Friday, November 5, 2010

37: அடக்குமுறையின் உச்சகட்டம்

 கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் அடக்குமுறையைக் கண்டு பொறுத்துக்கொள்ள
      முடியாத தமிழ் இளைஞர்கள் எதிர்த்தாக்குதல் நடவடிக்கைகளில் இறங்க
      ஆரம்பித்தனர்.யாழ்ப்பாணப் பகுதியில் உள்ள நெல்லியடி என்ற இடத்தில் நான்கு
      போலீஸôர் கொலை செய்யப்படுகின்றனர். மூன்று போலீஸ் அதிகாரிகள் கடுமையாகக்
      காயம் அடைகின்றனர். ஒருவர் இருவராகத் தமிழர்களைக் கொன்ற இனவாதம் இப்போது வேறு
      உருவம் எடுத்துக் கும்பல் கும்பலாக தமிழர்களைக் கொல்லும் போக்கு
      ஆரம்பிக்கப்பட்டது. இந்தப் படுபயங்கர நிகழ்ச்சிகளையும், தமிழர்களின்
      வேதனையையும் முழுமையாகச் சொல்வதற்கு இந்தப் புத்தகம் போதவே போதாது. மேலும்
      அந்தக் கொடூரத் தாக்குதல்களைச் சரியாகச் சொல்ல எந்த மொழியாலும் முடியவும்
      முடியாது. ஆவேசத்தின் வேகத்திலும், உணர்ச்சியின் உச்சகட்டத்திலும் இருந்த
      தமிழ் இளைஞர்கள் ராணுவத்திற்கும் போலீஸýக்கும் எதிராகப் பல இடங்களில்
      தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர் (விடுதலைப்புலிகள் வரலாறு 1975-84).
      சாகவச்சேரிப் போலீஸ் ஸ்டேஷன் தாக்கப்பட்டு மூன்று போலீஸ் அதிகாரிகள் கொலை
      செய்யப்பட்டு, பலர் காயம் அடைகின்றனர். போலீஸ் ஒடுக்குமுறையைத் தீவிரமாகக்
      கையாண்ட பருத்தித்துறைக் காவல் நிலைய அதிகாரி போலீஸ் நிலைய வளாகத்திலேயே
      சுட்டுக் கொல்லப்பட்டார். அவருடன் ஜீப் டிரைவர் ராஜபட்சவும் கொல்லப்பட்டார்.
      உமையாள்புரம், பரந்தன் என்ற பகுதியில் ஒரு ராணுவ லாரி தாக்கப்பட்டு
      ராணுவத்தினருக்கும் இளைஞர்களுக்கும் தீவிர மோதல் ஏற்பட்டுப் பல ராணுவத்தினர்
      கொலை செய்யப்பட்டும், பலர் காயத்துடனும் தப்பி ஓடுகின்றனர். யாழ்ப்பாணம்
      தலைமைச் செயலகத்தில் பாதுகாப்பு ஏற்பாட்டிற்காகக் கூட்டப்பட்ட அரசு உயர்
      அதிகாரிகள் கலந்துகொண்ட மாநாடு-உள்ளே நடந்து கொண்டிருக்கையில் செயலகக்
      கட்டிடம் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டது (விடுதலைப்புலிகள் வரலாறு
1875-84).
      ஐக்கிய தேசியக் கட்சியின் மூன்று தீவிர ஆதரவாளர்கள் கொலை செய்யப்பட்டனர்.
      இதில் இரண்டு பேர் உள்ளூர் தேர்தல் வேட்பாளர்கள். ஐக்கிய தேசியக் கட்சியின்
      வேட்பாளர்கள் பலர் கட்சியில் இருந்து ராஜினாமா செய்கின்றனர். அக்டோபர் 15-ஆம்
      நாள் ராணுவத்தில் மூவர் சுட்டுக் கொல்லப்படுகின்றனர். இதை ஒட்டி ஆத்திரம்
      கொண்ட ராணுவம் வெறித் தாக்குதல் நடத்தியது. சாலையில் போவோர் வருவோரைத்
      தாக்குவது, பஸ், ரயில் வண்டியில் பயணம் செய்வோரை வழிமறித்துத் தாக்குவது,
      கடைகளைச் சூறையாடுவது போன்ற அதிரடித் தாக்குதல்களை நடத்தியது ராணுவம்.
      அக்டோபர் 21-ஆம் நாள் கிளிநொச்சியில் ஒரு வங்கி கொள்ளை அடிக்கப்பட்டு, கொள்ளை
      அடித்தவர்கள் வெளியேறியபோது ராணுவத்துடன் ஏற்பட்ட மோதலில் ஒரு ராணுவ வீரர்
      கொல்லப்பட்டார்.
      இது நிலைமையை மோசமாக்கி மேலும் ராணுவத்தினரின் கொலை வெறி அதிகமாகியது.
      அக்டோபர் 25-ஆம் நாள் இங்கிலாந்து அரசி இலங்கை வரவேண்டி இருந்ததால்
      ராணுவத்தினர் அரசினரால் கொஞ்சம் கட்டுப்படுத்தி வைக்கப்பட்டனர்.
      அதேநேரத்தில், தமிழர்களும் சிங்களவர்களும் வாழும் பகுதிக்கு இடையில் இருந்த
      எல்லை மாவட்டமான வவுனியா மாவட்டத்தில் ராணுவமும் போலீஸýம் அடக்குமுறை
      அட்டகாசத்தைத் துவக்கியது.1970-ஆம் ஆண்டு முதல் இந்தியத் தமிழர்
      குடும்பங்களும் இலங்கைத் தமிழர் குடும்பங்களும், மலைப்பகுதித் தோட்டங்களில்
      இருந்தும், மற்றும் தென்பகுதியில் இருந்தும் கலவரங்களால் பாதிக்கப்பட்டு
      வீடு, சொத்துச் சுகங்களை இழந்து வவுனியா மாவட்டத்தில் தங்கி வாழ முயற்சி
