இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் தமிழ்க் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும்
அரசியல் அரங்கில் செல்வாக்கு செலுத்தி வந்தவரை, ஓர் ஐக்கிய அரசின்
அமைப்பிற்குள் தங்களின் பிரச்னைகளைத் தீர்த்துக் கொள்வது ஒன்றே வழி என தமிழ்
மக்கள் கருதி வந்தனர். ஆனால் 1970-க்குப் பின் நிலைமை வேகமாக மாறியது.
அரசியல் தீர்வு பெறாத தமிழர் பிரச்னை, வளர்ந்து வரும் வேலை இல்லாத்
திண்டாட்டம், வறுமை ஆகியவற்றின் விளைவாக 1971-ஆம் ஆண்டு உரோகண விஜயவீரா
தலைமையில் நடந்த அரசாங்கத்திற்கு எதிரான வீரசாகச அரசியல் கலவரத்தின்
செல்வாக்கும் தொடர்ந்து நடைபெற்று வரும் தமிழ் இனப்படுகொலையும் தமிழர்
மத்தியில் தீவிரவாதம் உருவாகக் காரணமாயின. இந்தச் சூழ்நிலையில்தான், தனிச்
சிங்கள மொழிச் சட்டத்திற்கு எதிராகக் தமிழ் இளைஞர் பேரவை உருவாகிறது. இவர்கள்
வெகுஜன இயக்கத்தின் மூலம் சிங்கள இன வெறியர்களுக்கு எதிராக தமிழர்கள்
மத்தியில் அரசியல் விழிப்புணர்ச்சிக்கு வித்திட்டனர். இளைஞர்கள் ஓரளவு
அரசியல் தெளிவுடன், அரசியல் நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் தொடங்கி இருந்தனர்.
தமிழ்த் தலைவர்களின் மிதவாதமும், இனவாத ஒடுக்குமுறையின் விளைவாக நிகழ்ந்த
படுகொலைகளும் இவர்களை ஆவேசமூட்டி வேகமடையச் செய்தது. இவ்வுணர்வே விடுதலைப்
புலிகளின் இயக்கம் 1971-இல் உருவாகக் காரணமாயின. இந்த நிலையில் 1974-இல்
யாழ்ப்பாணத்தில் நான்காவது அனைத்துலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுப்
படுகொலைகள் நிகழ்கின்றன. இதனால் ஆத்திரமுற்ற தமிழ் இளைஞர்கள் சிவகுமாரன்
தலைமையில் பழிக்குப்பழி வாங்கச் சபதம் செய்கின்றனர். மாநாட்டில் நடந்த
படுகொலைகளுக்குக் காரணமான போலீஸ் அதிகாரி சந்திரசேகராவை எப்படியும்
தீர்த்துக் கட்டுவது என்றும் இந்தப் படுகொலைகளுக்குப் பக்க பலமாக விளங்கிய
தமிழின துரோகி யாழ் நகர மேயர் துரையப்பாவை கொல்வது என்றும் முடிவு
செய்யப்படுகிறது.
போலீஸ் அதிகாரி மீது இரண்டு முறை தாக்குதல் நடக்கிறது. மேயர் துரையப்பா
சுட்டுக் கொல்லப்படுகிறார். போலீஸ் அதிகாரியைக் குறி வைத்துக் கொல்ல முயற்சி
எடுக்கும் போது சிவகுமாரன் வளைத்துப் பிடிக்கப்படுகிறார். போலீஸ் கையில்
சிக்காமல் இருக்க, சயனைட் குடித்துத் தியாக மரணம் அடைகிறார். இவரது வீரமரணம்
நிகழ்ந்தது 1974-ஆம் ஆண்டு ஜூன் 5-ஆம் தேதி ஆகும். சிவகுமாரன் தலைமையிலான
தமிழ் மாணவர் பேரவைத் தொடர்ந்து இன ஒடுக்குமுறைக்கு எதிராக போராடி வந்தது.
அதே காலத்தில் தொடர்ச்சியாக "தமிழ் புதிய புலிகள்'' (Tamil New Tigers) என்ற
தீவிரவாத இயக்கத்தினரும் போராடி வந்தனர்.
சிவகுமாரன் மரணத்திற்குப் பின் 1975-ஆம் ஆண்டு, அமிர்தலிங்கத்தின்
விருப்பப்படி தமிழர் கூட்டணியின் உட்கிளையாக தமிழ் இளைஞர் பேரவை அமைகிறது.
இவ்வாண்டின் நடுப் பகுதியில் தொடர்ந்து தமிழ் இளைஞர்கள் பழிக்குப்பழி
வாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இந்தச் சூழ்நிலையில் தமிழ்ப் புதிய
புலிகளின் ஆரம்ப காலத் தலைவர்களில் ஒருவரான தனபாலசிங்கம் என்ற செட்டி
1976-ஆம் ஆண்டு நடுப்பகுதியில் இலங்கையில் கைது செய்யப்படுகிறார். இதற்குப்
பின் தமிழ்ப் புதிய புலிகள் இயக்கம் 1976-ஆம் ஆண்டு மே 5-ஆம் நாள் தமிழ் ஈழ
விடுதலைப் புலிகள் என்கிற புதிய இயக்கமாகப் பெயர் மாற்றம் செய்யப்படுகிறது.
இதன் தலைவராக வல்வெட்டித்துறை வேலுப்பிள்ளை பிரபாகரன் பொறுப்பேற்கிறார். இதே
நேரத்தில் சூழ்நிலைகளின் நிர்ப்பந்தத்தால் தனி ஈழக் கோஷத்தை முன்வைத்துத்
தமிழர் கூட்டணி, தமிழர் விடுதலைக் கூட்டணியாக 1976-இல் உருவாகிறது. இதுதான்
மிக முக்கியத்துவம் வாய்ந்த வட்டுக்கோட்டைத் தீர்மானமாகும். இந்தக் கால
கட்டத்தில் ஒரு சில தீவிரவாத அமைப்புகளும் தலைமறைவு இயக்கமாக சிறு சிறு
குழுக்களாக இயங்கி வருகின்றன.
