168:போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது!!
பாதுகாப்பு அமைச்சர் என்று சொல்லப்படும் அமைச்சர்கள் வெறுமனே துணை பாதுகாப்பு
அமைச்சர் என்றுதான் அழைக்கப்படுவர். எனவே பிரதமர் ரணிலின் உத்தரவை, அதிபர்
சந்திரிகா புறம் தள்ளினார். முப்படைகளுக்கும் தலைவர் என்ற முறையில்
தளபதிகளும் சந்திரிகாவின் பேச்சையே கேட்டனர். போர்நிறுத்த அறிவிப்பு
வெளியிடும் முன்பு தன்னிடம் அனுமதி பெறவில்லை என்றும் சந்திரிகா
குற்றம்சாட்டினார். ஆனால், சமாதானத் தேவதை என்றும், அமைதித் தேவதை என்றும்
லட்சுமண் கதிர்காமரின் வெளியுறவுத்துறையால் பிரசாரப்படுத்தப்பட்டிருந்த
சந்திரிகா உலகளவில் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். ரணில் ஆட்சிப்
பொறுப்பேற்றதும், செய்த இன்னொரு நகர்வாக, "நார்வே நாட்டின் சமாதான
முயற்சிகளுக்கு அனுசரணையாக இருப்பேன்' என்று அறிவித்தது ஆகும். அதுமட்டுமன்றி
தமிழர்கள் பகுதியில், சந்திரிகாவால் விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடையை
15, ஜனவரி 2002 முதல் நீக்குவதாகவும் அறிவித்தார். விடுதலைப் புலிகள் தலைவர்
வே. பிரபாகரன் நார்வே நாட்டின் புதிய பிரதமர் கே.எம். பாண்டெவிக்கிற்கு ஒரு
கடிதம் எழுதி, விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே கடந்த
இரண்டரையாண்டு காலமாக சமாதான முயற்சிகளில் ஈடுபட்டு வரும் நார்வே நாட்டு
அரசுக்கு நன்றி தெரிவித்ததுடன், அந்தப் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு,
தமிழீழத்தில் வசிக்கும் தமிழ் மக்களுக்கு நல்லது வேண்டும் எனவும் கேட்டுக்
கொண்டார். அக்கடிதத்தில், சமாதான முயற்சிகளுக்கு ஒத்திசைவாக விடுதலைப்
புலிகள் அமைப்பு நடந்து கொள்ளும் என்றும் உறுதியளித்திருந்தார். ஜனவரி
முதலாம் தேதி எழுதப்பட்ட இக் கடிதத்திற்கு நார்வே நாட்டின் பிரதமர் கே.எம்.
பாண்டெவிக் உடனடியாகப் பதில் எழுதி, சமாதான முயற்சிகளை அரசு சார்பில்,
வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் பாட்டர்சன் மற்றும் அரசுச் செயலாளர் விதார்
ஹெல்கசன் ஆகியோர் மேற்பார்வையிடுவர் என்றும் தெரிவித்திருந்தார். இதன்
பின்னணியில் நார்வே நாட்டு சமாதானக் குழுவினர் புலிகள் மற்றும் அரசிடம் போர்
நிறுத்தம் குறித்த தங்களது திட்டங்களை அளிக்க வேண்டும் என்றும்
வலியுறுத்தினர் (ஜனவரி 7). இதனையொட்டி லண்டனில் இருந்த அன்டன் பாலசிங்கம்
போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கான வரைவுத் திட்டத்தை எழுதவும், நார்வே நாட்டுக்
குழுவினரிடம் தொடர்பு கொள்ளவும் பணிக்கப்பட்டார்.
