சிக்கலான கால கட்டங்களிலெல்லாம் சிங்களவர்கள் அந்நியரிடமே தஞ்சம்
புகுந்தனர். இதற்கு சரியான எடுத்துக்காட்டுதான் ஐரோப்பியர் வருகை.
17-வது நூற்றாண்டிலும் அதற்குப் பின்னரும் ஐரோப்பா தொழிலில்
செழித்திருக்கவில்லை. அங்கு இயந்திரமயமான புரட்சி ஏற்பட்டது
வெகுகாலத்திற்குப் பின்னர்தான். ஆதலால் பொருள்களை உற்பத்தி செய்வதிலும்
ஏற்றுமதி செய்வதிலும் அக்காலத்தில் முன்னணியில் இருந்த ஆசிய நாடுகளுக்கு
வியாபார நிமித்தம் செல்ல ஆரம்பித்தார்கள். ஐரோப்பிய வியாபாரிகள் தங்களது
பொருள்களைக் கொடுத்து ஆசியப் பொருள்களை வாங்கினார்கள். இவர்களில் முன்னணியில்
நின்று வியாபாரத்தை வெற்றிகரமாக நடத்தியவர்கள் போர்த்துக்கீசியர்களே. இதனால்
இவர்களிடம் பெருத்த செல்வம் சேர்ந்தது. இவர்களது செல்வப் பெருக்கைக் கண்ட
பொறாமையின் விளைவே ஆங்கிலேய, ஒல்லாந்த (டச்சு) கம்பெனிகள் ஆசிய நாடுகளை
நோக்கித் தங்களது வியாபாரப் பயணத்தைத் தொடர்ந்தன என்கிறார் ஜவாஹர்லால் நேரு
தனது "உலக சரித்திரம்' எனும் நூலில். வியாபாரத்தில் தனக்கென இடம் பிடித்துக்
கொண்டதும் ஆங்காங்குள்ள அரசுகளின் தன்மைகளைப் புரிந்து கொண்டு முதலில்
அவர்களின் நண்பர்களாகவும், நாளடைவில் அந்தந்தப் பகுதிகளின் சிற்றரசுகளைப்
பிடித்துக் கொண்டு ஆட்சியும் புரியலாயினர். சிற்றரசுகள் பணிந்தால் மட்டும்
போதுமானது அல்ல; பெரும்பாலான சிற்றரசுகளின் மீது ஆதிக்கத்தையும் மேற்கொள்ள
வேண்டும் என்று அவர்கள் சிந்திக்கத் தொடங்கினர்.
இந்தியாவில் போர்த்துக்கீசியரும் ஒல்லாந்தரும் ஆங்கிலேயரும் தங்களது
வியாபாரங்களைப் பெருக்கிக் கொண்டு பின் உள்நாட்டுச் சிற்றரசுகளை மோதவிட்டு
நாட்டையும் பிடித்தனர் என்பதே நம் கடந்த கால வரலாறு. போர்த்துக்கீசியர்
1505-இல் கும்பலாக வியாபாரம் செய்யும் நோக்கில் இலங்கை வருகிறார்கள்.
போர்த்துக்கீசியர்கள் அடியெடுத்து வைத்தபோது இலங்கையில் மூன்று தனித்தனி
நாடுகள், தனித்தனி மன்னர்களின் கீழ் அரசாட்சி நடந்தன.
நல்லூரைத் தலைமையகமாகக் கொண்ட தமிழர் ஆட்சி~
கண்டியைத் தலைமையகமாகக் கொண்ட கண்டி மன்னனின் ஆட்சி~
கோட்டையைத் தலைமையகமாகக் கொண்ட கோட்டை மன்னனின் ஆட்சி~
என்பதே அந்த மூன்று அரசுகளாகும்.
இதில் கண்டியும், கோட்டையும் சிங்களவர் வாழ்ந்த பகுதியாகும். இந்த மூன்று
அரசுகளில் போர்த்துக்கீசியரை அன்புடன் வரவேற்றும், மரியாதை வழங்கியதும்
கோட்டை அரசுதான். இருபாலரும் தங்களது அன்பையும் நேயத்தையும் வெளிப்படையாகவே
காட்டிக் கொண்டார்கள். கோட்டை மன்னனுக்கு வாரிசு என்று யாரும் இல்லாததைக்
கண்ட போர்த்துக்கீசியர் தங்களின் பிடியை மேலும் வலுப்படுத்திக் கொண்டனர்.