தமிழ் ஈழ விடுதலை இயக்கம்-(TELO)
ஈழத் தமிழர் போராட்டத்தில் ஒரு முக்கியமான பங்கு வகிக்கிறது. இவ்வியக்கத்தின்
ஆரம்ப காலத் தலைவர்கள் அனைவரும் தமிழ் இளைஞர் பேரவையில் இருந்து
உருவானவர்களே. தமிழ் மாணவர் பேரவை உருவானதிலும் இத்தலைவர்களின் பங்கு
முக்கியமானதாகும். அப்போதிருந்த தரப்படுத்துதல் சட்டம் மற்றும் பல்வேறு
வகையான ஒடுக்கு முறைகளுக்கு எதிராக இவர்கள் போராடி வந்தனர். தமிழ் மிதவாதத்
தலைவர்களின் சத்தியாக்கிரகப் போராட்டத்தின் மூலம் இன ஒடுக்குமுறையை எதிர்க்க
முடியாது என்றும் தனி ஈழத்தைக் கட்டமைக்க முடியாது என்றும் இவர்கள் கருதினர்.
இதன் ஆரம்பகால முன்னணித் தலைவர்கள் தங்கதுரை, குட்டிமணி, ஜெகன் ஆகியோர்
ஆவார்கள்.போலீஸ் அதிகாரி சந்திரசேகரா புகழ் சிவகுமாரனுடன் சேர்ந்து இவர்களும்
மாணவர் பேரவை உறுப்பினர்களாக இருந்தனர்.
அனைத்துலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடைபெற்றபோது குட்டிமணியும், பிற
தலைவர்களும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர். தமிழ் மாநாட்டிற்கு முந்தைய
இனப் படுகொலைக்கு எதிராகப் போராடியதன் விளைவுதான் இவர்கள் கைது
செய்யப்பட்டதற்குக் காரணமாகும். குட்டிமணியுடன் கைதானவர்களில்
குறிப்பிடத்தக்கவர் ஸ்ரீ என்கிற சபாரத்தினம். சாட்சியம் இல்லாததால் இவர்
விடுதலை செய்யப்படுகிறார். யாழ் மேயர் துரையப்பா கொல்லப்பட்டதன் விளைவாகக்
குற்ற செயல்களுக்காகத் தேடப்படுவர் பட்டியலை அரசு சுவரொட்டியாக ஒட்டியது.
அதில் இவர்கள் பெயரும், இவர்களது தலைக்கு விலையாக 1 லட்சம் ரூபாயும்,
அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் கைது செய்யப்பட்ட இவர்கள் 1971-ஆம் ஆண்டு
விடுதலை செய்யப்பட்டனர்.
1977-இல் ஜெயவர்த்தன ஆட்சிக்கு வந்தபிறகு நடந்த பல இனப் படுகொலைகளுக்குப்
பழிக்குப் பழிவாங்கும் நடவடிக்கையில் இவர்கள் அமைப்பு ஈடுபட்டது. 1969-ஆம்
ஆண்டிலிருந்தே தங்கதுரை "தமிழ் ஈழ விடுதலைக்கு ஆயுதம் தாங்கிய போராட்டமே
வழி'' என்று முடிவு கட்டுகிறார். அப்போதிருந்தே அதற்கான நடைமுறைப் போர்த்
தந்திரங்களையும், இயக்க விதிமுறைகளையும் உருவாக்குவதில் தொடர்ந்து
ஈடுபட்டார். சிவகுமாரன் மரணத்திற்குப் பின் 1975-ஆம் ஆண்டு தங்கதுரை தனக்குக்
கீழே ஒரு குழுவாக அமைத்துச் செயல்பட்டார். கட்டுப்பாடும், உறுதியும் நிறைந்த
இயக்கமாகப் படிப்படியாக வளர்ந்து 1981-ஆம் ஆண்டு தமிழ் ஈழ விடுதலை இயக்கமாகப்
பரிணமிக்கிறது. இதில் பிரபாகரன் இணைந்து கொள்கிறார். 1981 ஏப்ரல் 5-ஆம் தேதி
தங்கதுரை, குட்டிமணி, தேவன் ஆகியோர் கைது செய்யப்படுகின்றனர்.
22-ஆம் தேதி நடந்த அரசு நடவடிக்கையில் இதன் மற்றொரு தலைவரான ஜெகனும், பிற
இளைஞர்களும் கைது செய்யப்பட்டனர். முன்னணித் தலைவர்கள் அனைவரும் கைதானபின்
அமைப்பு ஸ்தம்பிக்கிறது. இந்த நேரத்தில் பிரபாகரன் மீண்டும் வெளியேறித் தமிழ்
ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினை ஒருங்கிணைக்கிறார். 1983-ஆம் ஆண்டு
பிற்பகுதியில் ஆயுதப் படைகளின் விரிவாக்கத்தை இவ்வமைப்பு மேற்கொள்கிறது. 1983
கடைசியில் குட்டிமணி, தங்கதுரை, ஜெகன் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டது
அனைவரும் அறிந்த ஒன்றுதான். இதன் விரிவான பகுதி வெலிக்கடை சிறைப்படுகொலைகள்
என்னும் பிரிவில் பிறகு கூறப்படும்.
வெள்ளிக்கிழமை, 09 அக்டோபர் 2009 20:32 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
No comments:
Post a Comment