146: ஈழ மக்களாட்சி குடியரசு! !விடுதலைப் புலிகளின் மக்கள் முன்னணி கட்சி தொடங்கப்பட்டதும் ஒவ்வொரு
மாவட்டத்திலும் அதன் விரிவாக்கம் தொடங்கிற்று. இதனை மக்களிடையே கொண்டு செல்ல
ஒரு மாநாடு அந்த அமைப்புக்குத் தேவைப்பட்டது. இந்த மாநாட்டை மட்டக்களப்பு
மாவட்டத்தில் நடத்துவதென்றும், அதற்கான இடமாக "வாகரை' என்கிற கடற்கரையோரம்
அமைந்த சிற்றூர் தெரிவு செய்யப்பட்டது. இவ்வாறாக மக்கள் முன்னணியின் முதல்
மாநாடு வாகரையில் பிப்ரவரி 24-இல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதில்
கலந்துகொள்ள வடக்கு-கிழக்கில் உள்ள பல்வேறு ஊர்களில் இருந்தும் பிரதிநிதிகள்
வாகரையில் வந்து குழுமினர். கொழும்பு ஹில்டன் ஓட்டலில் தங்கியிருந்த
பேச்சுவார்த்தைக் குழுவினரான பாலசிங்கம் உள்ளிட்டவர்கள் ஹெலிகாப்டர் மூலம்
மட்டக்களப்பு வந்து சேர்ந்து, அங்கிருந்து வாகனங்களில் வாகரை வந்து
சேர்ந்தனர். அம்பாறை, மட்டக்களப்பிலிருந்து அமைதிப் படை வெளியேறியதைப் போன்றே
முல்லைத் தீவு, வவுனியா, மன்னார், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் இருந்தும்
அமைதிப் படை வெளியேறியிருந்தது. யாழ் மற்றும் திருகோணமலையில் மட்டும்தான
அமைதிப் படை வெளியேற வேண்டியிருந்தது. இவ்வாறாக அமைதிப் படை வெளியேற்றம்,
தமிழ் தேசிய ராணுவத்தைக் கட்டுப்படுத்தியது உள்ளிட்ட நிகழ்வுகளால் மக்கள்
முன்னணி உறுப்பினர்களிடையே மகிழ்ச்சிப் பெருக்கு நிலவியது. மாநாட்டு
நிகழ்வுகள் ஒருவாரம் வரை தொடர்ந்தது. மாநாட்டில், தேசிய, சமூகம் குறித்த பல
தீர்மானங்கள் ரகசியமாக விவாதிக்கப்பட்டன. வெளியே தெரிய வந்த தீர்மானங்களில்,
(அ) சாதியக் கொடுமைகளை வேரறுத்து, சமூகநீதி காக்க உழைப்பது மற்றும் அதில்
முழு ஈடுபாட்டுடன் போராடுவது (ஆ) பெண் விடுதலை- மக்கள் முன்னணியின் வேலைத்
திட்டத்தில் ஒன்றாக்கப்படுவது (இ) பெண்களின் திருமணத்தில் சீதனமுறையால்
ஏற்படும் அவலங்களையும் அதனால் ஏற்படும் சுரண்டல் மற்றும்
துன்புறுத்தப்படுதலையும் ஒழிக்கப் பாடுபடுவது (ஈ) வடக்கு-கிழக்குப்
பகுதிகளில் மக்கள் முன்னணியை நிறுவி மக்களை அதில் ஈடுபடுத்தச் செய்து,
அவர்களை அதன் நிர்வாகத்தில் பங்கெடுக்கச் செய்வது போன்றவை
முக்கியமானவையாகும். பெண்கள் குறித்த தீர்மானங்களை மகளிர் நிர்வாகிகளே
கொண்டுவந்தனர்.