கோட்டை அரசுக்கு வாரிசாகப் பலர் போட்டியிட்டதால், யார் சரியான வாரிசு
என்பதைத் தீர்மானிக்கும் பொறுப்பைப் போர்த்துக்கீசியரிடமே கோட்டை மன்னன்
அளித்தான்.
இதன் மூலம் 1597-இல் கோட்டை மன்னனின் ஆட்சிப் பகுதிகள் யாவும்
போர்த்துக்கீசியர் வசமாயின. போர்த்துக்கீசியர் 1505-இல் இலங்கையில்
அடியெடுத்து வைத்த போதிலும் தமிழர் பகுதியை ஆளும் வாய்ப்பு அவர்களுக்கு
1619-இல் தான் கிடைத்தது. அந்த ஆண்டில் சங்கிலி மன்னன் போர்த்துக்கீசியரால்
சிறைபிடிக்கப்பட்டு இந்தியாவில் உள்ள கோவாவில் தூக்கிலிடப்பட்டான்.
ஆளும் தலைமை ஒன்றாக இருந்த போதிலும் தமிழர் பகுதி நிர்வாகம் 1658 வரை
தனியாகவே இருந்தது. இருப்பினும் குடா நாட்டுக்குத் தெற்கேயுள்ள
வன்னிப்பகுதிகள் போர்த்துக்கீசியரின் மேலாணையை ஏற்றுக்கொள்ளவில்லை. கண்டி
அரசுக்கும் திறை செலுத்தவில்லை. எந்தவொரு அரசின் பாதுகாப்பையும் நாடாது
தன்னாட்சியை அமல்படுத்தி நடத்தி வந்தன. கிழக்குக் கரையோரத்தில் உள்ள
கொட்டியாற்றுப்பற்று வன்னிமை, பழுகாம வன்னிமை, பாணமை வன்னிமை ஆகிய மூன்றும்
கண்டி அரசின் மேலாணையையும், பாதுகாப்பையும் நாடியிருந்தன. ஆனாலும் அவை
தன்னாட்சியுள்ள தமிழ்ப் பகுதிகளாகவே இருந்தன. பல்வேறு ஆட்சிகளின் கீழ்
ஆளப்பட்டிருந்த போதிலும் தமிழ் ஈழ நிலப் பகுதிகளின் தமிழ்த் தன்மை
மாறாதிருந்தது என்று கூறுகிறார்கள். (தமிழ் ஈழம் நாட்டு எல்லைகள்~ நூலில்
ஜே.ஆர். சின்னதம்பி மற்றும் க. சச்சிதானந்தன்.
போர்த்துக்கீசியருக்குக் கிடைத்த இந்த அரிய வாய்ப்பைக் கண்டு
ஒல்லாந்தருக்கும், இங்கு வியாபாரம் செய்யவும் ஆட்சிபுரியவுமான ஆசை எழுந்தது.
ஒல்லாந்தர்கள் இலங்கையை நோக்கித் தங்களது பயணத்தை மேற்கொண்டனர். 1638-இல்
மட்டக்களப்புத் துறையைக் கைப்பற்றி தங்களை நிலைப்படுத்திக் கொண்டனர்.
அங்குதான் முதன்முதலில் கோட்டையொன்றை அவர்கள் அமைத்தனர். கொழும்பைத் தாக்கி
1656-இல் வெற்றி பெற்றனர். அது போலவே யாழ்ப்பாணத்தையும் 1658-இல் தாக்கி
வெற்றி கண்டனர்.
