Friday, November 5, 2010

23 :உளவியல் ரீதியிலான சித்திரவதை!

         ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அறிவாளிகளின் பங்கு மிக முக்கியமானது.
      அதேபோன்று ஒரு சமூகம் மேம்பாடடைய, முன்னேறிச் செல்வதற்கு வேண்டிய முக்கியமான
      பங்களிப்பைச் செலுத்தக் கூடியவர்களும் அறிஞர்களே. சிங்களப் பேரினவாதம்
      தமிழ்ச்சமூகத்தின் மீது தொடுக்கக்கூடிய ஒடுக்குமுறையில் ஒன்றே அறிவுத்துறை
      ஒடுக்குமுறை ஆகும். மனிதப் படுகொலைகள் செய்யக்கூடிய அதே நேரத்தில்
      இவ்வொடுக்கு முறையையும் தொடர்ந்து செய்கின்றது. உடல் ரீதியான சித்திரவதைகளைப்
      (டட்ஹ்ள்ண்ஸ்ரீஹப் பர்ழ்ற்ன்ழ்ங்) போல, உளவியல் ரீதியான சித்திரவதைகளைச்
      (ஙங்ய்ற்ஹப் பர்ழ்ற்ன்ழ்ங்) செய்வதையும், எப்படிச் சிவில் மனிதாபிமான உரிமை
      இயக்கங்கள் எதிர்க்கின்றனவோ அதே போன்று அறிவுத்துறை ஒடுக்குமுறையையும்
      எதிர்க்க வேண்டிய கட்டாயத்துக்கு ஜனநாயக உரிமைக்கான இயக்கங்களும், மனித
      உரிமைக்கான இயக்கங்களும், இலங்கை அரசு விஷயத்தில் தள்ளப்படுகின்றன. முதலில்
      சிறு குழந்தைகள் விஷயத்தில் இருந்து இது தொடங்குகிறது. ஏனெனில் சிறு
      குழந்தைகள்தான் வருங்காலத் தலைமுறைகளை அடைவதற்கான விதைகள் ஆகும். சிறு
      குழந்தைகள் மீது வைக்கக் கூடிய கவனத்திலிருந்தே நாட்டின் வருங்கால சமூகத்தின்
      மீது வைக்கப்படும் மதிப்பீட்டையும் செய்ய முடியும். சிங்களப் பேரினவாத
      ஒடுக்குமுறை இன்றைய தலைமுறையினர் மீது கலவரங்களையும் மனிதப் படுகொலைகளையும்
      உண்டாக்கி ரத்த ஆற்றை ஓடவிட்டு இன்றைய தலைமுறையைப் பூண்டோடு ஒழிப்பது
      மட்டுமல்லாமல் எதிர்காலத் தலைமுறையையும் கூடத் துடைத்தெறியச் செயல்பட்டு
      வருகின்றனர் என்பதற்குச் சமுத்திரன் அவர்களின் தனிப்பட்ட அனுபவமே சான்று:
      ""1960-களில் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் நான் மாணவனாயிருந்தேன். அப்பொழுது
      சிங்கள, தமிழ் மாணவர் மத்தியில் நட்புறவே குரோத உணர்வையும்விட
      மிஞ்சியிருந்தது. இன்று அதே பேராதனை வளாகத்தில் பல சிங்கள மாணவர்கள் தமிழ்
      மாணவர்களையும் ஆசிரியர்களையும் தாக்கி அவமதிப்பதில் மகிழ்ச்சியடைகிறார்கள்.
      இந்த மாற்றம் கலாசார சாதனங்களுக்கூடான பிரசாரத்தின் ஓர் நேரடி விளைவு என்றே
      சொல்ல வேண்டும்.
      பாலர் வகுப்பிலிருந்து பூச்சி புழுக்களையே கொல்வது பாவம் என்ற புத்த
      போதனையைப் பெறும் அதே நேரத்தில் "இனம்-மதம்-நாடு' என்ற புனிதத்துவமான மூன்று
      ஐக்கியத்தினையும் பற்றிய போதனை தமிழர்களைத் தாக்குவதை, அவமதிப்பதை
      நியாயப்படுத்துவதாகவும் தூண்டுவதாகவும் இருக்கிறது. கொழும்பு மருத்துவபீடச்
      சிங்கள மாணவர்கள் தம்முடன் ஒரே விடுதியில் வாழ்ந்த தமிழ் மாணவர்களை மோசமாகத்
      தாக்கி விரட்டிய சம்பவம் பல இலங்கையர்களைத் தலைகுனிய வைத்தது. இவர்கள்தான்
      எதிர்கால வைத்தியர்கள், உயிர்காக்கும் மனித தெய்வங்கள். அவர்களின் இந்த
      நடத்தையை நாம் அதன் அரசியல்-கலாசார-உளவியல் பின்னணியில் வைத்தே பார்க்க
      வேண்டும். அப்போதுதான் மனிதர்களின் மிருகத்தனமான நடத்தையைச் சரியாகப்
      புரிந்துகொள்ள முடியும். 1983-இன் வன்செயல்களில் கொழும்பில் 14-15 வயதுச்
      சிங்கள இளைஞர்களும் பெருமளவில் ஈடுபட்டிருந்தனர் எனக் கூறப்படுகிறது.
      கொழும்பின் பிரபலமான புத்தப் பாடசாலையொன்றின் மாணவர்களின் காடைத்தனம் பற்றி
