Friday, November 5, 2010

29: அமைப்பு ரீதியான எதிர்ப்பின் ஆரம்பம்!

இலங்கைத் தமிழ் மக்களின் மாறாத வடுவாக உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு
      சம்பவங்கள் பதிந்தன. இதனைத் தமிழ் மக்கள், தமிழ் தேசிய கெüரவத்திற்கு ஏற்பட்ட
      இழுக்காக நினைத்தனர். இந்த மாநாட்டிற்குப் பின் தமிழர் வாழும் பகுதிகள்
      எல்லாம் சிங்கள வெறியர்களால் தீக்கிரையாக்கப்பட்டு தாக்கப்பட்டன. தியாகி
      சிவகுமாரன் மிகப் பெரிய துணிச்சலுடனும், தீர்மானத்துடனும் தமிழ் மக்களின்
      கெüரவத்தைக் காப்பதற்காகவும், "தனித்தமிழ்ஈழம்' பெறுவதற்காகவும் ஆயுதம்
      ஏந்திய இளைஞர் குழுவை வளர்த்தார். ஆரம்பத்தில் இந்தக் குழுவின் லட்சியம்,
      உலகத் தமிழ் மாநாட்டில் கலவரம் விளைவித்தவர்களைப் பழிக்குப் பழி வாங்குவது
      என்பதே.இந்தக் கலவரத்திற்கும் குழப்பத்திற்கும் படுகொலைக்கும் காரணமான போலீஸ்
      உயர் அதிகாரி சந்திரசேகராவையும், யாழ் தமிழ் மேயர் துரையப்பாவையும் சுட்டுக்
      கொல்வதுதான் இந்தக் குழுவின் நோக்கமாயிருந்தது. சந்திரசேகராவை சிவகுமார் தேடி
      அலைந்தார். தெல்லிப்பளை என்னும் இடத்தில் வைத்துக் குண்டு வீசினார்.
      சந்திரசேகரா தப்பிவிட்டார். மீண்டும் யாழ்ப்பாணத்தில் அவரது வீட்டுக்குப்
      பக்கத்தில் வேலைக்குச் செல்லும் சமயம் ஜீப்பை மறித்தார். குண்டுகளை
      எறிந்தார். குண்டு வெடிக்க மறுத்தது. சுழல் துப்பாக்கியை எடுத்துச்
      சந்திரசேகராவின் மார்புக்கு நேராக வைத்து ஆறு ரவைகளையும் தீர்க்க முயன்றார்.
      ஆறும் வெடிக்க மறுத்தன. மீண்டும் மறைந்தார். அவரது தலைக்கு விலைபோட்டுப்
      போலீஸôர் தேடினர். ஆயிரம் பேர் ஆயுதங்களுடன் ஊரை வளைத்தனர். சிவகுமாரன்
      யாழ்ப்பாணத்தில் உலாவிக்கொண்டிருந்தார்.பணம் தேவைப்பட்டது. யாரும் உதவி
      செய்யவில்லை. நண்பர்கள் மூவரைக் கூட்டிக்கொண்டு ஓரிடத்திற்குப் போனார்.
      அங்கும் பணம் கிடைக்கவில்லை. ஒரு சிலர் அவரைத் துரத்தினர். அவர்களுக்கு
      எல்லாவற்றையும் விளங்கப்படுத்தினார். நேரம் போய்க்கொண்டிருந்தது. போலீஸôர்
      சுற்றி வளைத்துக் கொண்டனர். துப்பாக்கியிலோ ரவைகள் இல்லை. உடன் வந்த நான்கு
      நண்பர்களையும் நாலாபக்கமாக ஓடச்சொல்லிவிட்டு அவரும் ஓடினார்.
