ஆங்கிலேயர்கள் 1948 பிப்ரவரி 4-இல் இலங்கைக்கு சுதந்திரத்தை அளித்தனர்.
அதன்பின் இலங்கை ஆட்சியாளர்கள் கடைப்பிடித்த கொள்கைகளால் மிகவும்
பாதிப்புக்குள்ளான சமூகம், தமிழ்ச் சமூகமே. இவர்களைப் பொருளாதார அடிப்படையில்
பிரித்துப் பார்க்கையில்:-
1. இந்தியாவில் சொத்தும் இலங்கையில் தொழிலும் கொண்ட தமிழர்கள்.
2. நீண்ட நெடுங்காலமாக இலங்கையில் சொத்தும் தொழிலும் கொண்ட தமிழர்கள்.
3. நீண்ட நெடுங்காலமாக இலங்கையில் வளர்ந்து வந்த தொழில் நிறுவனத்தினைக் கொண்ட
தமிழர்கள்.
4. வர்த்தக நிதி நிறுவனங்களில் பங்காற்றிய தமிழர்கள்.
5. மலையகத் தோட்ட உரிமையாளர் மற்றும் அவர்களோடு நெருக்கமாக உறவுகொண்ட
தமிழர்கள்.
6. சிறு வியாபார நிறுவனங்களில் பங்காற்றிய தமிழர்கள்.
7. விவசாயத்தைத் தொழிலாகக்கொண்ட தமிழர்கள்.
8. மீன் பிடித்தொழிலில் ஈடுபட்ட தமிழர்கள். இந்த எட்டு வகைத் தமிழர்களும்
பொருளாதார நிலையில் மிகவும் மேலான வசதி கொண்டவர்களே. ஆனால் சமூகத்தில்
மிகவும் பின்தங்கிய தமிழர்களை வரிசைப்படுத்தினால் மலையகத் தோட்டத்
தொழிலாளர்கள் (குடியுரிமையற்றவர்கள்), விவசாயக் கூலித் தமிழர்கள், அரசு
மற்றும் இதர நிறுவனங்களில் பணியாற்றியவர்கள், நகர்ப்புறங்களில் பின்தங்கிய
நிலையில் உள்ளவர்கள் மற்றும் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டவர்கள் எனப் பிரிக்க
முடியும்.
பிற இனங்களின் மீது சிங்களவர் எதிர்ப்பு கொள்ளும் நிலை 1930-இல் தீவிரமடைந்த
காலத்தில் வர்த்தகத் துறையின் மீது அவர்கள் கவனம் திரும்பியது. வெள்ளையர்
ஆட்சியில் சிங்களவர்களில் ஒரு குறிப்பிட்ட அளவுதான் இதில் நிறைவு பெற
முடிந்தது. இலங்கை சுதந்திரம் பெற்ற உடனே பல பொருளாதாரத் திட்டங்கள்
உருவாயின. இதன் மூலம் கல்வி மற்றும் நிர்வாக அமைப்புகளில் பணியாற்றும்
நடுத்தரத் தமிழ் வர்க்கம் பாதிப்புக்குள்ளானது. அது மட்டுமல்லாமல் தொழில்
மற்றும் கட்டுமானத் தொழிற்சாலைகள் யாவும் சிங்களவர் பகுதிக்கே சென்றன.
உதாரணமாக, குருவில்லாவில் நிறுவப்பட்ட இரும்புத் தொழிற்சாலை; களனியில் உள்ள
டயர்த் தொழிற்சாலை; கல்ஓயாவில் உள்ள கண்ணாடித் தொழிற்சாலை; நாத்தாண்டியாவில்
உள்ள கண்ணாடித் தொழிற்சாலை; எம்பிலிபிட்டியாவில் உள்ள காகிதத் தொழிற்சாலை;
கண்டி, வியாங்கொடை, துல்கிரியா ஆகிய இடங்களில் அமைந்த பெரிய பஞ்சாலைகள்;
சப்புகஸ்கந்தையில் உள்ள உரத் தொழிற்சாலைகள்; நித்தமடிவை, பிரியந்தலையில் உள்ள
பீங்கான் தொழிற்சாலை; களனியில் உள்ள தொழில்பேட்டை; அனுப்பிட்டியாவில் உள்ள
உரத்தொழிற்சாலை; புத்தளம், காலியில் உள்ள சிமெண்ட் தொழிற்சாலை ஆகிய அனைத்துத்
தொழிற்சாலைகளும் சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியிலேயே உள்ளன.
