Sunday, November 7, 2010

112- எம்.ஜி.ஆர். வெளியிட்ட அஞ்சலி,113: போர் நிறுத்தம்: எம்.ஜி.ஆர். வலியுறுத்தல்!

112- எம்.ஜி.ஆர். வெளியிட்ட அஞ்சலிமாத்தையாவிடம் ஒப்படைக்கப்பட்ட தளபதிகள் புலேந்திரன், குமரப்பா மற்றும்
      முக்கிய உறுப்பினர்களான அப்துல்லா, ரகு, தவக்குமார், நளன், அன்பழகன், பழனி,
      ஆனந்தகுமார், ரெஜினால்ட், கரன், மிரேஷ் ஆகியோரின் உடல்களில் மிக மோசமான
      இரத்தக் காயங்களுடன் இருவர் உடல்கள் இருந்தன. அவை குமரப்பா, புலேந்திரன்,
      உடல்கள்தான். ஏராளமான காயங்கள். அவர்கள் உயிர்போன பின்னும் சிங்கள
      வெறியர்களின் ஆத்திரம் தீரவில்லை. கொத்திக் குதறிப் போட்டிருக்கிறார்கள்.
      இதுகுறித்து மாத்தையா, பழ. நெடுமாறனிடம் மேலும் கூறியதாவது: ""12 தோழர்களின்
      உடல்களைப் பார்த்த எங்கள் தலைவர் பிரபாகரன் கலங்கினார். இளம் வயதிலிருந்து
      அவர்களோடு பழக்கம். துக்கம் மேலோங்க அது வெஞ்சினமாக மாறிற்று.
      பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். அடுக்கி
      வைக்கப்பட்டிருந்த சிதைக்கு எங்கள் தலைவர் தீ வைத்தபோது எங்கள் நெஞ்சங்களும்
      கனன்று எழுந்தன. இனி எங்களையும், எங்கள் மக்களையும் பாதுகாக்க இந்திய அமைதிப்
      படையை நம்பிப் பயனில்லை. நாங்கள் ஆயுதம் தூக்கினோம். எங்கள்
      பாதுகாப்புக்காகத்தான் இவ்வாறு செய்தோம். இரு அரசுகளும் எங்களை அழிப்பது
      என்று முடிவெடுத்தபோது நாங்கள் மானமுடன் வாழவும் சாகவும் ஒரே வழி
      போராட்டம்தான். அடிமைகளாகக் கொல்லப்படுவதைவிடப் போராடி இறப்பது எவ்வளவோ மேல்
      என உறுதி பூண்டோம்'' என்றார் மாத்தையா. ஜெயவர்த்தனா விரும்பியது இதைத்தான்.
      இந்திரா அம்மையார் பயிற்சி கொடுத்தார். ஆயுதம் கொடுத்தார். எனவே இந்திராவை
      எதிரியாகக் கருதினார் ஜெயவர்த்தனா. ஆனால் பிரதமர் ராஜீவ் காந்தி காலத்தில்
      மாற்றுக் கருத்துக்கிடையே நட்பு பூண்டார்; ஒப்பந்தம் போட்டார். தான் செய்ய
      வேண்டிய வேலையை இந்தியப் படையிடம் தள்ளிவிட்டார். இந்திரா காந்தியின்
      மொழியில் சொல்வது என்றால் ஜெயவர்த்தனா என்கிற கிழட்டுக் குள்ளநரியின்
      ராஜதந்திரம் வென்றுவிட்டது.
      இந்தச் சம்பவம் என்பது தற்செயல் அல்ல. "செப்டம்பர் இரண்டாம் வாரத்தில்
      இருந்து இலங்கை கடற்படை, இந்தியக் கப்பல் படையுடன் சேர்ந்து ரோந்து சுற்றப்
      போகிறோம்' என்று தீட்சித், ஹர்கிரத் சிங்கிடம் செப்டம்பர் 11 அன்று கூறியதை
      இங்கே நினைவில் கொள்வது தகும். அதுமட்டுமின்றி 17 புலிகளை, சிங்களக்
      கடற்படையினர் சுற்றி வளைத்தபோது, அந்தச் செய்தியை ஹர்கிரத் சிங்,
      தீட்சித்திடம் தொடர்பு கொண்டு தெரிவித்தார். அப்போது அவர் சிறிய விடுமுறையில்
      இந்தியாவில் இருந்தார். இதைக்கேட்டபோது தீட்சித் சொன்னது, "நான் கொழும்பு
      திரும்பியதும் இதுகுறித்து உயர்ந்த பட்ச நடவடிக்கை எடுக்கிறேன்' என்பதாகும்.
