Friday, November 5, 2010

27 :தீவிரவாதத்தின் ஆரம்பம்

        நாடு தழுவிய ஓர் அதிருப்தியின் விளைவாக எழுந்த தீவிரவாதத்தால் மாபெரும்
      ஆயுதக் கலகத்தை 1971-இல் இலங்கை சந்தித்தது. 1971 கலகத்தைத் தலைமை தாங்கி
      நடத்தியது ஜனதா விமுக்தி பெரமுன என்ற மக்கள் விடுதலை முன்னணி ஆகும்.
      அதுவரையில் நாட்டில் நிலவி வந்த இனவாத அரசியலையும், இன உணர்வுகளையும்
      மதிப்பீடு செய்ய ஆட்சியாளர்கள் தவறி விட்டனர். உற்சாகத்தின் உந்துதலினால்
      அரசுக்கு எதிராக ஆயுதம் தாங்கிக் கலகம் செய்தனர் ஜே.வி.பி. (ஒயட) என்று
      பரவலாக அறியப்படும் ஜனதா விமுக்திப் பெரமுன அமைப்பினர். சாதாரண மக்களும்
      மலையகத் தமிழ் இளைஞர்களும் கூடப் பங்கேற்ற இந்தக் கலகத்தில் பெரும்
      அளவிற்குச் சிங்கள இளைஞர்களும் பங்கு பெற்றனர். இலங்கை இடதுசாரி
      மார்க்சியவாதிகள் தொடர்ந்து மக்கள் விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதன் விளைவாகப்
      புதுவகையில் உருவான ஒரு தீவிரவாத இயக்கமே ஜனதா விமுக்தி பெரமுன. இதன்
      தலைவர்கள் தலைமறைவாக இருந்தே இவ்வியக்கத்தை நிறுவினர். மாஸ்கோவில் உள்ள
      லுமும்பா பல்கலைக்கழகத்தில் படித்துவிட்டு வந்த உரோகண விஜயவீரா இதற்குத்
      தலைமை தாங்கினார். 1970-க்கு முன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை
      விமர்சனத்துடன் ஆதரித்தது இது. ஆனால் அதே சுதந்திரக் கட்சிதான் பின்னாளில்
      உரோகண விஜயவீராவைக் கடுமையான முறையில் ஒடுக்கியது. இந்தக் கலகத்தில் அரசு
      இயந்திரமே ஸ்தம்பித்துவிட்டது. இதனை ஒடுக்குவதற்குப் போதிய ஆயுதங்கள் அரசிடம்
      இருக்கவில்லை. பாகிஸ்தான், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளில் இருந்து
      ராணுவ உதவிகளைப் பெற்றது ஸ்ரீலங்கா அரசு.
      நாடு முழுவதும் அனைத்துக் காவல் நிலையங்களும் கலகம் செய்த இளைஞர்களால்
      அடித்து நொறுக்கப்பட்டன. பயந்த இலங்கை அரசு இந்தியாவிற்கு உதவி கோரி,
      கோரிக்கை விடுத்தது. இங்கு கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால்,
      மத்தியில் இருந்த இந்திரா அரசு ஸ்ரீமாவோவின் வேண்டுகோளுக்கு இணங்கி
      கப்பற்படையை இலங்கைக்கு அனுப்பியதோடு, பெருமளவிலான ஆயுதங்களையும்
      துருப்புகளையும் கூட அனுப்பியது. அவர்கள் அங்கு சென்று கலவரத்தை ஒடுக்கினர்.
      இந்தக் கலகத்தில் 15,000 இளைஞர்கள் கொல்லப்பட்டதன்றி லட்சக்கணக்கான
      இளைஞர்களும் அதன் தலைவர்களும் மற்றும் அதோடு இணைந்த நவசமசமாஜக் கட்சியினரும்
      கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
      வரலாற்றில் பதியத்தக்க இந்த எழுச்சி, பரந்த அளவில் பரவி நாட்டையே குலுக்கிய
      அதே நேரத்தில் அரசாங்கத்தின் கொடூரமான அடக்குமுறைக்கு மறுக்க முடியாத
      சான்றாகவும் குறிக்கப்படுகிறது. இது இலங்கைக்கு மட்டுமின்றிச் சர்வதேச
      இடதுசாரி அணியினருக்கும் ஓர் அதிர்ச்சியூட்டும் திருப்புமுனையாகவும்
      அமைந்தது. இந்த இயக்கம் தோல்வி அடைய முக்கிய காரணம் மார்க்சியக் கொள்கைகளைப்
      பேசிய இவர்கள், அதற்கு நேர்மாறாகச் சிங்கள இனவெறிக் கொள்கைக்கு பலியானதுதான்.