வன்னிப் பகுதியில் இருந்த அன்டன் பாலசிங்கம் லண்டன் சென்றது எவ்வாறு என்பது
இங்கு அறிவது அவசியமாகும். வன்னியில் இருந்த அன்டன் பாலசிங்கத்தின் இடது
சிறுநீரகம் முற்றிலுமாகப் பழுது ஆனதால், அவர் வெளிநாட்டில் சிகிச்சை பெறுவது
அவசியம் என்று புலிகளின் மருத்துவரான சூரி கருத்து தெரிவித்தார். இதனையொட்டி
லண்டனில் உள்ள விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், நார்வே நாட்டு
அரசு அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டனர். இறுதியில் எரிக் சோல்ஹைமையும்
அணுகினர். இலங்கையின் நார்வே நாட்டுத் தூதரகமும் சர்வதேச செஞ்சிலுவைச்
சங்கமும் சந்திரிகா அரசைத் தொடர்பு கொண்டு, தாங்கள் அனுமதித்தால் அன்டன்
பாலசிங்கத்துக்கு சிகிச்சையளிக்கத் தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்தனர்.
சந்திரிகா மனிதாபிமானமற்ற முறையில், புலிகள் இயக்கத்துக்கு சில நிபந்தனைகளை
விதித்தார். அவை:
1) வடக்கு-கிழக்கில் அரசு நிர்வாகத்தை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் புலிகள்
ஈடுபடக் கூடாது.
2) வான் மற்றும் கடல் வழியாக அந்தப் பிரதேசத்திற்கு முகாம்களுக்கு
செய்யப்படும் விநியோகத்திற்குக் குந்தகம் இழைக்கக் கூடாது.
3) நாடு முழுவதும் உள்ள அரசு சொத்துகளைத் தாக்கியழிக்கக் கூடாது.
4) தடுத்து வைத்திருக்கும் எல்லாப் போர்க் கைதிகளையும் (செஞ்சிலுவைச் சங்கம்
அறிந்த மற்றும் அறியாத) விடுவிக்க வேண்டும்.
5) புலிகள் படையில் 18 வயதுக்குள்ளான போராளிகளை அதிலிருந்து விலக்கி
பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றெல்லாம் வலியுறுத்தப்பட்டன.
"இந்தக் கோரிக்கைகள் ராணுவ ரீதியானவை. இதற்கும் நோயுற்ற பாலசிங்கத்தை
சிகிச்சைக்கு அனுமதிப்பதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. எனவே நானும் பாலாவும்
இந்தக் கோரிக்கையை நிராகரித்து விட்டோம்' (சுதந்திர வேட்கை- அடேல்
பாலசிங்கம்) என்று தனது நூலில் குறிப்பிட்ட அடேல், மாற்று வழியில் கப்பல்
மூலம், தென் கிழக்கு ஆசிய நாடொன்றில் யாருமறியாமல் ரகசியமாக சிறுநீரகத்தை
அகற்றும் சிகிச்சை மேற்கொண்டு, பின்னர் அங்கிருந்த லண்டன் தூதுவர்
அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு, பாஸ்போர்ட் புதுப்பிக்கப்பட்டது என்றும், அடேல்
பாலசிங்கத்துக்கு ஆஸ்திரேலிய தூதுரகம் மூலமாக புதிய பாஸ்போர்ட் பெற்று,
சிகிச்சை மேற்கொண்ட நாட்டின் உயர் அதிகாரிகளான நண்பர்களின் உதவியால் லண்டன்
சென்றதாகவும் குறிப்பிட்டுள்ளார். லண்டன் மருத்துவர்கள் மாற்றுச் சிறுநீரகம்
பொருத்துவதை அங்கீகரிக்கவில்லை. இந்த சமயத்தில்தான் நார்வே நாட்டுச் சமாதானக்
குழுவினர் லண்டனில் பாலசிங்கத்தைச் சந்திப்பது நேர்ந்தது. இதன் பின்னர்
நார்வே நாட்டு தூதுக் குழுவினர், தங்கள் நாட்டு மருத்துவ நிபுணர்களுடன்
கலந்து ஆலோசித்து, மாற்றுச் சிறுநீரகம் பொருத்தலாம். ஆனால் அந்தச்
சிறுநீரகத்தின் செயல்பாடு குறிப்பிட்ட காலங்களுக்கு மட்டுமே இருக்கும் என்று
தெரிவித்தனர்.
இதன்படி, வேறு வழியின்றி, பாலசிங்கத்துக்கு நார்வே நாட்டின் தலைநகர்
ஆஸ்லோவில் மாற்றுச் சிறுநீரகம் பொருத்தப்பட்டது. அங்கு சில மாதங்கள் தங்கி
ஓய்வு எடுத்த பின்னர் பாலசிங்கம் தம்பதியினர் லண்டன் திரும்பினர்.
