Saturday, November 6, 2010

73 : சாகும்வரை உண்ணாவிரதம்!

ஜெயவர்த்தன அரசில் கப்பல் போக்குவரத்து, வர்த்தகத் துறை அமைச்சராக இருந்த
      லலித் அதுலத் முதலி பாதுகாப்பு அமைச்சராக மாற்றப்பட்டு,
      பொறுப்பேற்றுக்கொண்டதும், போராளிகள் மீது தாக்குதல் தொடுப்பதாகக் கூறி,
      அப்பாவி மக்கள் மீது காட்டுமிராண்டித் தாக்குதல் தொடுப்பது அதிகரித்தது.
      இதுகுறித்து ஜெயவர்த்தன கூறுகையில், "போராளிகள் ஈழமே தீர்வு என்கின்றனர்.
      இந்த நிலையில் ராணுவத் தீர்வையே சரியென்று நினைத்து அதுலத் முதலி
      செயல்படுகிறார்' என்று வாதிட்டார். பருத்தித் துறை, தீக்கம் பகுதியில்
      வைக்கப்பட்ட கண்ணிவெடியில் ஆறு போலீஸ் கமாண்டோ படையினர் கொல்லப்பட்டதையொட்டி,
      அரசுப் படையினர் வீதிக்கு வந்து கண்ணில் கண்ட மக்கள் மீது தாக்குதல்
      தொடுத்ததுடன் வல்வெட்டித் துறையும் சுற்றிவளைக்கப்பட்டது. வடமராட்சி ஹாட்லி
      கல்லூரியின் லேபரட்டரியையும், நூலகத்தையும் கொளுத்தி அழித்தனர். இந்த
      எரிப்பில் 7,000 நூல்கள் எரிந்து சாம்பலாயின. அப்பாவிகள் 18 பேர் சுட்டுக்
      கொல்லப்பட்டனர். ஒதியமலையில் (வவுனியா) 20 பேருக்கு மேற்பட்டோரும், ராணுவ
      முகாமில் இருந்து தப்பித்து ஓடியவர்கள் என்று காரணம் கூறி என்கவுண்ட்டர்
      முறையில் 115 பேரும் கொல்லப்பட்டனர் (1984 நவம்பர், டிசம்பரில்). தொடர்ந்து
      வடமராட்சியில் ராணுவ மேஜரும் ராணுவத்தினரும் கொல்லப்பட்டதாகக் கூறி, 50
      பேருக்கு மேல் கொல்லப்பட்டனர். இளைஞர்களாகப் பார்த்து 25 பேரைப் பிடித்து
      சமூகக் கூடம் ஒன்றில் அடைத்து, குண்டு வைத்து கொலை செய்தனர். மேலும் 12
      பேரைப் பிடித்து வரிசையாக நிறுத்தி சுட்டுக்கொன்றனர்.
      உச்சகட்ட சம்பவமாக குறிகாட்டுவான் கடற்பகுதியில் பயணிகளுடன் வந்த "குமுதினி
      படகை' வழிமறித்து அதிலிருந்த பயணிகள் அனைவரையும் குழந்தைகள் என்றுகூட
      பார்க்காமல் சுட்டுக் கொன்று குவித்தது கடற்படை. இந்தத் தாக்குதலில் இறந்தவர்
      எண்ணிக்கை 34 பேர். படுகாயமடைந்தோர் எண்ணிக்கை 30 ஆகும் (1985 மே 18). 29
      ஏப்ரல் 1985 நாவற்குழி ராணுவ முகாமிலிருந்து வெளியேறிய வீரர்கள், அருகில்
      உள்ள அரியாலை கிராமத்தில் நுழைந்து, அக்கிராமத்தை துவம்சம் செய்தனர். அங்கு
      வசித்த குழந்தைகள், முதியோர் என்ற வித்தியாசமின்றி கொன்று குவித்தனர். இதில்
      திருமணமாகி இரண்டு நாள்களான தம்பதியும் அடங்குவர்.
