Friday, November 5, 2010

13 : இலங்கையின் பொருளாதாரப் பின்னணி

       ஆங்கிலேயர் கையிலிருந்து 2 பிப்ரவரி 1948-இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர்
      இலங்கையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் மாறி
      மாறி ஆட்சிக்கு வந்துள்ளன.
      1977-இல் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வரும் வரையில் ஓரளவு பொருளாதாரம்
      நிலைப்படுத்தப்பட்டு, நல்வாழ்வு நடவடிக்கைகளிலும், சமூக நலக்கொள்கைகளிலும்
      குறிப்பிடத்தகுந்ததொரு நிலைக்கு முன்னேறியது. மக்கள் நல (ரங்ப்ச்ஹழ்ங்
      நற்ஹற்ங்) அரசுக்குரிய வடிவத்தில் அது இயங்கியது ஆங்கிலேயர் வெளியேறியபோது,
      பெரும்பாலான தோட்டங்கள் அனைத்தும் கம்பெனிகளிடம் தொடர்ந்து இருந்தன.
      உள்நாட்டு மூலதனம்கூட மேலைநாட்டு மூலதனக் கூட்டோடும், தொழில்நுட்ப உதவியோடும்
      இயங்கி வந்தது. தனிமனித சராசரி ஆயுள்காலம், இலங்கையுடன் ஒப்பு நோக்கக் கூடிய
      நாடுகளிலேயே 50 ஆண்டுகள் என்றிருந்தபோது, இலங்கையில் மட்டும் 66 ஆண்டுகளாக
      இருந்தது. இந்தியாவைவிட இது அதிகமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
      எழுதப் படிக்கத் தெரிந்தவர்களின் விகிதம் இலங்கையுடன் ஒப்பு நோக்கக் கூடிய
      நாடுகளில் 45 சதவிகிதமாக இருந்த வேளையில், இலங்கையில் 85 சதவிகிதம் இருந்தது.
      ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் சில இடதுசாரிக் கட்சிகளும் நடத்திய
      கூட்டாட்சி இதில் தீவிர அக்கறை காட்டியதின் விளைவு இது. இருந்தபோதிலும், வேலை
      இல்லாத் திண்டாட்டம், குறிப்பாக படித்த இளைஞர் மத்தியில், வேகமாகப் பெருகி
      வந்தது முந்தைய பொருளாதாரத் திட்டத்தின் குறைபாடாகும். ஜனதா விமுக்தி பெரமுனை
      (ஒ.ய.ட.) தலைமையில் 1977-ஆம் ஆண்டு நடந்த இளைஞர் கிளர்ச்சிக்கான காரணங்களில்
      இதுவும் ஒன்று. இன்று தமிழ் இளைஞர்களுக்கு இருக்கக் கூடிய முக்கியமான
      பிரச்னைகளில் இதுவும் ஒன்று. பொருளாதாரத் தேக்கம் ஏற்பட்டதற்கு சுதந்திரக்
      கட்சி அரசு விதித்த பல கட்டுப்பாடுகளும் அவற்றை ஒட்டிய ஊழலுமே காரணமென ஐக்கிய
      தேசியக் கட்சி குற்றம்சாட்டி வருகிறது.
      உலகப் பொருளாதார நெருக்கடியும் 1970-ஆம் ஆண்டுகளில் இலங்கைப் பொருளாதார
      நிலைமையில் சிக்கல்கள் உருவாகக் காரணமாயின. அதுமட்டுமல்லாமல், சுதந்திர கட்சி
      கடைப்பிடித்த சில பொருளாதாரக் கொள்கைகளும் திட்டங்களும்கூட இது
      அதிகமாவதற்குக் காரணமாயின. விஞ்ஞானப்பூர்வமான விவசாயம்
      அறிமுகப்படுத்தப்பட்டது. பணப்பயிர்ப் பொருளாதாரம் சமூகத்தில் சில
      புனரமைப்புகள் உருவாகக் காரணமாயின. வெங்காயம் போன்ற பணப்பயிர் முறைகளில்
      புதிய வேகம் உருவானது. அந்நியச் செலாவணி நெருக்கடி ஏற்பட்டது. அது
      மட்டுமல்லாமல் பெருந்தோட்டங்கள் தேசியமயமாக்கப்பட்டன. இந்தக் காலத்தில்
      பொருளாதார நிலையில் ஒருகட்ட மேம்பாடு அடைந்த சிங்களவர்களின் வளர்ச்சி
      துரிதமாக்கப்பட்டது. இதை சுதந்திரக் கட்சி ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட
      மாறுதலாகக் கொள்ளலாம்.
      சமூகத்தில் ஏற்பட்ட நெருக்கடியினால் புதிய கோஷங்களோடு ஐக்கிய தேசியக் கட்சியை