பண்டாரநாயக்காவின் ஆட்சியில் இந்திய நிர்வாகிகளின் ஆதிக்கம் வெகுவாகக்
குறைக்கப்பட்டது. 1977-லிருந்து 82 வரை 50 மில்லியன் டாலர் நிதி உதவிகள்
அந்நிய நாட்டிலிருந்து பெறப்பட்டபோதிலும், தமிழர் வாழ் மாவட்டங்களுக்கு
எந்தப் புதிய தொழிற்சாலையும் கிடைக்கவில்லை. கடந்த அறுபதாண்டு காலமாக இந்தப்
பகுதிகள் புறக்கணிக்கப்பட்டே வந்திருக்கின்றன. குறிப்பாக யாழ் மாவட்டத்தின்
தனி நபர் மூலதனச் செலவீடு ரூ.313. அதே நேரத்தில் தேசிய அளவிலான மூலதனச்
செலவீடு 656 ரூபாயாகும்.
யாழ்ப்பாணம், மன்னார் பகுதிகளில் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டதும்,
அவ்விடங்களில் குறிப்பாக மன்னாரில் எண்ணெய்ச் சுத்திகரிப்பு நிறுவனம்
உருவாக்கவும், மேலும் பல எண்ணெய்க் கண்டுபிடிப்புகளை நடத்துவதற்காகவும்
ரஷியக்குழு சிபாரிசு செய்திருந்தபோதிலும் அவை கிடப்பில் போடப்பட்டன.
அதேபோன்று 1960-இல் உலக வங்கி, தீவு முழுவதும் ஆய்வு செய்து துணுக்காய்
பூநகரிப் பகுதிகளில் மிகப் பெரிய சர்க்கரை ஆலையை நிறுவச் சிபாரிசு செய்ததோடு
அதற்கு நிதி உதவி செய்யத் தயாராக இருந்ததாகக் கூறிய போதிலும் இன்னும் அவை
நிறைவேற்றப்படாமலேயே உள்ளன. காங்கேயன்துறை போன்ற இடங்களின் வளர்ச்சிக்கு
அமெரிக்க அரசாங்கம் முக்கியத்துவம் அளிக்கத் தயாராக இருந்தபோதிலும் அதைப்
பரிசீலிக்கக் கூட இலங்கை அரசு தயாராக இல்லை. அதே போன்று கிழக்குக் கடற்கரைத்
திட்டங்களும் நிறுவப்படவில்லை. காரணம், இதுவும் தமிழர் வாழும் பகுதியில்
இருப்பதே.
இதுபோன்ற புறக்கணிப்புக்கு என்ன காரணம்? இவை யாவும் தமிழர் பகுதியில்
அமையப்போகும் திட்டங்கள். இவை நிறைவேற்றப்பட்டால் தமிழர் பகுதியிலுள்ளோர்
வேலை வாய்ப்பினை அதிகம் பெறுவர். ஒரு தொழிலை அடுத்து அதன் உபதொழில்கள் பல
தோன்றும். இதனால் தமிழரின் வாழ்க்கை வளம் பெறும். அதனாலேயே திட்டங்கள் யாவும்
கிடப்பில் போடப்பட்டன. இதனால் தமிழர் பகுதியில் வேலை வாய்ப்பை இழந்த
இளைஞர்களின் எண்ணிக்கை மேலும் மேலும் உயர்ந்தது. அடுத்ததாக, தேசிய
மயமாக்குதல் கொள்கை உருவாக்கப்பட்டது. அதற்கான சட்டவரைவும் எழுதப்பட்டுச்
சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இது சர்வதேச நிறுவனங்களுக்குச் சாதகமாகவும்
தமிழர் நிறுவனங்களுக்குப் பாதகமாகவும் அமைந்தது. குறிப்பாகச் சொல்ல
வேண்டுமானால், இந்திய மூலதனத்திற்கு எதிராக உருவான ஒரு தாக்குதலே இது. இதனால்
இந்தியாவில் சொத்தும் இலங்கையில் தொழிலும் கொண்ட தமிழர்கள் நெருக்கடிக்கு
ஆளானார்கள்.