      மகிந்தபுர, தெஹிவத்த பகுதியில் போராளிகளால் 5 சிங்களவர்கள்
      கொல்லப்பட்டதையொட்டி, திருகோணமலை அல்லை குடியேற்றப் பகுதிகள் 50 அப்பாவி
      தமிழர்களை பாதுகாப்புப் படை கொன்றழித்தது (1985 மே 31-இல்). மண்டைத் தீவு
      கடற்பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்ட 37 மீனவர்களும் தாக்குதலில்
      பலியாயினர் (ஆதாரம்: ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம், புஷ்பராஜா). அதே
      நூலில் கூறப்பட்டுள்ள இன்னொரு தகவல் அதிர்ச்சியளிக்கும். கைது மற்றும் இந்த
      வகைச் சம்பவங்களில் சிக்கியவர்கள் 1,12,246 பேர் என்றும் கொலைச் சம்பவங்களில்
      இறந்தோர் 54,053 பேர் என்றும் காணாமல் போனவர் 25,266 பேர் என்றும், பாலியல்
      வன்முறைக்கு பலியானவர் 12,437 பேர் என்றும் இடம்பெயர்ந்தோர் 23,90,809 பேர்
      என்றும் காயப்பட்டோர் 61,132 பேர் என்றும் "பிரான்சிலிருந்து தமிழர் மனித
      உரிமைகள் மையம்' என்னும் அமைப்பின் ஆய்வு மூலம் (1956-2004 காலங்களில்)
      புள்ளிவிவரம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தகவல் எரிமலை இதழ் மே 2005-இல்
      இருந்து எடுத்தாளப்பட்டுள்ளது.
      1986-ன் தொடக்கத்தில் எஸ்.தொண்டைமான் (இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ்)
      சமாதானத்துக்குரிய ஆண்டாக 1986-ஐ அறிவித்து, பிரஜா உரிமைக் கோரியும் சமாதானம்
      வேண்டியும் பிரார்த்தனை இயக்கம் என்ற பெயரில் தொடர் இயக்கம் நடத்தப் போவதாக
      அறிவித்தார். ஜனவரி இரண்டாவது வாரத்தில் இந்தப் பிரார்த்தனை இயக்கம்
      ஆரம்பிக்கப்பட்டு, மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டது.
      இதை முறியடிக்கும் விதத்தில் ஜெயவர்த்தன, 95 ஆயிரம் நாடற்றவர்களுக்கு பிரஜா
      உரிமை வழங்கப்படும் என்று அறிவித்து, அதை சட்டமாக்கவும் முயன்றார்.
      இலங்கையின் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் இதனைக் கண்டித்த அதே வேளையில்
      சட்டம் நிறைவேறியது. இதனால் தொண்டைமான் கட்சிக்கு கூடுதலாக பாராளுமன்றத்தில்
      15 இடங்கள் கிடைத்து விடும் என்று எதிர்க்கட்சிகள் எச்சரித்தன. இதன்
      எதிரொலியாக சிங்களவர்கள் தோட்டத் தொழிலாளர்களைத் தாக்கத் தொடங்கினர். ராணுவம்
      பெருமளவில் குவிக்கப்பட்டும் கலவரம் அடங்கவில்லை. ஏற்றுமதியாக இருக்கும்
      தேயிலைப் பொதிகளில் பயங்கரவாதிகள் நஞ்சு கலந்துவிட்டனர் என்று வதந்தி
      கிளப்பப்பட்டதால், வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. இதன் விளைவாக தேயிலை
      ஏற்றுமதி முடங்கும், அந்நியச் செலாவணி கையிருப்புக் குறையும் என்பதையும்
      சிங்கள பேரினவாதிகள் கவனத்தில் கொள்ளவே இல்லை.
      சிங்களவர் பகுதியிலும் வன்முறை வெடித்தது. ஆங்காங்கு குண்டுகள் வெடித்தன.