முக்கியத் தலைவர்கள் கூடியிருந்த நேரத்தில் எந்தவிதமான அசம்பாவித
சம்பவங்களும் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வு, மாநாட்டு
ஏற்பாட்டாளர்களுக்கு இருந்தது. அதன் காரணமாக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள்
கண்ணுக்குப் புலப்படாத வகையில் செய்யப்பட்டிருந்தன. வடக்கு-கிழக்கு இடைக்கால
அரசு குறித்தும், தற்போதுள்ள மாகாண அரசு நிர்வாகத்தில் புலிகள் பங்கெடுப்பது
குறித்தும் யோசனைகளைத் தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதியிடம் அளித்து இலங்கை
திரும்பினார் வரதராஜ பெருமாள். இந்திய அமைதிப் படை, தனது இறுதிக்கட்ட பயண
ஏற்பாடுகளை திருகோணமலையில் நடத்திக் கொண்டிருந்தது. பிப்ரவரி 25-ஆம் நாளில்
கட்சியின் செயலாளர் பத்மநாபா, தமிழ்நாடு முதலமைச்சர் மு.கருணாநிதியிடம் ஒரு
மனு அளித்திருந்தார். ஆனால், ஒரே வாரத்துக்குள் எதிர்பாராதவிதமாக, அதாவது
மார்ச் முதல் தேதி அதிரடியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
தற்போதுள்ள மாகாண கவுன்சிலில் இடம்பெற்றுள்ள அங்கத்தினர்களைக் கொண்ட குழு,
"அரசியல் நிர்ணய சபை'யாக மாறுகிறது என்றும், "சுதந்திரத் தமிழ் அரசு'க்கான
அரசியல் சட்டத்தை உருவாக்கும் பொறுப்பை மாகாண கவுன்சிலில் இடம்பெற்றவர்கள்
உருவாக்குவார்கள் என்றும் அறிவித்தார். அவ்வறிப்பில், இந்த அரசியல்
சட்டத்தின்படி அமையும் அரசுக்கு "ஈழ மக்களாட்சிக் குடியரசு' என அழைக்கப்படும்
என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பு வெளியான உடன் இலங்கை அரசு
அதிர்ச்சியடைந்தது. இது கிட்டத்தட்ட "சுதந்திரப் பிரகடனம்' என்றே அரசு
கருதியது. இந்த தன்னிச்சையான அறிவிப்பு பிரேமதாசாவை கடுமையாகப் பாதித்தது.
கடும்கோபத்தில் இருந்த அவர், பதிலுக்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல்
மெüனமாக இருந்தார். இந்திய அமைதிப் படையின் வெளியேற்றம் என்பது தீவிரமாக
நடந்துகொண்டிருந்த நேரம். இறுதிக்கட்ட நடவடிக்கையாக, திருகோணமலைத்
துருப்புகள் வெளியேற வேண்டியதுதான் பாக்கி. இந்த நேரத்தில் எந்த ராணுவ
நடவடிக்கையையும் மேற்கொள்ள பிரேமதாசா விரும்பவில்லை என்பதாக இலங்கைப்
பத்திரிகைகளில் செய்தி வெளியாயிற்று. இந்திய அமைதிப் படையினர் முழுவதுமாக
இலங்கையைவிட்டு வெளியேற அவர் காத்திருப்பதாக, கொழும்பு ஊடகங்கள் கருத்து
தெரிவித்தன. உடனடியாக நடவடிக்கை எடுக்க அவரது அமைச்சர்கள் வலியுறுத்திக்
கொண்டிருக்க, சிங்கள ராணுவத் தலைமையும் தாக்குதலுக்குத் தயாரானது.
இவையெல்லாவற்றுக்கும் பிரேமதாசாவின் மெüனமே முட்டுக்கட்டையானது.
147: அமைதிப்படை தாயகம் திரும்பியது! என்கிற வாசகங்கள், சென்னைக் கோட்டையிலிருந்த அமைதிப்படைத் தலைமையகத்தில்,
லெப்டினன்ட் ஜெனரல் எ.எஸ். கல்கத் இருக்கையின் பின்னே தொங்கும் அட்டையில்
இடம்பெற்றிருந்தது. இவ்வாசகம் ராணுவ வீரர்களிடையே பிரபலமான வாசகமாகும். அது
எந்த நாட்டு ராணுவமாக இருந்தாலும் பொருந்தும். "இலங்கையில் உள்ள தமிழர்கள்
அபாயத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களைக் காக்க நாம் செல்கிறோம்
என்று எங்கள் வீரர்களுக்கு நாங்கள் சொன்னோம். ஆனால், திடீரென்று யாருக்காக
நாங்கள் போராடப் போனோமோ, அவர்களுடனேயே நாங்கள் போராட வேண்டிய நிலை ஏற்பட்டது'
(அர்ஜுன் கத்தோஜ்.எக்கானமிக் அண்ட் பொலிடிகல் வீக்லி கட்டுரையில்) என்று
இந்திய ராணுவத்தின் அதிரடிப் படைக்குத் தளபதியாக இருந்தவர் கூறியிருக்கிறார்.