லண்டனிலிருந்த பாலசிங்கத்தை சமாதான முயற்சி தொடர்பாக விதார் ஹெல்கசன், எரிக்
சோல்ஹைம், ஜான் வெஸ்ட்போர்க், ஜெர்ஸ்தி ட்ரோம்ஸ்டல் உள்ளிட்ட தூதுக்
குழுவினர் சந்தித்தது இவ்வாறுதான். இருதரப்பிலும் பல தடவைகள் பேச்சு நடத்தி
ஒரு வரைவுத் திட்டத்தைத் தயாரித்தனர். 22 பிப்ரவரி, 2002 அன்று போர் நிறுத்த
ஒப்பந்தம் கையெழுத்தானது. கிளிநொச்சியில் இருந்தபடி இந்த ஒப்பந்தத்தில் வே.
பிரபாகரன் முதல் கையெழுத்திட்டார். தொடர்ந்து இலங்கை பிரதமர் ரணில்
விக்ரமசிங்கே வவுனியாவுக்கு வந்திருந்து கையெழுத்திட்டார். இதேநேரத்தில்,
நார்வே நாட்டில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் பீட்டர்சன் குழுவினர் ஆஸ்லோ
நகரில், பத்திரிகையாளர் சந்திப்பின் போது, விடுதலைப் புலிகள்- இலங்கை
அரசுக்கு இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டிருப்பதான செய்தியை உலகுக்கு
அறிவித்தனர். இதுகுறித்து ஜான் பீட்டர்சன் விளக்குகையில் தெரிவித்ததாவது:
"இதுவரை நடந்த யுத்தங்களின் மூலம் இலங்கையில் 60 ஆயிரம் உயிர்கள் பலியாகி
இருக்கின்றன. பல லட்சக்கணக்கானோர் பல்வேறு வகையில் பாதிப்புக்கு ஆளாகி
இருக்கிறார்கள். எனவே, இந்நிலையில் சமாதானப் பேச்சும், போர்நிறுத்தமும்
அவசியமாகிறது. இதன்மூலம் இலங்கையில் தமிழர்கள் மட்டுமின்றி முஸ்லிம்கள்,
சிங்களர்கள் மற்றும் அனைத்து பிரிவினரும் இயல்பு வாழ்க்கை வாழ
உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் போர் நிறுத்தத்தைக் கண்காணிக்க நார்வே
நாட்டுத் தலைமையில் சர்வதேச கண்காணிப்புக் குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டு,
அக்குழு, போர் நிறுத்ததைக் கண்காணிக்கும். ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டவர்கள்
எடுத்த மிகவும் துணிச்சலான நடவடிக்கை ஆகும். அதாவது சமாதானத்துக்காக
எடுத்திருக்கிறார்கள். சமாதானம் என்பது நீண்டபாதை. அது கரடு முரடானது.
பார்க்க சுலபமானது. ஆனால் உண்மை அதுவல்ல. இருதரப்பினருக்கும் ஓர்
அர்ப்பணிப்பு உணர்வும் ஈடுபாடும் இருந்தால் மட்டுமே இந்த நீண்ட பாதையைக்
கடக்க முடியும். ஒளிமயமான எதிர்காலம் எங்கள் முன் தென்படுகிறது. எங்களது
பயணத்தில் வெற்றியடைவோம் என்று உறுதியாக நம்புகிறோம். இந்த ஒப்பந்தம் மூன்று
அம்சங்களை உள்ளடக்கி உள்ளது.
1) போராளிகளோ அரசோ ஆயுதங்களைப் பயன்படுத்தக்கூடாது; அவர்கள் ஆயுதங்களைக் கீழே
போட வேண்டும்.
2) இலங்கையின் அனைத்து இன மக்களும் இயல்பு வாழ்க்கை வாழ அனுமதிக்கப்பட்டு,
பேதமின்றி அனைத்துப் பிரிவினருக்கும் உண்டான உரிமைகள் சலுகைகளை அடையப்
பாடுப்படுவது.