      எண்ணெய்க் கிடங்குகள் வியாபார நிறுவனங்கள் தீக்கிரையாயின. முதன்முறையாக
      சிங்களவர் மீது பயங்கரவாத தடைச் சட்டம் பிரயோகிக்கப்பட்டு ஏராளமான பேர் கைது
      செய்யப்பட்டனர். வடக்கிலும் வன்முறை பரவியது. தொடர் நிகழ்வாக கட்டுநாயக்கா
      விமான நிலையத்தில் நின்றிருந்த, த்ரீ ஸ்டார் விமானம் குண்டு வைத்துத்
      தகர்க்கப்பட்டது. இதில் 20 பேர் உயிரிழந்தனர். 24 பேர் படுகாயமுற்றனர். இந்த
      விமானம் மறுநாள் காலை 128 பேரை ஏற்றிக் கொண்டு "மாலத் தீவு' செல்லவிருந்தது
      குறிப்பிடத்தக்கது. மத்திய தந்தி நிலையம் தாக்கப்பட்டு 11 பேர் உயிரிழந்தனர்.
      கொழும்பில் நடந்த இந்தத் தாக்குதல்களால், அங்கு வசித்த தமிழர்கள் அனைவரும்
      சந்தேக வலையில் சிக்கினர். பெரும்பாலான நிறுவனங்கள் இயங்கவில்லை; மூடப்பட்டன.
      அரசு நிறுவனங்களும் மூடப்பட்டன.
      ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா கட்சியும், கம்யூனிஸ்ட் கட்சியும் லங்க சமசமாஜக்
      கட்சியும், இலங்கை மக்கள் கட்சியும் அரசாங்கம் கடைப்பிடிக்கும் கொள்கைகளால்,
      நாட்டில் அதிகாரத்தைச் செலுத்த முடியாமல் முடங்கிவிட்டது என்று குரல்
      எழுப்பின. இலங்கைக்கு ஏற்றவாறு நிலைப்பாடு எடுத்தும் ஜெயவர்த்தன இலங்கைத்
      தமிழர்கள் பிரச்னையில் எவ்வித அதிகாரப் பகிர்வுக்கும் உடன்படாமல் தமிழர்கள்
      பகுதியில் ராணுவ நடவடிக்கைகளைத் தீவிரமாக்கியதும், ராஜீவ் காந்தியை
      சிந்திக்கத் தூண்டின.
      இந்த சிந்தனைப் போக்குக்கு தமிழகத்தில் நிலவிய எதிர்ப்பும், அவரது ஆட்சிக்
      காலத்தில் ஏற்பட்ட ஒப்பந்தம் சார்ந்த விமர்சனமும் முக்கிய காரணிகளாக அமைந்தன.
      இதனைச் சமாளிக்க, தனது அன்னை இந்திரா காந்தி எடுத்த நிலைப்பாட்டுக்குத்
      திரும்பி, இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் வசிக்கும்
      தமிழர்கள் மீதான தாக்குதலை நிறுத்தி, அம்மக்கள் விரும்பும் தீர்வினை
      நிறைவேற்றும் வகையில் உருப்படியான ஒரு திட்டத்துடன் வரும்படி ஜெயவர்த்தனாவை
      நெருக்கத் தலைப்பட்டார்.
      1986 ஜூன் 25-இல் நடைபெற்ற அரசியல் கட்சி மாநாட்டில் ஜே.ஆர்.ஜெயவர்த்தன
      அளித்த வரைவுத் திட்டத்தை வாபஸ் வாங்கும் வரை - சாகும் வரை உண்ணாவிரதம்
      இருக்கப் போவதாக மகா சங்கத்தைச் சேர்ந்த புத்தபிக்குகள் மிரட்டினர். மிகவும்
      குழப்பமான ஒரு சூழ்நிலையில் இலங்கை தத்தளித்தது!

No comments:

Post a Comment