      மிகவும் விசனத்துடன் சிலர் பேசினார்கள். இந்த மாணவர்களின் நடத்தைக்கு உடனடிக்
      காரணம் யாழ்ப்பாணத்தில் கொல்லப்பட்ட 13 இராணுவ வீரர்களில் ஒருவர் அவர்களின்
      பாடசாலைப் பழைய மாணவர் என்ற செய்தி எனக் கூறப்படுகிறது. இப்படி அநாகரீகமாக,
      அவமானத்துக்குரிய முறையில் நடந்து கொள்ளும் ஓர் இனவாதம் மிகுந்த இளம் சந்ததி
      எப்படி உருவானது? இதை உருவாக்கிய சக்திகள் எவை?'' என்று கேள்வி எழுப்புகிறார்
      சமுத்திரன்.* நீங்கள் 40 வயதுடையவர்களாக இருந்தால் உங்கள் கடந்த காலப் பள்ளி
      வாழ்க்கையை நினைத்துப் பாருங்கள். பள்ளியில் படிக்கும்பொழுது பல வகையான மத,
      இன, மொழிப் பிரிவுகளில் உள்ள குழந்தைகள் ஒன்றாகப் படிக்கையிலும்,
      விளையாடும்போதும், நூல் நிலையத்திற்குச் செல்லும்போதும் மற்ற இனத்து மொழிப்
      பிள்ளைகளோடு இணைந்தே இருந்த நினைவு உங்களுக்கு வரும்.
      வகுப்பறையிலேயே பிரிக்கப்பட்ட சூழ்நிலை இருந்திருக்காது. ஆனால் இப்பொழுது
      உங்களுடைய பிள்ளைகளை இலங்கைப் பள்ளிகளுக்கு அனுப்புவீர்களேயானால் அங்கு இன
      ரீதியாகவும், மொழி ரீதியாகவும் பிரிக்கப்பட்டுத் தனித்தனியான வகுப்புகளில்
      படிக்கக்கூடிய சூழ்நிலையில் இருப்பது மட்டுமல்லாமல் நூலகத்தில் கூட பிரிந்தே
      இருக்கக்கூடிய ஒரு கட்டாயத்திற்கு அரசு உள்ளாக்கியுள்ளது. இது மட்டுமல்ல,
      நாடு முழுவதுமான குழந்தைகளின் பள்ளி வாழ்க்கை அவர்களின் கல்விச் சூழ்நிலை
      ஆகியவை வேறாய் இருக்க, மலையகத்தில் வாழும் குழந்தைகளின் சூழ்நிலை மாறுபாடாய்
      இருப்பதைக் காண்பீர்கள். இதோ பாருங்களேன். சிங்கள அரசினது பாடமொழித்
      திட்டத்தில் என்னவெல்லாம் வருகிறது என்பதற்கு உதாரணமாக-ஒரு சிங்கள நூலில்
      தீபாவளி பற்றி ஒரு கட்டுரை இடம் பெற்றுள்ளது. இதுபற்றி சிறிவர்த்தனா
      பின்வருமாறு குறிப்பிடுகிறார்:
      ""ஒரு புத்தகத்தில் தீபாவளி பற்றி ஒரு பாடம் இருக்கிறது. முதற்பார்வையில் இது
      தமிழ் இந்துக் கலாசாரத்தைச் சிங்களக் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்யும் ஓர்
      வரவேற்கக்கூடிய புதிய உத்தி என்றே படுகிறது. ஆயினும் இந்தப் பாடத்தை
      வாசிக்கும் போது இதிலிருக்கும் ஒரு விஷயத்தினால் இந்த நோக்கம் திசை
      திருப்பப்படுகிறது. தீபாவளி, இந்தியாவிலிருந்து வந்த தமிழர்களின்
      சந்ததியினரான இலங்கையில் வாழும் மக்களால் கொண்டாடப்படுவது என்றே
      குறிப்பிடப்படுகிறது. இந்த வசனத்தில் ஒரே அடியில் தமிழர்கள் இந்த நாட்டைச்
      சேரா ஒரு வெளியார் பிரிவு என்று சிங்களக் குழந்தைக்கு
      அறிமுகப்படுத்தப்படுகின்றனர்.'' சிங்களப் பாடநூல்களின் இந்த ஒற்றைக் கலாசார
      இன வாதம் சார்ந்த போக்கின் விளைவுகளை மேலும் உரப்படுத்துபவையாக மற்றைய
      கலாசாரச் சாதனங்கள் அமைந்துள்ளன. 1963-இல் அரசு உருவாக்கிய பள்ளிகள் தேசிய
      மயம் மற்றும் தர நிர்ணயம், மாவட்ட ஒதுக்கீடுகள் போன்ற பல சட்டதிட்டங்கள்
      இலங்கையின் கல்வித் துறையையே இன ரீதியாகவும், மொழி ரீதியாகவும் குழந்தைகளைப்
      பிரிப்பதற்கு பயன்படுத்தத் தொடங்கினர்.
      * இலங்கைத் தேசிய இனப் பிரச்னை--சமுத்திரன்--வெளியீடு காவ்யா, பங்களூர்,
      பக்-53.
      செவ்வாய்க்கிழமை, 29 செப்டம்பர் 2009 21:08 அன்று இறுதியாக இற்றை
      செய்யப்பட்டது

No comments:

Post a Comment