      அக்டோபர் 3-ஆம் தேதி லெப். ஜெனரல் தீபிந்தர் சிங் சென்னையிலிருந்து கொழும்பு
      சென்றார். அங்கு அவரும் தூதுவர் தீட்சித்தும் ஜெயவர்த்தனாவைச் சந்தித்து
      வற்புறுத்தியும் எதுவும் நடக்கவில்லை. மாறாக, ஹர்கிரத் சிங்கை திருகோணமலைக்கு
      உடனே சென்று அங்கு பாதுகாப்பைப் பலப்படுத்த உத்தரவிட்டார். புலேந்திரன்
      கைதால் அங்கு பிரச்னை எழும் என்ற கணிப்பில் பிறந்த உத்தரவு அது. மறுநாள்
      தீபிந்தர் சிங் கொழும்பிலிருந்து திருகோணமலை வந்து ஹர்கிரத் சிங்கிடம்,
      "இலங்கை அரசு 17 பேரையும் விடுவிக்க மறுக்கிறது' என்று கூறியதாக அவர் தனது
      நூலில் கூறியிருக்கிறார். அதுமட்டுமின்றி, இதே சம்பவத்தை தீட்சித் தான்
      எழுதிய நூலில் வேறு விதமாக எழுதியிருப்பதாக ஹர்கிரத் சிங்
குறிப்பிட்டுள்ளார்.
      தீட்சித் கூறியிருப்பதாவது, "பலாலி விமான தளத்தில் போராளிகளுக்கு உரிய
      பாதுகாப்பு கொடுக்கச் சொன்னதாகவும், அக்டோபர் 2,3-ல் இதுகுறித்து மேஜர்
      எதுவும் பேசவில்லை என்றும், அன்றாடம் எழுதும் ‘ரஹழ் க்ண்ஹழ்ஹ்’-ல்
      இதுகுறித்து எழுதவில்லை' என்றும் குறிப்பிட்டுள்ளார். எனவே தீபிந்தர் சிங்
      அலுவலகத்துக்குத் தொடர்பு கொண்டு, போராளிகளை எக்காரணம் கொண்டும் கொழும்புக்கு
      அனுப்பக் கூடாது என்று சொன்னதாகவும், தான் தில்லியில் இருப்பதாகவும்
      தெரிவித்ததாக அந்நூலில் எழுதியுள்ளதாக ஹர்கிரத் சிங் குறிப்பிட்டுள்ளார்.
      இந்தப் புகார் குறித்து ஹர்கிரத் சிங் தனது நூலில் மேலும் கூறுகையில்,
      "ராஜதந்திர அலுவல் முறையில் ஏற்பட்ட தோல்வியால் இவ்வாறு திசை
      திருப்பப்படுகிறது. 17 போராளிகளைப் பாதுகாக்கவில்லை என்பது சரியல்ல. நான்
      எனது மேல் அதிகாரியிடம் போராளிகள் கொழும்பு செல்வதை எக்காரணம் கொண்டும்
      அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தினேன். அதுமட்டுமின்றி இந்தியத் தூதுவர்
      உடனே கொழும்பு சென்று, இலங்கை அரசுத் தரப்பில், உயர்மட்டத்தில் முயற்சி
      மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினேன்' என்றும் குறிப்பிட்டுள்ளார்.
      மேற்கண்ட தகவல்களில் முரண்பாடுகள் உண்டென்றாலும் ஈழத்தமிழர் பிரச்னையில்
      "இந்திய மேலிடத்தின்' பொதுவான அணுகுமுறை என்னவென்பது இதன்மூலம் புரிய வரும்.
      அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலும் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். ஈழத்
      தமிழ் மக்களின் போராட்டங்களைப் பற்றிய அக்கறையுடன் இருந்தார் என்பதற்கு ஓர்
      உதாரணம் திலீபன் மறைவுக்கு அவர், விடுத்த இரங்கல் செய்தியாகும். அவரது
      இரங்கல் செய்தியில், "திலீபன் அவர்கள் இந்திய அரசுக்கு ஐந்து கோரிக்கைகளை
      முன்வைத்து பட்டினிப் போர் தொடங்கி 12 நாட்கள் ஒரு சொட்டு நீர் கூட
      குடிக்காமல் 26.9.87-இல் மடிந்து போனார் என்பதை அறிந்து வருந்துகிறேன். எனது
      சார்பிலும் தமிழக மக்கள் சார்பிலும், தமிழக அரசு சார்பிலும் ஆழ்ந்த அஞ்சலியை
      தெரிவிக்கிறேன்' என்று குறிப்பிட்டிருந்தார்.
      அதேபோன்று புலேந்திரன், குமரப்பா மரணத்துக்கும் தமிழக முதலமைச்சர்
      எம்.ஜி.ஆர். அமெரிக்காவிலிருந்து அறிக்கை வெளியிட்டார். அவ்வறிக்கையில்,
      ""தங்களால் கைது செய்யப்பட்ட 17 விடுதலைப் புலிகளையும் இலங்கைக் கடற்படை
      இந்திய அமைதிப் படையிடம் ஒப்படைத்து இருக்குமானால் அவர்களுள் 12 பேர்
      ஒட்டுமொத்தமாக தற்கொலை செய்து கொண்டிருக்க மாட்டார்கள். வன்முறைகளும்
      வெடித்து இருக்காது. இந்திய-இலங்கை உடன்படிக்கையின் அடிப்படையில் இடைக்கால
      அரசு ஒன்று ஏற்பட வேண்டிய நேரத்தில் வன்முறைகள் வெடித்ததும், அதில் இந்திய
      அமைதிப் படையும் விடுதலைப் புலிகளும் இறங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டதும்
      கவலைக்குரியது. இந்தக் கடினமான பிரச்னைக்கு நிரந்தரமான தீர்வு காணத்
      தொடர்ந்து முயற்சி மேற்கொள்வேன். தமிழக அரசு இதுபற்றி எடுக்கும்
      முடிவுகளுக்கு ஆதரவு தருமாறு தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறேன்''
      (11.10.1987 செய்தித்தாள்கள்) என்று அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த அறிக்கை
      இந்திய அரசைச் சங்கடத்தில் ஆழ்த்தியது
      113: போர் நிறுத்தம்: எம்.ஜி.ஆர். வலியுறுத்தல்!         ஜெயவர்த்தனாவை இந்தியத் தரப்பினர் சந்தித்தபோது, புலிகள் மீது போர்
      தொடுக்காவிட்டால் ஒப்பந்தம் ரத்தாகும் என்று அவர் மிரட்டினார். இந்தியத்
      தரப்பினர் திகைத்து, தில்லிக்கு தகவல் அளித்தனர். குமரப்பா, புலேந்திரன்
      உள்ளிட்டோரை விடுவிப்பது குறித்து தீபிந்தர் சிங் தனது நூலில் வெளிப்படுத்தி
      உள்ளார். அதன் விவரம் வருமாறு:
      கொழும்பு சென்று ஜெனரல் ரணதுங்கே, ஜெயவர்த்தனா உள்ளிட்டவர்களைச் சந்தித்து,
      கைதானவர்களை விடுவிக்கும்படி தீபிந்தர்சிங் கோரினார். ஜெயவர்த்தனா கோபமுற்று,
      "இந்திய ராணுவ பலம் எவ்வளவு? வலிமை வாய்ந்த ராணுவம் என்று கூறி வருகிறீர்கள்.
