலசிங்கம் சென்னையில் இருந்தபோதே நன்கு பழக்கமானவர். புலிகளின் அர்ப்பணிப்பு
உணர்வு அடிப்படையில் விடுதலைப் புலிகளின் தலைமையிடம் அன்பு கொண்டிருந்தார்.
அவர் வரும்போதெல்லாம் இந்திய அமைதிப் படையின் நோக்கம் - செயல்பாடுகள்
பற்றியத் தகவல்கள் பாலசிங்கத்துக்குக் கிடைக்கும். இந்த முறை அவர் இந்திய
ராணுவத் தளபதிகளிடமிருந்தே செய்தி கொண்டு வந்திருந்தார். அவர்கள்
பாலசிங்கத்தைச் சந்தித்துப் பேச விரும்பினார்கள் என்றும் போரை முடிவுக்குக்
கொண்டு வரலாமென்றும் அவர்கள் விருப்பம் தெரிவித்ததாகவும் கூறினார்.
ஆனால், பாலசிங்கம் இது ஒரு சூழ்ச்சி வலைப்பின்னலாக இருக்கும் என்று
உணர்ந்தார். தானே முடிவு எடுக்காமல் இந்தத் தகவலை வன்னிக்காட்டில்
முகாமிட்டிருந்த பிரபாகரனுக்கு அனுப்பினார். உடனடியாகத் தகவல் கிடைக்கவில்லை.
சில நாள்களில் இந்த சந்திப்புக்கு இணங்க வேண்டாம் என்று பிரபாகரன் தகவல்
அனுப்பினார். இதற்கு பிரபாகரன் கூறிய காரணம், இதே முறையைப் பயன்படுத்தி
மட்டக்களப்பின் முக்கியப் பொறுப்பாளரைப் பிடித்து வைத்துக்
கொண்டிருந்தார்கள். எனவே அவர்களின் சூழ்ச்சி வலையில் சிக்கினால், அவர்களது
பிரச்சாரமே வெற்றி பெறும். நமது தகவல்களோ வெளி உலகுக்கு வராமல் போய்விடும்
என்று கூறியிருந்தார். இலங்கை வசம் வீச்சுள்ள அலைவரிசைகள் இருந்ததால், இந்த
ஒலிபரப்பு வசதியைப் பயன்படுத்தி புலிகள் கைதானார்கள் என்றும்,
கொல்லப்பட்டார்கள் என்றும், சரணடைந்தார்கள் என்றும் பொய்ச் செய்திகளைக் கூறி
மக்களை திசை திருப்பும் வேலையிலும் அமைதிப்படை ஈடுபட்டது.
இவ்வாறான தகவல்களில் பாலசிங்கமோ, பொட்டு அம்மானோ கைது செய்யப்பட்டார்கள்
என்று தகவல் வருமானால் புலிகளுக்குப் பாதகத்தை ஏற்படுத்தும் என்றும்
தடுக்கப்பட்டது. இந்திய அமைதிப்படை வடமராட்சியில் நிலை கொண்டு -
பருத்தித்துறை, நெல்லியடி, பொலிகண்டி, உடுப்பிட்டி, துன்னாலை பகுதிகளில் தனது
முகாம்களை நிறுவிக்கொண்டது. இவ்வாறாக ராணுவக் குவிப்பு தீவிரம் ஆனதும்
பாலசிங்கம் குழுவினர் கரவெட்டியில் இருந்தும் வேறு இடத்திற்குச் செல்ல
நேர்ந்தது. புலிகளைத் தேடுவது என்பது அதிகாலை நேரத்தில் அமைதிப் படையால்
மேற்கொள்ளப்பட்டது. ஒரு பகுதியை வளைத்துக் கொண்டு யாரும் உள்ளிருந்து
வெளியேறுவதோ, வெளியேயிருந்து உள்நுழைவதோ முடியாதபடி செய்து, புலிகளை
வேட்டையாடியது அமைதிப்படை. அமைதிப்படையினர் வருகை - அவர்களது செயல்பாடுகள்
குறித்து, பெரியவர் முதல் சிறுவர்கள் வரை பல்வேறு நிலைகளில் விடுதலைப்
புலிகளுக்கு தகவல்கள் வந்து கொண்டே இருந்தன. இதேபோன்று அமைதிப் படைக்கும்
ஒற்றுத் தகவல்கள் சென்று கொண்டுதான் இருந்தன.
