மாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சி அவலங்களைத் தெரிந்து கொள்ளுமுன் அவரது கணவர்
எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா பற்றியும், அவரது அரசியல் நுழைவு, கொள்கை,
ஆட்சிமுறை பற்றியும் தெரிந்து கொள்வது அவசியம். இலங்கை எழுத்தாளர் சமுத்திரன்
எழுதிய இலங்கைத் தேசிய இனப்பிரச்னை என்னும் நூலில் இவை விரிவாக
விளக்கப்பட்டுள்ளன. அந்த நூலிலிருந்து ஒரு பகுதி: 1951-இல் பண்டாரநாயக்கா
யு.என்.பி.யிலிருந்து வெளியேறி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை அமைத்தார்.
இவரின் வெளியேற்றத்திற்குக் கொள்கை வேறுபாடுகளைவிடத் தனிப்பட்ட அரசியல்
நோக்குகளே காரணம் என இவரது சமகால யு.என்.பி. முக்கியஸ்தர்கள்
கூறியுள்ளார்கள். தனக்குப் பிரதமராகும் வாய்ப்புகள், சேனநாயக்கா
குடும்பத்தின் ஆதிக்கம் மிகுந்த அந்தக் கட்சியிலிருக்கும் வரை குறைவு என
பண்டாரநாயக்கா உணர்ந்திருக்கலாம். டி.எஸ். சேனநாயக்கா அவருடைய மகனான
டட்லியைப் பிரதமராக்கப் பல ஆயத்தங்களையும் செய்து கொண்டிருந்தார். புதிய
கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பண்டாரநாயக்கா அமைத்தபோது
யு.என்.பி.யிடமிருந்து வேறுபட்ட சில கொள்கைகளையும் கையாண்டார். அவற்றை அவர்
தேர்ந்தெடுத்த விதமும் அவற்றிற்கு வடிவம் கொடுத்த முறையும் அவருடைய அரசியல்
உணர்வுத் திறனையும் தந்திரத்தையும் காட்டின. பொதுமக்களுக்கு நெருங்கிய
அர்த்தமுள்ள ஓர் அரசியல் பிரசாரத்தை இவர் மேற்கொண்டார். 1951-இல் சுதந்திரக்
கட்சி ஆங்கிலத்தில் வெளியிட்ட அதன் கொள்கைப் பிரகடனத்தைப் பற்றி இங்கு
குறிப்பிடுவது அவசியம். சிங்கள, தமிழ்மொழிகளுக்குச் சமத்துவ உரிமை, வெள்ளையர்
உடைமைகள், தளங்கள் தேசியமயமாக்கல், விவசாயம் கைத்தொழில் அபிவிருத்தி, தேசிய
கலாசார விருத்தி இவை போன்ற ஜனநாயகக் கொள்கைகளைச் சுதந்திரக் கட்சி முதலில்
வெளியிட்டது, கட்சியின் ஆரம்பகர்த்தாக்களில் தமிழர்களும் இருந்தனர்.
உபதலைவராக ஒரு தமிழர் தெரியப்பட்டார். ஆனால் இரண்டே வருடங்களுக்குள்-1953-இல்
பண்டாரநாயக்காவின் மொழிக் கொள்கை முழு மாற்றம் பெற்றது. 1956 பாராளுமன்றத்
தேர்தலை மனதில் கொண்டு இயங்கிய அவரது கட்சி, ஆட்சியமைக்கக் கூடிய
பெரும்பான்மை ஆசனங்களைப் பெறும் மார்க்கத்தைப் பற்றியே கண்ணாயிருந்தது!