      உங்களால் விடுதலைப் புலிகளை ஒடுக்க முடியவில்லையே ஏன்? எங்கள் நாட்டில்
      எதிர்க்கட்சிகளும்- எங்களது கட்சியினரும் கூட உங்களை இந்தியாவுக்குத் திரும்ப
      அனுப்பும்படி வற்புறுத்துகிறார்கள்' என்று கோபத்துடன் கூறினார். ""அமைதியாகப்
      பிரச்னையைத் தீர்ப்பதற்காகத்தான் நாங்கள் வந்துள்ளோம். மேலும் படைப்
      பிரிவுகள் வந்ததும் எங்கள் பணியை மேற்கொள்வோம்'' என்றார் தீபிந்தர் சிங்.
      அக்டோபர் 6-ஆம் தேதி ஜெனரல் சுந்தர்ஜி யாழ்ப்பாணம் வந்தார். "புலிகளுடன் போர்
      தேவையில்லை. நிலைமை சாதகமாக இல்லை. போர் என்றால் 20 ஆண்டுகள் நீடிக்கும்'
      என்று அவரிடம் தீபிந்தர் சிங் தெரிவித்தார். "தோல்வி மனப்பான்மையால் பேசக்
      கூடாது' என்று அவர் கூறினார்.
      "யதார்த்தமான நிலையைக் கூறுகிறேன்' என்றார் தீபிந்தர் சிங். விடுதலைப்
      புலிகளை ஒடுக்கும்படி கூறிவிட்டு, சுந்தர்ஜி கொழும்பு சென்றார். இந்தியப்
      பாதுகாப்பு அமைச்சர் கே.சி. பந்த், இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதி
      சுந்தர்ஜி ஆகிய இருவரும் இருபுறமும் அமர்ந்திருக்க, பத்திரிகையாளர்களைச்
      சந்தித்தார் ஜெயவர்த்தனா. சில அறிவிப்புகளை அப்போது அவர் வெளியிட்டார்.
      (அ) வடக்கு-கிழக்கு மாநிலத்திற்கு இடைக்கால நிர்வாக சபை (அரசு) இனி மேல்
      கிடையாது. (ஆ) விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. (இ)
      பிரபாகரனை உயிருடனோ, பிணமாகவோ பிடித்துத் தருபவர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசு
      வழங்கப்படும். (ஈ) கிழக்கு மாநிலத்தில் உள்ள சிங்களவர்களுக்கு இந்திய அமைதிப்
      படை மீது நம்பிக்கை இல்லாததால், அவர்களைப் பாதுகாக்க, இலங்கை ராணுவப் படை
      அங்கே அனுப்பப்படும். (உ) இலங்கையில் உள்ள இந்திய அமைதிப் படை இனி, எனது
      ஆணைப்படிதான் செயற்படும்.
      இந்திய-இலங்கை ஒப்பந்தம் என்பது ஜெயவர்த்தனாவின் புதிய அறிவிப்பால் அடியோடு
      தகர்க்கப்பட்டது. ஜெயவர்த்தனாவின் இருபுறமும் அமர்ந்திருந்த இந்திய
      பாதுகாப்பு அமைச்சர் கே.சி. பந்தோ, ஜெனரல் சுந்தர்ஜியோ மாற்றுக் கருத்து
      எதுவும் கூறாமலும், ஒப்பந்தத்தில் இல்லாத இந்த அறிவிப்புக்கு எதிர்த்துக்
      குரல் கொடுக்காமலும் இருந்தனர். அவர்களது மௌனம்- ஜெயவர்த்தனாவின்
      அதிகாரத்திற்குக் கட்டுப்படுவதான சம்மதமாகி விட்டது. இந்தியாவும் கூட இது
      குறித்து அந்த நாளிலோ, அதற்கடுத்த வாரத்திலோ எந்தக் கருத்தையும் தெரிவிக்கவே
      இல்லை. இந்திய அமைதிப் படையின் நோக்கம், இலங்கையின் வடக்கு-கிழக்குப்
      பகுதிகளில் அமைதியை நிலைநாட்டுவதுதான் என்று இருந்த நிலை மாறி, பிற
      இயக்கங்களுக்கு மீண்டும் ஆயுதங்கள் அளித்து, பயிற்சியும் அளிக்கப்பட்ட பிறகு,
