Friday, November 5, 2010

19 : தமிழர் விடுதலைக் கூட்டணி!

         அப்பொழுது புதிய புனரமைப்பு, சமூகத்தின் தேவையாக மாறியது. ஒருபக்கம்
      அப்பட்டமான சிங்களப் பேரினவாதம் சட்ட வடிவத்தில் வெளிப்பட்டது. மறுபக்கம்
      சிங்களக் குண்டர்களின் தலைமையில் சிங்களவர்களை அணி திரட்டி மதச்
      சிறுபான்மையினரை ஒடுக்கக் கூடிய வடிவம் ஓர் உச்சகட்ட அந்தஸ்தை அடைந்தது.
      அதுமட்டுமல்லாது அரசு இயந்திரமான போலீஸ், ராணுவம் ஆகியவற்றின் மூலமும் இனவாத
      அடக்குமுறையை நிகழ்த்தக்கூடிய சூழ்நிலை உருவானது. ஆக இந்த மூன்று
      வடிவங்களையும் ஒருங்கே கையில் எடுத்துக்கொண்டு புத்தமதம், அரசு
      அங்கீகாரத்துடன் களத்தில் முன்னேறக்கூடிய சூழ்நிலை உருவாகியது.
      புறநிலையில் இந்தத் தவிர்க்க முடியாத விளைவுகள் தமிழ் தேசியக் கட்சிகளை
      ஒருங்கிணைக்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்கின. தமிழ் அரசியல் சக்திகள் தங்களை
      ஒருங்கிணைந்த நிறுவன வடிவில் நிலைப்படுத்திக்கொண்டு ஒட்டுமொத்த தமிழ் தேசிய
      சுதந்திரத்திற்கான ஓர் ஐக்கியப்பட்ட போராட்டத்தைக் கட்டமைக்க நெருங்கி வந்தன.
       இந்தச் சூழ்நிலையில்தான் ஒரு முக்கிய நிகழ்ச்சி நடந்தது: திருகோணமலையில்
      1972-ஆம் ஆண்டு மே 14-ஆம் நாள் தமிழர்கள் அனைவரும் ஒரு மாநாட்டினை நடத்தினர்.
      இதில் மிக முக்கியமான மூன்று கட்சிகள் பங்கேற்றன. ஜி.ஜி.பொன்னம்பலம்
      தலைமையிலான அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், தொண்டைமான் தலைமையிலான இலங்கைத்
      தொழிலாளர் காங்கிரஸ், செல்வநாயகத்தின் தலைமையிலான தமிழரசுக் கட்சி ஆகியவை
      இம்மாநாட்டில் முக்கிய பங்கு வகித்தன.
      இந்த மூன்று கட்சிகளும் ஒன்றிணைந்து தமிழர் கூட்டணியை அன்று உருவாக்கின.
      தமிழ் மக்களின் தேசியத் தனித்தன்மையை நிலைநாட்டவும், அரசியல்
      சுதந்திரத்திற்காகவும், தங்கள் உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவும்
      போராடுவது என்று முடிவு செய்தனர். ஆரம்பத்தில் இது சுயாட்சியையே முன்வைத்தது.
      சத்தியாக்கிரக வடிவில் வன்முறையற்ற போராட்டங்களைக் கட்டமைக்க அது முடிவு
      செய்தது. எப்படி இருந்தபோதிலும் தமிழர்களுடைய போராட்ட வரலாற்றில் இந்த
      ஐக்கியப்பட்ட நிலை ஒரு முக்கியமான வளர்ச்சிக் கட்டமாகும். இதனுடைய அடுத்த
      கட்டமாக, சுதந்திரக் கட்சி ஆட்சியின் அடக்குமுறையை ஒருபுறமும், இளைஞர்களுடைய
      அதிருப்தியையும் வேதனையும் மறுபக்கத்திலும் இந்த அமைப்பு சந்திக்க வேண்டிய
      சூழ்நிலை உருவானது. இந்தச் சூழ்நிலைதான் இந்த அமைப்பு வலுவாக வேரூன்றக்
      காரணமானது. 1976-இல் தமிழர் கூட்டணி இளைஞர்களின் வேகத்தின் முன் தன்னை
      நிலைப்படுத்திக் கொள்வதற்காக, தமிழர் விடுதலைக் கூட்டணியாக (ப.ம.க.ஊ.)
      தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டது.
      இதன் தலைவர்களாக எஸ்.ஜே.வி. செல்வநாயகம், செü. தொண்டமான், ஜி.ஜி. பொன்னம்பலம்
      ஆகியோரை வட்டுக்கோட்டையில் 1976-இல் நடந்த இம் மாநாடு தேர்வு செய்தது. அம்
      மாநாட்டில் தொண்டமான் நேரடியாகப் பங்கேற்கவில்லை. இம் மாநாடு தனி நாட்டுக்
      கோஷத்தையும் வலியுறுத்தியது. தனி நாடு மலையகத் தமிழர்களுக்குத் தீர்வாக