      மேலும் முன்னுக்கு வரவழைத்தது. ""அனைவருக்கும் வேலை, குறைந்தபட்ச வாழ்க்கைத்
      தரம் தரக்கூடிய சுதந்திரமானதும், நீதியுமான ஒரு சமுதாயத்தை உருவாக்குவோம்''
      என்று ஐக்கிய தேசியக் கட்சி அப்போது கூறியது. சிங்கப்பூர், தைவான்,
      தென்கொரியா, பிலிப்பின்ஸ் ஆகிய நாடுகளை முன்மாதிரியாகக் கொண்ட ஒரு
      பொருளாதாரக் கொள்கையை ஐக்கிய தேசியக் கட்சி பின்பற்ற முனைந்தது. இதைத்தான்
      சர்வதேச மூலதன நிறுவனங்களான உலக நிதி நிறுவனமும் (ஐ.எம்.எப்.) உலக வங்கியும்
      ஆதரித்தன. சுதந்திரமானதொரு சந்தை அமைப்பின் கீழே (ஊழ்ங்ங் ற்ழ்ஹக்ங்
      க்ஷ்ர்ய்ங்) இறக்குமதிக்குப் பதிலான உற்பத்தியிலிருந்து ஏற்றுமதி சார்ந்த
      உற்பத்திக்கு மாறுவதை இது உள்ளடக்குகிறது.
      அந்நிய முதலீட்டையும், அந்நிய உதவியையும் கடனாகப் பெற்றுச் சர்வதேசச்
      சந்தைக்கான உற்பத்தியில் ஈடுபடுவதை இது ஆதரிக்கிறது. ஐக்கிய தேசியக் கட்சி
      ஆட்சிக்கு வந்தபின் இந்தக் கொள்கையைத்தான் நடைமுறைப்படுத்தத் தொடங்கியது.
      இறக்குமதிக் கட்டுப்பாடுகள் பல நீக்கப்பட்டன. பல தொழிற்சாலைகள் பொதுத்
      துறையில் இருந்து தனியார் துறைக்கு மாற்றப்பட்டன. அந்நிய மூலதனத்திற்குச்
      சாதகமான நிலைமைகளை வழங்கும் சுதந்திரத் தொழில் மண்டலம் ஒன்றும்
      உருவாக்கப்பட்டது. நீர்ப்பாசனத்திலும் மின்சாரத்திலும் 39 சதவிகிதத்தைத்
      தொடுமாறு திட்டமிடப்பட்ட மிகப் பெரிய மகாவெளி அபிவிருத்தித் திட்டமானது 30
      ஆண்டுகளுக்குப் பதில் 6 ஆண்டுகளிலேயே நிறைவு பெற்றுவிடும் என்று
      அறிவிக்கப்பட்டது.
      1978-ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்ட (பட்ஜெட்) மூலதனத்தில் 60 சதவிகிதம்
      அந்நியக் கடன்களாகும். இவை எல்லாம் புதியதொரு பொருளாதார உத்வேகத்தை அளித்தன.
      வளர்ச்சி விகிதம் 5.6 சதவிகிதமாக உயர்ந்தது. இவை இறக்குமதிப் பொருட்களை
      வியாபாரம் செய்யும் வியாபாரிகளை மிகவும் உயர்த்தியது. இந்தக் கொள்கையின்
      எதிர்மறை விளைவுகள் மெல்ல மெல்ல உணரப்பட்டன. அந்நியக் கடன்கள் மிகவும்
      அதிகமானதொரு விகிதத்திலேயே உயர்ந்ததும், இலங்கை நாணயத்தின் மதிப்பு
      குறைக்கப்பட்டதும் இதன் எதிர்மறை அம்சங்கள் ஆகும். சுற்றுலா மூலமும்,
      ஏற்றுமதி மூலமும் கிடைக்கும் அந்நியச் செலாவணி, கடன்களையும், அதற்குரிய
      வட்டியையும் அடைப்பதற்கே பெரிதும் போய்விடுகிறது. அந்நியச் செலாவணியில்
      துண்டு விழுதல் ஒவ்வொரு ஆண்டிலும் மேலும் மேலும் கீழிறக்கமாக மாறிக்கொண்டு
      வந்தது. குறைந்த ஏற்றுமதி 4 சதவிகிதமாக உயர்ந்த 1977-81 காலக் கட்டத்தில்,
      இறக்குமதி 11 சதவிகிதம் கூடியது என உலக வங்கியின் அறிக்கை கூறியது.
      அந்நியப் போட்டிக்கு வழிவிட்டதன் காரணமாக இலங்கையின் சிறுதொழில் அதிபர்களும்,
      உருளைக்கிழங்கு போன்ற உணவுப் பயிர்களை உற்பத்தி செய்பவர்களும் மிகவும்
      பாதிக்கப்பட்டனர். கைத்தறித் தொழில் வீழ்ச்சி அடைந்தது. பெரிய தேசியப்
      பஞ்சாலைகள் எல்லாம் அந்நிய கூட்டாளிகளின் கையில் விடப்பட்டன. 1977-ஆம்
      ஆண்டில், தேயிலை, ரப்பர் ஆகியவைகளின் உற்பத்தியில் ஏற்றுமதி என்பது
      வீழ்ச்சிப் போக்கில் தொடர்ந்து சென்று கொண்டே இருந்தன. இந்த வீழ்ச்சிப்