இன்னொரு நாள் பாலகுமார் வந்து பாலசிங்கத்தையும், அவரது மனைவி மற்றும் பொட்டு
அம்மானையும் கைது செய்ய உத்தரவாகியிருக்கிறது என்றும் "ஒவ்வொரு வீட்டிலும்
உள்ள பாலசிங்கம் என்று பெயர் உள்ளவர்களைத் தேடுகிறார்கள் என்றும்
தெரிவித்தார். ஆனால் அங்கே அப்படியொருவரோ வெள்ளைக்கார மனைவி பெயரோ
இல்லையென்று அறிந்த பின்னரே தேடுதல் முற்றுப் பெறுகிறது' என்றும் பாலகுமார்
சொன்னார். இதனைத் தொடர்ந்து, பாலசிங்கம் தங்கியிருந்த பகுதியைக் கடந்து சென்ற
ஹெலிகாப்டர் மீண்டும் திரும்பி வட்டமிட்டு, துப்பாக்கிச் சூடு நடத்திய பிறகு
திரும்பிச் சென்றது - இது பாலகுமார் கொண்டு வந்த தகவலை உறுதி செய்தது.
இவ்வாறாக ஒருநாள் மாலை பாலசிங்கம் தங்கியிருந்த வீட்டின் மீது குண்டுமழை
பொழியத் தொடங்கியது. வெளியே ஓடி, கட்டடத்தின் சுவருக்குப் பின்னால் பதுங்கி
தப்பித்தனர். இதில் ஆச்சரியப்படத்தக்க விஷயம், அத்தாக்குதலில் யாருக்கும்
காயமோ, இழப்போ ஏற்படவில்லை என்பதுதான்.
வேறு வீடு மாறினார்கள். நோயாளிகளுக்கு ஒரு வீடும், பாலசிங்கத்துக்கு இன்னொரு
வீடும் என்று பிடித்துக் கொடுக்கப்பட்டது. இந்தத் தேடுதல் வேட்டைக்கிடையே
தமிழேந்தியும், பாலசிங்கத்துடன் வந்து சேர்ந்து கொண்டார். தமிழேந்தி,
விடுதலைப் புலித் தலைவர் வே.பிரபாகரனின் நெருக்கமான சகா, மூத்த போராளி.
நிதிப் பொறுப்பைக் கவனித்தவர். எப்போதும், அவரிடம் ஒரு பை இருக்கும். அது
பணப் பை ஆகும். ஏராளமான நகைகளும் அதில் இருக்கும். பணம் செல்லுபடியாகாத
இடங்களில் நகைகளே மாற்றுப் பணம். பாலசிங்கத்துடன் இருப்பதில் ஆபத்து
அதிகமானதால் அவர் வன்னிப் பகுதி சென்று, அங்கிருந்த பிரபாகரனுடன் இணைய
முற்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் அமைதிப் படையினரால் கைது செய்யப்பட்டு
காங்கேசன் துறை சிறையிலும் அடைக்கப்பட்டார். கைது செய்வதற்கு சில நிமிடங்கள்
முன்பாக, தனது கைப் பையை ஓரிடத்தில் பூமியைத் தோண்டி, புதைத்து
விட்டிருந்ததால் அது காப்பாற்றப்பட்டது. பின்னர், விடுதலையானதும் அந்தப் பணப்
பையைத் தோண்டி எடுத்துச் சென்றதாக இவரைப் பற்றிய குறிப்புகள் உண்டு.
இவ்வாறு தமிழேந்தி கைது செய்யப்படும் முன்பாக, பாலசிங்கம் தம்பதியினர்
மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதாக, பிரபாகரனுக்குத் தகவல் அனுப்பி வைத்து
விட்டுத்தான் அவர் கிளம்பியிருந்தார். இந்நிலையில் கரவெட்டியில் இருந்தும்
கிளம்ப வேண்டியதாயிற்று. சில மைல் தொலைவில் இருந்த நவிண்டில் உள்ள பகுதிக்கு
பாலசிங்கம் மாறினார். இங்கே பொட்டு அம்மான் இவர்களுடன் மீண்டும் சேர்ந்து
கொண்டார். அவரது கையிலுள்ள காயத்தில் சீழ் பிடித்துக் கொண்டிருந்தது.