சிங்கள புத்தர்களே பெரும்பான்மையினர். இவர்களுள் பெரும்பான்மையினர்
கிராமப்புறங்களில் வாழ்ந்தனர்.சிங்களப் பொதுமக்களின் ஆதரவைப் பெற அவர்கள்மீது
ஆழ்ந்த செல்வாக்கினைக் கொண்டிருந்த மரபு ரீதியான நிறுவனங்களின் உதவியை அவர்
நாடினார். புத்தமத குருக்கள், கிராமத்துப் பள்ளி ஆசிரியர்கள், உள்நாட்டு
வைத்தியர்கள், செல்வாக்குக் கொண்ட விவசாயிகள் அவருடைய அரசியல்
கருவியானார்கள். அதே நேரத்தில் அவரும் அந்நிறுவனங்களுக்குள் அதிக செல்வாக்கு
மிகுந்த பிக்கு பெரமுன (பிக்குகள் முன்னணி) வின் கருவியானார். 1953-இல்
சிங்களம் மட்டும் அரச கரும மொழியாதலே தன் முதல் இலட்சியமெனச் சுதந்திரக்
கட்சி பிரகடனப்படுத்தியது. கிறிஸ்துவ - ஆங்கில ஆதிக்கம் ஒழிய, ஆங்கிலத்துக்கு
ஈடாகச் சிங்களவரல்லாதோர் செலுத்தும் ஆதிக்கம் ஒழிய, சிங்களப் பொதுமகன் தன்
உரிமையான மண்ணில் சுதந்திரமடைய இதுவே வழியெனப் பிரசாரம் ஆரம்பித்தது.
பிறப்பால் நிலப்பிரபுத்துவ, வெள்ளையாட்சியின் நெருங்கிய சகாவான கிறிஸ்துவக்
குடும்பத்தைச் சேர்ந்தவர் பண்டாரநாயக்கா. இங்கிலாந்தில் வாழ்ந்து கல்வி கற்று
ஐரோப்பியமயப்படுத்தப்பட்டவர். அவர் புத்தமதத்தினரானார். சிங்களத் தேசிய உடையை
அணிந்தார். அவருடைய நாவன்மையால் சிங்கள இனவாதப் பிரசாரத்தை ஆரம்பித்தார்.
அவருடைய பிரசாரம் வெறும் சுலோகங்களல்ல. சிங்களப் பொதுமகனின் சகாப்தத்தைத்
தோற்றுவிக்க, மொழிக்கும் மதத்திற்கும் முதலிடம் கொடுத்து ஒரு சிங்கள புத்த
"சோஷலிச ஜனநாயகத்தை' ஏற்படுத்தப் போவதாக அவர் பிரசாரம் செய்தார்... முழுக்க
முழுக்கச் சிங்கள புத்தத் தோற்றத்துடன் பண்டாரநாயக்காவின் தலைமையிலமைந்த
புதிய கூட்டான மக்கள் ஐக்கிய முன்னணி 1956-இல் தேர்தல் களத்தில் இறங்கியது.
அந்தக்கூட்டில் இலங்கையின் மார்க்சிச இயக்கத்தின் தந்தை என வர்ணிக்கப்படும்
பிலிப் குணவர்த்தனாவின் புரட்சிகர சமசமாஜக்கட்சியும் அங்கம் வகித்தது.
தமிழர்களைக் காலிமுகத் திடலில் போட்டுத் தோலுரிப்பேன் என்று சபதம் செய்த
கே.எம்.பி. ராஜரத்தினாவின் குழுவும் அதில் சேர்ந்திருந்தது. காலிமுகத்திடல்
என்பது இலங்கை பாராளுமன்றத்தின் எதிரே அமைந்த திடலாகும். சிங்கள புத்தத்தை
2,500 வருடங்கள் பேணிக்காத்தவர்கள் என்ற புனிதப் பெருமைக்குள்ளான புத்த
சங்கத்தின் பிக்கு பெரமுனவே பிரசாரத்தின் முக்கிய சக்தியாய் விளங்கியது.