      போக்கானது இத்துறையின்மீது செலுத்தப்படாத அத்தியாவசிய முதலீட்டின்
      குறைபாட்டைச் சுட்டிக்காட்டுகிறது.
      ""கடந்த இருபது ஆண்டுகளாகக் காப்பி, கொக்கோ, தேயிலை ஆகிய பயிர்களில் அதன்
      மதிப்பு எந்தவித மாற்றமும் இன்றி அப்படியே உள்ளது. தேயிலையின் உண்மையான விலை
      மதிப்புக் குறைந்துகொண்டே வருகிறது'' என்று அப்போது கூறினார் அத்துறை
      அமைச்சர். தேயிலையின் உண்மையான விலை 1960-இல் இருந்ததை விட 1982-இல் 40
      சதவிகிதம் குறைந்தது என்பதுதான் உண்மை. நாட்டின் மூலதனச் சொத்திற்குப் பெரிய
      பங்களிப்பினை அளிக்கக்கூடிய சாலைப் போக்குவரத்து, பாசன அமைப்பு, பள்ளிகள்,
      மருத்துவ நிலையங்கள், மின்சாரம் நீர்வழிப் போக்குவரத்து, தகவல் தொடர்பு ஆகிய
      அனைத்துத் துறைகளும் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டுள்ளது என்று இலங்கை
      அமைச்சரே ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் இருக்கக்கூடிய
      தொழிற்சாலைகள் ஒட்டுமொத்த வேலைவாய்ப்பை அளிக்க முடியாது. வேலை இல்லாத்
      திண்டாட்டம் 15.6 சதவிகிதத்தில் இருந்து 1981-இல் 17.9 சதவிகிதம் வரை
      உயர்ந்துள்ளது. தற்போதைய புள்ளி விவரம் கிடைக்கப்பெறவில்லை. இருப்பினும்
      இத்தொகை கூடுதலாகவே இருக்கும்.
      மேற்கண்ட கொள்கைத் திட்டங்களால் மக்களின் வாழ்க்கைச் செலவு கடுமையாக
      உயர்ந்தது. மாதச் சம்பளம் வாங்குவோரும் நகர்ப்புற, கிராமிய ஏழைமக்களும்
      மிகவும் பாதிக்கப்பட்டனர். கூடுதலாகி வரும் சமத்துவமின்மையே நல்வாழ்வுத்
      திட்டங்களில் செய்யப்பட்டு வரும் வெட்டுகளால் உறுதி செய்யப்பட்டன. அதற்கு
      மாறாக நாட்டில் பாதுகாப்புச் செலவும், ராணுவத்திற்கான ஒதுக்கீடும்
      அதிகமாக்கப்பட்டது. *1983-இல் பாதுகாப்புத் துறைக்கான மூலதனம் 1982-ஆம்
      ஆண்டுடன் ஒப்பிடுகையில் 82.7 சதவிகிதம் உயர்ந்தது. பாதுகாப்பு நடைமுறைச்
      செலவானது 82-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 83-ஆம் ஆண்டில் 47.6
      அதிகரிக்கப்பட்டது. ஆனால் மொத்த நடைமுறைச் செலவு 19.1 சதவிகிதம் மாத்திரம்
      அதிகரித்தது.
      இதனைச் சீர்செய்ய பொதுமக்களுக்கான சலுகைகளில் கைவைக்க வேண்டிய நிலை அரசுக்கு
      உருவானது. இப்படி மக்கள் நல அரசு என்ற நிலையில் இருந்து மாறி, யுத்தப்
      பொருளாதார (War Economy)சூழலை நோக்கிச் செல்ல வேண்டிய கட்டாயம் அரசுக்கு
      ஏற்பட்டது. அதே நேரத்தில் இக்கொள்கைகளின் மறுபக்கத்தினால் ஏற்பட்ட
      விளைவுகளால் வியாபார வர்க்கம் மிகவும் பயன் அடைந்தது. குறிப்பாக ஏற்றுமதி,
      இறக்குமதித் தொழில் சம்பந்தப்பட்டுள்ளவர்கள் ஆதாயம் அடைந்தனர். சர்வதேச ஏகபோக
      கம்பெனிகளுடன் கூட்டுறவு கொண்ட சக்திகள் தோன்றின. அதேசமயம், மானியத்தில்
      செய்யப்பட்ட வெட்டுகளால் கீழ்நிலைச் சமூகப் பிரிவுகள் கடும் நெருக்கடிக்கு
      ஆளாகின.
      சனிக்கிழமை, 19 செப்டம்பர் 2009 20:30 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

1 comment:

  1. சில தகவல்கள் தவறாகத் தெரிகின்றது உதாரணமாக இலங்கை சுதந்திரம் அடைந்த தேதி, தென்பகுதியில் கிளர்ச்சி ஏற்பட்ட வருடம்.

    ReplyDelete