தேசிய மயமாக்குதல் திட்டத்தினால் மலையகத் தமிழர்களும் பெருத்த
பாதிப்புக்குள்ளாயினர். எப்படியெனில், மலையகத் தமிழரின் நகரப் பகுதிகளில்
சிங்களவர்களைக் குடிபுகச் செய்தனர். நகர விரிவாக்கம் என்பதே திட்டமிட்டுச்
செய்த சதி என்றுதான் சொல்ல வேண்டும். 80,000 ஏக்கர் தோட்டங்கள் தேசிய
மயமாக்கப்பட்டதால் மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் பயந்து நடுங்கினார்கள்.
இருப்பினும் இவர்களுக்கெனச் சில சலுகைகள் கிடைத்தன. ஏற்கெனவே தோட்டத்துறையில்
இருந்த அத்துமீறல் சட்டம் நீக்கப்பட்டது. சேமலாப வைப்புத் திட்டம் (உ.ட.ட.)
உருவாக்கப்படுதலும் நடைபெற்றன. (இவை நடைமுறைக்கு வந்ததற்கான சான்று எதுவும்
இதுவரை தெரியவில்லை).
இந்தத் தேசியமயமாக்கும் திட்டத்தால் மலையகத்தில் இருந்த இந்திய வம்சாவளி
வர்த்தகர்கள் மலையகத்தை விட்டு வெளியேறினர். தோட்ட நகர்ப்புற பகுதி
வர்த்தகர்கள் வட பிராந்தியப் (யாழ்) பகுதியிலிருந்து வந்தவர்கள். மலையகத்தில்
வாழும் பிரஜா உரிமை பெற்ற ஒரு சில வர்த்தகர்கள் புதிய வர்த்தகக் குழாமில்
சேர்ந்து கொண்டனர். இந்த வர்த்தகக் குழாம் சிங்களக் கூலிகளை மலையகத்
தோட்டங்களில் ஈடுபடுத்தியது. இதனால் குடியுரிமையற்ற தமிழ்த் தோட்டத்
தொழிலாளர்கள் செய்வதறியாது திகைத்தனர். அதனால் அவர்கள் அடைந்த இன்னல்கள்
கணக்கிடலங்காது.
புள்ளிவிவர ரீதியாகப் பார்த்தால் ரப்பர், தேயிலை ஏற்றுமதி 1968-இல் 1976
மில்லியன் ரூபாய் என்று இருந்த நிலைமை மாறி, 1978-இல் 13,176 மில்லியன்
ரூபாயுமாக வருவாய் உயர்ந்துள்ளது. இப்படிப் பத்து மடங்கு வருவாய் உயரக்
காரணமான தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலையோ நிச்சயமற்ற தன்மையாய்
மாறியது. நீர்ப்பாசன விவசாயத்துக்கும் எந்தத் திட்டமும் தமிழர் பகுதியில்
நிறைவேற்றப்படவில்லை. 1977-இல் இருந்து அந்நிய நாடுகளின் உதவியோடு அணை
கட்டவும், விவசாய நில வளர்ச்சித் துறைக்கும், விவசாயிகளின்
மறுவாழ்வுக்கெனவும் பல மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டது. இத்தொகையில் 0.001
சதவிகிதம் கூடத் தமிழ் பேசும் பகுதிகளுக்காகச் செலவழிக்கப்படவில்லை (கமிட்டி
ஆஃப் நேஷனல் டெவலப்மெண்ட்-லங்கா கார்டியன் கொழும்பு - 1 நவம்பர் 1983-இல்
வெளியிட்ட அறிக்கை).
சிங்கள வணிக வியாபாரத் தொழில் நிறுவனக் குழுக்கள் தங்களுக்குச் சாதகமாக இதை
மாற்றி அமைத்துக்கொண்டு தமிழர்களையும் மற்றும் மதச் சிறுபான்மையினரையும்
பொருளாதார ரீதியாக ஒடுக்க முற்பட்டன.
வியாழக்கிழமை, 24 செப்டம்பர் 2009 21:42 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
No comments:
Post a Comment