கட்டுப்போடாத நிலையில் துர்நாற்றம் வீசியது. கையிலோ மருந்து இல்லை. அடேல்,
பென்சிலின் ஊசி மட்டும் போட்டார். இரவு முழுவதும் அவரின் முனகல் ஒலி
கேட்டவாரே இருந்தது. அதுவே அவர்களைக் காட்டிக் கொடுத்து விடுமோ என்று பயந்த
நிலையில் இரவு கழிந்தது.
அவரால் நடக்க முடியாது. அவரைத் தொட்டில் கட்டி முதுகில் ஒருவர் சுமந்து வர
வேண்டும். வயிற்று உபத்திரவம் வேறு; கொடுமைதான். அடேல் எங்கே வெளியே
கிளம்பினாலும் தலை முதல் கால் வரை போர்த்திய துணியுடன் சென்று வந்தார்.
வெள்ளைத் தோல் அந்நியப்படுத்திக் கொண்டிருந்தது. நெல்லியடிக்கு அடுத்த ஜாகை.
நெல்லியடியில் அவர்கள் இருந்தபோது இவர்களது வீட்டை நோக்கி, இந்திய அமைதிப்படை
ரகசியமாக நகர்ந்து கொண்டிருப்பதாக சிறுவர்கள் ஓடி வந்து தகவல் கொடுத்தனர்.
அது ஒரு மாலை வேளை. எல்லாரும் கிளம்ப ஆயத்தமானார்கள். அடேல் மருந்துப் பையை
கையில் எடுத்துக் கொண்டார். அதில் சிலவகை மருந்துகளுடன் பாலசிங்கத்துக்கு
அன்றாடம் போட வேண்டிய இன்சுலின் மருந்தும் இருந்தது. பொட்டு அம்மான்
வயிற்றைப் பிடித்துக் கொண்டு, நொண்டிக் கொண்டே கிளம்பினார். அந்த வீட்டில்
இருந்து மறைந்து மறைந்து வெளியேறியவர்களுக்கு உள்ளூர் தோழர் கந்தையா
வழிகாட்டி அழைத்துச் சென்றார். இவர்கள் சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் அந்த
வீட்டின் மீது தொடர்ந்து குண்டுத்தாக்குதல். இதுகுறித்து அடேல் பாலசிங்கம்
தான் எழுதியுள்ள "சுதந்திர வேட்கை' நூலில், ""ஈபிஆர்எல்எஃப் ஆள் ஒருவரின்
வழிகாட்டுதலோடு அந்த இடத்தை இந்தியப் படையினர் மொய்த்துக் கொண்டனர். வீட்டில்
உள்ளவர்கள் ஒவ்வொருவராக வெளியே வரவேண்டும் என்று உரக்கக் கூவி
அழைத்தார்களாம். வீட்டுக்குள் ஒரே அமைதி. பொறுமை இழந்த அமைதி காப்பாளர்கள்
தானியங்கித் துப்பாக்கியால் வெறும் வீட்டின் மீது சுட்டுத்
தள்ளியிருக்கிறார்கள். பிறகு நாங்கள் இல்லாததை அறிந்து, வீட்டுச்
சொந்தக்காரர் மார்க்கண்டு என்பவரைப் பிடித்துப் போய், தங்களது காவலில்
வைத்து, அடித்து நொறுக்கியிருக்கிறார்கள். ""இனி, புலிகளுக்கு வீடு
கொடுத்தால் தண்டனை வேறாக இருக்கும்'' என்றும் எச்சரித்து
அனுப்பியிருக்கிறார்கள். அவரின் மகன் விஜயன் ஒரு போராளியாவார் என்று
கூறியுள்ள அவர், அந்த வீட்டுக்கு திரும்பச் செல்லவில்லை என்றும்
கூறியுள்ளார்.