      அதுமட்டுமின்றி, கட்டுப்பாடு நிறைந்த அமைப்பாக இவர்கள் இல்லாததும், சரியான
      அரசியல் சிந்தனையுடன் வளராததும் தமிழினச் சிறுபான்மையினரின் உணர்வுகளைப்
      பிரதிபலிக்காததும் ஆகும். இலங்கை மக்களின் அரசியல் வரலாற்றில் அரசுக்கு
      எதிராக ஆயுதம் எடுத்துப் போராடிய இந்தக் கலகத்தின் வீச்சு பின்வரும் நாளில்
      தமிழ் தேசிய உணர்வுப் போராட்டங்களில் செல்வாக்குச் செலுத்த ஆரம்பித்தது.
      ஆக, இவ்விதத்தில் சோசலிச மனிதாபிமானத்தைப் பேசிய ஸ்ரீமாவோ அரசு மிகப் பெரிய
      படுகொலைக்குக் காரணமானது. பிற்காலத்தில் இலங்கைத் தீவு சந்திக்க இருக்கும்
      தீவிரவாதப் போர்களுக்கும், போராட்டங்களுக்கும், குருதியின் கோர
      தாண்டவத்துக்கும் ஆரம்பமாக அமைந்தது இந்தக் கலகம்தான். இந்த நிலையில்தான்
      ஸ்ரீமாவோ அரசு, அவசர நிலைச் சட்டத்தையும், அடக்குமுறைச் சட்டத்தையும் மக்கள்
      மீது திணித்தது. போர்க்குணமிக்க சிங்கள இளைஞர்கள் மீது கட்டவிழ்த்து
      விடப்பட்ட ஒடுக்குமுறைக்குப் பின், தமிழர்கள் மீது தனது சட்டரீதியான, அமைப்பு
      ரீதியான இனவாத ஒடுக்குமுறையைத் திருப்பியது இலங்கை அரசு. அதன் விளைவே இலங்கை
      "குடியரசு' ஆகும் சட்டமும், புதிய அரசியல் அமைப்பு உருவாதலும் ஆகும்.
      இதில் அனைத்து அடிப்படை உரிமைகளையும், பாதுகாப்பு அம்சங்களையும்
      ஒதுக்கிவிட்டுச் சிறுபான்மை மத, இன பாதுகாப்புகளைத் தூக்கி எறியும் வகையில்
      சிங்களம் தேசிய மொழி என்றும், புத்த மதத்தை அரசு மதமாகவும் அறிவிக்கப்பட்டது.
      கல்வி தரப்படுத்துதல் சட்டத்தின் மூலம் பெருமளவிற்கு பாதிப்படைந்த தமிழர்கள்
      இந்தப் புதிய அரசியல் சட்டத்தால் கொதிப்படைந்தார்கள். அரசியல் நிர்ணய சபையில்
      தமிழர்களால் அளிக்கப்பட்ட அனைத்துத் திருத்தங்களும் நிராகரிக்கப்பட்டு 1972
      மே 22-ஆம் நாள், இலங்கை அரசியலில் தமிழர்கள் பங்கேற்கவும், ஆட்சியில்
      பங்கேற்கவும் சுமுகமான முறையில் சிங்களர்களோடு இணைந்து வாழும் நிலைமையும்
      அடியோடு ஒழிக்கப்பட்டது இச் சட்டங்கள் மூலம்தான். இதனால் தமிழ் இனம்
      தனிமைப்படுத்தப்பட்டுச் சிங்கள இனத்திற்கு எதிர்முகாமாகத் தள்ளப்பட்டது.
      இந்தப் பிற்போக்கு ஒருசார்புச் சட்டத்திற்கு ஆதரவாக அனைத்துச் சிங்களக்
      கட்சிகளும், இயக்கங்களும் (இடதுசாரிக் கட்சிகள் உட்பட) செயல்பட்டன.
      சிங்கள அரசியல் கட்சிகளோடு கூட்டோ, அவர்களுடன் இணைந்து செயலாற்றுவதோ இனிமேல்
      இயலாத காரியம் என்று தமிழர்கள் நினைக்க ஆரம்பித்ததும் அதுமுதல்தான்.