3) போர் நிறுத்தக் காலத்தில் இவைகளைக் கண்காணிக்க நார்வே தலைமையில்
கண்காணிப்புக் குழு மேற்பார்வை இடுவது- ஆகியவை அடங்கும்.
புலிகள்- அரசுக்கிடையே ஏற்பட்ட ஒப்பந்தம் அறிந்து தமிழர்கள் மட்டுமன்றி உலக
நாடுகள் மத்தியிலும் மகிழ்ச்சி அலையை ஏற்படுத்தியது. ஆனால் சந்திரிகாவோ
இலங்கையின் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரான நடவடிக்கை இது என்றும்
இதுகுறித்த "முன் அனுமதி'யைத் தன்னிடம் பெறவில்லை என்றும் கடுமையான
விமர்சனங்களில் இறங்கினார். இதுகுறித்து நார்வே நாட்டு சமாதானத் தூதுவர்
எரிக் சோல்ஹைம் பின்னர் அளித்த பேட்டியொன்றில் குறிப்பிடுகையில், "அப்போதைய
காலப் பகுதியில் பல்வேறு கஷ்டங்கள் இருந்த போதிலும் அரசுக்கும் புலிகளுக்கும்
ஏற்படுத்தப்பட்ட யுத்தநிறுத்த உடன்படிக்கையானது, 1983-ல் ஏற்பட்ட
வன்முறைக்குப் பிறகு முதன்முதலாக ஏற்பட்ட உறுதியான- அமைதியான- சூழ்நிலையை
உருவாக்கியது. அதுவே அப்போது எங்களது சாதனையாக இருந்தது.' (இலங்கையில்
சமாதானம் பேசுதல்- குமார் ரூபசிங்கவுக்கு அளித்த பேட்டியில். பக். 443) என்று
தெரிவித்துள்ளார்
169:உலகைக் கவர்ந்த பிரபாகரன் பேட்டி! ! போர் நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பிறகு அதை நடைமுறைப்படுத்துகிற விஷயங்களில்
ஏற்பட்ட சுணக்கங்களை நார்வே சமரசக் குழுவினரின் கவனத்திற்கு பாலசிங்கம்
கொண்டு வந்தார்.இந்தப் பேச்சுவார்த்தைகளில் பிரபாகரனின் ஆலோசனைகளை நேரடியாகப்
பெறவேண்டிய நிலையில் இருப்பதாகவும், பாதுகாப்புச் சூழ்நிலை கருதி இந்தப்
பேச்சுவார்த்தைகளை கொழும்பில் அல்லாமல் வேறு ஒரு நாட்டில் நடத்துவது சரியாக
இருக்கும் என்றும் பாலசிங்கம் கருத்துத் தெரிவித்தார். பிரபாகரனுடன்
கருத்துப் பரிமாற்றம் செய்ய அடேலும், பாலசிங்கமும் வன்னி செல்வதற்கு இன்னொரு
நாட்டின் உதவி தேவைப்பட்டது. மாலத்தீவு கடல் சுற்றுலாவுக்கான விமானங்களைக்
கொண்டிருப்பதால், அந்த நாட்டின் உதவி அணுகப்பட்டு, மாலத்தீவு சென்று, விமான
நிலையத்தின் அருகே மார்ச் 24-இல் ஓட்டலில் இரவு தங்கினர். பாலசிங்கம்
குழுவினர் கடற்படை விமானத்தில் புறப்பட்டு வன்னிப் பகுதியை அடைந்தனர்.அன்றைய
தினமே பிரபாகரனுடன் விரிவாகப் பேசிய நிலையில், மாலையில் வந்த நார்வே
குழுவினருடன் பேச்சு நடத்தப்பட்டது. இக் குழுவினருடன் போர் நிறுத்தக்
கண்காணிப்புக் குழுப் பொறுப்பாளர் ஜெனரல் ட்ரான்ட் ஃப்ரோகோவுட் மற்றும்
ஃபின்லாந்தைச் சேர்ந்த ஒருவரும் கலந்துகொண்டனர்.
