அடங்காப்பற்று என்னும் வன்னிப் பகுதி கருநாவற்பற்று, கருக்கட்டுமூலை,
முள்ளியவளை, மேல்பற்று என நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு தனித்தனி
அதிகாரத்தில் செயல்பட்டன. 1790-இல் நல்லமாப்பாணான் என்ற வன்னியன் தலைவனாக
விளங்கினான். இவன் பேரில் குற்றம் சுமத்தி நீக்கினர். பின்னர் வன்னியரசுகளின்
கடைசி சிற்றரசனாக "குலசேகர வைரமுத்து பண்டார வன்னியன்' விளங்கினான். வன்னிப்
பகுதியின் சுதந்திரத்திற்காக இறுதி வரை போராடி உயிர் துறந்தவன் என்ற பெயர்
இவனுக்கு உண்டு. (1)* ஒல்லாந்தர் ஆட்சியின் இறுதியில் அவர்களோடு மோதி
பதவியிறக்கம் பெற்று ஆங்கிலேய ஆட்சியின் தொடக்கத்தில் மீண்டும் மன்னனாகி,
பின் அவர்களுடன் மோதினவன் என்ற பெயரும் பண்டாரவன்னியனுக்கு உண்டு.
ஒல்லாந்தருக்கும்-ஆங்கிலேயருக்கும் வரிகட்ட மறுத்த காரணத்தினால் பல யுத்த
களங்களைக் கண்டான். அடுத்து சாயவேர் தர மறுத்த குற்றம்-அக்காலத்தில் வன்னிப்
பகுதியில் கிடைக்கும் சாயவேர்கள் ஒல்லாந்தரால் ஏற்றுமதி செய்யப்பட்டு,
நாகப்பட்டினம் துறைமுகத்துக்கு வந்து அங்கு சாயம் தயாரிக்கப்
பயன்படுத்தப்பட்டது. ஒல்லாந்தரிடமிருந்து ஆங்கிலேயரிடம் வன்னிப்பகுதி
நிர்வாகம் மாற்றம் பெற்றதும் ஒல்லாந்தரான கேப்டன் வான்டெரிபேக் ஆங்கிலேயப்
படையில் சேர்ந்து கொண்டான்.
1803-இல் கண்டி மன்னனுக்கும் ஆங்கிலேயருக்கும் பெரும் யுத்தம் ஏற்பட்டது.
இந்தப் போரைப் பயன்படுத்திக் கொண்டு பண்டாரவன்னியன் ஆங்கிலேயர் வசமிருந்த
ஆனையிறவுக் கோட்டை, இயக்கச்சி பைல் கோட்டை, வெற்றிலைக்கேணி பெஸ்சூட்டர்
(ஆங்ள்ஸ்ரீட்ன்ற்ங்ழ்) கோட்டை ஆகியவற்றை மூன்று தனித் தனி படைப் பிரிவுகளை
அனுப்பி தாக்கினான். *(2) முள்ளிவளையிலிருந்து சுண்டிக்குளம் வழியாகச் சென்ற
ஒரு படைப்பிரிவு பெஸ்சூட்டக் கோட்டையைக் கைப்பற்றியது. கண்டா என்னும் ஊரின்
வழியாக இயக்கச்சிக்குச் சென்ற படைப்பிரிவு குமாரசிங்க முதலியார் தலைமையில்
"பைல்' கோட்டையைத் தாக்கி கைப்பற்றினர். இங்கிருந்த வீரர்களில் ஒரு
பகுதியினர் யாழ்ப்பாணத்துக்கு தப்பி ஓடினர்.
தாங்கள் கைப்பற்றிய கோட்டைகளைத் தகர்த்துவிடுமாறு பண்டாரவன்னியன்
உத்தரவிட்டிருந்தமையால், படைப் பிரிவினர் அக்கோட்டைகளின் ஒரு பகுதிகளைத்
தகர்த்து விட்டனர். அதே போன்று ஆனையிறவுக் கோட்டையை தகர்க்கும் முயற்சியில்
அதன் நான்கு கொத்தளங்கள் சிதைக்கப்பட்ட நிலையில் பெரும் திரளாக வந்த
ஆங்கிலேயப் படைப்பிரிவினரிடமிருந்து தப்பிக்க வன்னியன் படைகள் பின்வாங்கி
கற்சிலை மடுவுக்கு திரும்பினர். அதே ஆண்டில் கேப்டன் வான்டெரிபேக்
முல்லைத்தீவில் கட்டிய கோட்டையை பண்டாரவன்னியன் தகர்த்தான். இந்த முயற்சியில்
கண்டி மன்னன் படைப்பிரிவும், நுவரகலாவியா திசாவையின் படைப்பிரிவும் சேர்ந்து
கொண்டன. இந்தப் போரில் வான்டெரிபேக் தோல்வியுற்று யாழ்ப்பாணம் நோக்கி, படகில்
தப்பினான். ஆனாலும் திரிகோணமலையில் இருந்து வந்த ஆங்கிலேயப் படை 19-வது
கர்னல் எட்வர்ட் மெட்ஜின் தலைமையில் முல்லைத் தீவைக் காத்து, கைப்பற்றிக்
கொண்டது.
