Saturday, November 6, 2010

77 :சார்க் மாநாடும் விடுதலைப்புலிகளின் ஆயுதப்பறிப்பும்!

 உண்மையில் "விடுதலைப் புலிகள்' என்பது பிரபாகரன் சார்ந்த இயக்கம்
      மட்டுமே. இலங்கையில் போராளிக்குழுக்கள் பல இருப்பினும், தமிழகப் பத்திரிகைகள்
      மற்றும் ஊடகங்களைப் பொறுத்து அவையனைத்துமே "போராளி' என்பதைக் குறிக்க,
      "விடுதலைப் புலிகள்' என்றே குறிப்பிடுவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தன.
      விடுதலைப் புலிகள் இயக்கத்தை மட்டும்தான் முதல்வர் எம்.ஜி.ஆர். வெளிப்படையாக
      ஆதரித்தார். ஏனைய போராளிக்குழுக்களால் ஏற்பட்ட பிரச்னைகளும், பொதுமக்கள்
      மத்தியில் விடுதலைப் புலிகள் செய்ததாகத்தான் கருதப்பட்டன. அதனால் விடுதலைப்
      புலிகளை ஆதரித்த முதல்வர் எம்.ஜி.ஆர். நிர்வாக ரீதியாகவும், அரசியல்
      ரீதியாகவும் பல சிக்கல்களையும் பிரச்னைகளையும் சந்திக்க நேர்ந்தது. 1986-ஆம்
      ஆண்டு நவம்பர் 1-ஆம் தேதி தீபாவளியன்று சென்னை சூளைமேட்டிலும், தஞ்சை
      ஒரத்தநாட்டிலும் நடைபெற்ற இருவேறு சம்பவங்கள் அரசுக்கு நெருக்கடியை
      ஏற்படுத்தின. சூளைமேட்டில் ஆட்டோ ஓட்டுநருக்கும், ஒரு போராளிக்கும் ஏற்பட்ட
      வாக்குவாதத்தில் அந்தப் போராளி தான் தங்கியிருந்த இடத்திலிருந்து மேலும்
      சிலருடன் வெளிப்பட்டார். அவர் கையில் துப்பாக்கி இருந்தது. கூடியிருந்த
      கூட்டத்தை நோக்கி அதைப் பிரயோகிக்கவும் தமிழகத்தைச் சேர்ந்த முதுநிலைப்
      பட்டதாரி வாலிபர் ஒருவர் இறந்தார். இதனால் அந்தப் போராளியைக் கைது செய்ய
      நேர்ந்தது. அவர் பெயர் டக்ளஸ் தேவானந்தா. அப்போது அவர் ஈபிஆர்எல்எஃப்
      அமைப்பைச் சேர்ந்தவராக இருந்தார். பின்னர் ஈ.பி.டி.பி. என தனி இயக்கம் கண்டு
      இலங்கை அரசில் அவரும் தற்போது ஓர் அங்கமாக உள்ளார். என்றாலும் அவரைப் பற்றிய
      செய்தி வெளியாகையில் "விடுதலைப்புலி சுட்டதில் ஒருவர் மரணம்' என்றே
      குறிப்பிடப்பட்டிருந்தது.
      அதேநாளில் ஒரத்தநாட்டில் "பிளாட்' இயக்கத்தைச் சேர்ந்த இருவர், குடிபோதையில்
      பொதுமக்களிடம் தகராறு செய்ததால் அவர்கள் பேரிலும் நடவடிக்கை எடுக்க
      நேர்ந்தது. இந்தச் செய்தியும் விடுதலைப்புலி குடிபோதையில் கலாட்டா என்றுதான்
      வெளியாயிற்று. மேற்கண்ட இரு சம்பவங்களும் தமிழின விரோதிகளின் சதியால் நடந்த
      சம்பவங்களே! இச்சம்பவங்களில் கைதானவர்கள் விரைவிலேயே விடுதலையானார்கள்.
      இதற்கு மத்திய உளவுப் பிரிவைச் சேர்ந்த, தமிழகத்தில் இருந்த, உயர் அதிகாரி
      ஒருவர் கொடுத்த நெருக்கடியே காரணம் என்றும் தகவல்கள் வெளியாயின. இந்த உயர்
      அதிகாரி ஏன் நெருக்குதல் கொடுக்க வேண்டும் என்பது புதிராக இருந்தது!
      இந்த இரு சம்பவங்களின் காரணமாக, 3.11.1986 அன்று விடுதலைப் புலிகள் இயக்கத்
      தலைவர் வே.பிரபாகரன், ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் - இருவரும் சென்னைக்
      கோட்டையில் முதலமைச்சர் எம்.ஜி.ஆரைச் சந்தித்து, ஈழப் போராட்டத்தைக்
      களங்கப்படுத்தும் "போலி இயக்கங்களின்' மீது நடவடிக்கை எடுக்க
      வலியுறுத்தினார்கள். தொடர்ந்து, பெங்களூரில் நடைபெற இருந்த தெற்காசிய
      மாநாட்டுக்கு வரும் ஜெயவர்த்தனாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவிருந்த
      பிரதமர் ராஜீவ் காந்திக்கு சில குறிப்புகள் அடங்கிய மனுவினையும் அளித்தனர்.
      இதேநேரத்தில், முதலமைச்சர் எம்.ஜி.ஆரை புது தில்லி வருமாறு மத்திய அரசு
      அழைத்திருந்தது. அதனையொட்டி (7.11.1986) அவர் தில்லி சென்றிருந்தபோது
      போராளிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. 15.11.1986-இல்
      நடைபெற இருக்கும் சார்க் மாநாட்டில் இலங்கை அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா
      கலந்துகொள்ள இருப்பதால், போராளிகளால் அவருக்கு எந்தவிதப் பிரச்னையும்
      வரக்கூடாது என்றும் சொல்லப்பட்டது. ஏற்கெனவே சென்னை விமான நிலையத்தில் ஏர்
      லங்கா விமானத்துக்கு வைக்கப்பட இருந்த "பார்சல் வடிவிலான' வெடிகுண்டை, வேறு
      ஏதோ பொருள் என்று ஒதுக்கி வைத்திருந்தாலும், குண்டை வைத்த பானாகொடை மகேசன்
      குழுவைச் சேர்ந்த ஒரு போராளி தொலைபேசியில் விடுத்த எச்சரிக்கையைச் சட்டை
      செய்யாமல் இருந்த காரணத்தாலும் குண்டு வெடித்தது. அதில் 21 பேர் இறந்தார்கள்.
      இந்தச் சம்பவமும் சென்னை சூளைமேடு, தஞ்சை-ஒரத்தநாடு உள்ளிட்ட சம்பவங்களும்
      அண்மையில் நடைபெற்றிருந்த காரணத்தால், இவ்வியக்கங்கள் மீது நடவடிக்கை எடுக்க,
      டிஜிபி மோகன்தாசுக்கு முதலமைச்சர் எம்.ஜி.ஆர். உத்தரவிட்டாரே தவிர, விடுதலைப்
      புலிகளுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கும்படி கூறவில்லை. ஆனால், டிஜிபி
      மோகன்தாசோ, விடுதலைப் புலிகள் உள்ளிட்ட இயக்கங்கள் மீது நடவடிக்கை எடுத்தார்.
      விடுதலைப் புலிகள் இயக்கத்திடமிருந்த ஆயுதங்களையும் பறிமுதல் செய்தார்.
      தொடர்ந்து பிரபாகரனை வீட்டுக் காவலிலும் வைத்தார். இந்தச் சம்பவங்கள்
      வீடியோவாக எடுக்கப்பட்டு, அந்தக் காட்சி இலங்கை ரூபவாகினியிலும் உடனடியாக
      ஒளிபரப்பப்பட்டது.
      இந்தச் செய்தி, தமிழகப் பத்திரிகைகளிலும் வெளி வந்தது. இதனைக் கண்ட
      எம்.ஜி.ஆருக்கு டிஜிபி மோகன்தாஸ் மீது சந்தேகம் எழுந்தது. தனக்கு நேர்ந்த
      உடல்நிலையைப் பயன்படுத்தி மோகன்தாஸ் "மற்றவர்களுக்கு செவி சாய்க்க'
      ஆரம்பித்து விட்டாரோ என்கிற ஐயப்பாடு அவருக்கு எழுந்தது. சார்க் மாநாட்டுக்கு
      இடையில், ஜெயவர்த்தனாவுடன் இலங்கைத் தமிழர் பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை
      நடத்தவும் திட்டமிட்டிருந்தபடியால் எம்.ஜி.ஆரும் பெங்களூருக்கு
      அழைக்கப்பட்டிருந்தார்.
      இந்தப் பிரச்னையில் தனக்கு உதவியாகப் பிரபாகரனையும் பெங்களூர் வரவேண்டும்
      என்றும் அவர்களை அழைக்கும்படியும் மத்திய அரசை அவர் வலியுறுத்தினார்.
      15.11.1986 அன்று சார்க் மாநாடு தொடங்கியது. ராஜீவ் காந்தியும் -
      ஜெயவர்த்தனாவும் சந்தித்து இலங்கைப் பிரச்னை குறித்து விவாதித்தார்கள்.
      ராஜீவ் காந்தி எம்.ஜி.ஆர். கருத்தையும் கேட்டார். "இலங்கையில் வலிமையான
      இயக்கம் விடுதலைப் புலிகள்தான். களத்தில் நின்று போராடுவது அந்த அமைப்புதான்.
      அவர்களின் கருத்தைக் கேட்பது நல்லது' என்றார் எம்.ஜி.ஆர். இதன்பேரில் மத்திய
      அரசு விடுதலைப் புலிகள் இயக்கத்தை பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. பிரபாகரன்,
      அன்டன் பாலசிங்கம், திலகர் ஆகியோர் தனி விமானத்தில் பெங்களூர் சென்றனர்.
      சற்றும் எதிர்பாராத இந்தத் திருப்பம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.
      குறிப்பாக, மறுநாள் பத்திரிகைகள், இலங்கையில் தமிழர்களைக் கொன்று குவிக்கும்
      ஜெயவர்த்தனாவை எம்.ஜி.ஆருடன் பிரபாகரனும் மற்ற தலைவர்களும், சந்தித்ததாகச்
      செய்தி வெளியிட்டன. தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்திய டி.ஜி.பி.
      மோகன்தாசுக்கு முதல்வர் எம்.ஜி.ஆரின் முடிவு அதிர்ச்சி வைத்தியமாக அமைந்தது 

No comments:

Post a Comment