121: பாலசிங்கம் லண்டன் தப்பினார் அந்தப்பகுதியின் பொறுப்பாளராக இருந்த சுக்ளாவின் நட மாட்டம்
கட்டுப்படுத்தப்பட்டது. அவரை அமைதிப்படைக்குத் தெரியாததால் அவரையும்,
புலிப்போராளிகளையும் அடையாளம் காட்ட "முகமூடி' தரித்த ஒற்றர்கள்
பயன்படுத்தப்பட்டனர். இவர்கள் கண்கள் மட்டும் தெரியும்படி முகத்தைத் துணியால்
மறைத்தபடி, கூட்டத்தில் நிற்பார்கள். அவர் புலிகளை அடையாளம் கண்டதும் ராணுவ
வீரருக்கு "தலையை ஆட்டி' சைகை செய்வார். உடனே கைது வேட்டை நடக்கும். இதன்
காரணமாக சுக்ளாவும் வெளிப்படையாக நடமாட முடியவில்லை. அடேல், வெள்ளைக்காரப்
பெண்ணாக இருப்பதால் இவரையும், இவருடன் சேர்ந்த ஆட்களையும் தேடுவதில்
அமைதிப்படை முனைப்பு காட்டியது. எனவே, இவர்களை வேறு வேறு இடங்களில்
தங்கவைப்பது என்பது குறித்த ஆலோசனைகளுக்கு அடேல் உடன்படவில்லை.
நவிண்டியில் ரதி என்பவரது வீட்டில், அவரது ஆதரவுடன் பதுங்கியிருக்கையில்
இவர்களைத் தேடி, புலிகளுடைய வடமராட்சித் தளபதி சூசை வந்தார். சூழ்நிலையும்,
கடல்மார்க்கமும் சாதகமாக இருக்கும்போது, அவர்களிருவரையும் தமிழ்நாட்டுக்கு
அனுப்ப பிரபாகரன் உத்தரவிட்டிருப்பதாக கூறினார். (ஆதாரம்: சுதந்திரவேட்கை -
அடேல் பாலசிங்கம்). வடமராட்சியில் மாலை ஆறு மணியிலிருந்து காலைவரை ஊரடங்கு
சட்டம் அமல் செய்யப்பட்டது. காரணம், புலிகள் இரவு வேளையில் அங்கிருந்து
நழுவுகிறார்கள் என்று கிடைத்த தகவலின் எதிரொலியாகும். ஆனால், மக்கள்
புலிகளாய் இருந்தார்கள். அதனால் அவர்கள் கைதுக்கும், கொடுமைகளுக்கும்
ஆட்பட்டதுடன் மரணத்தையும் எதிர்கொள்ள நேர்ந்தது. ஆனாலும் அவர்களின் உறுதியைக்
குலைக்க முடியவில்லை.
உள்ளூர் மனிதர்களைப் பார்த்து நாய் குரைப்பதில்லை. ஆனால் இந்திய அமைதிப்
படையினரைப் பார்த்து குரைத்துத் தீர்த்து வீடும். இப்படி நாய் குரைப்பதைக்
கேட்டு, அதன் அடிப்படையில் புலிகளின் நடமாட்டம் இருக்கும். பல இடங்கள் மாறிய
வேளையில், தமிழ்நாட்டுக்குப் புறப்படும் நேரம் வந்தது. அந்நிலையில்தான்
தமிழ்நாடு முதலமைச்சர் எம்.ஜி.ஆர். இறந்த செய்தி வந்திருந்தது. அன்று
அமைதிப்படை தனது முகாமைவிட்டு வெளியேறாது என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
வடமராட்சியின் ஒரு மூலையில் இருந்து படகில் புறப்பட ஏற்பாடு ஆகியிருந்தது.
அனைவரிடமும் விடைபெற்று, பாலசிங்கமும், அடேலும் படகில் ஏறினர். அவர்களுடன்
வேறு சிலரும் ஏறிக்கொண்டனர். கடல் கொந்தளிப்பாக இருந்தது. கரையை விட்டுப்
படகு விலகி, கடலுக்குள் செல்லச் செல்ல அடேலுக்கு சோகம் கவ்விக்கொண்டது. இது
குறித்து அவர் தனது நூலில் குறிப்பிடுகையில், "நமது நம்பிக்கைக்குரிய
நண்பர்களை ஒரு நிச்சயமற்ற எதிர்காலத்துக்குள் கைவிட்டுச் செல்லும் உணர்வே
என்னுள் மிதந்து வந்தது. போராட்டத்தில் ஈடுபடும் மக்களோடு வாழ எண்ணிய நான்,
எனக்கு உதவி புரிந்த மக்களை அவர்களது கையறு நிலையில் விட்டுச் செல்வது
துயரமாக இருந்தது' என்று கூறியுள்ளார். தமிழகம் வந்து, அதுவும்
பாதுகாப்பற்றதாகிப் போன நிலையில், பெங்களூர் சென்றனர்.