பேச்சினூடே வவுனியா-கிளிநொச்சி வழியாகச் செல்லும் ஏ-9 தேசிய நெடுஞ்சாலை
ஏப்ரல் 8-ஆம் தேதியிலிருந்து திறக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
பிரபாகரன் ஒப்பந்தத்தில் உள்ள அம்சங்கள் நிறைவேற்றப்படுவதில் சுணக்கம்
தென்படுகிறது என்று குறிப்பிட்டார். அப்போது பிரதமர் எல்லா அம்சங்களையும்
நிறைவேற்ற உறுதி பூண்டிருப்பதாக நார்வே குழுவினர் தெரிவித்தனர். ஏ-9 தேசிய
நெடுஞ்சாலை ஏப்ரல் 8-ஆம் தேதி திறக்கப்பட்டது. விடுதலைப் புலிகள் இயக்க
வரலாற்றில் ஏப்ரல் 10, 2002 ஒரு முக்கியமான நாளாகும். அன்றைய தினம் வே.
பிரபாகரன் இலங்கைப் பத்திரிகையாளர்கள் மட்டுமன்றி உலகிலுள்ள அனைத்துப்
பத்திரிகையாளர்களையும் கிளிநொச்சியில் சந்தித்தார். தூயவன் அறிவியல்
கல்லூரியில் இம் மாநாடு நடைபெற்றது. பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்ற
வளாகம் மட்டுமன்றி, அந்தப் பகுதி முழுவதுமே பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
செய்யப்பட்டிருந்தன. குறிப்பிட்ட நேரத்தில் வே.பிரபாகரன் அரங்கத்துக்கு
வந்தார். அவருடன் அன்டன் பாலசிங்கம், அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் சுப.
தமிழ்ச் செல்வன், தென்பகுதித் தளபதிகள் கருணா, பதுமன் ஆகியோரும் வந்தனர்.
விடுதலைப் புலிகளின் 25 ஆண்டு காலத்தில் இவ்வளவு பெரிய பத்திரிகையாளர்
கூட்டத்தைக் கூட்டியது இதுவே முதல் முறை.
மாலை 4.30 மணிக்குதான் கூட்டம் என்ற போதிலும், பத்திரிகையாளர்கள்
அதிகாலையிலிருந்தே வர ஆரம்பித்துவிட்டனர். பல்வேறு வகையான கேள்விகளுக்கும்
பொறுமையுடன் பதிலளித்த பிரபாகரன் எந்தக் கட்டத்திலும் உணர்ச்சி வசப்படவில்லை
என்பது பத்திரிகையாளர்களின் மதிப்பீடு ஆகும். இங்கே சில கேள்விகளும்
பிரபாகரன் அளித்த பதில்கள் வருமாறு:
கேள்வி: ""தனிநாடு கோரிக்கையை கைவிட்டு விட்டீர்களா?''
பதில்: ""1977-ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் தமிழீழக் கொள்கைக்கு ஆதரவாக
எங்கள் மக்கள் தீர்ப்பு அளித்தனர். மக்கள் அளித்த அந்தத் தீர்ப்பின்
அடிப்படையில் நாங்கள் இப்போது போராடி வருகிறோம். எங்களுடைய தனிநாடு
கோரிக்கையைக் கைவிடுவதற்குச் சரியான சூழ்நிலைகள் இன்னமும் உருவாகவில்லை.''
""போர்நிறுத்தம் குறித்து என்ன சொல்கிறீர்கள்?''
""அமைதிக்கான எங்கள் அர்ப்பணிப்பில் நாங்கள் உண்மையாக இருக்கிறோம். அமைதி
வேண்டும் என்பதில் நாங்கள் தீவிரமாக இருக்கிற காரணத்தினாலேதான், நாங்களாகவே
முன்வந்து நான்கு மாத காலம் போர்நிறுத்தம் செய்தோம்.''
""கடந்த காலத்தில் நடைபெற்ற சமாதானப் பேச்சு போல இந்தப் பேச்சுவார்த்தையும்
தடம்புரண்டு விடுமா?''
""முன்பு நடைபெற்ற பேச்சுவார்த்தைகளைப் போன்று இந்தப் பேச்சுவார்த்தை தோல்வி
அடையாது. முதலாவதாக இந்தப் பேச்சுவார்த்தையில் தொடர்பாளராக நார்வே நாடு
உள்ளது. இரண்டாவதாகப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அமைதி வேண்டும் என்பதில்
உண்மையான அக்கறை கொண்டிருக்கிறார்.''