      இதனையொட்டி தமிழர் மத்தியில் ஐக்கியம் ஏற்பட ஆரம்பித்தது. அரசுக்கும், சிங்கள
      இனவெறியருக்கும் எதிராகத் தமிழர்கள் ஆத்திரம் கொண்டார்கள். இந்த நிலையில்தான
      தமிழ் மாணவர்களைக் கொண்ட தமிழ் மாணவர் பேரவையும், தமிழ் அரசியல் அமைப்புகள்
      ஒன்றாக இணைந்த தமிழர் விடுதலைக் கூட்டணியும் உருவாகின. இதன் விளைவாக
      விசாரணையற்ற கைதுகளும், அரசின் அடக்குமுறை ஆர்ப்பாட்டங்களும் தொடர்கதையாக
      ஆனது. தமிழ் இளைஞர்கள் ஆவேசம் அடைந்தனர்.
      சத்தியாக்கிரகம் மூலம் அமைதி வழியில் எதிர்ப்புகளைக் காட்டுவது என்பது
      அர்த்தமற்றது என்ற எண்ணம் தமிழ் இளைஞர்கள் மத்தியில் உருவாக ஆரம்பித்தது.
      தமிழ்ச் சமூகம் வாழ முடியாதபடி வேலையில்லாத் திண்டாட்டமும், அடக்குமுறையும்
      அதிகரித்ததால், இதை எதிர்த்துக் கடுமையான முறையில் போராட்டங்கள் வெடித்து
      வன்முறைச் சம்பவங்களும், தாக்குதல்களும் ஆங்காங்கே நடக்க ஆரம்பித்தன.
      குடியரசு அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து,
      செல்வநாயகம் நாடாளுமன்றத்தில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு (1972) மீண்டும்
      நடந்த இடைத்தேர்தலில் (1975) வெற்றி பெற்று நாடாளுமன்றத்தில் நுழைந்தார். அது
      தமிழ் மக்களின் உணர்வுகளுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்.
      இந்தத் தமிழ் உணர்வு வேகத்தால் உந்தப்பட்டு தமிழ் கூட்டணிக்கு தமிழர்
      சுயாட்சிக்கான திட்டங்களையும், இயக்கங்களையும் கட்டமைக்க வேண்டிய
      நிர்ப்பந்தம் ஏற்பட்டது. வடக்குப் பகுதியில் பயணம் செய்த சிங்கள மந்திரியின்
      கார் வெடிகுண்டு வைத்துத் தகர்க்கப்பட்டது. அதே நேரத்தில் தமிழ்ப் பாராளுமன்ற
      உறுப்பினர் ஆர். தியாகராஜன் குடியரசுச் சட்டத்திற்கு ஆதரவு அளித்தார் என்ற
      காரணத்திற்காக அவரைக் கொலை செய்ய முயற்சி நடந்தது. நல்லூர்க் கிராம
      கவுன்சிலின் பழைய தலைவரான குமார குலசிங்கம் துப்பாக்கியால் சுடப்பட்டார்.
      இவ்விதத்தில் தமிழ் உணர்வின் வேகத்தால் தமிழ் தேசியப் போர்க்குணம் மிக்க
      இளைஞர்கள் ஆயுதம் தரிக்க ஆரம்பித்தனர்.
      அரசு இயந்திரம் தமிழர் வாழும் வடபகுதி முழுவதும் அவசர நிலையைப் பிரகடனம்
      செய்து அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட்டது. அதிகாரத்தின் துணையுடன் அரசு
      வன்முறை வெறியாட்டத்தை தமிழர் மீது தொடுத்தது. தமிழர் வாழும் வடக்கு மற்றும்
      கிழக்குப் பகுதிகள் ராணுவத்தின் கட்டுப்பாட்டிற்கு வந்தன. பொதுமக்களை
      அச்சுறுத்துவதும், விசாரணையின்றிக் கைது செய்வதும் தொடர்ந்து நடந்தது. ஒரு
      சோக வரலாற்றுக்கு தொடக்கம் எழுதியது ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் குடியரசுப்
      பிரகடனமும் அதற்குப் பின்னால் எற்பட்ட மாற்றங்களும்.நேரடியாகக் குடியரசுத்
      தலைவரைத் தேர்ந்தெடுக்கும் முறை அமலுக்கு வந்தபிறகு சிங்கள இன ஆதிக்கம்
      நிலைநிறுத்தப்பட்டு, சிறுபான்மையினரின் நலன் புறக்கணிக்கப்படத் தொடங்கியது.
      அழிவின் ஆரம்பம் அப்போதுதான் ஆரம்பமாகியது.
      வெள்ளிக்கிழமை, 02 அக்டோபர் 2009 19:29 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

No comments:

Post a Comment