      அறுவடை செய்யப்பட்ட புகையிலைத் தோட்டத்தின் அடிக்கட்டை அவரது காலில்
      குத்தியது. வேகமாக ஓட முடியவில்லை. அப்போது போலீஸôர் அவரைப் பிடித்து
      விட்டனர். அவரிடம் ஒரு குப்பியில் "சயனைட்' எப்பொழுதும் இருந்தது. தொடையைக்
      கத்தியால் கிழித்து நஞ்சை ரத்தத்துடன் கலக்க முயற்சித்தார். போலீஸôர்
      கத்தியைப் பிடுங்கி எறிந்தனர். நஞ்சை வாயில் ஊற்றி விழுங்கினார். போலீஸôர்
      அவரை மருத்துவமனையில் சேர்த்துச் சங்கிலிகளால் கட்டிலுடன் பிணைத்துப்
      போட்டனர். பயங்கர ஆயுதங்களுடன் போலீஸ் காவல் வேறு. ஒருசில மணிகளில் அவர்
      உயிர் போய்விட்டது. அவர்தான் சிவகுமாரன்! (--லங்காராணி--அருளர்
      எழுதியதிலிருந்து)
      1974 ஜூன் 5-ஆம் நாள் இந்தச் சிவகுமாரன் தன் வாழ்க்கையை ஒரு
      சீர்திருத்தவாதியாகவே தொடங்கினார். சாதியொழிப்பு, சமபந்தி, சமயச்
      சீர்திருத்தம் போன்றவற்றில் ஆர்வம் காட்டியவர் சிவகுமாரன். பொதுவாக அவரைக்
      கம்யூனிஸ்ட் என்று அழைப்பார்கள். குடியரசு, சுதந்திர தினம் போன்ற தேசியக்
      கொண்டாட்ட நாட்களில் அரசாங்கத்தின் தேசியக் கொடியை தமிழர்கள் ஏற்றி வைத்துக்
      குதூகலிப்பதை சிவகுமாரன் வெறுத்தார். தனது இல்லத்துக்குப் பக்கத்தில் யாராவது
      சிங்கள தேசியக் கொடியை ஏற்றி வைத்தால் அறுத்து எறிந்து விடுவார். சிங்களவரைக்
      குறிக்கும் சிங்கம் ஒன்று கத்தியுடன் நிற்கும் காட்சியைத் தாங்கியதாக
      இருந்தது அந்தக் கொடி. இலங்கைக்குச் சுதந்திரம் கிடைத்த சமயத்தில் இந்தக்
      கொடிக்குத் தமிழர் தலைவர்கள் பயங்கரமாக எதிர்ப்புத் தெரிவித்தார்கள். இந்த
      எதிர்ப்புக்குப் பயந்து தமிழர்களைக் குறிக்கும் இரண்டு நிறங்களை தேசியக்
      கொடியில் இணைத்தார்கள். அந்த இரண்டு நிறக்கோடுகளையும் சிங்கத்துக்கு
      எதிர்ப்புறமாக வைத்தனர். தமிழர்களுக்கு அந்தச் சிங்கம் கத்தியைக் காட்டிக்
      கொண்டிருப்பதாக அமைந்திருக்கிறது இந்த தேசியக் கொடி.
      துரையப்பா தமிழ்ப் பகுதியில் சுதந்திரக் கட்சி அமைப்பாளராக ஸ்ரீமாவோவினால்
      அமர்த்தப்பட்டார். துரோகிகளின் பட்டியலில் இவருக்கு முதலிடம் தந்து அவர்
      தீவிரவாத இளைஞர்களால் கண்காணிக்கப்பட்டார். இளைஞர்கள் பல்வேறு குழுக்களாகப்
      பிரிந்து துரையப்பாவின் நடவடிக்கைகளை ஆராய்ந்தனர். அவர்
      செவ்வாய்க்கிழமைதோறும் மானிப்பாய் என்னுமிடத்திலமைந்த அந்தோணியார்
      கோயிலுக்கும், வெள்ளிக்கிழமைகளில் புன்னாலையிலிருந்த வரதராஜப் பெருமாள்
      கோயிலுக்கும் செல்வார் என்று தெரிந்து கொண்டனர். வரதராஜப் பெருமாள் கோயில்
      வாசலில் நான்கு இளைஞர்கள் கையில் துப்பாக்கி சகிதம் நின்று கொண்டிருந்தனர்.