""அமைதிக்கான விலை என்னவென்று தீர்மானமாகிவிட்டதா?''
""எங்களுடைய தனிநாடு கோரிக்கையை நாங்கள் கைவிட வேண்டும் என்பது அதன்
விலையானால், அதற்குச் சரியான மாற்றுத் திட்டத்தினை இலங்கை அரசு அளிக்க
வேண்டும். அதைப் பார்த்துதான் எங்களுடைய கோரிக்கையை நாங்கள் கைவிடுவதா
இல்லையா என்பதை முடிவு செய்வோம்.''
""உங்களை பயங்கரவாதிகள் என்று கூறி அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட
நாடுகள் தடை செய்துள்ளனவே?''
""நாங்கள் பயங்கரவாதிகள் அல்லர். நாங்கள் சுதந்திரத்துக்காகப் போராடும்
போராளிகள். பயங்கரவாதத்துக்கும் சுதந்திரப் போராட்டத்துக்கும் இடையே உள்ள
வேறுபாட்டினை விளக்க சர்வதேச நாடுகள் முன்வரவேண்டும். இதுவரை இதற்கான
விளக்கத்தை யாராலும் அளிக்க முடியவில்லை.'' ""இனப் பிரச்னைக்கு எவ்வாறு
தீர்வு காணவேண்டும் என்று கூறுவீர்களா?''
""திம்பு கோட்பாடுகளின் அடிப்படையில் மட்டும் இனப் பிரச்னைக்குத் தீர்வு காண
முடியும்.'' ""இலங்கை அரசு அவ்வாறு தீர்வு காணுமா?''
""திம்புக் கோட்பாடுகளின் அடிப்படையில் இனப் பிரச்னைக்குத் தீர்வு காணும்
திட்டத்தை சிங்கள அரசுதான் அளிக்கவேண்டும். சுயநிர்ணய உரிமைப் பிரச்னையில்
தனது அரசியல் சட்டத்திலேயே விளக்கம் தந்த நாடு தென் ஆப்பிரிக்கா. தேசிய இனப்
பிரச்னைக்குத் தனது அரசியல் சட்டத்தில் விளக்கம் தந்த நாடு ஸ்பெயின். கனடா
நாடும் தனது நாட்டிலுள்ள சிறுபான்மை இனங்களின் பிரச்னைக்குத் தீர்வு
கண்டுள்ளது. இந் நாடுகளைப் போன்று இனப் பிரச்னைக்குத் தீர்வு காணவேண்டிய கடமை
சிங்கள அரசுக்கும் உண்டு.''
""உங்கள் இயக்கம் மீது தடை இருக்கிறதே? எப்படிப் பேச்சுவார்த்தைகளில்
பங்கேற்பீர்கள்?'' ""தடை நீக்கப்பட்டபிறகு பேச்சுவார்த்தையில் பங்கேற்போம்.''
""ஏ-9 தேசிய நெடுஞ்சாலை திறக்கப்பட்டுள்ளதே?''
""நன்றி சொல்கிறோம்.'' ""சமாதானப் பேச்சு பற்றி உலகத் தமிழர்களின்
கண்ணோட்டம்?'' ""நீண்ட காலத்துக்குப் பிறகு பேச்சுவார்த்தையில்
பங்கேற்கிறோம்.
எல்லா நாடுகளிலும் உள்ள அனைத்து தமிழர்களின் ஆதரவும் எம் பக்கம்
இருக்கவேண்டும்.'' ""உங்களிடம் ராணுவக் கைதிகள் உள்ளனரா?''
""சிறிய அளவிலான தொகையினர்தான் கைதிகளாக உள்ளனர். சர்வதேச செஞ்சிலுவைச்
சங்கம் மூலமாக, அவர்களைத் தங்கள் குடும்பத்துடன் தொடர்பு கொள்வதற்கான
ஒழுங்குகள் நீண்டகாலமாகவே செய்து தரப்பட்டுள்ளன.''இலங்கை அரசியல் சட்டப்படி அதிபர்தான் பாதுகாப்புக்கும் அமைச்சராவார்.
No comments:
Post a Comment