      அமையாது என்று தனது கருத்தை மாநாட்டிற்கு எழுத்துபூர்வமாக அனுப்பி வைத்தார்
      தொண்டமான். அதனைத் தமிழர் விடுதலைக் கூட்டணி ஏற்றுக்கொண்டதை அடுத்து,
      தொண்டமான் தொடர்ந்து கூட்டுத் தலைவர் பதவியை வகித்தார்.
      1977 தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி தனிநாடு கோஷத்தை முன்வைத்துத்
      தேர்தலில் பங்கேற்றது. தமிழ் ஈழம் அமைக்க தமிழ் மக்கள் ஆணையிட்டனர்.
      தேர்தலின் முடிவில் அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவர் ஆனார். அப்பொழுது
      தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவராக தொண்டமான் யாரும் எதிர்பாராத நிலையில்
      ஆளும் கட்சிக்கு ஆதரவு நிலை எடுத்து, அமைச்சர் ஆனார்.
      தமிழ் இளைஞர் பேரவை:
      1973-இல் வடபகுதி (யாழ்) இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்ட அரசியல்
      விழிப்புணர்வையும், அவர்கள் மலையக மக்கள் மீது காட்டிய ஆர்வத்தையும் இங்கு
      கவனத்தில் கொள்ள வேண்டும். தேர்தல் கண்ணோட்டமோ, சுயநல வெறியோ இன்றி நேர்மையாக
      இளைஞர் பேரவையைச் சார்ந்த 10 இளைஞர்கள் மலையகத்தின் பல பகுதிகளுக்கு இலங்கை
      தொழிலாளர் காங்கிரஸின் ஒப்புதலுடன் பயணம் மேற்கொண்டனர். இவர்களின் ஒரே
      நோக்கம் மலையக மக்களின் வாழ்நிலையைப் புரிந்து கொள்வதுதான். இவ்வாறு பயணம்
      மேற்கொண்ட இளைஞர்களில் ஒருவரே காலம் சென்ற சிவகுமாரன் ஆவார்.
      மலையக மக்கள் பட்ட கஷ்டங்களையும் கலவர காலத்தில் அவர்கள் அடைந்த
      பாதிப்புகளையும் அரசின் அடக்குமுறை விளைவுகளையும் நேரில் பார்த்த சிவகுமாரன்
      ""தமிழர்களின் பிரச்னைக்குத் தனி நாடு பெறுவதைத் தவிர வேறு வழியில்லை. ஆயுதப்
      போராட்டமே அதற்குத் தீர்வு'' என்ற கருத்தைப் பெற்றார். அதையே இளைஞர்
      பேரவைமுன் அவர் வைத்தார். 1973 நவம்பரில் மலையகப் பகுதியில் அம் மக்கள்
      வெற்றிகரமாக நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் இவர்களும் கலந்துகொண்டார்கள்.
      இதை அடுத்து 1976-இல் மலையக மக்களின் போராட்டத்தில் சிவனு லட்சுமணன் மீது
      நடத்திய துப்பாக்கிச்சூடு சம்பவத்தைக் கண்டித்து யாழ் பல்கலைக்கழக மாணவர்
      நடத்திய வேலைநிறுத்தம், நிதி சேகரிப்பு இயக்கம் குறிப்பிட்டாக வேண்டிய இளைஞர்
      பேரவையின் ஆக்கபூர்வ நடவடிக்கைகள் ஆகும்.
      இளைஞர் பேரவையின் இந்த நடவடிக்கைகளுக்கு அச்சாணியாக இருந்தவர்கள் இந்தப்
      பத்து இளைஞர்களும்தான். இத்தகைய நிகழ்ச்சிகள் யாவும் மலையகத்திற்கும்,
      வடபகுதிக்கும் இடையில் நல்லுறவுப் பாலம் அமைக்கும் ஆரம்ப முயற்சிகளாக
      இருந்தன. இந்தச் சமயத்தில்தான் யாழ் பல்கலைக்கழகத்தில் மலையக மாணவர்கள்
      தாக்கப்பட்ட சம்பவம் நடந்தது. இதைத் தொடர்ந்து தமிழ் இளைஞர்கள் மத்தியில்
      அரசின் அடக்குமுறைகளை எதிர்த்துத் தீவிர வன்முறைத் தாக்குதல்களை நடத்தும்
      போக்கு வெளிப்பட்டு வேகமடையத் தொடங்கியது. இந்த வேகம் படிப்படியாக வளர்ச்சி
      பெற்று, தமிழ் இளைஞர்கள் ஆயுதம் தரித்துத் தனி நாடு கேட்கும் போராட்ட
      இயக்கமாக வளர்ச்சி பெற்றது.
      புதன்கிழமை, 23 செப்டம்பர் 2009 17:06 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

No comments:

Post a Comment