1953 ஆகஸ்ட் 12-ஆம் நாள், யு.என்.பி. அரசுக்கெதிராக இடதுசாரிகள் மாபெரும்
ஹர்த்தாலை வெற்றிகரமாக நடத்தினர். இந்தப் போராட்டத்தில் தொழிலாளர்களும்
பொதுமக்களும் பெருமளவில் கலந்துகொண்டனர். ஏழு பேருக்கு மேல் உயிர் துறந்த
இந்த ஒருநாள் போராட்டத்தின் எழுச்சி டட்லி சேனநாயக்காவைப் பிரதமர்
பதவியிலிருந்து ராஜினாமா செய்யவைத்தது. அரிசி விலையேற்றமே ஹர்த்தாலுக்குக்
காரணமாயிருந்தது. கம்யூனிஸ்ட், சமசமாஜக் கட்சிகள் முன்னின்று தலைமை தாங்கிய
இந்த ஹர்த்தாலில் பண்டாரநாயக்கா குறிப்பிடத்தக்க ஒரு பங்கினையும்
வகிக்கவில்லை. ஆனால் யு.என்.பி. எதிர்ப்பினை உயர் மட்டத்துக்கு எடுத்துச்
செல்ல உதவிய இந்தப் போராட்டத்தின் பரிசை அவர் 1956-இல் தட்டிக்கொண்டு
போய்விட்டார். பிலிப் குணவர்த்தனா போன்ற பிரபல இடதுசாரித் தலைவர் அவருடைய
அணியில் 1956-இல் இருந்ததும் அவருக்கு மிகவும் சாதகமாயிருந்தது. சிங்கள
புத்தமும் சோஷலிசமும் இணைந்ததுபோல் அந்தக் காட்சி பொதுமக்கள்
கண்களுக்குப்பட்டது போலும். இந்த இணைவுக் குறியீட்டு முக்கியம் வாய்ந்தது.
1956 தேர்தலில் சமசாஜிகளும் கம்யூனிஸ்டுகளும் சிங்களத்துக்கும் தமிழுக்கும்
சமஉரிமை என்ற கொள்கையை முன்வைத்தனர். பண்டாரநாயக்காவின்
இருபத்திநாலுமணித்தியாலங்களில் சிங்களம் மட்டும் என்ற கர்ஜனை 1953க்குப் பின்
எழுந்தபோது யு.என்.பி.யும் தனது கொள்கையும் சிங்களம் மட்டுமே என்று கூற
ஆரம்பித்தது. ஆனால் இன்னும் அதற்கிருந்த தமிழ்ப் பகுதித் தொடர்புகளும் அதன்
கிறிஸ்துவ ஆங்கில வெளித்தோற்றங்களும் யு.என்.பி.க்கு உண்மையான சிங்கள புத்தத்
தோற்றத்தைக் கொடுக்கவில்லை. எல்லா நிலைமைகளுமே பண்டாரநாயக்காவின் தலைமைக்குச்
சாதகமாயிருந்தன.
மக்கள் ஐக்கிய முன்னணி வெற்றி பெற்றது. சிங்கள புத்த பொதுமக்கள் "அப்பே
ஆண்டுவ' (நமது அரசாங்கம்) எனக்கோஷமிட்டு வீதிதோறும் வலம்வந்து தம்
ஆர்ப்பரிப்பைக் காட்டினர். பண்டாரநாயக்காவின் வெற்றி இந்த மக்களைப்
பொருத்தவரை ஒரு நூற்றாண்டின் கனவு நனவாகியது போல். இதுவரை எதுவித
அந்தஸ்துமின்றி ஆங்கிலக் கிறிஸ்தவ ஆதிக்கத்தின் கீழ் வீழ்ந்து கிடந்த தம்
மொழியும் மதமும் ஆட்சிபீடம் ஏறிவிட்டன என்ற எக்காளம் மிஞ்சிவழிந்தது.
சிங்களப் பொதுமக்களின் "அப்பே ஆண்டுவ' ஆர்ப்பரிப்பில் ஏகாதிபத்திய எதிர்ப்பு
உணர்வுகள் பளிச்சிட்டன. ஆனால் "சிங்களம் மட்டும்' கோஷம் தமிழ்மக்களையும்
இதில் பங்குபற்ற முடியாத நிலைக்கு தள்ளிவிட்டது...
புதன்கிழமை, 30 செப்டம்பர் 2009 17:52 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
No comments:
Post a Comment