ஆனால், அமைதிப் படையினர், இலங்கையின் தமிழர் பகுதிகளில் தரையிறங்கியதும்
குடிமைப் பொருள்களை வழங்கும் வேலையிலும், அடிப்படை வசதிகளான குடிநீர்,
மின்சாரம், மருத்துவ வசதி சீரமைப்பிலும் ஈடுபட்ட நிலையிலும், அவர்களிடம்
எந்திரத் துப்பாக்கிகள் இருந்தன. டாங்கிகள் போன்ற தளவாடங்களும்,
ராக்கெட்டுகளும் அதை இயக்குகிற லாஞ்சர்களும்கூட முகாமில் இருந்தன. கூடவே ஒலி,
ஒளிபரப்பு சாதனங்களும் முகாம்களில் பொருத்தப்பட்டிருந்தன. இவ்வகையில்
பார்க்கும்போது அவ்வீரர்களுக்குப் போரிடவும் நேரும் என்ற உண்மை தெரிந்துதான்
இருக்கும். போர் என்றால், அதில் ஈடுபடுகிற வீரனுக்கு ஜெனரல் டக்ளஸ்
மெக்ஆர்தர் குறிப்பிட்டவாறு,
"போர்வீரன், மற்றவர்களைவிட மேலானவனாக இருந்தபோதிலும், அமைதியை
விரும்பியபோதிலும், அமைதியை நிலைநாட்ட என்று சொல்லப்பட்ட யுத்தங்களின்போது
அவன் துன்பங்களும் துயரங்களும், ஏன் ஆழமான காயங்களும் பெறுவதில் இருந்துத்
தப்பிக்க முடியாது' என்பது உண்மையாகத்தான் இருக்கும். இந்திய அமைதிப்படையின்
வீரர்களுக்கும் அதுவே நேர்ந்தது. அமெரிக்கர்களுக்கு ஒரு வியட்நாம்,
ரஷியர்களுக்கு ஓர் ஆப்கானிஸ்தான், இந்தியாவுக்கு ஓர் இலங்கை என்ற உதாரணம்
நின்று நிலைத்துவிடும்படியாகக் கிட்டத்தட்ட 31 மாதங்கள் இலங்கையின்
வடக்கு-கிழக்கில் நிலைகொண்டிருந்தது இந்திய அமைதிப்படை. தமிழர் பகுதிகளில்
அறிவிக்கப்படாத யுத்தத்தைத் தொடர்ந்ததன் மூலம் 1115 பேரை இழந்து,
ஆயிரக்கணக்கான வீரர்கள் படுகாயமுற்று, நான்கு பிராந்தியங்களில்
முகாமிட்டிருந்த 48 ஆயிரம் வீரர்கள் நாடு திரும்பியிருக்கிறார்கள்.
இந்திய-இலங்கைப் பிரச்னையில் இந்திய ராணுவம் சிக்கிக்கொண்டதை வெளிப்படையாக
ராணுவத்தில் உள்ளவர்கள் பேச முடியாது. பேசினால் விசாரணை வரும் என்று
அவர்களுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது ("சண்டே' வார இதழ்:14-20 மே 1990).
ஆனால், உளவுப் பிரிவுத் தகவல் சிலவற்றை அதே சண்டே இதழ் வெளியிட்டிருக்கிறது.
உளவுப் பிரிவுத் தகவல்படி, "5,000 பேராக இருந்த விடுதலைப் புலிகளை 1,500 ஆகக்
குறைத்துவிட்டது என்றும், இதில் 850 பேர் வவுனியாக் காட்டில் அடைக்கலம்
புகுந்ததாகவும், 170 பேர் யாழ்குடாவிலும், 100 பேர் கிளிநொச்சியிலும், 150
பேர் திருகோணமலையிலும், 250 பேர் மட்டக்களப்பிலும் மறைந்து கொரில்லா
யுத்தத்தில் ஈடுபட்டதாகவும்' தெரிய வருகிறது.
அதுமட்டுமன்றி, "அமைதிப்படையினர் 1,200 புலிகளைக் கொன்றதாகவும் காயமுற்றோர்
எண்ணிக்கை 850 என்றும், சரணடைந்தவர்கள் 263 பேர் என்றும் அதே உளவுப் பிரிவுத்
தகவலில்' கூறப்பட்டுள்ளதாகவும் சண்டே இதழ் வெளியிட்டுள்ளது. இதன் பின்னர்
புலிகள் புதிய ஆட்களைத் தேர்வு செய்து, அவர்களுக்குப் பயிற்சி அளித்ததாகவும்
அதே உளவுத் தகவலில் குறிப்பு உள்ளது. விடுதலைப் புலிகள் குறித்து இந்தியத்
தளபதிகள் கூறுவது என்ன?