      செய்து கொண்டிருந்தனர். இங்கு அரசின் பயங்கரவாதம் கட்டவிழ்க்கப்பட்டது.
      ஏற்கெனவே கலவரங்களில் குடும்பங்களை இழந்து பாதிப்படைந்திருந்த இவர்கள்
      திரும்பவும் ஒரு வன்முறைத் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டுச்
      சின்னாபின்னமானார்கள். இவர்களில் பெரும்பாலோர் மகத்தான பொறுமையும் தாங்கும்
      சக்தியும் கொண்டிருந்ததால்தான் இந்த மோசமான சூழ்நிலையில் தாக்குப் பிடிக்க
      முடிந்தது. மறுபடியும் இவர்களைக் குடியமர்த்துவதில் பெரும் தொல்லைகளைச்
      சந்திக்க வேண்டியிருந்தது. மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் பல்வேறு
      நிறுவனங்கள் இவர்களுக்கு உதவினர்.
      பல பகுதியில் இருந்து அகதிகள் மீண்டும் இங்கு கொண்டு வரப்பட்டுக் காந்தீயம்
      நிறுவனத்தால் குடி அமர்த்தப்பட்டனர். அகில இலங்கை விவசாயக் காங்கிரஸ்
      மூலமாகவும் அகதி முகாம் அமைக்கப்பட்டது. இந்தக் கலவரங்களுக்குப்பின் நாட்டின்
      பல பகுதிகளிலும் அகதிகள் முகாம்கள் தோன்றின. நவம்பர் மாத முடிவில்
      இப்பகுதியில் காடுகளில் தங்கி இருக்கும் தீவிரவாதிகளைத் தேடுகிறோம் என்ற
      பெயரில் இப்பகுதியை ஆக்கிரமிக்கும் நடவடிக்கையில் ராணுவம் இறங்கியது.
      பண்ணைகளின் உள்ளே புகுந்து அகதிகளை அடித்து நொறுக்கி, கைது செய்தபோது இரண்டு
      இளைஞர்கள் கொல்லப்பட்டனர். சமூக சேவகிகள் தாக்கப்பட்டனர்; மிகக் கேவலமாக
      நடத்தப்பட்டனர். இந்தக் கலவரங்களை அரசு தொடர்ந்து உருவாக்கிக்
      கொண்டிருந்ததற்கு முக்கியமான காரணங்கள்:-
      ஒன்று, தொடர்ந்து இனவாத ஆளுமையை நிலைநாட்டிக் கொள்ளுவதற்கு. இரண்டாவதாக, நாடு
      தழுவிய பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களைத் திசை திருப்ப. மூன்றாவதாக,
      புதிய அரசின் பொருளாதாரத் திட்டங்களின் சீர்கேடுகளை மறைத்துக் கொள்ள!
      இதுவரை காணாத மிகப் பெரிய பணவீக்கம், வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற
      நெருக்கடிகளை அரசு சந்தித்துக் கொண்டிருந்தது. இவைகளில் இருந்து மக்களைத்
      திசை திருப்ப இந்த அணுகுமுறை உதவியது. தேசிய இனப்பிரச்னைக்கான கேள்வியில்
      சிங்கள பாசிச ராணுவ பயங்கரவாதம் மக்களைப் பெருமளவில் இனப்படுகொலை செய்வதை
      மட்டுமே தனது ஒரே தீர்வாக வைத்திருந்தது. சிங்கள ஆட்சியாளர்கள் மிகப் பெரும்
      அளவிலான மக்கள் படுகொலைகள், உடமைகளைச் சேதப்படுத்துதல் ஆகியவற்றின் மூலம்
      தமிழ் மக்களின் சுதந்திரத் தேசிய இன உணர்வை நசுக்கிவிடலாம் என்று கனவு
      கண்டதும் இந்தத் தொடர் வன்முறைக்கு ஒரு காரணமாகும்.
      மேலும் ஓர் ஆய்வாளர் குறிப்பிடுவதைப் போல்,
      சேனநாயக்கா (முன்னாள் பிரதம மந்திரி) சட்டங்களின் மூலம் தமிழர்களை ஒடுக்க
      ஆரம்பித்தார். பிறகு திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா தமிழர்களைக் கூட்ட
      வன்முறை (mass violence) மூலம் உடல் ரீதியாகவும், உள்ள ரீதியாகவும்
      சித்திரவதைகள் செய்தார். ஆனால் ஜே.ஆர். ஜெயவர்த்தன எல்லாவற்றிற்கும் மேலாக
      ஒருபடி மேலே சென்று, ஒரு பாசிசவாதியாக மாறி, அரசு ஆயுத சக்திகளின்
      பயங்கரவாதத்தின் மூலம் தமிழர்களை ஒடுக்க நினைக்கிறார்.*
      இவையெல்லாம் தமிழர்களின் நீண்ட நாள் கோரிக்கையான தனி ஈழத்தைப் பெறுவதையும்,
      தமிழ் மக்களின் கெüரவம், சுதந்திரம், உரிமை ஆகியவற்றைப் பாதுகாப்பதையும்,
      மதச்சிறுபான்மையினரின் சுயபாதுகாப்பு உரிமையையும் ஒடுக்குவதற்கு உருவான ஒரு
      புதிய வடிவமும் ஆகும்.
      * கெயில் ஓம் விடட் (Gail Om Vedtt) Article in Frontier, Calcutta, Sept.
83.
      வியாழக்கிழமை, 08 அக்டோபர் 2009 20:39 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

No comments:

Post a Comment