      துரையப்பாவின் வண்டி கோயில் வாசலில் வந்து நின்றது. அவரும் காரின் கதவைத்
      திறந்துகொண்டு இறங்கினார். நான்கு இளைஞர்களில் ஒருவர் வேகமாகச் சென்று,
      "இப்போது மணி என்ன?' என்று கேட்டார். துரையப்பாவும் மணி சொல்லும்
      நோக்கத்துடன் கையைத் தூக்கி மணி பார்த்தார். சற்றும் தாமதிக்காமல் மணி கேட்ட
      இளைஞர் தனது துப்பாக்கியில் இருந்த குண்டுகளைத் தீர்த்தார். துரையப்பா குண்டு
      துளைத்து சுருண்டு விழுந்தார். இளைஞர்கள் துரையப்பாவின் காரில் ஏறித்
      தலைமறைவானார்கள். அவ்வாறு குறிதவறாமல் சுட்டவர் யார் தெரியுமா? அவர்தான்
      பின்னாளில் தமிழ் ஈழவிடுதலைப் போரில் வீரமரணம் எய்திய விடுதலைப் புலிகளின்
      தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரன்.
      சிவகுமாரனின் வீரமும், தியாகமும் தமிழ் அமைப்புகள் அனைத்திலும் ஒரு வீச்சை
      உருவாக்கின. 1976-ஆம் ஆண்டு மே 22-ஆம் நாள் தமிழர் கூட்டணி, தமிழர் விடுதலைக்
      கூட்டணியாகப் புதிய மாற்றம் பெற்றது. அப்போது தமிழர் கூட்டணி தனது ஆரம்பகால
      கோஷமான தமிழர் சுயாட்சியைக் கைவிட்டுத் "தனி ஈழம்' என்ற கோஷத்தை முன்வைத்துச்
      செயல்பட ஆரம்பித்தது. 1976 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டையில் நடந்த மாநாட்டில்
      ""ஆறு வடக்கு, வட கிழக்கு மாவட்டங்களை உள்ளடக்கிய "ஒரு தனித்தன்மை வாய்ந்த
      ஈழமே' தனது நோக்கம்'' என்று பிரகடனம் செய்தது. செல்வநாயகம், பொன்னம்பலம்,
      தொண்டமான் மூவரும் கூட்டுத் தலைவர்களானார்கள்.""சுதந்திரம் பெறுவதும், தங்கள்
      உழைப்பின் பயனை தாங்களே அனுபவிப்பதும் தமிழ் மக்களின் சொந்த பிறப்புரிமை
      என்றும், எந்த ஓர் அரசாங்கமாவது மக்களின் அந்த உரிமைகளைப் பறித்தால் மக்கள்
      அச்சட்டத்தை தூக்கி எறியக் கடமைப்பட்டவர்கள் ஆவார்கள்'' என்றும்
      அம்மாநாட்டுத் தீர்மானம் கூறியது. அது மட்டுமல்லாது தொடர்ச்சியான சிங்களப்
      பெரும்பான்மை அரசாங்கங்கள் தமிழ் மக்களின் சுதந்திரத்தைப் பறித்ததோடு
      மட்டுமல்லாமல், வேலைவாய்ப்பு, கல்வி, பொருளாதார வளர்ச்சி, பண்பாட்டு
      முன்னேற்றம் ஆகியவற்றிற்கான வாய்ப்புகளையும் பறித்ததாகவும் தீர்மானம்
      கூறியது. மேலும் மாநாட்டுத் தலைவர் குறிப்பிடுகையில், தாங்கள் வாழ்வதற்கு
      தமிழ் அரசை மீண்டும் உருவாக்குவதைத் தவிர வேறு மாற்று வழி ஏதும்
      தமிழர்களுக்கு இல்லை என்றும் கூறினார். இதை ஒட்டி தமிழ் மக்கள் ஓர் அமைப்பு
      ரீதியான வெகுஜனத் தன்மையான எதிர்ப்பை சிங்களவர் மீது தொடுக்க ஆரம்பித்தனர்.
      ஞாயிற்றுக்கிழமை, 04 அக்டோபர் 2009 19:19 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

No comments:

Post a Comment