*"வவுனியா காட்டில் புலிகளைத் தேடியபோது ஒவ்வொரு அடியையும் கவனமாக
எடுத்துவைக்க வேண்டியிருந்தது. கண்ணி வெடிகள் இருக்கலாம் என்ற கவனத்தில்
நடக்கும்போது மரங்களையும்கூட போராயுதங்களாக, புலிகள் பயன்படுத்தினர்'
என்கிறார் லெப்டினன்ட் கர்னல் பி.சி. காடோச். *"வன்னிக் காட்டில் எங்களது
முதல் எதிரி புலிகளே அல்ல; அங்கு நிலவிய வெப்பம், வறண்ட காற்றுதான். இதனால்
ஏற்பட்ட வறட்சியால் தாகம் எடுத்தது. குடிக்க நீரில்லை, நீர் நிலைகளும்
வறண்டுவிட்டன. வீரர்கள் தாகத்தால் தவித்தனர். *லெப்டினன்ட் ஜெனரல் தீபிந்தர்
சிங் தனது அனுபவத்தை எழுதும்போது, "பிரபாகரனை உயிருடனோ, உயிரற்ற நிலையிலோ
பிடிக்காதது ஏன் என்று கேட்கிறார்கள். ஒரு தனிமனிதரை மட்டும்
தனிமைப்படுத்திப் பாதுகாப்பதோ அழிப்பதோ, இதுபோன்ற சூழ்நிலையில் இயலாத
செயலாகும். ஆனால் ஒன்றை நாம் மறந்துவிடக்கூடாது. இதில், அப்பட்டமான உண்மை
என்னவென்றால், விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இளையதலைமுறைத் தலைமை சிறப்பாக
உருவாகியுள்ளது என்பதுதான். பிரபாகரனே இல்லாவிட்டாலும் இளைய தலவைர்கள்
வரிசையாக முன்வந்து, போரைத் தீவிரமாக நடத்துவார்கள். புலிகள் இயக்கம்
ஒருபோதும் கலைந்து விடாது' என்று தனது நூலில் குறிப்பிட்டுள்ளார் (தமிழீழம்
சிவக்கிறது-பழ.நெடுமாறன்). *மட்டக்களப்பில் பணியாற்றிய பிரிகேடியர் சிவாஜி
பட்டேல், "பிரபாகரன் ஒரு மாவீரர். அவரின் ராணுவத் தந்திரங்கள் திகைக்க
வைக்கின்றன. அவர் தனது போராளிகளுக்கு இத்தகைய பயிற்சியை எப்படி அளித்தார்
என்பது புரியாத புதிராக இருக்கிறது' என்று கூறியுள்ளார். *யாழ்ப்பாணத்தில்
அதிரடிப்படைத் தளபதியாக இருந்த அர்ஜுன் காத்தோஜ், "மக்களின் முழுமையான
ஆதரவைப் பெற்றிருக்கும் விடுதலைப் புலிகள் போன்ற கட்டுக்கோப்பான இயக்கங்களை
எந்த ராணுவமும் எளிதில் வெற்றிகொள்ள முடியாது. கல்வியில் நூறு சதம் பெற்ற
யாழ்ப்பாண இளைஞர்களை மூளைச் சலவை செய்து புலிகளின் இயக்கத்தில் சேர்க்க
முடியாது. இளைஞர்கள் விரும்பியே அவ்வியக்கத்தில் சேர்ந்திருக்கிறார்கள். யாழ்
பல்கலை அவர்களுக்கு நாற்றங்கால் மாதிரி. அங்கு படித்து, புலிகள் இயக்கத்தில்
சேர்ந்தவர்கள் வெடிகுண்டுகள், கண்ணிவெடிகள் தயாரிப்பில் மிகுந்த தேர்ச்சி
பெற்றவர்களாகத் திகழ்கிறார்கள்' என்று கூறியுள்ளார். இந்தக் குறிப்புகள்
மேலும் நீளும். இவ்வாறெல்லாம் கூறிய அமைதிப்படை வீரர்களும், உயர்
அதிகாரிகளும் இலங்கையை விட்டு 1990-ஆம் ஆண்டு மார்ச் 24-ஆம் தேதி கிளம்பினர்
No comments:
Post a Comment