      அவர்களிடையே மோதல்கள் ஏற்படுவது என்பது தவிர்க்க முடியாததானது. அமைதிப் படை
      எல்லாக் குழுவினருக்கும் பொதுவானது என்ற நிலையில் ஏற்பட்ட இம்மாற்றத்தால்
      வந்த விளைவு இது. நாளடைவில் விடுதலைப் புலிகளுக்கு மக்களிடையே இருக்கிற
      நம்பிக்கை மற்றும் செல்வாக்கை முறியடிக்கவும், அதற்கான பிரசாரத்தில்
      ஈடுபடவும் அமைதிப் படைக்குப் பணிக்கப்பட்டது. இந்த உத்தரவு அமைதிப் படைத்
      தளபதிகளுக்கு உவப்பாக இல்லை. இருந்தாலும் அவர்களால் எந்த முடிவும் எடுக்க
      முடியாத நிலை. முடிவு எடுக்கும் அதிகாரம் கொழும்பில் உள்ள இந்தியத்
      தூதுவரகத்துக்கு மாற்றப்பட்டது. புலேந்திரன், குமரப்பா உள்ளிட்ட போராளிகளின்
      மரணத்தைத் தொடர்ந்து, "பிரபாகரன் கைது' என்ற செய்தி பரப்பப்பட்டு, அவை
      பத்திரிகைகளிலும் வெளியாயிற்று.
      இந்தச் செய்தியை மறுத்து பழ. நெடுமாறன், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி
      ஆகியோர் அறிக்கை வெளியிட்டனர். அனைத்துக் கட்சி கூட்டம் ஒன்றுக்கும் ஏற்பாடு
      செய்தனர். இந்தத் தகவலை அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த தமிழக
      முதலமைச்சர் எம்.ஜி.ஆருக்கும் ஃபேக்ஸ் மூலம் தெரிவித்தனர். அனைத்துக் கட்சிக்
      கூட்டத்தில் எம்.ஜி.ஆர். அனுமதியுடன் அ.இ.அ.தி.மு.க.வும் கலந்துகொண்டது.
      விடுதலைப் புலிகளுடனான அமைதிப் படையின் போரை நிறுத்தி, அவர்களுடன் மீண்டும்
      பேச்சு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி- அனைத்துக் கட்சிக்
      கூட்டத்தில் தீர்மானம் போட்டதுடன், அதனை வலியுறுத்தி 17.10.1987 அன்று
      கடையடைப்பு மற்றும் வேலைநிறுத்தம் செய்வது என்றும் அனைத்துக் கட்சிக்
      கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. அதை வலியுறுத்தும் வகையில் தமிழக
      முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அமெரிக்காவில் இருந்த நிலையிலேயே மீண்டும் ஓர்
      அறிக்கை வெளியிட்டார். அவ்வறிக்கையில், ""சிங்கள அரசிடமிருந்து 12 பேர்களை
      மீட்க வாய்ப்பு இருந்தும் இந்திய அமைதிப் படை முயற்சி எடுக்கவில்லை. மாறாக,
      ஈழத் தமிழர்களுக்குப் பல வழிகளில் தொல்லை கொடுக்க ஆரம்பித்துவிட்டது.
      வன்முறையும் பெருமளவில் வெடித்தது. இந்திய ராணுவம் நடத்தி வரும் தாக்குதலை
      உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வற்புறுத்தி தமிழகம் முழுவதும் 17.10.1987
      அன்று முழு அடைப்புக்கு ஆதரவு அளித்து, தமிழக மக்கள் கடைகளை அடைத்து தமிழக
      மக்களின் ஒருமித்த உணர்வை உலகுக்குத் தெரிவிக்க வேண்டும்- என்றும்,
      எம்.ஜி.ஆர். அதில் கேட்டுக் கொண்டிருந்தார். (16.10.1987 விடுதலை;
      எம்.ஜி.ஆரும் ஈழத்தமிழரும்: வே. தங்கநேயன் நூலில் வந்தவாறு)

No comments:

Post a Comment