கோட்டைப் பகுதியைச் சேர்ந்த சிங்களவர்களோ, போர்த்துக்கீசியரை வீழ்த்த
வேண்டும் அல்லது அவர்களது பிடியிலிருந்து விடுபட வேண்டும் என்ற எண்ணத்தில்
இருந்தனர். ஒல்லாந்தர்கள் பக்கம் சாய்ந்தால் அவர்கள் உதவமாட்டார்களா என்ற
கருத்தில், போர்த்துக்கீசியர்மீது ஒல்லாந்தர் தொடுத்த போருக்கு கோட்டை அரசு
உறுதுணையாக இருந்தது. இதனால் போர்த்துக்கீசியர் தங்களது ஆட்சியை இழக்க
வேண்டியதாயிற்று. ஒல்லாந்தர்கள் இலங்கையின் கரையோரப் பகுதிகளை ஆறு
மாவட்டங்களாப் பிரித்து ஆட்சி செய்தனர். புத்தளத்துக்கு வடக்கே மோதரகம் ஆறு
முதலாக பொத்துவிலுக்குத் தெற்கே கும்புக்கன் ஆறுவரை தமிழர் பகுதி எனப்
பிரிக்கப்பட்டது. இந்த ஆட்சி 1795 வரை தொடர்ந்தது. தமிழர்கள் வாழ்ந்த பகுதி
யாழ்ப்பாணம் மாவட்டம் என அப்போது அழைக்கப்பட்டது.
போர்த்துக்கீசியரும், ஒல்லாந்தரும் இலங்கையின் மீது கவனம் செலுத்த ஆங்கிலேய
ஏகாதிபத்தியத்தைச் சேர்ந்த வியாபாரிகள் மட்டும் சும்மா இருப்பார்களா?
அவர்களும் இலங்கையை நோக்கி தங்களது கப்பல்களைத் திருப்பினர். கி.பி. 1660-இல்
ராபர்ட் நாக்ஸ் (தர்க்ஷங்ழ்ற் ஓய்ர்ஷ்)எனும் ஆங்கிலேயர் திருகோணமலைத்
துறைமுகத்தில் வந்து இறங்கியதும் கண்டி அரசால் கைது செய்யப்பட்டார். 1679-இல்
கண்டி அரசனின் சிறையிலிருந்து தப்பினார். தான் தப்பிய விதத்தைப் பின்னாளில்
ஒரு நூலாக எழுதினார். இதில் தமிழ், தமிழர்களின் நாகரிகம் பற்றி உயர்வான
கருத்துத் தெரிவித்திருக்கிறார். அப்பொழுது இலங்கையின் வரைபடம் ஒன்றை, தான்
எழுதிய நூலில் சேர்த்திருக்கிறார். கயிலாய வன்னியனின் ஆட்சிப் பகுதியையும்
அதில் குறிப்பிட்டுள்ளார். அருவியாற்றின் கீழிருந்து தொடங்கும் எல்லை, கயிலாய
வன்னியனின் ஆட்சிப் பகுதியையும் அதில் குறிப்பிட்டுள்ளார். அருவியாற்றின்
கீழிருந்து தொடங்கும் எல்லை, வடக்கில் வன்னியப் பகுதியையும், கிழக்கில்
கொட்டியாறு பழுகாமம், பாணமை வன்னிமைகளை அடங்கியிருக்கிறது. (தமிழ் ஈழம்
நாட்டு எல்லைகள் பக்.17).
1782-இல் வந்த ஆங்கிலேயர் கடுமையான போராட்டங்களுக்குப் பிறகு 1795-இல் தமிழர்
வாழ்ந்த பிரதேசமான திருகோணமலையைக் கைப்பற்றினர். ஆங்கிலேயர் ஆட்சியமைக்க
அடித்தளமிட்டவர்கள் யார்? சிங்களவர்கள்தான்!
முன்பு போர்த்துக்கீசியரிடமிருந்து தப்பிக்க ஒல்லாந்தர்களிடம் எப்படிப்
போனார்களோ, அதுபோலவே இப்போது ஒல்லாந்தப் பிடியிலிருந்து விடுபட
ஆங்கிலேயருக்கு ஒத்துழைப்புக் கொடுத்தனர். முடிவு 1815-இல் இலங்கைத் தீவு
ஆங்கிலேயர் வசமாயிற்று. நாளை : பண்டார வன்னியன்
வெள்ளிக்கிழமை, 11 செப்டம்பர் 2009 16:08 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
No comments:
Post a Comment