பின்னாளில் பண்டாரவன்னியனுக்கு உதவி புரிந்த குற்றத்தை குமாரசேகர முதலியார்
மீது பழி சுமத்தி அவரும் அவரைச் சேர்ந்தவர்களும் தூக்கிலிடப்பட்டனர்.
இவர்களைக் காப்பாற்ற தனது காதலி குருவிச்சிநாச்சி தலைமையில் குழு அனுப்பி
வைத்தும் பண்டாரவன்னியின் முயற்சி தோல்வியில் முடிந்தது. குமாரசேகர
முதலியாரையும் அவரது நண்பர் குழாத்தையும் காப்பாற்ற முடியாமல் போன
பண்டாரவன்னியன் பெரும் வருத்தமுற்று, இதற்குப் பழிக்குப் பழி வாங்க
ஆனையிறவுக்கோட்டை, இயக்கச்சிக்கோட்டை முதலியவற்றை கடுமையாகத் தாக்கினான்.
1803 அக்டோபரில் யாழ்ப்பாணத்தில் இருந்து ஜான் ஜ்வல் தலைமையிலும்,
மன்னாரிலிருந்து கேப்டன் வான்டெரிபேக் தலைமையிலும் வன்னிப் பகுதியை நோக்கி
விரைந்தன. கற்சிலைமடுவில் கேப்டன் வான்டெரிபேக் படைகள் காட்டுப் பகுதியில்
வந்தபோது கடும் தாக்குதலுக்கு ஆளாயின. எங்கிருந்தோ கற்கள் பெருமளவில் பறந்து
வந்து தாக்கின. பண்டாரவன்னியன் படைப்பிரிவு முந்தைய நாளில், அங்கிருந்த
மூங்கில் மரக் காடுகளில் புகுந்து, ஒவ்வொரு மரத்தின் நுனியிலும்
கருங்கற்களைக் கட்டி, அதன் நுனியை பின்புறமாகக் கயிறு மூலம் இழுத்து வேறொரு
மரத்தில் கட்டியிருந்தனர். ஆங்கிலேயப் படை வரும் நேரமாகப் பார்த்து
கட்டியிருந்த கயிறை அவிழ்த்துவிட மூங்கில் மரங்கள் நிமிர்ந்து கற்கள் எகிறி
விழுந்தன. (3)*
இந்தச் செயலே கொரில்லாப் போரின் முதல் யுக்தியாக இன்றும் கருதப்படுகிறது.
பண்டாரவன்னியன் இப்போரில் தோற்றபோதிலும். அந்தப் பகுதியில் இருந்து
தப்பினான். உயிருடனோ, கொன்றோ பண்டாரவன்னியனைப் பிடிக்க விரும்பிய
வான்டெரிபேக் அவமானமுற்றான். இருப்பினும் கற்சிலை மடுவில் நடுகல் ஒன்றை
நட்டு, 1803 அக்டோபர் 31-இல் கேப்டன் வான்டெரிபேக் பண்டாரவன்னியனைத்
தோற்கடித்தான் எனப் பொறித்தான். கண்டி மன்னன் உதவியுடன் 1811-ஆம் ஆண்டு
உடையாவூரில் பண்டாரவன்னியன் ஆங்கிலேயரை மீண்டும் தாக்கினான். இந்தத்
தாக்குதல் நடைபெறப் போகிறது என்பதை ஒற்றன் மூலம் அறிந்த ஆங்கிலேயர்கள்,
திரிகோணமலையிலிருந்தும்-யாழ்ப்பாணத்திலிருந்தும் பெரும் படையுடன் வந்து
காத்திருந்தனர். இத்தாக்குதலில் பண்டாரவன்னியன் தரப்பில் பேரழிவு
ஏற்பட்டதுடன் அவனுக்கு பலத்த காயமும் ஏற்பட்டது. தளபதிகள் பண்டாரவன்னியனை
பனங்காமத்துக்கு எடுத்துச் சென்று சிகிச்சையளித்தும் பலனளிக்கவில்லை;
பண்டாரவன்னியன் மறைந்தான்.
* (1,3) When the English took possession of the country in 1795 it enjoyed
tranquillity for some years, until in 1803, when Pandara Wanniya, said to
have been one of the original Wanniyas deposed by the dutch, raised a
formidables insurrection against the British Government, and being
assisted by Kandians with whom we were then at war, soon overran all the
Northern Districts and had the boldness to penetrate as far as Elephant’s
Pass into the peninsula of Jaffna. His object was to restore the
independence of the Wanni, and render himself head of all its
principalaties, but though daring and active, the force under his command
was unable to cope with regular troops, and was only fitted for guerilla
warfore. After several unsuccessful attempts to discover his retreats,
made from the different posts, he was finally surprised, his troops killed
or dispersed, the country was cleared of the rebels, and tranquillity was
restored.‘‘. An Historical, Political and Statistical Account of Ceylon
and its Dependencies -by Charles Pridham -1849 -Vol II. Page 522.
* (2) "அடங்காபற்று(வன்னி) பாகம்-2 பண்டாரவன்னியன்'-அருணா செல்லதுரை மற்றும்
"ஈவத்தவர் வரலாறு'-கலாநிதி ஆ.குணராசா.
சனிக்கிழமை, 12 செப்டம்பர் 2009 19:59 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
No comments:
Post a Comment