1988 ஏப்ரலில் பெங்களூரில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருந்த ஆன்டன்
பாலசிங்கத்துக்கு, திமுக தலைவர் மு.கருணாநிதியிடமிருந்து அவசரச் செய்தி
வந்ததாகவும், அந்த அவசரச் செய்தியில் "தன்னை சந்திக்கும்படி' அவர்
கூறியிருந்ததையொட்டி, இரவோடு இரவாக பெங்களூரிலிருந்து சேலம் புறப்பட்டதாகவும்
தனது "வார் அண்ட் பீஸ்' நூலில் பாலசிங்கம் குறிப்பிட்டுள்ளார். அந்நூலில்,
அச்சந்திப்பைப் பற்றி விவரிக்கின்றார்: ""சேலம் ஓட்டல் ஒன்றில் இந்தச்
சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நள்ளிரவில் நடைபெற்ற இந்தச்
சந்திப்பின்போது முரசொலி மாறனும் உடனிருந்தார். திமுக தலைவர் மு.கருணாநிதி
பேசும்போது, "மிகப்பெரிய அமைப்பான இந்திய ராணுவத்துடன் போரிட விடுதலைப்
புலிகளால் முடியுமா?' என்று கேள்வியெழுப்பியதுடன், "மோதல் போக்கை
தவிர்க்குமாறும்' ஆலோசனை வழங்கினார். இதற்குப் பதிலளித்த பாலசிங்கம்,
"பிரபாகரனும் இதர போராளிகளும் புனிதமான நோக்கம் ஒன்றிற்காக உயிரிழக்கவும்
தயாராக இருக்கிறார்கள் என்றும் அவர்கள் சரணடைவதையும் அதன் பின்னர் ஏற்படும்
நிலையையும் எதிர்கொள்ளத் தயாராக இல்லையென்றும், போராளிகள் கொரில்லா
யுத்தத்தில் சாதனை படைப்பார்கள் என்றும் அதற்கான மன உறுதி அவர்களிடம்
இருப்பதாகவும்' விளக்கினார். தொடர்ந்து அவர் கூறுகையில், ""பாரதப் பிரதமர்
ராஜீவ் காந்தி, தில்லியில் ஒப்பந்தம் கையெழுத்திடுவதற்கு முன்பு, எங்களுக்கு
அளித்த உறுதிமொழிப்படி, இடைக்கால அரசு என்ற தீர்வு அமைதியான வழியில் ஏற்பட,
அதற்கான பூரண ஒத்துழைப்பை வழங்கவும், புலிகள் தயாராக இருக்கிறார்கள்''
என்றார். இதைத் தொடர்ந்து, ராஜீவ் காந்தியை முரசொலி மாறன் சந்தித்து,
விடுதலைப் புலிகளின் விருப்பத்தையும் நிபந்தனைகளையும் கூறியபோது, அந்தச்
செய்தி ராஜீவ் காந்திக்கு உவப்பாக இல்லை ""புலிகள் ஆயுதங்களைக் கீழே
போட்டுவிட்டுச் சரணடைய வேண்டும் அல்லது இந்திய ராணுவத் தாக்குதலை
சந்திக்கவேண்டும்'' என்று ராஜீவ் கூறியதாகப் பின் நாளில் முரசொலி மாறன்
தன்னிடம் கூறியதாக பாலசிங்கம் தனது நூலில் (பக்.129-130) குறிப்பிட்டுள்ளார்.
இதே நிகழ்வை பழ.நெடுமாறனும் தனது நூல் ஒன்றில், திருகோணமலையில் சந்தித்தபோது
பாலசிங்கம் தன்னிடம் கூறியதாகப் பதிவு செய்திருக்கிறார்.
No comments:
Post a Comment